கனா மீது வருபவன் -2

Published on

 ...எடுத்தக் கத்திய வண்டிக்காரரு மொனையத் திருப்பி வெரலால லேசாத் தடவித்தடவிக் கூருப் பாக்காரு. நீலிக்கக் கண்ணு ரெண்டும் உருளுது....அதுல அடுப்புத்தீ மாதிரி நின்னு எரியுது சொவப்பு. அவ பார்வையைக் கொண்டே எரிச்சுப் புடுவா. பாத்தப் பார்வை அப்பிடி! அவ்வளவு பயங்கரி!. எப்பவேணும்னாலும் எதுவேணும்னாலும் நடக்கப் போவுதுபோல.... 

இந்த சமயம் பாத்து வண்டிக்காரரு என்ன செஞ்சாருன்னா...பார்வைய மட்டும் அவ மேல வச்சிக்கிட்டு முதுக சொறிய மாதிரி நைஸா எடதுக்கைய பொறத்த வண்டிக்குள்ள வுடுதாறு. உட்டு எடுத்தா கையில ஒரு சாதனம் வருது. என்னடான்னா...? சின்னப் பொட்டி! தகரப்பொட்டி. எடது கையால அதத் தொறக்காரு..ஆனா பொட்டிக்குள்ள இருக்கதொண்ணும் வெளியத் தெரீல அந்தக் கரி இருட்டுல.

நீலியும் பாத்துக்கிட்டே இருக்கா...இந்த ஆளையும் நழுவ விட்டுறக் கூடாதுல்லா ...பொறவு இன்னையப் பசிய யார வச்சித் தின்னுத் தீக்கது? அதான்! ஆனா உள்ளுக்குள்ள ஒடமுள்ளு மாதிரி இன்னொரு யோசனையும் நெளியத்தான் செய்யுது அவளுக்கு. என்னென்னா ...வண்டிக்காரன் ஆளு இவ்வளவு ஏது காட்டுதானே இவன் ஒருவேள மந்திரவாதி கிந்திரவாதியா இருந்துட்டா....என்ன செய்யது? எழவுப் பொட்டிய வேறத் தொறக்கானே...மைய்யிக் கிய்யி எதையாவது எடுத்துத் தேச்சிட்டாம்னா....? அப்படீன்னு! அதனால அவக் கறுவிக்கிட்டா. ‘’ வேலையா ஓய் காட்டுதேரு வகையா மாட்டும் ஒமக்கு வச்சிக்கிடுதேன்னு...’’ நீலில்லா? சும்ம விட்டுருவளா? 

இதுக்கெடையில அவரு கத்திய இரும்புப் பொட்டிக்குள்ள வுடுதாரு. உட்டு ராவுதாரு. அது கொடகொடங்குது. அதேசமயத்துல காலால சாட்டக்கம்ப எடுத்து காலுவெரலு இடுக்குக்குள்ள வச்சிக்கிடுதாரு. பொட்டிய ராவுனதுல உண்டான சத்தத்துல நீலி இத கெவனிக்காம விட்டுட்டா. இவங்க ரெண்டுபேருக்கும் எடையில மாட்டிக்கிட்டு மாடுரெண்டும் சாணியாப் போட்டுத்தள்ளுது.

ஏத்தநேரம் பாத்து  ‘’..உம் கைய நீட்டு ..’’ன்னு சொல்லுதாரு வண்டிக்காரரு. நீலிக்கு விசயம் புரியல. அவ அவரையே செறஞ்சுப் பாக்கா ...அதப் பாத்து ‘’என்னம்மா ...சுண்ணாம்பு வேணுமின்னுக் கேட்டியே....கைய நீட்டுத் தாரேங்காரு. அப்படீன்னு அவரு சொல்லவும் குடும் ஓய் பாப்போம்னு அவளும் கைய நீட்டுதா. அப்பப் பார்த்து பொசுக்குனு அவளுக்கு நேரா அவரு கத்திய எடுத்து நீட்டிக் காட்டுதாரு.. அவ கோவமாயிட்டா. “என்னா கத்திய நீட்டுதே..பயங்காட்டுதியோ..?” அவ ஒரு மார்க்கமா கேக்க,  “நல்லா பாரு..நீ கேட்ட சுண்ணாம்பு இதுல இருக்கே ” ன்னு அவரு பதில் சொல்ல அப்ப தான் அவ கத்தி மொனையப் பாக்கா. மொனையில சுண்ணாம்பு கொரங்கு மாதிரி விழவா வேண்டாமான்னு தொங்கிக்கிட்டு இருக்கு. அவரு கத்திய ஒரு ஓதறு ஓதறுதாரு. சுண்ணாம்பு அய்யரு போட்ட சந்தனம் மாதிரி பொத்துன்னு அவ கையில விழுந்து ஒட்டிக்கிடுது. அடுத்த நிமிஷம் தலைக்கு பொறத்த கத்திய வண்டிக்குள்ள எரியுதாரு மனுஷன். அட சண்டாளானு நீலி யோசிக்கதுக்குள்ள அவரு கைக்குள்ள வந்து நிக்கிது சாட்டக்கம்பு. வேற என்னத்த வேணும்? வண்டி இருட்ட வெரட்டிக்கிட்டு காத்துல பறக்குது...நீலி கத்துதா கத்துதா காட்டுக்கத்து...அவச் சத்தம் காட்டுக்குள்ளேயே தெறிச்சு விழுது. ஆனா வண்டி மட்டும் நிக்கல. இருட்டு தோத்துப் போச்சி! எப்பிடி?
 

லேய் கூட வந்த ஆளுவளையும் தப்ப வச்சி நீலிக்கு கைபடாம சுண்ணாம்பையும் குடுத்து அவக்கிட்ட ஆப்புடாம சாமர்த்தியமா தப்பி வந்த வண்டிக்காரன் மனுசனப் பத்தி யாராவது கேள்விப்பட்டிருக்கேளாலே? அப்படியாப்பட்ட அந்த வண்டிக்கார மனுசன் யாருன்னாவது தெரியுமால்லே? தெரிஞ்சா சொல்லுங்கலே பாப்போம் ..”என்று கதையும் சொல்லிவிட்டு முடிவில் இப்படிக் கேள்வியையும் யாரும் எதிர்பாராத நேரத்தில் கேட்டுவிட்டு ஆக்ரோஷமாக தனது இடது கையினை மடக்கி டெஸ்க்கின் மீது ஓங்கி ஒரு குத்து குத்தினான் அப்பு. தொண்டை வறண்டதனை  அறியாது சுற்றிலும் நின்று கவனித்துக் கொண்டிருந்த சக மாணவர்கள் வெலவெலத்துப் போனார்கள். சுய உணர்வு சரியாய் மீள அவகாசம் கொடுக்க விரும்பாத அவன் மீண்டும் மிரட்டியபடி, “சொல்லுங்கலே..ஏதாவது ஒரு பயலுக்காவது தெரியுமா? தெரியுமாலே?..” என்று சுற்றும் முற்றும் ஒரு தினுசாக சுற்றிப் பார்த்து விட்டு, “ம்...ஒரு பயலுக்குக் கூடத் தெரியல்ல,,” என்றவன் தனது சட்டைக் காலரை எடுத்துவிட்டுக் கொண்டு “அவரு தாம்லே எங்க பாட்டா. சொந்தப்பாட்டா. எமகண்டம்லா..எமகண்டன்” என்று பெருமிதமாய்க் கூறியபடி டெஸ்க்கின் மீது மேலும் ஒருமுறை குத்தி திடுக்கிட வைத்தான்.

 கதையால் விளைந்த பயமும் தாங்கள் இது வரையில் கேட்டிராத கதவின் குமிழ் உராயும் அப்புவின் கீச்சுக்குரலும் அவர்களை பதம் பார்த்துவிட்டது.

 ஒட்டிக்கொண்டும், சாய்ந்தவாக்கிலும், இடைவெளிகளில் பொருத்திக்கொண்டும் நின்று கேட்டுக் கொண்டிருந்த மாணவர்களை தாங்கியபடி உட்புறம் உட்கார்ந்திருந்த மாணவர்கள் அப்புவின் மிரட்டலில் சிக்குண்டு சமநிலையை தவறவிட, நின்றவர்கள் மொத்தமாக சரிந்தார்கள். அதன் பொருட்டு கதையின் இருட்டிலிருந்த அனைவரும் வகுப்பறையின் வெளிச்சத்திற்குள் வந்து விழுந்தார்கள்.

வேலப்பனுக்கு இதுபோன்ற கதைகள் ஆகாது போல. எலுமிச்சையை பல்லில் தேய்த்துக் கொண்டவன் போல நெற்றியைச் சுருக்கிக் கொண்டு எழுந்தான். இதற்கு மேலும் தன்னால் தாங்காது என நிக்கரை இறுக்கி பின்புறத்தைத் தட்டி விட்டுக்கொண்ட நகரப்போக ஏவலர்களில் ஒருவன் விடுபடுவதை விரும்பாத அப்பு சட்டென அவனைப் பற்றியிழுத்தான். ‘இன்னுமாடே இருக்கு?’ என்பது போல வேலப்பன் கிறக்கத்தினூடே அவனைப் பார்க்க,

“கத எப்படிலே?” என்று தனது கேள்வியைக் கேட்டான் அப்பு. வேலப்பன் நீலியின் கண்களிலிருந்தே இன்னும் விடுபடவில்லை. அவனைப் பொறுத்தவரையில் வண்டிக்காரன் மந்திரவாதியோ இல்லையோ அப்பு நிச்சயமாக மை தேய்ப்பவனாகவே இருக்கக்கூடும். இனிமேல் இவன் கைப்பட்ட எந்தப்பொருளையும் தின்றுவிடக்கூடாது. இதுமாதிரி ஆட்களின் வீடுகளில் மைடப்பாக்கள் சாப்பாட்டு சம்படம் போல நிறைந்து கிடக்கக்கூடும்.

நம் மீது மையை தடவிவிட்டார்கள் என்றால் நாம் மசங்கி அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுவிடுவோம். அதன்பிறகு ஆத்தா சுப்பம்மைக்கு நான் பிள்ளையில்லை. அப்பா செல்லப்பனுக்கு நான் கொள்ளி இல்லை. இவன் ஏவல்காரன் என்ற மனப்பிதற்றலுக்குள் மாட்டிக்கொண்டு பிதுங்கியபடி நின்றான்.

“கத எப்படிலே இருக்கு?”

அத்தனை பேருக்கும் முன்னால் தான் மட்டும் எப்படி இப்படி காட்சிப் பொருளாகிப் போனோம் என்ற சந்தேகம் வேறு இடையில் புகுந்து சங்கடப் படுத்தியது. அப்புவின் முன் தான் நின்ற விதம் வேலப்பனுக்கு மந்திரவாதியின் முன்பு மண்டியிட்டு நிற்பது போல் தோன்ற, உண்மையில் பார்க்க மந்திரவாதிதான் மண்டியிட்டு நிற்பது போல் இருந்தது. வேலப்பனின் உயரம் அத்தகையதாக இருந்தும் அவன் அச்சப்பட்டதற்கு காரணம், நீ செஞ்ச தப்ப எல்லாம் ஒண்ணு விடாம மாரியாத்தா பாத்துகிட்டு இருக்கா, அவ விடமாட்டா. கூலிக் குடுத்தேத் தீருவா.....என்று அப்பாவைப் பாத்து அம்மா போட்ட சத்தம் தான். அன்றிலிருந்து அப்பாவுக்கு மிகவும் பிடித்தத் தன்னையும் மாரியாத்தா கவனித்துக்கொள்ளப் பின்தொடர்கிறாள் என்ற பயத்தை அவன் கட்டிக் கொண்டு அலைகிறான். பகலில் வரும் கோடங்கியே கூட மாரியாத்தா சொல்லித்தான் வந்திருப்பானோ என்று காய்ச்சல் வந்து உளறி உடல் விறைக்கும் வேலப்பனுக்கு நடுக்காட்டு நீலியின் கதையும் அதைச் சொல்லி மிரட்டிய அப்புவின் குரலும் கிட்டத்தட்ட மாரியாத்தா போக நம்மை கண்காணித்து தண்டிக்க இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்ற பீதியினை ஏற்படுத்தி விட்டது.

“வாயிக்குள்ள முந்திரிக் கொத்தாக் கெடக்கு.... கத எப்படியிருக்குன்னு சொல்லுலே..?”

அப்புவின் பிடியில் உலர்ந்த கிழங்கு போல் பிறுபிறுத்துப் போனான்.

“கதையா..? அது அம்மையான சத்தியமா நா கேக்கல..எனக்கு..நா..மாரியாத்தா..”

வேலப்பன் விலங்கு பாஷையில் வெளுத்து வாங்கினான். இந்தப் போக்கு இன்னும் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என உணரத் துவங்கிய மாணவர்கள் மொத்தமாக நகர முனைய அவர்களை மேலும் கலங்கடித்துவிட்டே ஆகவேண்டும் என்று கருதிக் கொண்ட அப்பு அவர்களைப் பார்த்து, “எனக்கு பதிலு சொல்லாம ஒரு பய இங்கேருந்து அசையக்கூடாது” என்று சட்டம் இயற்றினான். அவர்கள் நின்றுவிட்டார்கள். சொல்லிவைத்தாற்போல அனைவரின் மனக்குரல்களும் இடைவேளையின்  மணிச் சத்தத்திற்காக ஏங்கின. ரயில் வண்டி போய்விட்ட அமைதி. அடுத்து நடக்கப்போவற்கான ஒரு எதிர்பார்ப்பு. அதிசயம்.! முந்தைய டெஸ்க்கிலிருந்து ராசா மட்டும் எழுந்தான். தன் அருகில் இருந்தவர்களின் இடைவெளியைக் கடந்து டெஸ்க்கினை விட்டு வெளிய வந்தான். சுவரோரமாக வைக்கப்பட்டிருந்த பானையின் அருகில் சென்று மூடியைத் திறந்து தம்ளரில் தண்ணீர் எடுத்துக் குடித்தான். ராமிச்சம் வேரின் வாசனையும் நன்னாரியின் சுவையுமாக தண்ணீர் தொண்டைக்குள் குழைந்தபடி இறங்கியது. சாவகாசமாக அங்கிருந்து அவன் செல்ல முனைய அப்பு கோபத்தைப் பிடித்துக் கொண்டான்.

வேலப்பன் அவிழும் நிக்கரை மேலேற்றிக் கட்டிக்கொள்ள பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்

“லே ராசா...நில்லுலே..”

ராசாவைக் கீச்சியபடி அழைத்தான் அப்பு.

ராசா எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தான். கதைக்காக வெகுநேரம் மனதை கவனப்படுத்த நேர்ந்ததில் கொட்டாவி பீறிட்டுக் கொண்டு வந்தது.

“நீ பெரிய ஆசானாலே?”

என்று அவனைப் பார்த்து அப்பு கேட்க, ராசா சற்று அலட்சியமாக அவன் பக்கம் திரும்பி நோக்கினான்.

“கேட்ட கேள்விக்கு ஒடனே பதில் வரணும் ”என்றான் அப்பு.

ராசா கொட்டாவி பாதியில் நிறுத்தப்பட்ட எரிச்சலில், “ன்னா..?” என்றான்.

“கத எப்படி இருக்கு?”

“கதையா...ம்ஹூம் பழயக்கஞ்சி ..” என்றான்.

“லே என்ன சொன்னே? எங்கத பழயக் கஞ்சியாலே..? இது உண்மையிலேயே  நடந்த கதையாக்கும்லே..”

“நானும் கேட்டிருக்கேன்....... இந்தக் கத இப்படி இல்ல. நீ டூப்பு விடுதே. சோலியப் பாரு ” என்றான் ராசா. அப்பு வெகுவான கோபத்திற்குள் அகப்பட்டான். இந்த ஆறாம் வகுப்பறையில் அப்பு மட்டுந்தான் வயது கூடியவன். பழைய மாணவன். மற்றவர்கள் அனைவரும் வெவ்வேறு பள்ளிகளில் இருந்து புதியதாய் வந்து சேர்ந்தவர்கள். தன் பலத்தை நிரூபிக்கவும் தன் குணத்தை அறிவிக்கவுமாக அப்பு எழுந்தான். 

(கனா தொடரும்)

அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக் கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத் தொடர் இது.

logo
Andhimazhai
www.andhimazhai.com