பதட்ட ரூபத்துடன் பின்தொடர்ந்து வந்த தங்கையாவை டாக்டர் கூர்ந்து பார்த்தார். அவரது பார்வை தங்கையாவின் குடலுக்குள் கனமாய் அழுத்தியது.
“அந்தப் பாட்டி உங்க ஒய்ஃபா?”
“ஆமா டாக்டர்.”
“யாரோக் குறி வச்சி தலையில எறிஞ்சிருக்காங்க. கல்லு இல்லேனா... கம்பு மொனை ஏதாவது ஒண்ணாக்கூட இருக்கலாம். இல்லேனா கவுட்டப் புள்ளாலக் கூட அடிச்சிருக்கலாம். பொத்தல் விழுந்து போச்சி..தையல் போட்டு விட்டுருக்கேன்...”
“செரியாயிருமா டாக்டர்?”
“செரியாயிரும்...தண்ணி படக்கூடாது. குளிக்கக்கூடாது... டெய்லி வந்து மருந்து வச்சிக் கெட்டணும்” தங்கையாவிற்கு மழை நின்ற வானம் போல மனம் மெதுவாக விரிந்தது.
“ஓர்ம வந்துட்டா....?”
“பேசறாங்களே...! அப்புறம் அவங்கள யாரோ கஷ்டப்படுத்துதாங்கன்னு நெனக்கேன்...அதையேத் திரும்பத்திரும்பச் சொல்லிட்டுருக்காங்க.. மொதல்லேயே கெவனிச்சிருக்கக்கூடாதா..?”
“ அவ ரொம்ப நாளா அப்படித்தான் டாக்டர். ஏசிக்கிட்டே இருப்பா..”
“அது என்னன்னு கொஞ்சம் கெவனிங்கோ..மோசமாயிருச்சுன்னா ஒங்களுக்கு ரொம்ப கஷ்டமாயிரும். செரி பண்ண முடியாது”
தங்கையா சரியென்று தலையாட்டினார்.
கூட்டிட்டு போவட்டுமா?”
“ஆமா. பத்து நாளு கழியட்டும். தையலப் பிரிக்கலாம்”
என்றவர் ,
“எதுக்கு ஓய் கண்ட கயவாளிப்பயக்கள கூடக் கூட்டிட்டு வாரிரு?”
என்று கோவத்துடன் கேட்டார்.
“தெருவுல உள்ள பயக்க சார்.... நல்லவனுவோ தான்....” என்றார்.
அவர் முகம் இறுகியது.
“அவனுவோக்கிட்ட சொல்லி வையும். இனிமே ஆஸ்பத்திரிப் பக்கம் வந்தானுவன்னா.....போலீஸ்ல கம்ப்ளெயிண்ட்டு குடுப்பேன்” என்று கூற தங்கையாவுக்கு காரணம் புரியாத கலவரம் ஏற்பட்டது.
“சரி சார்..” என்று பவ்யமாக கூறிக் கொண்டார்.
இசக்கியப்பனும் அசோகனும் செம்பிவளத்தாளை வீட்டில் கொண்டு வந்து கிடத்தினார்கள். ஆஸ்பத்திரி செலவுக்கென்று இருவருமாக கண்ணில்பட்டவர்களிடம் காசு வசூலித்து அதனைப் பிரித்துக் கொண்டார்கள்.
மேற்கொண்டு தங்கையாவிடமும் சில அறிவுரைகளை வழங்கிவிட்டு கிடைத்தப் பணத்துடன் அய்யரின் மதுபானக்கடைக்குள் நுழைந்தார்கள். இசக்கியப்பன் மிகவும் சோர்வுடனும் கவலையுடனும் காணப்பட்டான்.
“ஏம்லே வருத்தப்படுதே..? கெழவி தான் தப்பிச்சிட்டாள்லா....பொறவு என்னா?”
“அதுக்கில்லே..”
“பின்ன ? செலவுக்குப் பைசாக் கிய்சா வேணுமா? வேணும்னா ராஜேந்திரனுக்க சாராயக் கடைக்குப் போவோம் செலவுக் கொறையும் பைசா மிச்சமாவும்...”
“அதுக்கில்லலே...”.
“எவங்காதையாவது கடிச்சி வச்சிட்டியா?” நீ ஒரு லூசு. எப்ப யாரைக் கடிப்பேன்னு தெரியாது.”
“இல்லலே...”
“என்னத்தலே நொள்ளே..செரியா கொல்லைக்கு போவ மாட்டேங்குதா? விசயத்த சொல்லேம்ல..சொன்னாத்தானே தெரியும்.?.”
“வீட்டுல ஒரு டிவி வாங்கியிருக்கான்”
“யாரு?”
“எங்கண்ணன் வேலு”
“அதப் போயி எதுக்கு வாங்கணும்? வேற வேல இல்ல. செரி சொல்லு”
“அதுக்கு ஒரு ஏரியல் வாங்கணும் அதான்”
“எது ஏரியல் கம்பியா?”
“ம்”
“ஆனைய வாங்குனவுனுக்கு தொரண்டிய வாங்கக் கழியாதா...விடுலே..அவனே வாங்குவான்..”
“வாங்கமாட்டேன்னுட்டான்..நாந்தான் வாங்கிக் குடுக்கணுமாம்”
அசோகன் யோசித்தான். தன்னிடம் தான் கோள் நீட்டுகிறான் என்று புரிந்து கொண்டான். உடனே, “செரி பாட்டில வாங்கு..” என்று கூற இசக்கியப்பன் வாங்கிக் கொண்டு வந்தான்.
அதற்குள் மடியை அவிழ்த்துத் தயாராய் இருந்த அசோகன் சட்டென்று “இந்தா ஒனக்கொண்ணு” என்று கொடுத்தான்.
இசக்கியப்பன் அதனைப் பார்த்தான்.
“டைம் பீசுலே.. வெல கூடினது. ஆசுபத்திரில ஆப்புட்டுது”
“ஒனக்கு?”
“எனக்கு வேண்டாம்”
“லே....எனக்கே டைம்பீசு தாறேன்னா..நீ சும்மா விடுவியா?”
“அத விடு...இன்னும் ரெண்டே நாளுல ஒங்க வீட்டுல ஏரியல் இருக்கும்”
“அது எப்படிலே?”
“பாரு நீ”
என்றுத் தலையைத் தடவித் தடவி சிரித்தான்.
ஒற்றை அறையினாலான வீடு அமைதியுற்றதும் தங்கையா கேட்டார்.
“ஏம்புள்ளப் பாத்து நடக்கப்புடாதா?”
“நா குருடுல்லா. எப்படிப் பாத்து நடப்பேன்?”
“கல்லத் தூக்கி எவனோ எறிஞ்சிருக்காம் புள்ளே”
“எவன் எறிவான். அந்த சொடலமாடந்தான் எறிவான்”
“சத்தம் போடாதே..எவனோ கவுட்டாபுள்ள வச்சிதான் அடிச்சிருக்கானாம் டாக்டரு சொன்னாரு”
“அவரு சொல்லிட்டாரா? அப்ப முத்தாரம்மையாத்தான் இருக்கும். அவ தானே எங்கண்ணு ரெண்டையும் தோண்டுனா...இப்ப மிச்சத்தையும் எதுக்கு விட்டுவக்கனும்னு நெனைச்சிருப்பா..”
“இல்ல புள்ளே..வேற எவனோ வேணுமின்னே செஞ்சிருக்கான்”
அவள் எதுவும் சொல்லாமல் நிலையற்று எங்கோப் பார்த்தாள்.
எத்தனைத் தவிர்த்தும் விழிகள் தூர்ந்த இடத்தில் தெரிந்தக் குழிகளை அவரால் பார்க்காமல் இருக்க இயலவில்லை.
நேர்பட பார்க்க விரும்பாத அக்குழிகளைக் காண நேரும்போது சவக்குழிகள் போன்று அவை அவரைக் குற்றப்படுத்தும்.
அளவுக்கு அதிகமான புகையின் தாக்குதலால் கண்கள் அவிந்தபோது தான் விரைந்து செயல்பட விழையாததின் குற்றம் உருவாக்கிய சவக்குழிகளாகவே அவை அவரை நொம்பரபடுத்தும்.
ஒளிரும் விழியைவிடவும் கூடுதலாய் பட்டுப்படரும் இரவுப் பறவையின் பார்வையினை ஒத்த தீக்கொள்ளி போல பயமுறுத்தும்.
“இந்தா ..நீ கேட்டது..”
“என்னது?”
“சீலை வாங்கிக் கேட்டேல்லா?”
அவள் எதுவும் கூறாது சலித்த சிந்தனையில் ஆழ்ந்தாள்.
“ஏன் வேண்டாமாக்கும்?”
சேலையினை அவள் கையில் வைத்தார்.
சட்டென உரசிய அச்சேலையினைப் பிடித்துத் தடவிப் பார்த்தாள் அவள்.
“எவ்வளவாச்சி?”
“எவ்வளவோ ஆச்சி. ஒனக்கென்னா?”
“பைசாவுக்கு வந்த செலவு”
“ஆவட்டுமே. அதுக்கு இப்ப என்னா?”
“டாக்ட்டரு எவ்வளவு கேட்டாரு?”
“கேட்டதக் குடுத்தாச்சி. அதுக் கெடக்குது விடு”
“செவப்பா?”
“ம்”
பதில் முன்கூட்டி வந்தாலும் கூட மறைக்க முடிந்த குற்றவுணர்ச்சியை பதுக்கிக் கொண்டார்.
அவள் சேலையைத் தடவிப் பார்த்துக் கொண்டே
“செவப்பு தான வாங்குனேரு?”
“பின்னே.. அதானே ஒனக்குப் பிடிக்கும். ஏங்கேக்கே?”
“செவப்பு மாதிரி இல்லியே... அதாங் கேக்கேன்”
‘’நீ கண்டியா.....? அது செவப்பு இல்லேன்னு ஒனக்கு எப்படித் தெரியும்?”
“கண்ணுத் தெரியாதுன்னு சொல்லுதியா? எனக்கு சும்மத் தோணிச்சி..செவப்பே தான் வாங்கினியா?”
“இல்ல”
அவர் தாக்குப் பிடிக்க இயலாது தோற்க அவள் சலனமற்று இருந்தாள். பிறகு,
“ஏன்? செவப்பு ஒனக்குப் புடிக்காதோ? சொடலை வாங்கிகுடுக்காதேனு சொன்னாரோ?” அவள் கேட்டாள்.
“இல்ல புள்ள செவப்பு ஒனக்கு ஆவாது. அதான்..”
“எனக்கு என்ன நீக்கெம்பு? செவப்புக்கு என்னக் கொள்ளை?”
“புள்ள..அது முத்தாரம்ம உடுத்துதக் கலருல்லா.....நீ அத உடுத்தப் பொறவு தான் கெட்டகாலம் ஆரம்பிச்சிது...ஒனக்குக் கண்ணு போச்சி...இப்பப்பாரு இரத்தமெல்லாம் வழிஞ்சி சீலையெல்லாம் செவப்பு..தரையெல்லாம் செவப்பு...”
“என்னக் கலரு?”
“ரோசு”
“ரோசாப்புக் கலரா?”
“ஆமா”
“அதுவும் செவப்புத் தானே இல்லியா?”
“அதனால தான் மொதல்லேயே சொன்னேன் செவப்புன்னு”
“என்னையத் தூக்கிட்டுப் போவும்போதும் இதேக் கலருலக் கெட்டி அனுப்பி விட்டுரும்......ன்னா?”
“ஒனக்கு மறக் கழந்து போச்சா..? பாடையில போறதப் பத்தி இப்ப எதுக்குப் பேசுதே? பயித்தியக்காரி....”
“சொல்லி வச்சிக்கிடனும்லா? ஒம்மக் கிட்டச் சொல்லாம வேற யாருக்கிட்டச் சொல்லி வப்பேன்?”
“அத அப்பப் பாத்துக்கிடலாம்”
அவளது விழியிருந்தப் பகுதியில் துடிதுடித்துக் கொண்டிருந்த சீவனைப் பார்த்து அவர் மெதுவாக அவளதுத் தலையினைத் தொட்டார்.
“வேதனிக்குது” என்றாள் அவள்.
“செரி.படு”
“படுத்தா யாரு பொங்குவா?”
“நா பொங்குதேன். நீ படு”
“கரி போடப் போவலையா?”
“மூடை வரல”
தங்கையா பொய் சொன்னார். அவளைப் படுக்க வைத்துவிட்டு அரசமூடு காய்கறி விற்பனைப் பகுதிக்கு சென்றார். காய்கறிகளை ஒவ்வொன்றாகப் பார்த்து எடுத்தார்.
“ஓய் காக்கிலோ வாங்கும். இல்லேனா நூறு கிராம் வாங்கும்...இப்படி ஒரு கத்தரிக்கா, ஒரு பாவைக்கானு எடுத்தா நா என்னக் கணக்குப் போடுவேன்?”
“என்ன உண்டோ அந்தக் கணக்கப் போடு”
அவர் வாங்கிக் கொண்டு நிமிர, ரவி எதிரில் வந்து நின்றான்.
“என்னவோய் எறச்சிக் கடைக்குப் போறேரு போல இருக்கு?”
என்று பக்கவாட்டில் சரிந்து சீண்டலாகக் கேட்டான்.
“நா எதுக்குப் போறேன்?”
“போவும் ஓய்..ஒம்ம ஓதத்தக் குடுத்தா கொத்தி கறிப் போட்டுத் தருவாம்லா?”
அவர் திடுக்கிட்டு நின்று அவனை மேலும் கீழுமாகப் பார்த்தார்.
அவன் நின்ற இடத்தைக் கேட்டு தான் அவன் தாயார் கடைபோட வேண்டி தயைக் கேட்டு நின்றாள். இதே இடத்தில் பல தடவைகள் அவனுடைய அண்ணனுக்கும் அவனுக்கும் படிப்பதற்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அனேக வேளைகளில் காசில்லாதபோதுகூட வறுத்த நிலக்கடலையைத் தான் வாங்கிக் கொடுத்த நேரங்களில் பசியோடு இருந்ததாக வள்ளி சொன்னதும் உண்டு.
பசியையும், தயவையும் நன்றியினையும், அவமானத்தையும் புதைத்து பிடித்துக்கொண்டு கிடக்கும் அவ்விடத்தை விட்டு அவர் நகர விரும்பினார்.
“செரி... ஒரு பத்து ரூவா தாரும்”
அவன் கையை நீட்ட “ஒத்தப் பைசா இல்ல” என்று மறுத்தார் அவர்.
“பொய் சொல்லாதீயும் ஓய்... நீரு சாமியாடி. பொய் சொல்லக்கூடாது. நாசமாப் போயிருவீரு. மலக்கறி ஓசுலயாவோய் வாங்குனிரு...மடிய அவுரும்.குடும்” என்று நெருக்கினான். அவர் கிளம்பினார்.
“எங்கம்ம இருக்கும்போதுல்லாம் நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு வருவான். அவக் கிட்ட வாங்கிவாங்கித் தின்னு அவ சம்பாத்தியத்தக் கரச்சான்.. தாயிலி ......சிமவனே”
நேர்ந்த துயரத்திலிருந்தெல்லாம் தப்பிவிட்டதாக எண்ணும் தருணங்களில் அதன் பல்வேறு நிலைகளிலிருந்தும் தொடரும் நீட்சியாகவே துயரத்தின் அந்நாள் அமைந்துவிடுகிறது.
தங்கையா காய்கறியுடன் நுழைந்தபோது கிழவி நடையை விட்டு மெதுவாக இறங்கித் தெருப்படியில் உட்கார்ந்தாள்.
சூனியக்காரி,தரித்திரம்,கெட்டசகுனம்,வாந்திபேதி,வயிற்றிளக்கம்,காய்ச்சல், அக்கி,பொருமல்,நிழல்படுதல்,சூலை,வாதம்,நிழல்படுதல்,குடலிறக்கம்,மாந்தம், தலைப்பிள்ளை சுகவீனம், கவனமின்மை, கல்வியில் தோல்வி, பொருளிழப்பு, சாரீரசரீரக் கோளாறுகள், வரன் தடங்கல், குழந்தையின்மை, காவல்நிலைய விசாரிப்புகள், வழக்கு இழுப்புகள் என துர்க்கேடுகளுக்கு பிறப்பிட மூலம் எனக் கருதப்பட்ட அவள் தனது கணவனால் அளிக்கப்பட ரோசாப்பூ நிற சேலையை எடுத்து நுனிவிரித்து அதன் வாசனையை நுகர்ந்து குழந்தைமையின் பருவத்தினுள் ஆழ்ந்து கொண்டிருந்தாள்.
பெரும் வைரியும் குலப்பகையும் கொண்டு உருவாக்கப்பட்ட சாப சூத்திரங்கள், அதன் தாக்கங்கள் அப்போது அவளை அணுக இயலாது அவளது குழந்தைமையின் முன்பு மண்டியிட்டன.
வாசனையின் பரிகாரத்தில் நாசி விடைத்து உணர்வலைந்துச் சென்று கொண்டிருந்த பார்வதியின் மனத் திவலைகள் குளவீதிகளிலும், கடைப்பகுதிகளிலும் புதிய சிவப்புநிற உடுப்பும் பாவாடையுமாக ஓடிக்கொண்டிருந்த சிறுமியை அடையாளம் காட்டிக் கொண்டிருந்தன.
வெகுநாட்களுக்குப்பிறகு தனது மனைவியின் முகம் பேரழகினால் வழிந்து கொண்டிருப்பதாக உணர்ந்த தங்கையா சுடலையையும் செக்கடிமாடனையும் நோக்கி கை தொழ கண்களின் அடைப்பினை உடைத்து பெருக்கெடுத்து வந்தன கரியோடு சேர்ந்த கண்ணீர்.
(கனா தொடரும்)
(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர் தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத்தொடர் இது.)