கனா மீது வருபவன் -20

Published on

கழுத்துக் கோணியபடி தரையைத் தழுவச் சென்ற தோத்தாத்திரியை  நாகேந்திரன் ஏந்திப் பிடித்தார். எனினும் தோத்தாத்திரிக்குத் தான் சக்கர வியூகத்தில் மாட்டிக்கொண்டு அம்புப்படுக்கையில் கிடத்தப்பட்டு தன் மனைவியின் காலால் கழுத்தில் மிதிபட்டு சோற்றுப்பருக்கைக்கு சிக்கலாகி சொட்டுத் தண்ணீர்கூட கிடைக்காது தாகித்து உயிரை விட்டுவிட்டதை நம்பிய சிந்தனை காரணமாக சுற்றிலும் நடப்பதை அவரால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.

சமூகத்து இளைஞர்கள் ஒன்றுகூடி அவரை சரிசெய்து நாயனம் வாசிக்க வேண்டி இயல்புக்குக் கொண்டுவர முயற்சித்தார்கள். அது ஓரளவுக்கு பலனளித்தாலும் அவரது நினைவு அய்யர்கடை நோக்கிப் பின்னோக்கிச் சென்றதேயொழிய நாயனம் ஊதிய இடத்திற்கு வந்து நிற்க மறுத்தது. தலை தொய்ந்து போன அவர் தன் ஆள்காட்டி விரலை மட்டும் மெதுவாக முடிந்தமட்டிலும் உயர்த்திக் காட்ட முனைந்தார்.

“பாருலே கொழுப்பே...

நாம ஒபகாரம் செய்யப்போனா.....

நம்மளயேக் கொன்னுப் போட்டுருவாராம்.....”

என்று ஒருவன் கூற, அதை மறுக்க சக்தியில்லாத தோத்தாத்திரி தன் விரலை மீண்டும் தூக்கிக் காட்ட முயற்சிக்க அது மடங்கி வளைந்து தெரிந்தது.

‘’பாத்தியா..? கழுத்துலக் கொக்கியப் போட்டுத் குத்தித்தான் கொல்லுவாராம்”

என்றான் இன்னொருவன்.

வழியற்றுப் போன தோத்தாத்திரி மேற்கொண்டு முயற்சிக்கப் பிடிக்காமல் மூச்சைப் பிடித்து சிரமப்பட்டு எந்த நேரமும் ஒழுகத் தயாராயிருந்த வயிற்றை அடக்கிக் கொண்டார்.

அதே வேளையில் தங்கையா அன்றைய பூஜையில் களைக்கட்டிக் கொண்டிருந்தார். பூசை முடிந்தும்கூட சுடலை பீடத்திலிருந்து பூசாரியைத் திரும்பவிடாது சுழன்று அடித்தாடிக் கொண்டிருந்தார்.

கைகால்கள் நிலையில்லாது காற்றினை உருட்டுவது போலவும் காற்றைக் கிழிப்பது போலவும் பறந்தாடிக் கொண்டிருந்தன. உடலின் உள்ளேயிருந்து ஏக்கமாகவும் வெறிக்கொண்டும் தத்தளித்துத் தவித்துக் கொண்டிருந்த தூலமற்ற விசையினைப் பிடுங்கி எடுத்து பீடத்தினை நோக்கி எறிவது போலச் செய்தார். அது நேராகப் போய் சுடலையின் பீடத்தின் முன் மண்டியிட்டு பொருத்திக் கொண்டு துடிப்பதாக பாவித்து அதனை மீண்டும் இளக்கி எடுத்து நாலாதிசையிலும் தீபம் போல சுற்றிக் காட்டி சுடலையின் கழுத்தில் மாலையாக அணிவிப்பது போல கருதிக் கொண்டு தங்கையா துள்ளியாடினார். கால்கள் தரையில் தொட்ட இடம் துலங்குமுன்னே காற்றில் அலையென எம்பிப் பறந்தன.

துளையிடப்பட்ட பம்பரமிட்டாய் இழுத்துப் பிடிக்கப்பட்ட நூலின் மத்தியில் சுழன்று கொண்டே இருபுறங்களிலும் மாறிமாறி ஓடுவதைப் போல சுடலையின் பீடத்திலிருந்து வாசலுக்கும் வாசலிலிருந்து சுடலையின் பீடம் நோக்கியும் ஓடிக்கொண்டிருந்தார். கமுகம்புல்லை எடுத்து விசிறி போல வீசியடித்தார். அவரது  வேகத்துக்கு இணைகொடுத்து ஒலிக்க இயலாத கோயில்மணியின் கயிறு கைமாறி அதன் பின் வேகமெடுத்தது. ஒருசமயம் வாசலுக்கு வந்து செக்கடிமாடன் நின்ற திசை நோக்கி கையுயர்த்தி அழைப்பது போலவும் சத்தமிட்டு சைகைகளைச் செய்தார். அந்த நேரம் அவரது உடல் விறைத்து நின்றது. கழுத்து விடைத்துக் கொள்ள நரம்புகள் புடைத்துத் தெரிந்தன.

தங்கையா அடங்கவில்லை. அவரை மிரளவைக்க ரவி மெனெக்கெட்ட அதிரடி ஆயத்த அவசரத்தில் ஒரு விஷயத்தை நினைவில்கொள்ள அவன் தவறிவிட்டான். வழக்கமாக தங்கையா சாமியாடுவதற்கு முன்பாக பூஜை நேரத்தில் மக்களோடு மக்களாக முன்வரிசையில் நின்று கொண்டிருப்பார். குறிப்பாக கவனிக்காத பட்சத்தில் யார்யார் எங்கிருக்கிறார்கள் என்பதை சட்டென உணர்வது சிரமம். பூஜை நேரத்தில் மணியும் மேளமும் ஒலிக்கத் துவங்கியபின் எந்தக் கணத்தில் என்று உறுதியாக சொல்லமுடியாத நேரத்தில் நின்ற இடத்திலிருந்து திடும்மென எகிறிக்குதித்து திரும்பி நிற்பார். அவர் நிற்பதை அறிந்திராத கூட்டம் உடைந்து சிதறி விலகும். பிறகு மீண்டும் ஒரு துள்ளல். முந்தைய இடத்திற்கு திரும்பி வந்து நிற்பார் பழையபடியே. அதன்பிறகு மேளக்காரர்கள் ஒத்துழைக்க தங்கையாவின் வேகம் அதிகரிக்கும். துள்ளல்கள் கூடும். சத்தமிடுதலும், சடங்குகளும் நிகழும்.

ரவியின் முன்னே நின்று கொண்டிருந்த தங்கையா குதித்த முதல் குதியிலேயே ரவியின் பிடி விட்டது மட்டுமல்லாமல் சிறுவர்கள் பீதீயாகி கலைந்து விட்டார்கள். அதேநேரம் ஆக்ரோஷத்துடன் குதித்த தங்கையாவின் குதிகால்களில் ஒன்று தரையில் இறங்காமல் ஏற்கனவே அடிகள் பல பட்டு வீங்கிப்போயிருந்த தோத்தாத்திரியின் பருத்தக் காலின் மேல்தளத்தின் மீது இறங்கி நசுக்கிவிட்டது. திண்ணென்ற வலியின் உறைப்பால் தாங்கும் சக்தியினை அவர் நழுவ விட்டிருந்தார். வாய்விட்டுக் கதறும் முன்பே முழு ஆவேசத்துடன் இறங்கிய அவ்வலியின் காரணமாக தோத்தாத்திரியின் சுயநினைவு கூட சற்று பிதுங்கி விட்டிருந்தது.

அவரை வைத்து நாயனம் வாசித்தாக வேண்டிய அவசரத்தில் ஆளாளுக்கு அவரை உலுக்கியெடுக்க, அவர் வேறு ஏதோ ஒரு உலகத்தில் இருந்துகொண்டு குடிக்கச் சிறிது தண்ணீர் கேட்டார். சுவரோடு சாய்த்து வைத்து அவருக்குத் தண்ணீர் கொடுத்தார்கள். பதைபதைப்போடும் தாகத்தோடும் வாங்கியத் தண்ணீரை அவரால் குடிக்க முடியவில்லை. நயம் வாளை மீனின் வாடை பாத்திரத்தில் கலந்திருக்க வேண்டும். வீட்டில் இதுபோன்று பாத்திரத்தில் வாடை ஒட்டி இருந்தால் பாத்திரம் தெருவில் கிடக்கும். வேறு ஒருவருக்குச் சொந்தமாகும். அத்தகைய மனிதரைப் போட்டு வற்புறுத்தியதில் பலகுடிகள் குடித்து நீந்திக் கரையேறி வந்தவருக்கு இந்தக்குடியில் புரைக்கு ஏறி இருமலே வந்துவிட்டது. தொடர்ந்து வெகுநேரமாக இருமல் தொடர்ந்துகொண்டே போக அது கடைசியில் நெஞ்சுவலியில் கொண்டுபோய்விட்டது.

“விடமாட்டேங்கானுவளே....நாம தப்பிச்சாக் கூட இவனுவோ கொன்னுருவானுவோப் போல இருக்கே....”

சற்று உதிரியாய்க் கிடைத்த சுய உணர்வில் தோத்தாத்திரி முனகப் போக உடனே,

“தோத்தாதிரிக்கு ஓர்மை வந்தாச்சி.......பீப்பி ஊதப்போறாரு.......எடுத்துக்குடு... ”

என்றுப் பிடித்துக் கொண்டார்கள்.

ஆடிக்கொண்டிருந்த தங்கையா தோத்தாத்திரியிடம் வந்தார். அவரது இடதுகையில் கொப்பரை இருந்தது. அதிலிருந்து கொஞ்சம் திருநீறை எடுத்து தோத்தாத்திரியின் தலையில் போட்டார். உடனே தோத்தாத்திரி,  ”நீராவது காப்பாத்துமையா...... இதுவோளப் பாரும்.. என்னைய ஒலச்சுப்போடுதுவோ” என்று வாயைத் திறக்க உடனே தங்கையா வாய்க்குள் மேலும் சிறிது திருநீறை அள்ளிப்போட்டார்.

தோத்தாத்திரி வாயை மூடி  அதனை விழுங்கிவிட்டுச் சூழலின் சுமை தாங்காமல் தங்கையாவிடமே பணிந்து கொண்டார். எனினும்கூட தோத்தாத்திரிக்கு இது கூட ஒரு கனவு போலத் தான் இருந்தது. ஆனால் எது நனவு என்பதில் இருந்தக் குழப்பம் ஓரளவுக்கு நீங்கியிருந்தது. உண்மையில் தான் அய்யர்கடையில் இருந்து எப்படி இங்கு வந்தோம் என்ற குழப்பத்திலும் மேலும் அய்யரின் ப்ராந்திக் கடைக்குள் கோயில் எப்படி வந்தது என்பதுமாகத்தான் அவர் குழம்பிக்கொண்டிருந்தார். இருமல் விட்டுவிட்டு வந்தாலும் பலத்து வந்ததால் வசதியாக சாய்ந்து கொள்ள வேண்டி அவர் இருமலோடு ஒத்துப்போக முனைந்தார்.

ரவிக்குக் கிடைத்தத் தோல்வி அவன் மீதே வெறுப்பையும் கசப்பையும் உண்டாக்கிவிட்டது. முக்கியமாக சிறுவர்கள். அவர்களைவிடவும் வயது மூத்தவனான தன்னை இனி அவர்கள் மதிப்பதற்கு வாய்ப்பில்லை. குமைத்து வாருவார்கள். அதில் ஏற்கனவே அவர்கள் காலக்கண்டர்கள். தோற்றுப்போன தன்னை விட்டுவைப்பார்களா? என்று நொந்தபடியே கோயில் களத்தினை விட்டு வெளியேறினான்.

தெருவிற்கு வந்து பார்த்தபோது தெருவில் யாருமே இல்லை. அனைவரும் கோயிலுக்குப் போய்விட்டார்கள். போகாதவர்கள் வீட்டுக்குள் தூங்கியிருப்பார்கள். வலதுபுறம் திரும்பும்போது தங்கையாவின் வீட்டைப் பார்க்க நேர்ந்தது. குடிசைக்குள் அவர் மனைவி கிடக்கக்கூடும். சட்டென்று உந்தித்தள்ளிய ஒரு மனோவேகத்தில் ஓடிச்சென்று கதவினை காலால் எட்டி உதைத்தான். ஊன்றியக் கால் வழுக்கியதில் சரிந்து கீழே விழப்போனவனை கரிமூட்டைத் தாங்கிக்கொண்டது.

ஆத்திரத்தினை அடக்க  முடியாது மீண்டும் முயற்சிக்க எழுந்தபோது தன்னை யாரோ உக்கிரமாகப் பார்த்துக் கொண்டிருப்பது போலப் பட்டது. சரேலென அவன் திரும்பிப் பார்த்தான். முதலில் அவன் கண்களுக்கு இருளில் எதுவுமேப் புலப்படவில்லை. எதையோ நினைத்து பயந்துவிட்டோம் என்றுதான் நினைத்தான். ஆனால் மனதின் தொடர்ந்த உறுத்தல் காரணமாக  மற்றொருமுறை திரும்பிப் போகையில் மீண்டும் அதனை அவன் பார்த்தான். முகம் போல வடிவமாக ஏதோ ஒன்று.

அவன் இருளைத் துளைத்து அதனைக் காண முற்பட்டதும் அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. எதிர்முடுக்கில் சுவற்றோரமாக ஒரு தலை மட்டும் சாய்ந்துப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவன் அதனைக் கூர்ந்து பார்த்தான். வட்ட முகம். அதுவும் ஒரு பெண்ணின் முகம். அவனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. உடம்பு முழுவதும் சூடு பரவி வருவதை அவன் உணர்ந்தான். லேசாக நடுக்கம் கொள்ள அதனை அவன் கண்டுகொள்ளாமல் இருக்க முயல, நடுக்கம் மேலும் அதிகரித்தது. மனதைத் திடப்படுத்திக்கொள்ள முயன்றவாறே அவர் மெதுவாக முடுக்கினை நோக்கி நடக்கத் துவங்கினான். அந்த முகம் அங்கேயே இருந்தது. அதன் இரண்டு கண்களும் அவன் வரவையே உற்றுப்பார்த்தபடி இருந்தன.

நெருங்கி வருகையில் அதே பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்த முகம் துலக்கமாகத் தெரிந்தது. அதேக் கூர்மை மற்றும் விழித்தப் பார்வையுடன் அங்கே தாஜ் தன் முகத்தை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். உடல் முடுக்கின் உள்ளே மறைந்து நின்றிருந்தது. அவன் திகைப்பும் கைப்புமாக அவளைப் பார்த்தான். திசைமாற்றாத அவளது பார்வை அவனைத் தாக்குவது போல இருந்தது.

“ஏம்ட்டி இங்க நிக்கே?”

என்று அதட்டுவது போலக் கேட்டான். அவள் பதில் சொல்லாது அவனையேக் கூர்ந்துப் பார்த்தாள். அவனுக்கு அது மேலும் எரிச்சலை ஊட்டியது.  

“கேட்டா மறுபடி சொல்ல மாட்டியா?

இங்கல்லாம் நிக்ககூடாது. ன்னா...

வீட்டுலப் போயி ஒறங்கு. போபோ....”

என்று விரட்டினான். அவள் அதற்கும் மசியாமல் நின்று கொண்டிருந்தாள். அவனுக்கு சற்று சந்தேகம் வந்தது, அவள் தாஜ்தானா என்று. நெருங்கிப் பார்த்தான். தாஜ் தான். முடுக்கின் கடைசியில் ஓரமாக இருந்த அவள் வீட்டின் உள்ளே எரிந்துகொண்டிருக்கும் விளக்கின் வெளிச்சம் கதவிடுக்குகளின் வழியே வெளியேக் கசிந்து கொண்டிருந்தது.

“சொன்னாக் கேக்க மாட்டியாட்டீ...? பொட்டப் புள்ளக்கி அவ்ளவுத் திமிரா?”

என்று தலையில் தட்டப்போனான். சட்டென அவளின் பதின்பருவ உடல் அவனைத் தடுத்தது. அவன் அவள் உடலை மேலிருந்துக் கீழாகப் பார்த்தான். அந்தப் பார்வையைக் கண்ட தாஜ் அவனை எரித்துப் பார்த்தாள். அவள் அருகில் கொண்டு போனக்  கையை அவன் எடுத்துக் கொண்டான். அவனது உடல் வெப்பம் கொள்ளத் துவங்கியது. அவளைத் தொடாது அங்கிருந்து நகரக் கூடாது என்று உள்ளுக்குள் தீர்மானித்துக் கொண்டான். அதன் பொருட்டு அவள் உடம்பை மேலும் நெருங்க முயற்சித்தான். தாஜ் நேராக நின்று கொண்டாள். கோயிலில் தங்கையாவிடமிருந்து பலத்த சத்தம் கேட்டது. தாஜ் தங்கையாவின் வீட்டைப் பார்த்தாள்.

“அங்கே என்னட்டிப் பாக்கெ? என்ன ஒனக்குப் புடிச்சிருக்கா?” என்று ரவி அவளிடம் கேட்டான்.

அவள் அதற்கும் பதில் சொல்லாமல் நின்றாள்.

பார்வையும் அப்படியே இருந்தது.

“ஒனக்குப் பேயாட்டிப் புடிச்சிருக்கு? மண்ணாந்த மாதிரி நிக்கே?”

என்றுக் கேட்டவாறு அவள் தோளில் கை போடப்போனான்.

தங்கையாவின் கடைசிச் சத்தமும் மணியின் கடைசி ஒலியும் ஒன்றாக ஒலித்து ஓய்ந்தது. கோயிலிலிருந்து ஆட்கள் வருவதின் அறிகுறியாக சிறுவர்களின் கைகளில் பிராசாதத்துடன் வெளியே வந்தார்கள். ஒருவர் மற்றொருவரிடமிருந்து பறித்துக் கொள்ள ஆசைப்பட்டுத் துரத்துவதும் ஓடுவதுவுமாக அங்கு வந்தார்கள். ரவி சற்று விலகிக் கொண்டான்.

சிறுவர்கள் அவனைக் கண்டு கொண்டார்கள்.

“ரவிண்ணே..நீயே சாமியாடிருக்கலாம்”

‘’என்னன்னே நீ? இருந்து இருந்து...பீப்பிக்காரருக்க சோலிய தீத்துப் புட்டே?”

அவர்கள் கிண்டலடிக்கத் துவங்கினார்கள்.

ரவிக்கு எங்குமில்லாத பேரவமானமாகப்பட்டது. பொசுக்கென்று ஒருவனின் தலையைத் தட்டினான். அவன் கிறங்கிப் போய் சுவரில் மோதினான். அவர்கள் மொத்தமும் திடுக்கிட்டு நின்றார்கள். தாஜ் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். ரவியின் மனதிற்குள் உடைசலாக எதுவோ நிகழ்ந்துவிட்டிருந்தது.

(கனா தொடரும்)

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக்கால நினைவுகளில் இருந்துமீட்டுஎழுதும்கதைத்தொடர் இது.)

logo
Andhimazhai
www.andhimazhai.com