அப்புவின் மூலப்பிரதேசம் பதட்டத்திலும், வன்மத்திலுமாக அவிந்து கொண்டிருந்தது. அவன் தன் வீட்டினை அடங்குகையில் ராணியைக் கமலம் சமாதானம் செய்து கொண்டிருந்தாள். ராணி மிகவும் வருந்தி வைத்திருந்தாள் போலும்.
“அது எப்படிக்கா எஞ்சோத்துப் பானையத் தேடி வந்து மரப்பொடி விழும்...?மரப்பொடிச் சாக்கு முத்தத்துக் கிட்டெல்லா கெடக்கு..?’’
‘’புள்ளையோ ஏதாவது வெளையாட வந்துருக்கும்..’’
‘’புள்ளையோ கொதிக்கச் சோத்துப் பானைலயா கைய உடும்...? எனக்கென்னமோ எனக்கு ஒல வக்கணும்னு தான் யாரோ என் ஒலப்பானைல வேலயக் காட்டிருக்கா..! எப்படி மனசு வரூங்க்கா..? நா யாரு வம்புக்கும் தும்புக்கும் போறவளா..? நாங்க உண்டும் எங்க பாடு உண்டும்னு தான இருக்கோம்..யாரையாவது ஒரு சுடுசொல்லு சொல்லியிருப்போமா..நீயே சொல்லுக்கா..!”
ராணியின் வருந்துதல் நீண்டு போய்க்கொண்டிருந்தது ரயில் போல. உண்மையில் வருத்தத்தினை விடவும் அவளை ஆட்டிவைத்து பெரும்பயமே.
கழிந்தவாரம் வெள்ளிக்கிழமையில் பக்கத்து காம்பவுண்டினுள் வசிக்கும் வரதன் தன் தாயார் சரஸ்வதிக்கு ஏதோக் கோளாறு என்று அவ்வுலகப் பிரசித்திப் பெற்ற மந்திரவாதி பீஸினை அழைத்து வந்திருந்தான். வந்ததுமே பீஸ் தெருமக்களுக்கு ஒரு கட்டளையைப் பிறப்பித்தான். குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் குறிப்பாக பருவப்பெண்கள், இளம் ஆண்கள் யாருமே இரவு ஒன்பது மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது என்று.
பீஸின் அட்டவணையில் மிஞ்சியவர்கள் யாருமே இல்லை என்பதால் கோடாங்கிக்குக்கூட பயப்படாத மக்கள் பீஸின் கட்டளைக் கண்டு அஞ்சினார்கள்.
பீஸ் வருவதற்கு முன்பே வரதனின் தாயார் தன் குணாதிசய கோளாற்றினைக் குறைத்துக் கொண்டாள். பெரும் அமானுஷ்யமும் வீட்டிலுள்ளவர்களின் பரிமாற்ற வித்தியாசத்தையும் ஒரு சகுனமாக வரதனின் தாயார் கருதியிருக்கக்கூடும்.
பீஸ் “ஓம் க்ரீம்..” போன்ற பலவகைப்பட்ட மனப்பாட வாய்ப்பாடுகளை விடாது தொடர்ந்து உச்சரித்துப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினான். பிறகு தனக்குள்ளாக ஏதோப் பேசி சமாதானமாகியது போல தான் இட்ட கட்டங்களின் மீது அவன்மொழியில் எழுதிவைத்து பூசித்தான். நடு இரவில் தூக்கத்தைத் துரத்தப் படாத பாடுபட்டுக் கொண்டிருந்த குடும்பத்தார் அனைவரின் நெற்றியிலும் திருநீற்றினை அள்ளிப் பூசச் சொல்ல, ஏகதேசம் பார்ப்பதற்கு மேலாங்கோட்டுக்காரி நீலியின் ஒப்பனையில் இருந்தார்கள் அனைவரும். பூசையின் முடிவில் பீஸ் தான் வாய் பேசக்கூடாது என்று தன் பக்கறையைத் திறந்துக் காட்டிப் பணத்தை நிறைத்துவிட்டுப் போனான். பீஸின் காட்சி முடியவில்லை என்பது அதன் பொருள் என்பதனை பின்னரே உணர்ந்தான் வரதன். அதுவரையிலும் தாயார் உருவாக்கியிருந்த அச்சத்தினை விடவும் பீஸ் கிளப்பியிருந்த பீதியே குடும்பத்தினரின் வழியாக சொந்தபந்தங்களின் குடியிருப்புகளைத் தேடித் திகிலூட்டியபடி பரவியது. முடிவில் பீஸின் பீசை விட தாயின் முன்பிருந்த நிலைமையே வரதனுக்கு பூலோக சமாதானத்தினை அளித்திருக்க முடியும்.
அதேசமயம் வரதனின் தாயார் சரஸ்வதிக்கு அவள் தன் வாழ்நாளில் கண்டிராத சடங்குகள் உண்டாக்கிய கசப்புகள் அவளை அமைதியினை நோக்கித் தள்ளிவிட்டது.
சரஸ்வதி அம்மாளுக்கு சரியாகிவிட்டதா என்பது ஊரில் யாருக்கும் தெரியவில்லை. அவளது பிள்ளைகள் அவளை ஏதோ ஒரு ஊருக்கு அழைத்துச் சென்று விட்டார்கள் என்றும் யாரிடமும் சொல்லிக் கொள்ள விரும்பாத சரஸ்வதி தெருமுனைக்கு வரும்போது மட்டும் ஒருமுறை செக்கடிமாடன் இருந்த திசையைப் பார்த்துக் கொண்டதாகவும் மட்டுமே செய்தி கிடைத்திருந்தது.
ஒருவேளை பீஸ் சரஸ்வதி வீட்டில் செய்துவிட்டுப் போன வெட்டிமுறிப்பில் ஏதாவது ஒன்று பிசகி தனது வீட்டிற்குள் ஆட்டம் போடுகிறதோ என்பதும் ராணிக்கு வந்திருக்கிற சந்தேகம்.
நடை ஏறும்போது ராணியை நேருக்கு நேராக அப்பு சந்திக்க நேர்ந்தது. அவள் பார்வையின் ஆழத்தின் துன்புறுத்தலை தவிர்க்க அவன் எண்ணினான். தனது தைரியத்தை மட்டுமே அங்கு வெளியிட விரும்பிய அவன் தன்னையும் மீறி வெளிப்பட்டது தனது கள்ளதனத்தின் தாக்குதலாக இருக்குமோ என்று நினைக்கப் போக சலிப்பு வந்தது.
ராணி ஒருநேரம் அழுதாள். சில நேரம் மவுனமாக இருந்தாள்.
“ஒம் மாப்புள்ள வாரதுக்குள்ள திரும்பப் பொங்கிட்டேல்லா.விடு..”
என்று கமலம் ஆசுவாசதிற்காக எடுத்துக் கொடுத்ததில் அவள் கொஞ்சத்துக் கொஞ்சம் ஆறுதல் அடைந்தாள்.
அப்பு தமிழ் துணைப்பாடநூல் புத்தகத்தினைத் தேடி எடுத்தான். அதன் உள்ளடக்கத்தினைக் கடந்து கதைகளின் இடையே வரையப்பட்டிருந்த ஓவியங்களை உற்று நோக்கினான்.
வரையப்பட்ட சித்திரங்களாக அல்லாமல் கதை நிகழ்வுகளை உருவாக்கும் மூல உருவங்களாகவே அவற்றினை அப்புவால் காணமுடிந்தது. கதைகளை விடவும் நம்பகத்தன்மை உடையதாகவும் உண்மையாகவே இவை உலகில் உலவும் கதாபாத்திரங்களாகவும் இருக்கக்கூடும் என்றும் அவன் நம்பினான்.
ஒரு கதையின் முகப்புப் பக்கத்தில் ஓவியமாகக் காணப்பட்ட பெண் தேவதைதான் அதன் மறுபக்கத்தில் சொல்லப்பட்டிருந்தக் கோடாரிகளின் கதையினை உருவாக்கியிருக்கிறாள். அவளால் அந்தக் கதாபாத்திரங்களை திரும்பவும் மாற்றி அமைத்து விடவும் முடியும். இறந்த பாத்திரங்களை மீண்டும் உயிர்பெற்று எழவைத்து நடமாட விடவும் முடியும். கெடுதலை சந்தித்த மனிதர்களை உயிர்ப்பித்து நன்மையளித்திடவும் முடியும். ஏனென்றால் அவள் தேவதை. தேவதைக்கும் கடவுளுக்கும் கூட ஏதோ தொடர்பு இருக்கிறது. அதனால் தானே மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியினை கடவுளைப் போன்று தேவதையும் கொண்டிருக்கிறாள்.
மந்திரவாதி பீஸ் கூட தேவதையை சந்தித்திருப்பான். அந்த தேவதை தான் அவன் நினைத்ததயெல்லாம் கேட்டதையெல்லாம் செய்து கொடுக்கிறது.நான் ஏன் இதுவரையிலும் ஒரு தேவதையைக் கூட சந்திக்கவில்லை. ஒருவேளை தேவதையை சந்திப்பதற்கு ஒரு வேண்டுதல் எதையும் வைக்காதது கூட காரணமாயிருக்கலாம். நாளை முதல் தேவதையை வேண்டிக்கொள்ள வேண்டும்.
அதிகாலையில் விடிவதற்கு முன்னே மணிமேடை போஸ்ட் ஆஃபிஸ் உள்ளேயிருந்து திமிர்ப்பிடித்து வெளியே நீண்டு நிற்கும் நாவல் மரத்திடம் சொல்லச் சொல்லி அத்தனை பழங்களையும் உதிர்த்துப் போடச் செய்ய வேண்டும்.
இதனால் தேசிங்குராஜன் சகோதரர்கள் தினமும் விடிவதற்கு முன்பு பறிக்கச் செல்லும்போது பழங்கள் ஒன்று கூட இல்லாதிருக்குமாறு செய்யலாம். அவர்கள் ஏமாந்து போவார்கள். “கள்ளப் பயக்க” என்று இடதுகையால் சுவற்றினைக் குத்தினான்.
தேவதைக்கு எத்தனை வயதிருக்கும்? ஒருவேளை நமக்கு ஒத்த வயதாக இருக்குமோ? அப்புவிற்கு கடுமையான வெட்கம் வந்தது. மூக்கில் குறுகுறுப்பாகத் தோன்றியதை உணர்ந்து சொறிந்தான். கால்களை வேகமாக ஆட்டினான். சின்னப்பெண்ணாக இருந்தால் தான் என்ன? கல்யாணம் செய்து கொள்ளலாம். அதை நினைக்கையில் திருமணம் நிகழ்ந்துவிட்ட அளவுக்கு அவன் மகிழ்ச்சியடைந்தான்.
அப்புவிற்கு பென்சில் வேண்டி வந்தது. தேடியெடுத்து அதனைச் செதுக்கினான். தனது வரலாறு நோட்டின் தாள் மீது துணைப்பாடப் புத்கத்தினைப் பார்த்துப்பார்த்து தேவதையின் படத்தினை வரையத் துவங்கினான். புத்தகத்தினைப் போல் அல்லாது தான் வரைந்த தேவதை மிகவும் பாந்தமாகவும், பவிசாகவும், அழகாகவும் வந்திருப்பதாகப்பட்டது. பெயர் வைக்கலாமா என யோசிகையில் தான் வெளியே ராணியின் விசும்பல் தொந்தரவாகக் கேட்டது. இதனால் தேவதையின் தொடர்பு விடுபட்டு ராணியின் வீடு நினைவுக்குள் புகுந்தது.
வெளியிலிருந்து பார்ப்பதற்குத் தெருவைப் போலவே பழமை மிக்கது போன்று தோற்றம் தந்தபோதும் உள்ளே நுழைகையில் ஒருவித புதுமையான நறுமணத்தோடும் இளவரசனைப் போன்ற தனக்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட அரண்மனை போன்றும் இருக்கிறது. அழகாகவும், நேர்த்தியாகவும், தூய்மையாகவும், சத்தமற்றதாகவும், அச்சம் உருவாக்காததாகவும். இது போன்றதொரு வீடு ராணிக்கு மட்டும் எப்படி கிடைத்து விட்டது? தனக்கு அமையாதது ஏன்? பேசாமல் அத்தனை பேரையும் அடித்துப் போட்டுவிட்டு அந்த வீட்டினுள் குடிபுகுந்து விடலாமோ? அண்ணன்மார்கள் பங்குக் கேட்டு வந்து நிற்பார்களோ..?
இப்படியும் இருக்கலாம் ஒருவேளை ஏதாவது ஒரு தேவதை தான் அவளுக்கு துணை புரிவதாகவும் இருக்கலாம். அப்படியென்றால் ராணியக்கா தினமும் மாலை வேளைகளில் கோயிலுக்குப் போவதாக செல்வது தேவதையை பூஜிக்கத் தானோ..? அவளுக்கு உதவி செய்யும் அதே தேவதையினைக் கண்டுபிடித்து நாமும் ஏன் வேண்டுதல் வைக்கக்கூடாது...? இந்தத் தெருவே தனக்குச் சொந்தமாகி விடுமே! சாமிகளெல்லாம் தனக்கு மட்டுமே உரிமையானதாகிவிடுமே.....!
“பொணம் மாதிரி வாழறதுக்கும் பொணத்துக்குக்கூட வாழறதுக்கும் பொம்பளையால தான் முடியும்..”
கமலம் ராணியிடம் துக்கம் பொதிந்தக் குரலில் கூறுகிறாள்.
அம்மா ஏன் எப்போதும் அதிகம் மரணத்தைப் பற்றியே பேசுகிறாள்?. மரணத்திற்கும், அம்மாவிற்கும் உறவோ பகையோ இருக்கிறதா...? அது தான் திருமண வீட்டிற்கு செல்லக் கூடத் தயங்கும் அம்மா இறந்த வீட்டிற்கு என்றால் முதல் ஆளாகப் போய் நிற்கிறாளோ...? இடையே கிழவியின் ஞாபகம் வேறு வந்தது.
செம்பிவளத்தாக்கிழவி இப்போது என்னாவாகியிருப்பாள்? உண்மையிலேயே மண்டையில் கல் பட்டதா? பட்டது எனில் அது வேண்டியது தான். எப்போது கண்டாலும் தன்னை அசிங்கப்படுத்தியேத் திட்டுகிறாள். எழுந்துப் பார்த்துவிட்டு வரலாமா என்று நினைக்கையில் வேண்டாம் என மறுப்பும் உடனேத் தோன்றியது. அறியாதது போல வெகுநேரம் தன்னால் நடிக்கமுடியாது. அம்மா முகத்தைக் கண்ட கணத்திலேயே குறிகாரி போல் சொல்லிவிடுவாள் ஏதோ கிறுத்துருவம் இருக்கிறதென்று.
சரிதான் எத்தனையோ தடவை ஓங்கி அறிய வேண்டும் போல் நினைத்து இப்போது தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று மனதை வசமிழக்காமல் பார்த்துக் கொண்டான். இதில் தனக்குத் துணையாக இருக்கும்படி புதிய தேவதையிடமும் அவன் வேண்டிக் கொண்டான். மனதில் வடித்து உருகி அதனிடம் தன் தந்தை வருவதற்கு முன்பாக அண்ணன்மார்கள் வீடு வந்து சேர்ந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். தேவதையை மயக்குவதற்காக சில பாடல்களை பாட விரும்பி “கற்பூர நாயகியே...” பாடலில் தொடங்கிப் பல பாடல்களின் வழி சஞ்சரித்து “கடவுள் வாழும் கோயிலிலே கற்பூர தீபம்” என்று போய்க் கொண்டிருக்க முகாரி வந்த இடத்தில் “மூதேவி” என்ற வசையுடன் கமலம் பழ வாரியலைத் தூக்கி எறிந்தாள்.
பாடல்களின் தொடர்பு அறுந்து விடும்படி நேர்ந்த போதிலும் அப்புப் போதிய அவகாசத்துடன் மொழியற்ற தேசங்கள் ஒவ்வொன்றின் எல்லைகளையும் சாகசமாகக் கட்டுபாடற்ற மனதின் வழியாக கடந்து தன்பாட்டிற்கு போய்க் கொண்டிருந்தான் எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாமல்.
செம்பி வளத்தாக் கிழவியின் வீடு அவளது தொண்டைக் கீறலின் சத்தத்தினை இழந்து வெறுமையாக நின்று கொண்டிருந்தது. பொங்கி வந்த சிரிப்பினை அடக்க முயன்ற பச்சை சந்தேகத்துடன் அவள் வீட்டின் உள்ளே எட்டி பார்த்தான்.
(கனா தொடரும்)
(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில்தீவிரமாக இயங்கிவரும் இவர் தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத் தொடர் இது.)