கடன்காரன்

செவக்காட்டு சொல்கதைகள் - 12

”எங்க பாட்டிக்கிட்ட ஒரு நாள் பேசிக்கிட்டு இருக்கும் போது கடன் வாங்குறது கடன் கொடுக்கிறது பற்றிப் பேச்சு வந்திச்சி.என்று ஆரம்பித்து கடன் பற்றிய சேதிகளை விளக்க ஒரு கதை சொன்னார் கி.ராஜநாராயணன். இனி கி.ரா சொன்ன கதையை முடிந்த வரை அவரின் வாசகங்களிலேயே வாசகர்களுக்கு தர முயல்கிறேன்.

ஒரு நாள் எங்க பாட்டிகிட்ட ஒருத்தர் கொஞ்சம் பணம் கைமாத்தாகக் கேட்டுவந்தார். கைமாத்துன்னா  பணம் வட்டியில்லாமல் ஒருவர் கையில் இருந்து மற்றொருவர் கைக்குப் போகிறதுன்னு அர்த்தம் . கைமாத்துப் பணத்துக்கு எப்பவுமே வட்டி கிடையாது .

பாட்டிக்கிட்ட நானூற்றி அம்பது ரூபாய்தான் அப்போதைக்கு இருந்திச்சு , கைமாத்து கேட்டு வந்தவர் வெளியூர்காரர் , எங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்தான், தூரத்துச் சொந்தக்காரரும் கூட எங்க ஊர்க்கு வந்து மாடோ, கன்னோ வாங்க வந்திருக்கார் , மாடு வாங்க வந்த இடத்துல பணம் குறைஞ்சதால பாட்டியிடம் கைமாத்து கேட்டு வந்திருந்தார், பாட்டியும் கையில் இருந்த பணத்தைக் கைமாத்தாகக் கொடுத்தாள்.

கைமாத்து வாங்கிட்டுப்போன நபர் ரொம்ப நாணயமான ஆள் , மறு வாரமே தான் கைமாத்தா வாங்கிட்டுப்போன பணத்தைக்கொண்டு வந்து கொடுத்திட்டார் கொடுத்தவர் சில்லரையாக இல்லைன்னு ஐநூறு ரூபாயைக் கொடுத்துட்டு “மீதி ஐம்பது ரூபாயை இனி ஒரு முறை வரும் போது வாங்கி கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

மறுநாள் பாட்டி அவருக்கு கொடுக்க வேண்டிய ஐம்பது ரூபாயை என்னிடம் கொடுத்து பேராண்டி எங்கையாவது பலராம நாயக்கரைப் பார்த்தா (கை மாத்து வாங்கிட்டுப் போனவர் பெயர் பலராம நாயக்கர்) அவர்ட்ட இந்தப் பணத்தை மறக்காம கொடுத்திருன்னாள்.

பாட்டி கொடுத்த ஐம்பது ரூபாய் பணத்தை நான் வாங்கிக்கொண்டேன் , வெளியூர்களுக்கு போகும் போது பலராமநாயக்கர் கண்ணில் அகப்படுகிறாரா? என்று பார்த்தேன் அவர் அகப்படவே இல்லை.

மறுவாரம் மறக்காமல் பாட்டி என்னிடம் பேராண்டி பலராம நாயக்கரைப் பார்த்து அந்த ஐம்பது ரூபாய் பணத்தைக் கொடுத்துட்டியான்னு கேட்டாள்.

நான் “இல்லியே பாட்டி , வெளியூர்களுக்கு போகும்போது அவர் என் கண்ணுல எத்துப்படலியேன்னேன்.

பாட்டி , அட கோட்டிக்காரப் பெயலே அமானமான அந்தப் பணத்தை நீ கையில வச்சிருக்கப்படுமா? அவரை அலைய வைக்கமா எப்படியாவது அவர் வீடு தேடிப்போயாவது அந்தப்பணத்தை அவரிடம் கொடுத்திருன்னாள்.

மறு வாரமும் மறக்காம பாட்டி அந்த ஐம்பது ரூபாய் பணத்தை பலராம நாயக்கரிடம் கொடுத்திட்டியான்னு கேட்டாள் நான் இல்லியே பாட்டி , இன்னும் கொடுக்களயேன்னேன். நான் சொன்னதைக் கேட்டதும் பாட்டிக்கு வருத்தம் வந்துட்டு . பிரத்தியார் பணத்தை நாம் கையில வச்சிருக்கிறது தப்புப்பா… அந்தப் பணத்தை இந்த வாரம் எப்படியாவது அவர் கையில சேர்த்திருன்னு சொன்னாள்.

பாட்டி மேல் எனக்கு கோவம் வந்திட்டு “ஏன் பாட்டி கிடந்து அல்லாடுதே! நாமளா அவரிடம் கூடுதலா பணம் கேட்டோம் , அவர்தான் சில்லரை இல்லைன்னு வாங்கிய  கைமாத்தை கூடுதல் பணத்துடன் கொடுத்துட்டு போயிட்டார் . இதில் நம்மதப்பு எதுவும் இல்லையேன்னேன்.

பாட்டி , “பேராண்டி கடன் கொடுக்க வேண்டியவங்களுக்கு உடனே கடனைத் திருப்பிக் கொடுக்கிறதுதான் முறை. பட்ட கடனைத்திரும்ப கொடுக்கலைன்னா பிறகு அது பெரிய விவகாரமாயிடும். கடன் கொடுத்தவர்க்கு ஏதாவது ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆயிட்டுன்னா (அவர் மண்டைய போட்டுடார்னா) பிறகு நீ யார்ட்டப் போயி கடன் தொகையைத் திருப்பிக்கொடுப்ப.? கடன் வாங்கியவர் செத்துட்டார்னா, அவர் பிள்ளைகளிடம் போய் நீ அந்தப்பணத்தை கொடுக்க போகும் போது அவர் பிள்ளைகள் எங்கப்பாவுக்கு கொடுக்க வேண்டிய பணம் இவ்வளவுதானான்னு கேட்டா அது வில்லங்கமாய் போயிரும் , பிறகு நாமதான் மன வருத்தப்படும் படியா ஆயிரும், அதனால அந்த பணத்தை உரியவரிடம் சீக்கிரமே கொண்டு போய் சேர்த்திருண்ணு சொன்னாள்.

நான் பாட்டியிடம் “அவர் செத்தப்பிறகு நாம அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காம வச்சிக்கிட்டா என்னவாகும்ன்னு கேட்டேன் .

அதுக்கு பாட்டி “அமானமான அந்தப் பணத்தை நீ வச்சிக்கிட்டா உனக்கு கல்யாணமான பிறகு (பாட்டி இந்த கதையை சொல்லும் போது எனக்கு கல்யாணம் ஆகல) உனக்கு ஒரு பிள்ளை பிறப்பான். அவன் நீ கொடுக்க வேண்டிய கடன் தொகை கழியும் வரை உன் சம்பாத்தியத்தைச் சோறாச் சாப்பிடுவான் அந்தக்கடன் தொகை முடிந்ததும் அந்தப் பிள்ளை உன்னை அழவச்சிட்டுச் செத்திருவான் என்றாள்.

பாட்டி சொன்னதைக்கேட்டதும் எனக்கு திக் கென்று ஆகிவிட்டது பட்ட கடனை அடைக்காமல் இருந்தால் இப்படியும் நடக்குமா? என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

பாட்டி அத்தோடு விடலை ‘கடன்’ வாங்குவதால், வாங்கிய கடனை திரும்பக்கொடுக்காததால் என்னென்ன நடக்கும் என்பதைப் பற்றி ஒரு கதையும் ஆரம்பித்தாள்.

ஒருத்தன் யாரிடமாவது கடன் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கட்டுச் சோத்தைக் கட்டிக்கிட்டு ஊர் வழியே போனான், போகிற வழியில் கம்மாக்கரை மரத்து நிழலில் படுத்துக்கிடந்தவர்களிடம் ஐயா, இந்த ஊர்ல யாரிடமாவது வட்டிக்கு கடன் கிடைக்குமா? என்று கேட்டான்.

“எப்பா  வட்டிக்கு கடன் வாங்காதே நாம் நினைத்த நேரத்தில் உறங்கி விடுவோம், ஆனால் வட்டி உறங்காது , வட்டி குட்டி போட்டுக்கிட்டே இருக்கும் . வட்டி ரம்பத்தின் பற்கள் போன்றது, அது போகும் போதும் மரத்தை அறுத்து தூள் தூளாக்கும் , வரும் போதும் மரத்தை அறுத்து தூள் தூளாக்குவதை போல மனிதனை அறுத்துவிடும். எனவே வட்டிக்கு கடன் வாங்காதே இந்த ஊரில் ஒருத்தர் வட்டியில்லாமல் கடன் கொடுக்கிறார் அவரிடம் சென்று பணம் வாங்கிக்கோ என்றார் மரத்தடியில் படுத்து கிடந்த முதியவர்.

பெரியவர் சொன்னதைக்கேட்டு வழிப்போக்கன் ரொம்பச் சந்தோசப்பட்டான். “அப்படியா, வட்டியில்லாம கடன் கொடுக்கிறாரா? தயவு செஞ்சி எனக்கு அவர் வீட்டை காட்டுங்களேன். என்றான்.

அப்போது மரத்தடியில் படுத்துக்கிடந்த இன்னொரு முதியவர் , “எப்பா பக்கத்து ஊர்ல ஒரு பண்ணையார் இருக்கிறார் , அவர் யார் எவ்வளவு கடன் கேட்டாலும் கொடுத்து விடுவார், அவரிடம் கடன் வாங்கினால் நீ பட்ட கடனை திருப்பி கொடுக்க வேண்டாம், உன் வாரிசுகள் அல்லது பிள்ளைகள் திருப்பிக்கொடுத்தால் போதும் , உனக்கு வாரிசு இல்லை என்றாலும் பரவாயில்லை, நீ செத்த பிறகு உனக்கு கொள்ளி வைக்கிறவன் உன் வாரிசு மாதிரி தானே , அவனுக்குத்தான் உன் சொத்துக்கள் எல்லாம் போகும் , எனவே அவன் நீ வாங்கின கடனை திரும்பக் கொடுத்தாப்போதும் “ என்றார்.

வழிப்போக்கனுக்கு ரெண்டாவது முதியவர் சொன்னதைக்கேட்க வியப்பாக இருந்தது.அட இப்படியும் ஊர் உலகத்துல கடன் கொடுக்கிறார்களா? இது ரொம்ப வசதியாப் போச்சே , நாம வாங்கின கடனை நாம திரும்பக் கொடுக்க வேண்டாம் என்கிற ஏற்பாடு ரொம்ப நல்லா இருக்கே.! என்று மனதில் நினைத்துக்கொண்டு , ஐயா அந்த ஊருக்கு போகிற வழியைக்காட்டுங்களேன் என்றான்.

பெரியவரும் , அந்த ஊருக்குப்போகிற வழியை காட்டினார். வழிப்போக்கன் விசாரித்து விசாரித்து அந்த ஊரின் எல்லைக்கு போனான்.

அந்த ஊர் எல்லையில் உள்ள கம்மாக்கரை மரத்தடியில் ரெண்டு முதியவர்கள் படுத்துக்கிடந்தார்கள் , அவர்களிடம் போய் “இன்ன மாதிரி , இந்த ஊரில் கடன் கொடுக்கிற பண்ணையார் வீடு எந்தப்பக்கம் “ என்று கேட்டான்.

மரத்தடியில் படுத்துக்கிடந்த முதியவரில் ஒருவர் யப்பா என்னதான் கஸ்டம் இருந்தாலும் கடன் மட்டும் வாங்காதே ! இந்த ஊர் பண்ணையாரிடம் கடன் வாங்கினால் உன் பிள்ளைகள் கடன்காரர்கள் ஆவார்கள்,ஆனால் பக்கத்து ஊரில் ஒரு தன்வந்திகர் இருக்கிறார் . அவரிடம் நீ கடன் வாங்கினால் நீயும் அந்தக்கடனைத் திரும்பக் கொடுக்க வேண்டாம், அடுத்த ஜென்மத்தில் நீ அந்தக் கடனை திரும்பக்கொடுத்தால் போதும் என்றார்.

அட இந்த ஏற்பாடு ரொம்ப ரொம்ப பிரமாதமாக இருக்கேன்னு நினைச்சிக்கிட்டு ,”ஐயா அந்தத் தன்வந்திகர் இருக்கிற ஊருக்கு எப்படி போகனும்னு வழி சொல்லுங்க என்றான்.

முதியவரும் அந்த ஊருக்குப்போகிற வழியைக்காட்டினார், வழிப்போக்கன் “இப்ப கிடைக்கிற கடனை வாங்கிக்கொள்வோம் , அடுத்த ஜென்மத்தில் நாம் என்னவாக பிறப்போம் என்பது யாருக்கு தெரியும் ? என்று நினைத்துக்கொண்டே   அந்த ஊரைப்பார்த்து நடந்தான்.

அந்த ஊர் எல்லையில் சோளக்கொல்லை ஒன்று இருந்தது. சோளப் பயிர் நன்றாக வளர்ந்து கதிர் வந்திருந்தது , சோளக் கதிரில் பால் கட்டி இருந்தது. சோளக்கதிரில் விளையும் , சோளமணிகளை காக்காய்கள் வந்து கொத்தாமல் இருக்க வயல் நெடுக , ஆங்காங்கே  கம்புகளை நட்டி , அதன் முனியில் மாட்டுக் கொம்புகளைச் செறுகி இருந்தார்கள்.

வழிப்போக்கன் சோளக்கொல்லையைக் கடந்து போகும் போது மாட்டுக் கொம்பின் நுனிகள் வழிப்போக்கனை பார்த்து சிரித்தது. நேரம் ஆக ஆக மாட்டுக் கொம்புகளின் சிரிப்பு தேய்ந்து அழுகையாக மாறியது.

வழிப்போக்கன் சிரித்து அழும் அந்த மாட்டுக்கொம்புகளைப்பார்த்து “ஏன் என்னை பார்த்துச் சிரித்து அழுகிறீர்கள் ?என்று கேட்டான்.

வழிப்போக்கனிடம் அந்தமாட்டுக் கொம்புகள் எப்பா நீ அந்த தன்வந்தரிடம் கடன் வாங்கப் போகிறாயே உன்னை நினைத்து எனக்கு சிரிப்பதா ? அழுவதா? என்று தெரியவில்லை.

ஒரு காலத்தில் நானும் உன்னைப்போல தான் யாரிடம் கடன் வாங்கலாம் ? என்று அலைந்து திரிந்து கடைசியில் இந்த தன்வந்தரிடம் கடன் வாங்கினேன். , நான் சாகும் வரை அந்தக் கடனை அடைக்க முடியவில்லை, நான் செத்த பிறகு மறு ஜென்மத்தில் நான் மாடாக பிறந்தேன்.

கடன் கொடுத்தவன் என்னைப்பிடித்து கொண்டு வந்து வாங்கிய கடனுக்காக கமலை இறைக்கச் சொன்னான், அவன் காடுகரைகளை எல்லாம் உழச்சொன்னான், வண்டி இழுக்கச் சொன்னான், வாயில்லாத ஜீவனான நான் பட்ட கடனுக்காக எல்லா வேலைகளையும் செய்தேன் , கடைசியில் எனக்கு வயதாகிவிட்டது , நோய் வந்து செத்துட்டேன். செத்தபிறகும் என் கொம்புகளை அறுத்து எடுத்து வந்து இங்கு அவன் சோளக் கொல்லையில் காவலுக்கு  கம்பில் சொறுகி வைத்திருக்கிறான். நான் பட்ட பாட்டை நீயும் கடன் வாங்கி படப்போகிறாயா? என்று நினைத்துதான் சிரிக்கிறேன், அழுகிறேன். என்றன அந்த மாட்டின் கொம்புகள்.

மாட்டின் கொம்புகள் சொன்னதைக்கேட்டு அங்கேயே சிலைபோல் உரைந்து விட்ட வழிப்போக்கன் என்னதான் சலுகைகள் இருந்தாலும் இனி கடனே வாங்கப்படாது ! என்ற வீராப்போடு தன் வீட்டை பார்த்து நடந்தான், இதுதான் கடன்காரன் கதை என்று  என் பாட்டி அந்தக் கதையை சொல்லிமுடித்தாள்.

கடன் அட்டைகளும் , கந்துவட்டிக் கடன்களும் என்று வாழும் மக்களிடம் இந்தக் கதை எல்லாம் எடுபடாது என்றாலும் ஊதுகிற சங்கை ஊதி வைப்போமே ! என்று இந்தக் கதையைச் சொல்கிறேன் என்றார் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாரயணன்.

இன்னும் சொல்வார்

செப்டம்பர்   06 , 2014  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com