‘’அர்த்தராத்திரி ......கொள்ளபோற சாமம்... காடு விரிஞ்சமேனிக்குக் கெடக்குது. கொடங்கொடமா இருட்டு கவுந்தமாதிரி... அன்னைக்குன்னுப் பாத்தா அம்மாசி வரணும்....? ஹே! கெரகஞ்செரியில்லன்னா எல்லாமுந்தான் வரும்!. குத்திருட்டுக்குள்ள காட்டுப்பூச்சியா ...? அதுபாட்டுக்கு சத்தம்போட்டு கிடுகிடுங்க வக்குது.....அந்தசமயத்துலதான் தூரத்துல பொட்டுபோல ஒரு வெளிச்சம்...! பொட்டுன்னா என்னது? குங்குமப் பொட்டுன்னு நெனக்காதீங்க. சாந்துப் பொட்டு. கோவிமாதிரி. அதுலேசா லேசா அசையுது. போறாததுக்கு மேலயும் கீழேயுமா நெளியுது. அப்படியே கொஞ்சங்கொஞ்சமா முன்னுக்கும் வருது....பாறஎழவு! ஒலக்கையக் கல்லுல வச்சு இழுத்தா ஒரு சத்தம் வருமே... அதப் போல நெறிக்கிற மாதிரி சத்தத்தையும் கொண்டுக்கிட்டே வருது.
கிட்டே வரவரத்தான் தெரியுது...அது பொட்டுவெளிச்சமுமில்ல சொட்டுவெளிச்சமுமில்ல ஒண்ணுக்குப் பொறத்த ஒன்னுன்னு சீலத்தும்ப பிடிச்சிட்டு வாற புள்ளமாதிரி வரிசையா ஏழெட்டு வெளக்கு வெளிச்சமாக்கும்....! என்னது? வெளங்குதா? ஆமா!...எல்லாமே திருவந்தரத்துல மஹாராஜாவுக்கு பண்டத்த கொண்டுட்டுப் போயிட்டிருக்கற மாட்டுவண்டிகளுக்க வெளிச்சமாக்கும்!. அடியில லாந்தரு வெளக்க தொங்க விட்டுக்கிட்டு மேக்கமாற இருட்டுக்குள்ள வருதுவோ....
காட்டுக்குள்ள ஏது நல்லபாத ? மாறிப் போயிரக்கூடாதுல்லா ? அதுக்காச்சுட்டி ஒண்ணு போற பாதையிலேயே முந்தாம தள்ளாம மீதியளும் வந்துக்கிட்டிருக்குதுவோ ...இந்தக் காட்டமட்டும் தாண்டிட்டா போதும். அப்புறம் இந்தளவுக்கு பயமில்லன்னு தெய்வத்த நெனச்சு வேண்டிக்கிட்டே வாரயில, இப்பவரைக்கும் ஒரு பிரச்சனையுமில்ல. ஆனா இது நடுக்காடாச்சே... என்ன வேணும்னாலும் நடக்குமே... போனதடவ வந்தமாதிரி பத்தம்பது கள்ளமாரு சுத்திகிட்டாலும் கஷ்டந்தான். ஆளும் மிஞ்சாது. பொருளும் மிஞ்சாது .ராஜாக்கிட்ட சமாதானமும் சொல்ல முடியாது. குத்தித் தொங்கவிட்டுருவாரு. ராத்திரியில காட்டுக்குள்ள எங்க ஓடித் தப்பிக்கது ? அப்படியாப்பட்ட எடம். வண்டியெல்லாம் அந்த எடம் வழியா வருதுக. மொதோ வண்டி அந்த எடத்தத் தொட்டதும்தான் தாமசம்...போயிட்டிருந்த மாடுகளுக்குக் கண்ணு தள்ளுது...வண்டிக்காரரு ஊதிக்கிட்டிருந்த பொகைய விட்டுட்டு என்னடானு பாக்கக் கீழ குனியாரு. பாத்தா கண்ணு மட்டும் இல்ல,அதுகளுக்க காலுந்தள்ளுது...அவரு ஒடனே மாட்டக் குத்தி விட்டுப் பாக்காரு. மாடு போவணும்லா ?. ஆனா அது போவல...எரிச்சலுல அவரு ஊதிவிட்டப் பொகையாவது கலைஞ்சுதா? அதுவும் அந்தாக்குல அப்படியே நிக்குது!
யோசனையில மாட்டிக்கிட்ட அவரு திரும்பிப் பாக்க, மத்த வண்டிக்காரவுங்களும் எட்டிப் பாத்துப் போக சொல்லுதாங்க. அவரும் தைரியத்தப் புடிச்சிக்கிட்டு ‘’ ஞ்சள......ட்டுரர்ர்ர்ரே......’’ ங்கராறு... மாடு அசையனுமே? இஞ்ச்கூட அசயல. சரி, மத்தமாடுகளாவது அசஞ்சு வருதுகளா? அதுவும் இல்ல.
அப்பத்தான் மொதவண்டிக்காரரு கண்ணுக் கருப்புக்குள்ள லேசாத் தீ எரியுது. அவரு கையில லாந்தரு. அத ஆட்டி ஆட்டிப் பாக்காரு ...அந்த வெளிச்சத்துல .....எதுத்தாப்புல நின்னத ....அவரு பாக்கையில... அப்பமே நெஞ்சு வெடிச்சு அவரு சாவாமப் போனது அவருக் கும்புட்டப் பாக்கியம்!
எதுத்தாப்புல என்னது? தெரியுமா? நடுக்காட்டுல...நட்டநடு ராத்திரிரியில அதுவும் நடுபாதையில ....சுத்தியும் இருட்டுப் பயமாவும் பயம் இருட்டாவும் இருக்கையில எங்கேருந்து மொளச்சி வந்தாளோ...? அரளிப்பூக் கலருல சீலைய உடுத்திக்கிட்டு வண்டியத் தடுத்தாப்புல ஒருத்தி நின்னுக்கிட்டிருக்கா..! யாரவ? யாருன்னு நெனக்கியோ? நடுக்காட்டு நீலி! எப்படி இருக்கும் அவனோவளுக்கு? கண்ணானசொல்லுதம்லே கொடலக் கேட்டு நிக்கமாதிரி நிக்கா... அவக் கண்ணுல பொரி பொரின்னு தீயி மத்தாப்பாப் பொரியுது. வந்திருக்கவ யாருன்னு வண்டிக்காரனுவளுக்கும் இப்போத் தெரிஞ்சு போச்சு.
எல்லாருமே இவ்வளவு தூரம் பேப்பயம் பயந்தாலும் ஒரே ஒருத்தருமட்டும் அசரவே இல்ல .யாரு தெரியுமா? கடைசிவண்டிக்காரரு. அந்த மீசக்காரரு வண்டிக்குள்ள மட்டும் இல்ல, தலைக்குள்ளயும் சரக்கு உள்ளவராக்கும்.. நீலி எப்போ எதைக் கேப்பானு தெரியாது. வசக்கேடா மொத்தமா வந்து மாட்டிக்கிட்டோம். தப்பி ஓடவும் முடியாது. முன்னாடி ஓடுனா...புடிச்சி கொலைய அறுத்துருவா..பின்னாடி ஓடுனா காவக்காரன் மாடன் வந்து நின்னாலும் நிப்பான்..அவங்கையில மாட்டிச்சாவதுக்கு நாமளே செத்துரலாம். ரொம்ப ஆலோசிக்காரு..இவுரு யோசனையால வண்டிக்காரனுவளுக்கு நெஞ்சுலத் தறி ஓடுது. வயித்துலயோ காரு ஓடுது. மீசக்காரரு தான் வண்டிமேல நாலு தட்டு தட்டுனாரு. அதப் பாத்து முன்வண்டிக்காரனும் ஒருதட்டு!. அதைக்கேட்டு அடுத்த வண்டிக்காரன்...இப்படி மொதவண்டிக்கு செய்தி வருது. அது அவுங்க பாச. நீலி என்னக் கேட்டாலும் மறுத்துரக்கூடாது. தட்டிக்கழிச்சா ஆத்திரம் வந்து மீன்மண்டைய திருகிப்போடது மாதிரி பிச்சிப்போட்டுருவா..சமாளி........ பாத்துக்கிடலாம்....அப்படீன்னு.
நீலிக் கிட்டயே வாரா. ‘’யாரும்மா நீ? ஒரு பொண்ணாப்பொறந்தவ ... இந்த ராத்திரியில அதுவும் காட்டுக்குள்ள ஒத்தையில வரலாமா?....போம்மா....’’ன்னு அவ யாருனு கண்டுக்கிடாத மாதிரி வண்டிக்காரரு ஒப்பேத்த, அதுக்குஅவ ...என்னச் செய்ய ? எனக்கு காடுதான வீடு ? நமக்கு ராவென்ன பகலென்ன? அப்படின்னுக் கேட்டுட்டு ஒரு பார்வைபாத்தா பாரு ! யம்மா... பார்வையாலேயே உடம்புக்குள்ள எறங்கிட்டா மாதிரி அவருக்கு நாடி நரம்பெல்லாம் ஒதரலெடுக்குது. பயத்த காட்டமுடியாதுல்லா...அவரு சிநேகத்தோட, ‘’இப்போ ஒனக்கு என்ன தாயி வேணும்?’’னு கேக்க, பதிலுக்குக் ‘’கேட்டாக் குடுப்பியானு’’ அவளும் கிண்டலாக்கேக்க , ‘’பொறவு? குடுக்காம இங்கேருந்து போவமுடியுமா?..’’னு எதுக்கும் சொல்லிவக்காரு.
‘’ சரி, சொல்லுதேன் கேளும்.....நா காட்டுல வசிக்கவ ...நீங்கள்லாம் ஊருக்குள்ளேருந்து வாரவங்க..நெறைய வாரிக்கெட்டிக் கொண்டுட்டுப் போறியோ...! எனக்கு வேண்டியது ஏதாவது உங்கக்கிட்ட இருந்தா குடுத்துதவ வேண்டியதுதானே ...’’ன்னு திரும்பவும் மடக்குதா. அவக் கணக்கு மனசிலானதும் இவரு, ‘’ஆமா ஆமா ஒனக்கில்லாத்ததா கேளு கேளு? ’’ ன்னு இவரும் விடல.
‘’பெருசா ஒண்ணும் வேண்டாம்..கண்டதத் தின்னு..காணாத்ததக் குடிச்சித் தொலைச்சிட்டேன்..செமிக்க ஒரு வெத்தல போடணும் எனக்கு அதுபோதும். தாரியா...?..வாக்குக் குடுத்துட்டே...!ஆனா தராம மட்டும் போயிராதே...போனே....’’ அவ அந்த இருட்டுல உருமுன உருமுல இவங்களுக்கு செமிக்காமையே கொல்லைக்கு போயிருச்சு..
கள்ளி வெத்தல எதுக்குக் கேக்கா ? இவன் பக்கறைய அவுத்து மடியிலேருந்து வெத்தலையக் குடுக்க எடுத்து கைய நீட்டுவான்..கை அவ மேல படும்லா. பட்டா நீலி விடுவாளா? கொடலுக் கொடலா புலுபுலுனு மொத்தம் பத்துக் கொடலு. குடிக்க கொடங்கொடமா ரெத்தம். யோகப்பிரைஸ்ல அடிச்சமாதிரி!. விடுவாளா ? இப்ப இக்கட்டுல மாட்டுன நரசப்பன் செத்தான்..அவரு திரும்பி கடே....சி வண்டிக்காரரப் பாத்து, ‘’ எனக்கெ உசுரு எனக்கு உண்டுமா ஓய் ‘’னுப் பாவமாப் பாக்க, அவரு சாட்டைய சுத்தி காணிக்காரு. ஒடனே இவரு, யாரு? கடைசிவண்டிக்காரரு இல்ல மொதவண்டிக்காரரு. இவுரு அதப் புரிஞ்சிக்கிட்டு நீலிக்கிட்ட, ‘’ வெத்தலையா? இம்புடுதானே? ‘’ன்னு மடியிலேருந்து வெத்தலைய எடுத்து குடுக்காரு. நீலி கைக்குள்ள அவரு சாதகம் இருக்கா...? ...தும்பைப் புடிச்சுக் கை படாம ரொம்ப சாக்கிரதையா குடுக்காரு. ஆனா அவ வாங்கல ‘’ வெறும் வெத்தல எனக்கு எதுக்கு? பாக்குஞ் சுண்ணாம்பும் யாரு தருவா?’’ ன்னு அவ பிணங்குதா.. விடமாட்டேங்காளே பாதகத்தின்னு மனசுக்குள்ள பொலம்புனவரு, ‘’அ..து..பாத்துக்கோ.. ஒவ்வொரு வண்டியில ஒவ்வொரு பொருளா ஏத்திட்டோம்.. எங்கிட்டே வெத்தலதான் இருக்கு..பாக்குஞ் சுண்ணாம்பும் பொறத்தால வார வண்டியில மாட்டிக்கிட்டு..வாங்கிக்கோ.. எங்கிட்டே .நீ வெத்தல தானே கேட்டே ! நா குடுத்த வாக்க மீறல..ந்தா..’’ ன்னு சொல்லிட்டுக் குடுக்க, வேற வழியில்லாம அவ வெத்தல மொனையத் தொட்டதும் ஒடனே கைய விட்டுட்டாரு. அவ்வளவுதான்! சொடக்கு விடதுக்குள்ள வண்டி பர்லாங்கு தூரம் பறந்து போயிருக்கும்..
இப்போ அடுத்த வண்டி. ‘’குடூமைய்யா பாக்கு...’’ ஒருத்தன் போனா என்னா மீதியிருக்கானுகல்லாங்கற நெனப்புல நீலி இடுப்புல கைய சாச்சுக்கிட்டு நிக்கா. அவங்கொஞ்சம் குசும்பன்போல...நெலவரத்த யோசிக்காம ’’ ஏன் ஆத்தா ஒந்நாக்குதான் செவந்து கெடக்குதே இந்த இருட்டுலக் கூட லாந்தருல மின்னுதே! பொறவு எதுக்கு வெத்தலயும் பாக்கும்?...அவசரமாப் போயிட்டிருக்கேன்...விடப்படாதா?..ன்னு கேட்டுத்தொலைக்க, ஓ அதக் கேக்குதியா? என் நாக்கே இப்படித்தான்.. இது நேரமே போட்டது.? ராத்திரிக்கு இன்னும் போடல.. இப்போத் தாரியா, இல்லேன்னு சொல்லப் போறியா? ன்னு கொஞ்சம் இறுக்குனாப்புலக் கேக்க , ‘’அதெப்படி சொல்லுவேன்..நீ ஆளு யாரு? என்று பின்வாங்கி ‘’ந்தாப் புடிச்சுக்கோ’’னு தாறதுமாதிரி அவரு சொல்ல அவக் கைய நீட்டுதா. அவரு பாக்குக் கொட்டைய அவக்கையில உருட்டுனாப்புல விட்டுப்போட்டு தலதப்புனா அது தம்புராம்புண்ணியம்னு வண்டிய பெருக்கிட்டாரு..
இப்ப மூணாவது வண்டிக்காரன் சிக்குனான். அவங்கணக்குக்கு சுண்ணாம்பு குடுக்கணும்.சுண்ணாம்ப எப்படிக் கை படாம குடுக்கது? வெத்தலப் பாக்கு மாதிரி குடுக்கவும் முடியாது. கை பட்டுருமே ! கை பட்டா நீலி விடுவாளா? சங்கக்கடிச்சுத் தொலச்சிருவா! வண்டி பூரா உண்டக்கட்டிய உருட்டி வச்சுருக்கோம்..பாவி மவ அதவாங்கித் திங்காம இப்படி மனுஷனத் திங்கனும்னு ஒரே நிப்பா நிக்காளேனு ஒடம்பு வெறெக்குது அவனுக்கு. பொணம் சாஞ்சாப்புலத் திரும்புனான் ஒரு திரும்பு. அப்போ லாந்தர ஆட்டி நெஞ்சத் தட்டுதாரு கடைசி வண்டிக்காரரு. ஒடனேயே கும்புட்ட வாக்குல ,’’ பொண்ணே...நீக் காட்டுல குடியிருக்கவ...ஒன்வழிய நாங்கக் கடக்கும்போது நீக்கேக்கத நோகாம தந்துட்டுதான் போகணும்...ஆனா விதிவசம்பாரு...எனக்கு வெத்தலப் போடுத பழக்கம் இல்ல...அதனால எங்கையில சுண்ணாம்பு இல்ல...பதறாதேபதறாதே....ஒனக்கு வேண்டிய அளவுக்கு பொறத்த வாற வண்டியில இருக்கு. நீ இஷ்டம்போல வாங்கிகிடலாம்...என்னைய விட்டுரு...னு கெஞ்சி நீலிக்கப் பிடிலேருந்து தப்பிச்சான்.
அடுத்த வண்டிக்காரன வழிமறிச்சா நீலி.’’ அடப்பாவி... கட்டிப் புடிச்சிருமேனு கையில வச்சுக்கிடல...தண்ணி வச்சிருக்கறவங்கிட்டதான் அது இருக்கு. வாங்கிக்கியேன்...’’அவனும் தப்புனான்..இப்படியே ஆளாளுக்கு ஒவ்வொரு கதையாச் சொல்லித் தப்ப, இப்பக் கடைசி வண்டி வந்து நிக்குது.
வெளிய நிக்கது நீலி ...அவளோ கடுங்கோபத்துல நிக்கா..வண்டியில இருக்கறவரும் லேசுப்பட்டவரு கெடையாது. பாளை ஒறப்பு உள்ளவரு.ஆனாலும் வெறும் மனுஷன்தான்..அவரு அவள ஏற எறங்க பாக்காரு...முன்னாடிப் போன பயலுக எவனாவது சுண்ணாம்பத் தூக்கி அவக் கைப்பட குடுத்திருந்தானுவோ ..? பின்னாடி வந்த ஒருத்தங்கூட மிஞ்சிஇருக்கமாட்டான்..ஒடம்ப கொதறியிருப்பா நீலி. அவனுவோ எல்லாவனுங்களையும் தப்ப வச்சாச்சு. ஆனா இப்போ மாட்டி நிக்கெது நா மட்டுந்தான்...அப்படீன்னு யோசிச்சிட்டிருக்கற மனுசனுக்க மண்டையைத் தொறந்து பாத்தாளோ...என்னவோ? ...நீலி ஒடனே..’’ தப்பிக்கலாம்னு யோசிக்கியா? எல்லா வண்டியையும் விட்டுட்டேன்...நீ குடுத்த யோசனைதானே..போட்டும்..இப்ப நீ மட்டுந்தான் இருக்கே..சுண்ணாம்பக் குடுக்கியா...இல்ல..?கேட்டுக்கிட்டே ...ஒரு சிரிப்பு சிரிச்சா பாரு....தெய்வமே....அம்மையாண அண்டங்கலங்கி போவும்..ஆனா என்னென்னா அதிசயமாட்டு வண்டிக்காரரு பயப்படல. அவரு, ஏன் இந்த சிரிசிரிக்கே?’’ ங்காரு. ‘’ஆங்? குடுக்காம போற ஏற்பாடு உண்டுமானு பாத்தேன்..’’னுட்டு அவ கிடிக்கிப் போட, அவரு மடிய தொரக்காரு. அவ எத்திப் பாக்கா. அதுக்குள்ள ஒரு சின்னப் பொதி. அவக் கண்ணுக்கொட்டாமப் பாக்கா. அவரு பொதியப் பிரிக்காரு. பொதிக்குள்ள ...ஒரு கத்தி! ..புள்ள போல மடங்கியிருக்க ஒரு மடக்குக் கத்தி. எறக்குனா....? எறங்குனதே தெரியாது அப்படியொரு சாதனம். வண்டிக்காரரு நைசா அத வெளிய எடுக்காரு….
(தொடரும்)
(அய்யப்பன்மகாராஜன்நாகர்கோவிலைச்சேர்ந்தவர். இப்போதுசென்னையில்வசிக்கிறார். திரைத்துறையில்தீவிரமாகஇயங்கிவரும்இவர் தன்இளமைக்காலநினைவுகளில்இருந்துமீட்டுஎழுதும்கதைத்தொடர்இது.