கனா மீது வருபவன் - 13

Published on

முன்பு ஒருபோதும் அனுபவித்திராத கொந்தளிப்புடன் கூடிய மனதோடு ராசா வீட்டிற்குச் சென்றான். தொட்டிநீரைக் கோரிக் கைகால் கழுவுகையில் ரகசியமானதொரு உரையாடலில் அப்பாவுடன் அம்மா ஈடுபட்டிருந்ததை அறிய நேர்ந்தது. மத்தியில் தாஜுவின் பெயர் மட்டும் பல இடங்களில் அடிபட்டது என்றாலும் அந்த உரையாடலின் வேறு எந்தக் கூறினையும் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

‘’ ஒனக்கு ஏன் இந்தக் கவல? ஊரு ஒலகத்துல இருக்கப் பிரச்சனையள சொமந்துக்கிட்டு...’’ அத்தனையும் கேட்டுவிட்டு அப்பா அவளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

அசம்பாவிதம் மிக்க ஏதோ ஒரு கோளாறினை தாஜ் அக்கா எதிர்கொள்ளத் துவங்கியிருக்கிறாள் என்கிற அச்சம் கலந்த எண்ணம் வந்தடைந்த பொழுதில் வழக்கம்போல மறுநாளில் இரண்டு புரோட்டாக்கள் வேண்டி அவனுக்காக சுவற்றோரம் சாய்ந்து காத்திருக்கும் தாஜக்காவைக் காண மனம் வேண்டியது. எனினும் அன்றைய சம்பவங்களின் மூலம் பலவிதங்களிலும் மேலோங்கிய அச்சம் அவனைத் துன்புறுத்தியபடியே இருந்ததால் தூக்கத்திற்குத் தயாராக முயற்சித்த உடலினை தடுத்து நினைவுகளை மடைத் திருப்பிவிட்டான். அது தெருமுனையில் சுண்டித்தெறித்த அடியில் துவங்கி நகராட்சி அலுவலகம் வரை பயணித்து தாஜின் சத்தத்தைக் கேட்டு அவள் வீட்டுக் கதவின் முன்பு வந்து நின்றது.

பாக்கெட்டில் கிடந்தக் கல்லினை எடுத்து புத்தகப் பையினுள் பத்திரப் படுத்தி வைத்தான். மனப்பாடம் செய்ய வேண்டியப் பாடங்கள் அனைத்தும் அவனை விட்டு வெகுதூரத்திற்கப்பால் மறைந்து போயின. ஒருவழியாக சற்று அசந்த வேளைகளில் கூட உடல் தன்னிச்சையாகத் துடித்ததில் வந்த உறக்கமும் நிரந்தரமற்றுப் போவதும் வருவதுமாக துயரூட்டியது.

உறக்கம் களைந்து எழும்பியத் தருணங்களில் சம்பந்தமில்லாமல் இன்ஸ்பெக்டர் ஆசாத்தின் பெயர் ஞாபகத்திற்கு வந்து நின்றது. பெரியப்பாவின் சைக்கிள் கடையில் கழிந்த வெள்ளிக்கிழமையில் படித்த ராணிகாமிக்ஸ் கதையிலிருந்து வெளியேறிய இன்ஸ்பெக்டர் ஆசாத் குற்றவாளியான அப்புவைப் பிடிக்கப் போனதாக வந்தக் கனவு நிறைவு பெறாமல் அவஸ்தைப்படுத்தியது.

ஆனால் அதன்பிறகு வந்த உறக்கத்தின் கனவில் பூந்தளிர் சிறுவர் புத்தகத்தில் வரும் கபீஷ் குரங்காக மாறியிருந்த ராசாவை காமிக்ஸில் வரும் இரும்புக்கை மாயாவி துரத்திக் கொண்டிருந்தார். தான் தவறு செய்யவில்லை என்று முடிந்தளவுக்கு மன்றாடியும் ஒத்துக் கொள்ளாத  மாயாவியிடமிருந்து தப்பிக்க எண்ணிய கபீஷ் பார்வையில் பட்ட மரங்களிலெல்லாம் ஏறி தாவிக் குதித்து ஓடியது. அத்தனை மரங்களிலும் விடாது மாயாவியும் ஏறிவந்து துரத்தினார்.

பயத்தில் கபீஷுக்கு வயிறு உப்பி ஊதியது. அது ஐந்தாம் வகுப்பு வரை ராசா படித்தப் பள்ளிக்கூடத்திற்கு அப்பால் ராசாவும் நண்பர்களும் அடிக்கடி விளையாடச் செல்லும் ஆதிதிராவிடர்களின் விடுதியின் பழக்கப்பட்ட மரங்களை நோக்கி ஓடியது. அங்கு பலவிதமான மரங்கள் இருந்தும் அவற்றுக்கு மத்தியில் சுற்றிய கபீஷ் முடிவில் ஒரு அற்ப நம்பிக்கையில் வெள்ளரிமாமரத்தினை குறி வைத்து ஓடியது. அதன் கிளைகளைப் பிடித்து சரசரவென்று ஊர்ந்து தன்னால் முடிந்தமட்டிலும் உயரத்திற்கு ஏறிய பிறகு தான்  கபீஷுக்கு காற்றேப் பிரிந்தது. பல்வேறு வகையில் மூச்சு விட்டும் ஒரு ஆசுவாசமும் கிடைக்காமல் அது மாயாவியின் முன்னோர் ஒருத்தரின் சாயலைக் கொண்டு அவரை வெருண்டு வெருண்டு முழித்துப் பார்த்தது. இமைகளையும் மூடி மூடித் திறந்தது. எனினும் ஆசாமி மாயாவி அசரவில்லை. அவரும் மரம் ஏறத் துவங்கினார்.

ஆனால் பலவித வல்லமைகள் கொண்ட அம்மாயாவியின் ஷூக்கால்கள் அவரை ஏற விடாமல் தடுத்தன. மேற்கொண்டு பலம் பிடித்து ஏறுகையில்  மரத்தின் பள்ளங்களில் கால்கள் புதைந்தன. நேரம் மாலையாகிவிட்டது. ஏறிய வரையில் நின்றுப் பார்த்தால் ஒடிந்து விழும் அபாயத்தில் இருந்த வெறும் ஒல்லிக் குச்சிகளினாலான அம்மாமரத்தின் உச்சிக்கு ஏற பயமும் வந்துவிட்டது. காத்திருந்துப் பார்த்தார். காத்திருப்பது வெறுப்பானதாக மாறியதொரு சமயத்தில் மாயாவி சடவுடன் ஒரு ரஜினிப் படத்தின் பாடலை பாடியபடியும் இடையிடையே தனது ஒத்துழைக்காத உடம்பின் மீதிருந்த கசப்பை நினைத்துப் புலம்பியபடியும் அங்கிருந்து நகரத் துவங்கினார்.

கபீஷ் உடனேக் குதித்திருக்க வேண்டும். ஆனால் தனிமை தந்த அவகாசத்தினூடாக அது குதிக்க முயன்ற அதே வேளையில் சிந்தனை இடறி விட்டது. உண்மையில் தான் கபீஷல்ல ராசாவென உணரும்படியாகி விட்டது.  இதனால் கபீஷாகக் குதித்து பாதியில் ராசாவாக நினைவு வந்தக் கோளாறில் குப்புறடிக்க விழுந்தான் ராசா.

அம்மாதான் பயங்கரமாக சத்தம் போட்டாள்.

‘’ எங்கேயும் மல்லுக்குப் போயி நின்னா என்னா ஆகும்...?

நாலெழுத்துப் படிச்சு முன்னேருவான்னு பாத்தா ...

அப்பாவப் போல கைவண்டிதான் இழுப்பான் போலருக்கு...’’ 

அவன் அலறிக்கொண்டு விழித்ததில் கனவுப் பிய்ந்தது. அம்மா பொடியடுப்பின் நடுவே பாட்டிலைக் குத்திவைத்து சுற்றிலும் மரப்பொடியை இட்டு அழுத்திக் கொண்டிருந்தாள். மீண்டும் படுக்கலாமா என யோசித்தான். இனி அந்தக் கதை ஒப்பேறாது என்பதால் எழுந்து கொண்டான். தலைக்குள் வண்டு குடிகொண்டது போல விண்ணென வலித்தது, தூக்கம் இமையிலேயே படிந்திருந்தது.

‘’ராத்திரியில அப்பு வீட்டுக்குப் போனியாமே ! ஒனக்கு அங்கென்னலே சோலி?’’

அவன் பதிலேதும் சொல்லாமல் இமையை விரிப்பதற்கு திரும்பத்திரும்ப முயற்சித்துக் கொண்டிருந்தான். அது முடியாமல் போக ராசா கோசலையின் முன்பாக வந்து உட்கார்ந்தான். அவனைப் பார்த்த கோசலை பெரும் அச்சத்திற்கு உள்ளானாள்.    

‘’யாம்லே சுண்டு வீங்கிருக்கு?’’  கோசலையின் சுதி இறங்கிவிட்டது. எழுந்து வந்து உதட்டைப் பிரித்துப் பார்த்தாள். உதட்டின் முனையிலிருந்து வீக்கம் உள்வரைக்கும் இறங்கிக் கன்னிப் போயிருந்தது. ‘’ என்னலே ஆச்சி? ‘’

‘’ அப்பு அடிச்சிட்டாம்மா...’’ வலியின் பாதையில் எச்சில் வந்தது.

ஊறிவந்த எச்சிலை அவள் துடைக்க இருந்ததைத் தவிர்த்து அவன் மடைக்குப் போய்த் துப்பினான். பெருந்துயராக மௌனத்தை வெளிப்படுத்தினாள் கோசலை. உடனே அவனை விலக்கி அங்கிருந்து வெளியேறினாள். பாப்பாத்தை வீட்டிற்காக இருக்கும் என அவன் எண்ணிக்கொண்டான். உமிக்கரியை எடுத்து பல்லிடையே  வைத்தபோது திறந்த வாய் திறந்தபடியே நின்றது வலியில் அசைக்க முடியாமல். மொழி பிசகியது. சற்றுப் பொறுக்க முடிந்ததும்  கொப்பளித்து முகம் கழுவினான். அதற்குள் வந்துவிட்ட கோசலை உள்ளே வேகமாகப் போய் எதையோத் தேடினாள். குறை நேரத்திலேயே தேங்காய் எண்ணையுடன் வந்தவள் அதனை புண் பட்டிருந்த இடத்தில் தொட்டு வைத்தாள்.

‘’அவன் தொட்டிப் பயன்னு ஒனக்குத் தெரியாதா மக்கா ...?

நான்தான் அவனுக்க அம்மக்கிட்ட பாத்துக்கிடுங்கோனு சொல்லத நீ பாத்தேல்லா ...

பொறவு அவன் வீட்டுக்கு யாம்லே போனே...?’’ அவனுக்கு எரிச்சலாக வந்தது.

‘’ நீ போம்மா புளுபுளுன்னுக்கிட்டு.... அவுங்கம்ம சொல்லி அவன்லாம் கேக்கமாட்டான் ’’

‘’பொறவு என்னத்தைய எடுக்கதுக்குன்னு அவன் வீட்டுக்குப் போனே?’’

‘’ஆங்? எம்மூஞ்சி எப்படி வீங்கியிருக்குன்னு அவனும் பாக்கணுமுல்லா அதுக்குத்தான்!’’

‘’பாத்து அவன் என்னலே செய்யப் போறான்?’’

‘’சண்டைக்கு வரட்டுமே....எதுக்கு இப்படி வரும்போதும் போவும்போதும்லாம் சண்டைய இழுக்கணும்...தைரியமிருந்தா அவுங்கம்ம முன்னாடியே வரட்டும்....யாரு ஜெயிக்கான்னு பாத்துரலாம்னுதான்  போனேன்..’’

கோசலை அவன் முதுகில் அறைந்தாள். அவன் அழ இருந்ததை பாப்பாத்தையின் வருகை தடுத்தது.

‘’எண்ணையத் தொட்டுப் போட்டியா?’’ பாப்பாத்தையின் கேள்விக்கு

‘’பாருக்கா எம்புள்ளைய...’’ என்று ராசாவின் வாயைப் பிடித்துக் காட்டினாள். பாப்பாத்தை அதைப் பார்த்து நாடியில் கை வைத்தாள்.

‘’என்னக் கோசல இப்படி வீங்கிப் போயிருக்கு?....கரிமுடிவானுக்கக் கையி...! புள்ளயா அவன்? இப்போலாம் முந்திய மாதிரி இல்லப் பயலுவோ, கேட்டியா கோசல? எல்லாம் என்னா நெல நிக்கிதுவோ...? நாந்தான் களத்துல பாக்கனே சனியனுவள...!’’

பயலுகள் தனது களத்தினை நிரந்திரமான மூத்திரப் பகுதியாக அறிவித்து விடுவார்களோ என்று அவள் நினைத்திருக்கக் கூடும்.  பாப்பாத்தை மூக்கைச் சுழித்தாள்.

‘’ கூறுக கெட்ட வளப்பு..! இரிஇரி சட்டிப்பான செல்லக்கா வீட்டுலதானே வாடகைக்கு இருக்கா...அவக்கிட்ட சொல்லிவக்கேன்..’’ என்றவள் தேவையான அளவுக்கு உமிக்கரியினை எடுத்துக் கொண்டாள்.

ராசா பள்ளிக்குப் புறப்பட்டான். புத்தகப் பையினுள் கல் இருப்பதைப் பார்த்து உறுதி செய்துகொண்டான். அன்றைக்குப் புதுப் பழக்கமாக டாமி அவனோடு கூடக் கிளம்பியது. ராசாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது கோசலைக்கு அதிர்ச்சியாக இருந்தது.

கோசலை கண்ணீராய் வடிந்தாள் . ஆறு சகோதரார்கள் ஒரு சகோதரிக்கு மத்தியில் பிறந்தவள். வளங்கள் அனைத்தையும் நிறைவோடு அனுபவித்து இல்லாதவர்களுக்கு இருந்ததைக் கொடுத்து வளர்ந்தவள். ஒரு சடுதியில் எல்லாக் கனவுகளையும் கொள்ளைக்குக் கொடுத்தது போல வந்தது திருமண வாழ்க்கை. ஒரு விடுதிக்குள் அடைபட்டது போல அமைந்து விட்ட அவளது வாழ்க்கையின் ஒரே நம்பிக்கையே ராசா தான். தற்போதைய அவனது நிலை அவளை பலவாறாகக் கவலைப்பட வைத்தது.

‘’‘’பதினோராவது வயசுல இவனுக்கு ஒரு பெரிய கண்டம் இருக்கும்மா...அதத் தாண்டனும்...’’

‘’ என்ன கண்டம் ஜோசியரே..?’’

‘’முக்கியமாத் தண்ணியில. பயலுகக் கூட அதிகமாக் கூட்டு சேராண்டாம்...ஆறு கொளம்னு சுத்ததுக்கு பயக்க எவனாவதுக் கூப்புட்டாலும் விடாதீங்க...வீட்டுல ஒரு கர்மம் செய்யப் போற அறிகுறிதெரியுது.....’’

ராசாவின் ஜாதகத்தைப் பார்த்து தேரடி மூட்டு ஜோசியர் எச்சரித்தது வேறு நினைவுக்கு வந்தது பெருந்துயராக வருத்தியது.

அவள் செக்கடிமாடனை மனமுருகிக் கைதொழுதாள். மனம் தெளிதலில்லாமல் கலங்கியபடியே இருந்தது. வீட்டினுள் நுழைகையில் நடையில் தலை பலமாக இடித்தது.

(கனா தொடரும்)

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கி வரும் இவர்  தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத்தொடர் இது.)

logo
Andhimazhai
www.andhimazhai.com