கனா மீது வருபவன் - 10

Published on

மேகம் மங்கிக்கொண்டு வந்தது. ராசா களத்துச் செக்கின் மீது தாவி ஏறினான். கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு செக்கடி மாடன் இருக்கும் திசை நோக்கித் திரும்பினான். வடிகால் சம்மணமிட்டு பிறகு செக்கின் தலையில் சாய்ந்து கொண்டான். மனம் குமைந்து கொண்டிருந்தது. நடந்தவற்றை மீண்டும் நிகழ்த்திப் பார்க்க விரும்பியது.

முடுக்கின் நடுமையத்தில் ராசாவும் அப்புவும் நெருங்கியப்பொழுதில் இருவரின் மனதிற்குள்ளும் திட்டங்கள் வேறுவேறாக ஏறியிருந்தன. ராசாவின் எண்ணப்படி அப்பு தன் மீது கை நீட்டினால் உடனே அதே வீச்சில் அந்தக் கையினை நழுவவிடாது பற்றிக்கொள்ள வேண்டும். பிறகு அக்கையினை சட்டெனத் திருப்பி வளைக்க வலிபொறுக்கமுடியாமல் அவன் திரும்புவான். உடனே முதுகோடு வைத்து அழுத்திக் கொண்டு முழங்கையால் நடுமுதுகில் ஒரு இறக்கு இறக்க வேண்டும். இறக்குதலில் பிசகி பலம் குறைந்துவிட நேர்ந்தால் தாமதிக்காது வலது கால் முட்டியினை சட்டென உயர்த்தி இடிக்க வேண்டும். இவனுடைய துடிப்புக்கு இத்தனை போதுமானது என்று சடுதியில் தீர்மானித்து வைத்திருந்தான்.

அதே நேரத்தில் அப்பு தான் ராசாவை கைநீட்டி அடிப்பதில் உள்ள குறைபாடுகளை உணர்ந்திருந்தான். ஏற்கனவே சற்று உயரம் குறைபட்ட தான் அவனை நேராக முகம்நோக்கி அடிப்பதில் உள்ள சிரமங்களை யோசித்த அவன் தற்போதைய நிலவரப்படி தனது இரண்டு கைகளையும் ஒருசேர பயன்படுத்தவே எண்ணியிருந்தான். சட்டென்று குனிவது, பிறகு இருகைகளையும் மாற்றி மாற்றி அவன் வயிற்றுப்பகுதியினைக் குத்துவது. அவன் நிலை தவறும் வரையில் விடாமல் குத்தவேண்டும். அப்போது அவன் தன் முதுகினைத் தாக்க முயல்வான். உடனே அவனது ஒரு காலினை பெயர்த்துவிடவேண்டும். தடுமாறி கீழே விழுவான். கீழே விழுந்தவனின் உடல்மொத்தமும் பலவீனத்தின் கையில் தான். அதன் பின் நடக்க வேண்டியது எல்லாமே நம் புத்திசாலித்தனத்தில் தான் இருக்கிறது. அப்பு பற்களை கடித்துக் கொண்டான். இடது கை துடித்தது. ராசா அவனது இரு கை அசைவுகளிலும் பார்வையை அசையாது கவனமாக வைத்திருந்தான்.

இரண்டு பேரும் மோதிவிட இருந்த அந்தத் தருணத்தில் மிக முக்கியமான திருப்பமாக ஒரு சம்பவம் நடந்தது. ஆட்கள் அரவமற்ற அந்தச் சிறிய முடுக்குப் பகுதிக்குள் பெருத்த ஓசையொன்று கேட்டது.

கேட்பவர்களின் அடிவயிற்றில் பிரளயத்தினை உண்டாகும் அவ்வூளை அபாயத்தை அறிவிக்கவல்லது. இருவருமே ஒருகணம் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது தனது  வாழ்வின் கடைசி ஓட்டத்தினைப் பற்றிக் கொண்டு உயிர்வலியோடு டாமி அம்முடுக்கினுள் நுழைந்தது. அதன் முகமேட்டில் ரத்தத் தீற்றல்கள் தெரிந்தன.  அதன் நாக்கு அத்தனை சிவப்பாய் இருந்து அப்பு பார்த்தது இல்லை. அப்புவிற்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. தன்னை நோக்கி வரும் டாமியினை பற்றிக்கொள்ள எண்ணி கைகளை நீட்டினான். ஆனால் டாமியின் கண்களுக்குள் அப்பு இல்லை.. அதன் பார்வையின் இலக்கு வேறெங்கோ இருந்தது. அது நேராக பாய்ந்தது. கழிந்த சில்லறைக் காலங்களில் பழகியது போலல்லாமல் பெரும்பீதியினைக் கொண்டதாக இருந்தது அதன் வேகம். டாமியைத் தொடர்ந்து முனைகளில் வளைத்துக் கட்டப்பட்ட கம்பிகளைக் கொண்ட இரண்டு நீண்ட கழிகளுடன் இரண்டு பேர் துரத்திவந்தார்கள். விளங்கிவிட்டது. முனிசிபாலிட்டிக்காரர்கள். அப்புவும் ராசாவும் வசிக்கும் தெருவில் எத்தனையோ நாய்கள் வளர்ந்திருக்கின்றன. அத்தனையுமே இவர்கள் வளையத்துக்குள் இலக்காகி லாரியினுள் அடித்துப் போடப்பட்டு கொண்டு போகப்பட்டுவிட்டன. டாமி இதுவரை சிக்கவில்லை. இது முதல்முறை அல்ல. பலதடவை டாமி அவர்களுக்குத் தண்ணீர் காட்டியிருக்கிறது. ஒருமுறை அவர்களிடம் தப்பித்த டாமியை சிறுவர்கள் அனைவரும் நகராட்சி அலுவலகத்திற்கே அழைத்துச் சென்று ஆட்டம்போட்டுக் கேலி செய்துவிட்டு வந்துவிட்டனர். அதிகாரி நாய் போன்று குரைத்தார்.

இதனால் நாய்ப்பிடிப்பவர்களுக்கு டாமியை பிடிப்பதென்பது தங்கள் திறமை மீது விடப்பட்ட சவால்.

நிலைமை இப்போது வேறு மாதிரி பின்னப்பட்டிருந்தது. டாமி ஓடிப்போய் மறுமுனையில் கிராமத்துத் தெருவில் இறங்கப்போக அங்கு பாதகம் முன்பே வந்து நின்றுகொண்டிருந்தது.

ஏற்கனவே மேலும் இரண்டு நாய் பிடிப்பவர்கள் டாமிக்காக அது வழியே கழியுடன் வந்து தயாராக காத்து நின்றார்கள். கூடுதலாக ஒரு நல்நாய் மேய்ப்பன் போல ஒருவன் தடிக்கட்டையை வேறு வைத்திருந்தான். தப்பிக்க முயற்சிக்கும் டாமியின் தலை மையத்தில் போட.

கால்களால் முன்னும் பின்னும் பாய யோசித்து டாமி சதியில் சிக்கிக்கொண்டது. அப்பு முன்னே ஓடிவந்தான். ராசாவும் முன்வந்தான்.

“‘என் நாய எவனும் புடிக்ககூடாது. அது எங்க வீட்டு நாய்..”

என்று அப்பு கத்தினான்.

“லைசென்ஸ் வச்சிருக்கியா? வீட்டு நாயின்னா வீட்டுல கட்டிப் போடணும். சத்தம் போட்டே..போலீசுல புடிச்சுக் குடுத்துருவேன்..”என்றான் நாய்ப் பிடிப்பவன். அப்புவின் நா தாழ்ந்துவிட்டது.

“அண்ணே விடுங்கண்ணே” என்று கெஞ்சினான்.

கிராமத்தினுள் நாய் வண்டி நுழைந்தது. வண்டியினுள்ளேயிருந்து விதவிதமான நாய்களின் ஊளைகள் கேட்டன. நீண்டதும் குறுகியதும் பலகீனமானதுமான நாய்களின் உயிரடங்கப்போகும் கடைசிக்குரல்கள், அபயமற்ற இறைஞ்சுதல்கள்.

டாமி ஓரடி எடுத்துவைத்தது. வளையக்காரன் முன்னே வந்து நின்றான். பின்புறத்திலிருந்து வந்தவர்களும் நெருங்கினார்கள். அது கால்களைத் தூக்கியது. இரண்டாவது ஆள் வளையத்தை அதன் உயரத்திற்கு தூக்கிக்காட்டிப் பார்த்துக் கொண்டான். வண்டியின் ஊளைகளின் ஒருங்கிணைந்த சத்தம் டாமியின் யோசனையை சிதறடிக்க முயற்சித்திருக்க வேண்டும். அது கால்களால் சற்றுக் குழம்பியது.

அப்போது ராசா அதனை நெருங்கினான். உடனே டாமி சட்டென ராசாவின் மீது மோத முதலாவது ஆள் வளையத்தினை ராசாவுக்கு நேராக வீசினான். ஆனால் டாமியின் நோக்கம் அதுவல்ல. அது திரும்பவும் பழைய இடத்திற்கே வந்து வளையக்காரனின் கால்களுக்கிடையே புகுந்து அவனை ஏமாற்றியது. உடனே இரண்டாவது ஆள் அதன் முகத்திற்கு நேராகவே வளையத்தை வீசினான். டாமி ஓடிய வேகத்திலேயே அவன் வளையத்துக்குள்ளே புகுந்தது. அவன் விரித்து வைத்திருந்த சற்றுப் பெரிய தன் வளையத்தினை உடனே இழுத்தான். வளையம் சுருங்குவதற்குள் டாமி அதன் வழியே வெளியேறியது. அவன் பெரும் ஏமாற்றம் கொள்ள தடிவைத்திருந்தவன் ஓங்கி அடிப்பதற்கு முன் வந்தான். டாமி அவன் மீதே குறிவைத்து நேராக தற்கொலை முயற்சிபோல பாய்ந்தது. அதன்பிறகு வெற்றிடம் தான். உலகமே டாமியின் எல்லை. லாரியின் ஓலங்கள் மரண வீட்டின் ஒய்வு நேர சத்தங்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க நகராட்சிக்காரர்கள் வண்டியைக் கிளப்பிக் கொண்டு போனார்கள். தெருக்களில் ஆட்கள் கூடிவிட்டார்கள். டாமி மீண்டும் தப்பியச் செய்தி பலவிதக் கதைகளாக பிரதேசத்தில் பங்கு வைக்கப்பட்டது.

நேரம் கருக்கலைத் தாண்டிப்போக தலைப்பட்டிருந்தது. ராசா பாப்பத்தைக் களத்தின் செக்கின் மீது சாய்ந்து உட்கார்ந்திருந்தான். சண்டை நிகழாமல் போனதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவனுக்கு புரியவில்லை. டாமி தப்பியதில் அவனுக்கு பெரும் மனப்பெருமை உண்டாக்கியிருந்தது. எனினும் மனம் ஒருநிலையில் இல்லாது அல்லாடிக் கொண்டிருந்தது. அப்போது களம் நோக்கி யாரோ வருவது தெரிந்தது. ராசா தலையைத் தூக்கினான். வேலப்பன் தான் வந்து நின்றான்.

“லேய்..சண்டை நடந்திச்சா..? யாருல ஜெயிச்சது?”

வேலப்பன் செக்கின் பள்ளத்திற்கு முன்பாக வந்து நின்று கேட்டான்.

“ஓடிப்பெருக்கிட்டே ..?”

ராசா வேலப்பனை கேலியாகக் கேட்டான். வேலப்பன் புத்த்கப்பையினைக் கீழேவைத்துவிட்டுச் சொன்னான்.

“நாஞ்சொன்னா ..நீ நம்புவே..அதனால சொல்லுதேன்..நாம முடுக்குல வந்தமா..அந்த சண்டாளன் அப்பு போக்கெடுத்துப் போனவன் நம்மளப் பாத்ததும் திரும்பி முடுக்குல வந்தானா..? ஒடனே எனக்கு வெளிக்கு வந்திரிச்சிலே...சத்தியமாலே..அம்மா மேல சத்தியாமாத் தான் சொல்லுதேன்..வயித்தை கலக்கிட்டு.. நா நேரா ஸ்டேடியத்தப் பாத்து ஓடுனேன். வயிறு நிக்கல. ஒடனே போறவழியில ஒரு ஓட இருக்குல்லா..

“பாவி அது பொம்பிளைங்க போற ஓடைலா..?”

“கேளு முழுசும். பொசுக்குனு போயி இருந்துட்டேன். பொம்பளையோ சத்தம் போடுதாவோ. நா உடனே யக்கா யக்கா தொரத்தாதியோ. எனக்கு கலக்கிருச்சுனு கெஞ்சுனேன். எங்கம்மா பேரெல்லாம் சொல்லிப் பாத்தேன்..அவாளுவோ கல்லெடுத்து எரியதுக்குள்ள எனக்கு சோலி முடிஞ்சிருச்சு.ஒடனே ஓடி தப்பிச்சிட்டேன்”

“அப்போ அதோடயா வந்து நிக்கே?”

“இல்லலா..நேரா ஸ்டேடியத்துக்குப் போயி லாரில தண்ணி பிடிப்பாங்கல்லா பெரிய பைப்பு அந்த மிச்சத் தண்ணி ஓடக்கூடிய எடத்துக்குப் போயிட்டு அப்பாடான்னு வாரேன்..”

“ஒன்னைய நம்ப முடியாது..சமயத்துல கால வாரிட்டு ஓடிருவே..”

“வெளிக்கு வாறது சொல்லிட்டா வருது?”

ராசா கீழே குதித்தான்.

வேலப்பன் கூடவே வந்தான்.

வழியில் வீட்டினுள்ளே எட்டிப் பார்த்தான். அமம்வைக் காணோம். இருவரும் தெருவிற்கு வந்தார்கள். சோளம் பொறி விற்பவன் சத்தம் போட்டுக் கொண்டே வந்தான்.

‘’சோளாம்பொறி, சோளாம்பொறி.....சக்கர ஏலஞ்சுக்குப் போட்ட சோளாம்பொறி...’’

மின்னல் வந்துவிட்டுப் போனது. மழை வருவதற்கான வாசனை முன்கூட்டி வந்தது. இருவரும் தெருவில் இறங்கி நடந்தார்கள். தெருமுனைக்கு வருகையில் அம்மா கோசலை அப்புவின் அம்மாவிடம் எதையோ முறையிட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தின் ரேகைகள் பலப்பல விதங்களில் மாறிக்கொண்டிருந்ததன.

(கனா தொடரும்)

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத்தொடர் இது.)

logo
Andhimazhai
www.andhimazhai.com