கனா மீது வருபவன் -19

Published on

செத்தக் காக்கையொன்றின் இறகு போல காற்றுப் பிரதேசத்தில் தன்னை ஊதித் தள்ளும் இறைவனிடம் மன்றாட முடிகிறதே தவிர உரத்துக் கேட்க தன்னிடம் கேள்விகள் இல்லாதது குறித்து தங்கையா தீவிரமாக எண்ணிக் கொண்டார். மாறாக பார்வதியிடம் கேள்விகள் மட்டுமே குமுறியிருந்தன.

இதன் வித்தியாசத்தை முதன் முதலாக தங்கையா கூர்ந்து கவனித்தார். இருவரின் நிலைகளுக்கும் இடையில் பெரிய பாரதூரம் எதுவும் இடைப்படவில்லை. சிறிய விகிதாச்சாரமே இருப்பதாகவேத் தோன்றியது.

இறைவனிடம் நான் ஏன் கேள்விகள் கேட்காமல் இருக்கிறேன்? உண்மையிலேயே கேள்விகள் இல்லை என்பதாலா? அப்படியென்றால் ஒருவகையில் பார்வதியின் கேள்விகள் அனைத்தும் என்னுடைய கேள்விகள் தானே? நான் ஏன் கேட்க மறுக்கிறேன்? என்னுடைய சுபாவத்தினாலா? சுபாவத்தினால் என்றால் கேள்விகள் இருந்தும் நான் கேட்க மறுக்கிறேனா? அது ஏன்? ஒருவேளை நான் சாமியாடியாக இருப்பது தான் காரணமாகுமா? எனில் சாமியாடிக்குக் கேள்விகள் கேட்கக்கூடிய உரிமை இல்லையா? இல்லை அனுமதிக்கப்படவில்லையா? ஆம். உண்மைதான். நான் சாமியாடியாக இருக்கிறேன். அதுவே காரணம். தனிப்பட்ட முறையில் நான் கேள்வி கேட்பதற்கும் சாமியாடியாக நான் கேள்வி கேட்பதற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறது. சாமியாடியின் கேள்விகள் களத்தினுள்ளே இருக்க வேண்டும். அது பொதுப்பகுதி. சாமியாடியின் கேள்விகள் தெய்வத்தின் கேள்விகளாக கருதப்படுகின்றன. அங்கு தனிமனிதனான என்னைப் பற்றி சாமியாடும் தெய்வம் கூறுவது ஆகாது.

ஒருவேளை வேறு யாராவதுக் கேட்டு உரிய  பதில் வராமல் போனாலோ அல்லது அளிக்கப்படும் பதில் புரிந்துகொள்ளப்படாமல் போனாலோ அது தவறுதலாக பார்க்கப்படும். எனது தெய்வத்தினை பதிலற்ற தெய்வமாக மக்களிடத்து பதிவு செய்துவிட்டது போல் ஆகிவிட காரணமாகிவிடுகிறேன்.

ஒருவேளை இறைவன் நிமித்தம் வருங்காலத்தில் இறைநம்பிக்கையே அற்றுப்போகும்காலம் வந்தால் கூட சொந்தச் சாதிசமூகத்தில் இறைவனுக்கு எதிராய் நான் நடப்பட்ட முதல் மரமாகிவிடுவேன். இறைக்குற்றத்தில் முதல் பங்காளியாகிவிடுவேன். பழியேற்க விரும்பாததால் மட்டுமே நான் கேள்விகளற்று வாழ விரும்புகிறேன். நான் எனது தெய்வத்தினை விரும்புகிறேன். அவனைக் கொண்டு வாழும் கோமரத்தாடியாக மரணிக்கவே ஆசைப்படுகிறேன். யோசித்துப் பார்க்கையில் என்னிடமும் கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. நான் கேட்டதும் இறைவன் செவி கொடுப்பான். ஆனால் கேள்விகளுக்கான பதில்களை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். அதனை அனுபவித்துமிருக்கிறேன். எனக்குள் அடங்காத கேள்விகளை மட்டும் நான் முடக்கி வைக்கிறேன். அவைகளை நானே புரிந்துகொள்ளாது கேள்வியாகக் கேட்க இயலாது.

ஏன் முடக்க வேண்டும்? ஒரு சாமியாடியாக இல்லாமல் ஒரு சராசரி மனிதனாக நான் கேட்கலாமே? இதுபோன்று தினப்பொழுதும் துயரங்களை பறைசாற்றும் மனைவியை எனக்கு ஏன் கொடுத்தாய்? அவளது பேச்சுக்களும், ஏச்சுக்களும் செவிகெடும் வார்த்தைகளும் உனக்கே உகந்ததாக இருக்கிறதா சுடலைமாடா? அல்லது அவளது பாவத்தின் பங்கினை ஏற்றி அவள் திணறுவதைப் பார்த்து அவளை பலி கொண்டு அதன் மூலம் என்னை பழி கொள்ள உத்தேசித்திருக்கிறாயா அப்பா? துயரங்களைக் கண்டு அஞ்சவில்லை. அதை நீடித்து வைத்திருக்கும் உன் திருப்பணியினை நான் அறவே வெறுக்கிறேன். கேள்விகள் துவங்கிவிட்டன. தங்கையா தன் மனதினை சட்டப்படுத்த மிகவும் பிரயாசைப்பட்டார். அது அவரது கட்டுப்பாட்டினை இழந்து பிடிமானம் தேடி அலைந்தது.

“எத்தனை பேர் எத்தனை விதமாக என்னைப் பேசுகிறார்கள்?. குமைக்கிறார்கள்? சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள் என என்னைச் சீண்டாத, கேலி செய்யாத ஆட்கள் யார் இருக்கிறார்கள்? அப்படியொரு நிம்மதியான நாள் எப்போது கிடைக்கும்? எனது மனைவியின் வதைபடுதல் என்று நிற்கும்? இவைகளின் நடுவில் அனைவருக்கும் சிரிப்பூட்டும் விதமான நபராக நான்  இருக்கிறேன் என்றால் நான் ஒரு கோமாளியே! மரணத்தின் போதுதான் இவை அனைத்தும் சரியாகுமென்றால் அப்போது நான் கோமாளியே..’’

முதன்முதலாக தான் கோயிலில் சாமியாடியது பற்றி தங்கையா நினைவுகூர்ந்தார். சாமியாடுவதன் மூலம் மக்களுக்கும் இறைவனுக்குமிடையில் தான் ஓர் பாலமாக இருப்பதாகவே அன்று அவர் நினைத்தார். அப்படித்தான் அது ஆரம்பிக்கவும் செய்தது. பிற்பாடு மற்றவர்களிடமிருந்து கேலியும் கிண்டலும் வரத் துவங்கிய பிறகு தன்னை நம்புபவர்களை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொண்டு தொடர அனுமதித்தார். காலப்போக்கில் தான் தெரிந்தது , அப்படி யாருமே இல்லை என்று. அடக்க நினைத்தும் ஆடிய கால்கள் அடங்க மறுத்தன. கூவிய தேகம் அமைதி தொலைத்தது. தங்கையா தான் தொலைந்துவிடுவோம் என்று பயந்தே மீண்டும் சாமியாட தன்னை அனுமதித்தார்.

“மானம் போவுது...நீரு ஏன் சாமியாடுதேரு.....? பைசாப் பெறாத்த பயலுவ எல்லாம் கொமைக்கது உம்ம மண்டையில ஏறலியா...போய் வேற சோலி உண்டுமானாப் பாரும்..’’

பார்வதி அவரிடம் கேட்டாள். அவள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது.

கார்த்திகை மாதம் கோவில் சிறப்புக் காலங்களில் படைப்புக் கொடுக்கப்படுவதற்காக தீபாராதனை துவங்குகையில் தோத்திரி “பீ..பீ” என்று நாதஸ்வரத்தை எடுத்து ஊத, தவில்காரர் இரண்டு தட்டு தட்டி மேளத்தினை ஆரம்பிப்பார். தொடர்ந்து கோயில் மணி ஒலிக்க தங்கையா சத்தங்களுக்கு நடுவே தனது உடலை அதிர விடுவார். நாடிநரம்புகளில் ஊடுருவும் அதிர்வுகள் மண்டையுச்சி வரைக்கும் சென்று குவிவதைக் கண்மூடி கவனிப்பார். மேளம் துள்ளத் துவங்கும். உடல் துள்ளலை வேண்டும். உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான விசைக்கு உட்பட்டு துடிப்பு கொள்ளும். துடியாய் நிற்கும். மக்கள் காத்துக் கொண்டிருப்பார்கள் அடுத்ததாக ஒரு பெரிய வரவின் அறிகுறியான தங்கையாவின் பலத்த ஒலிக்கு வேண்டி. ஒலியினைத் தொடர்ந்து மேளக்காரர் தாளம் மாற்றுவார். தங்கையா ஒலியுடன் பீடத்தினை நோக்கி ஓடுவார். சுடலையின் பங்கினை எடுத்துக் கொள்வதாக பாவித்து அதனைத் தொட்டுக் கொள்வார். மேளச் சத்தங்கள் தொடர தங்கையா ஆவேசத்தோடு சுழன்று ஓடுவார் சலங்கை ஒலிக்க. பீடங்களின் முன்பு குறிப்பு உணர்த்துவது போல் தெய்வங்களைப் பார்த்து ஏதேதோ சைகைகள் செய்வார்.

இப்போதெல்லாம் அவர் ஓடும்போது சிறுவர்களும் ஓடுகிறார்கள். அவரைப் பின்தொடர்ந்து அவர்களும் ஒலி எழுப்புகிறார்கள். அவர் பார்த்து வளர்ந்துவிட்டவர்களும் கூட அவரது சத்தத்திற்கு எசப்பாட்டு போல ஓலமிடுகிறார்கள். சிறுவர்கள் சற்று முன்னேறி அவர் சத்தமிடுவதற்கு முன்பே ஊளையிடுகிறார்கள்.

தங்கையாவின் ஒலி ஒவ்வொன்றுக்குமிடையில் ஒரு சம இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியேக் கூட சில சமயங்களில் மர்ம சிலிர்ப்பை ஏற்படுத்தக்க்கூடியதாய் அமையும். சிறுவர்கள் இப்போது அந்த வெளிகளுக்குள் புகுந்து ஊளையிடத் துவங்கிவிடுகிறார்கள். தங்கையாவிற்கே தனது குரல் நசுங்கி நாசமாகி ஒரு நோயாளியின் தேயும் குரல் போலாகிவிட்டது போல் இருக்கிறது. அவர் “ஓ...வ்” “ஓ...வ்” என்று சத்தமிட பிள்ளைகள் “ஆ....வ்” “ஓ....வ்” என்று கத்துவதும், மட்டுமல்லாமல் அவரைப் போலவே ஆடவும் செய்தார்கள். பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளைக் காட்டி சிரித்து ரசித்தார்கள். குறிப்பாக தங்கையாவின் வேகம் குறையும் நேரங்களில் சிறுவர்களை உத்வேகப்படுத்த ரவி வேறு மெனெக்கெட்டு வேலை செய்து வந்தான். மேளக்காரர் கோதண்டனையும் நாதஸ்வரம் தோத்தாத்திரியையும் தனது வேலைக்கு உட்படுத்தினான். இவனது தொல்லைக்கு பயந்த தோத்தாத்திரி பல நேரங்களில் அந்த கோபத்தில் வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு அதன் விளைவாக திண்ணையில் போய்ப் படுத்து உறங்கிய சம்பவங்களும் உண்டு.

சிறுவர்கள் மற்ற நேரங்களில் தத்தமது வீடுகளில் விளையாடும்போது கூட தங்கையாவைப் போல சத்தமிட்டு சாமியாடுவது போலவும் அலங்கரித்து வலம் வருவது போலவும் விளையாடினார்கள். மிகச் சரியாக சாமியாடியவருக்கு மிட்டாய் வழங்கி “ஓவ் தங்கையா” என பெயரிட்டு மகிழ்ந்தார்கள். ரவி ‘’ஓவ் தங்கையா இல்லலே ஓதம் தங்கையா’’ என்று சிரித்துத் திருத்தினான். சிறுவர்களின் செயல்களைக் காணாதது போல இருந்தாலும் ஊர்ப் பெரியவர்கள் தங்களுக்குள் இதனைப் பற்றி விவாதித்தலும் நடக்கவே செய்தது. சிறுவர்களை கண்டிக்கலாம் என்றால் அவர்கள் ஊருக்கு கட்டுப்படுபவர்கள் இல்லை. வாடகைக்குக் குடியிருப்பவர்கள். கவனமாகக் கையாளவில்லை என்றால் யார் வந்து எந்த வார்த்தை சொல்லி அழைத்து விடுவார்களோ என்ற பயம் வந்தது. மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் ஒரு குடும்ப எதிரியை நிர்ணயித்து வைத்திருந்தார்கள். தங்களை யாராவது கேலி செய்தால் எதிரி அதனை ஒருநாள் சொல்லிக் காட்டி அவமானப் படுத்தகூடும் என்ற சுயக் கௌரவக் குறைச்சல் காரணமாகவும் அவர்கள் சற்றுத் தயங்கினார்கள். முடிவில் தங்கையாவை விட்டால் சாமியாடுவதற்கு வேறு நாதி இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாக அமைய அதையே வலுவாகப் பிடித்துக் கொண்டு காரியத்தை கைகழுவிவிட்டார்கள்.

தோத்தாத்திரிக்கு மற்ற நாயனக்காரர்கள் போல் அல்லாமல் இது தேய்பிறைக்காலம். இக்காலத்தை நிரந்தரமாக்க விரும்புவது போல சதா குடியிலேயே அவர் மிதந்தார். இது போன்ற சிறு கோயில்களின் வருமானமே அவரது குடிக்கு போதுமானதாகவும் இருந்தது. கோயிலுக்கு வரும்வழியிலேயே அய்யர் கடையில் ஏறி ஒரு மிடறு ஊற்றிக்கொண்டு வாசனைக்காக ஜிண்டான் வாங்கி வெற்றிலையோடு போட்டுக் கொண்டு தான் வருவார். இல்லாவிடால் இந்தத் தெரு இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் மத்தியில் கிடந்தது உதைபடுவதை சமாளிக்க முடியாது.

முன்பு ஒருதடவை பொறுக்க முடியாமல், ”சளங்களா......ஓஞ்சித் தொலையிங்க.....சாமியாடியப்போயிக் கொமைச்சிக்கிட்டு......ஒங்களுக்குலாம் வெவரம் இல்லியாலே....? ஒங்கொப்பன், ங்கொம்மை என்னச் சொல்லி அனுப்பி வக்காவோ?....” என்று திட்டிவிட்டார்.

அது அவரது அறியாமைப் பொழுது.

அவ்வளவு தான்.

அவர் தெருவிற்குள் வந்தாலே ஓடிச் சென்று “பீப்பீ” ஊதி வரவேற்றார்கள். அவர் ‘’பீப்பீ’’ என்று ஊதுவதற்கு முன்பே “பீப்பீ” என்று அவர்கள் ஊதினார்கள்.

“பாரு என்னா... நெலை நிக்குதுன்னு” என்று முனகிக் கொண்டே வருவார்.

நாயனம் வாசிக்கும்போது நாயனத்தை தடவுவது, சட்டென்றுக்  குழலுக்குள் விரலை விடுவது போன்ற செயல்களை செய்தவாறே அவர்களும் வளர்ந்து கொண்டிருந்தார்கள்.

சிலதுகள், “ரெட்டைசாயிபு” கடைக்குச் சென்று ஊத்துகளை வாங்கி வாயில் அடக்கி வைத்துக் கொள்வார்கள்.

தோத்தாத்திரி வந்ததும் அருகில் சென்று ஒரே நேரத்தில் வாய்க்குள்ளிருந்து ஒலிஎழுப்புவார்கள்.

இவர்களை சமாளிப்பது பெரும் சவாலாக இருந்தது தோத்தாத்திரிக்கு.

“என் உயிர எடுத்துட்டுத் தான் அடங்குவானுவோ போல இருக்கே...பேப்பயலுவோ...”

மேளக்காரனிடம் ஒப்பாரிவைக்கும்போது அவன் தான் ரவியிடம் முறையிடும்படி ஆலோசனை தந்தான். ரவி நிபந்தனை வைத்தான்.

“பயக்கள நாம் பாத்துக்கிடுதேன்...ஆனா நீரு ஒரு காரியஞ்செய்யணும் சாமியாடும்போது ஓதத்தை பயக்க மேல தள்ளி விட்டுறணும்”

தோத்தாத்திரி முடியாது என மறுத்தார். உடனே ரவி தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். சிறுவர்களுக்கு மத்தியில் இப்போது ரவி முதலில் ‘‘பீப்பீ’’ என்று ஆரம்பித்து வைத்தான். தோத்தாத்திரிக்கு பலதர்மசங்கடமாகிவிட்டது.

ஒருநாள் தங்கையா பூஜைக்கு தன்னை அலங்கரித்து நிற்கையில் தோத்தாத்திரி தன்னையே விழுங்குவதைப் போல் பார்ப்பதும் மேளக்காரன் சாடைக் காட்டுவதும் ஏதோ வினையறுப்பு போல என்று ஊகித்துக் கொண்டார்., தங்கையா மெதுவாக வழக்கமாக நிற்பது போலல்லாமல் தோத்தாத்திரியை விட்டு விலகி எதிர்ப்புறத்தில் போய் நின்று கொண்டார். ரவி தோத்தாத்திரியை துரிதப் படுத்தினான். தங்கையா தோத்தாத்திரியின் நகருதலை கண்கணக்கில் வைத்துக் கொண்டார்.

ரவியின் துரத்தல்களுக்கு அஞ்சியத் தோத்தாத்திரி  மேளக்காரனுடன் மெதுவாக தங்கையாவை நோக்கி நகரத் துவங்கினார். சிறுவர்களிடம் ரவி இளக்கிக் கொடுக்க, கண்காட்சிக்கு செல்வதைப் போல அவர்களும் தோத்தாத்திரியைப் பின் தொடர்ந்தார்கள். தீபாராதனைத் துவங்க ஆரம்பித்தது. கோயில் மணியையும் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தோத்தாத்திரி நெருங்கி வருகிறார். தங்கையா சுவற்றின் ஓரம் வரைக்கும் செல்லும்படியாகிவிட்டது. அதற்கு மேல் நகர வழியுமில்லை. பரிதாபமாக சுடலைமாடனைப் பார்த்தார். தோத்தாத்திரியும் விடவில்லை.  சிறுவர்களும் சூழ்ந்து கொண்டார்கள். மேளக்காரன் தாளத்தை மாற்றி வேகமாக அடித்தான். தோத்தாத்திரி நாயனத்தை ஆட்டி ஆட்டி ஊதித்தள்ளினார். ஒரு சிறுவன் தனக்கு வந்த உத்தரவுப்படி தங்கையாவின் வேட்டியைப் பிடித்துக் வைத்துக் கொண்டான். தன்கையாவின் ஆட்டமில்லாமல் தவசிதம்பிரானுக்கு தீபாராதனை நடந்தது. தங்கையா ஆடவில்லை. அவர் மனதிற்குள் வதங்கினார். தீபம் முருகனின் கோயிலுக்கு நகர்ந்தது. சுடலைமாடனுக்கு அடுத்த தீபாராதனை. அடுத்தது செக்கடிமாடனுக்கு. அது வேறு இடம். அங்கு தங்கையாவிற்கு வேலை இல்லை. பூசாரி சுடலையின் நடைக்கு வந்தார். வேட்டியைப் பிடித்த சிறுவனிடம் நன்றாக இறுக்கிப் பிடித்துக் கொள்ளும்படி ரவி கூறினான். தங்கையாவின் உடலுக்குள் யாரோ அங்குமிங்கும் ஓடினார்கள். உடல் தவித்தது. கொஞ்சம் கொஞ்சமாக துடிக்க ஆரம்பித்தது. தன் கழுத்து மட்டும் சுடலையை, அவரின் பீடத்தை நோக்கி நீண்டு செல்வது போல உணர்ந்தார். பூசாரி மணியடித்தார். சிறுவன் தனது கையைத் துடைத்துக்கொள்ள வேட்டியைவிட்டு கையை சற்று விலக்கினான். உடனே ரவி பின்புறமாக வேட்டியைப் பிடித்துக் கொண்டான். மறுவினாடி தோத்தாத்திரி கீழே சாய்ந்தார்.

(கனா தொடரும்)

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக்கால நினைவுகளில் இருந்துமீட்டு எழுதும் கதைத்தொடர் இது.)

logo
Andhimazhai
www.andhimazhai.com