கனா மீது வருபவன் - 23

Published on

தாஜின் உம்மா ஆயீஷாபேஹம் தனது சுயத்தின் பிரதிபலிப்பு தாஜிடத்திலே உருவாகி வருவதைக் கண்கூடாகக் காணத் துவங்கினாள். அது அவளுக்கு திகைப்பையும் தாஜின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஒருசேர ஏற்படுத்தியது. பல நேரங்களில் அவள் தனது காலத்தினை மவுனமாக கடத்த நேர்ந்ததற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. தனது இயல்புக்கு எதிரான போராட்டமான இந்தச் சுமையினை எதிர்கொண்டு சுமக்க மிகவும் திணறிக் கொண்டிருந்தாள் தாஜ். ஆனால் ஆயீஷாவின் இந்த எதிர்பாராத மவுனம் மேலும் தொடர்ந்த நீடிப்பில் அது மேலதிகத் தாக்கத்தினையும் தாஜிடத்தில் உண்டாக்க முனைந்தது. அதே சமயம் உம்மாவை நோக்கிய தாஜின் மனச் செலுத்தலின் காரணமாக சிறுவயது முதற்கொண்டு வாப்பாவோடு பிணைந்து வந்திருந்த அவளது அன்பு சிறிதுசிறிதாகக் கரையவும் துவங்கியது. இதன் பொருட்டு வாப்பா உதுமான் கோபக் காலங்களில் மேலும் வீரியமாக மூர்க்கமாகும் குணத்தினை புதிதாக ஏற்றுக் கொண்டிருந்தார். இதற்கு மூல காரணமாக இருப்பதாக ஆயீஷாவிடம் அடிக்கடி சீறியும் விழுந்தார்.

இதனால் சில நேரங்களில் கணவனும் மனைவியும் மற்றவர்களைப் போலவே தெருவில் இறங்கி சண்டை போட்டுக் கொள்ளும்  சம்பவங்களும் நடைபெற ஆரம்பித்தது. . அதேவேளை மற்றவர்களின் சண்டைகளில் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் கெட்டவார்த்தைகள் இடம்பெறாது இவர்களது சண்டை புதிர்த் தன்மையை  ஒத்திருந்தது.  வீட்டிற்குள் சண்டை எப்படி ஆரம்பித்திருக்கும் என்று யாரும் தெரிந்து கொள்ள முடியாது. ஆயிஷா இரைக்குத் தப்பியது போல ஓடிப்போய் முடுக்கின் மறுமுனையில் தெருவோரமாக நின்று கொள்வாள். அதன்பின் உதுமான் வெளியே வருவார். சொல்லி வைத்தது போல் முடுக்கின் மறுமுனையைப் பார்ப்பார். மடித்துக் கட்டிய நிலையில் வெறும் சாரத்துடன் கட்டாந்தடியனாக கைகளைப் பின்புறம் கட்டியபடி வெற்றிலையைத் துப்பிக்கொண்டு வீட்டின் முன்னே திங்குதிங்கென்று நடக்கத் துவங்குவார். தவிர ஒரு வார்த்தை கூட பேசமாட்டார். கசண்டித் தலையுடனும் திரண்ட தேகத்துடனும் நடைப்பகுதியில் உலாவரும் அவரைப் பார்பதற்கு கொடைக்காலத்தில் காணும் மாடனின் துள்ளலைப் போன்றே இருக்கும்.

ஆயிஷா பழுத்து சிவந்த நிறம். துரும்பு பட்டால் கூட வரை விழும், சல்லியான தேகம். கரையேறாத பற்கள் எப்போதும் வெற்றிலைப் பாக்கை மென்றபடியே இருக்கும். உதுமான் ஆயீஷாவைப் பார்த்து தனது புஜத்தினை உயர்த்தி உருட்டிக் காண்பிப்பார். உடனே ஆயிஷா சத்தமிடுவாள்.

“அய்யோ...! பெரிய்ய சட்டம்பியோ? பெலத்த காட்டுதேரோ?” கன்னத்தில் கைவைத்து அப்பாவியாகக் கேட்பாள்.

அவர் ஆமாம் எனத் தலையாட்டிவிட்டு யோசனையுடன் மீண்டும் நடப்பார். பிறகு தற்செயலாகத் திரும்புவது போல் ஒற்றைவிரலைக் காட்டி எச்சரிப்பார். அதைப் பார்த்து உடனே மீண்டும் ஆயிஷா சத்தமிடுவாள்.

“ஓ...கோ.... அங்க வந்தா என்னையக் கொன்னு போட்டுருவேரோ?” அவர் உடனே அதற்குத் தலையாட்டி ஆமோதிப்பார்.

உடனே அயீஷா,

“பாத்தியளா.....? ஆமாவாம்..! கொல்லப்போறாராம்.....” என்பாள்.

உதுமான் தனது நடையை மீண்டும் தொடர்வார். நின்று நிதானமாக வெற்றிலைப் போடுவார். வெற்றிலைச் சாறு கட்டுப்பாட்டை மீறி தொண்டைக்குள் இறங்கும்படி நேர்ந்தால் உடனே கோபத்தில் இரண்டு அடி வைப்பார் முன்புறமாக. ஆயீஷா அவசரஅவசரமாக தெருவில் இறங்கி பதுங்கிக் கொண்ட எட்டிப் பார்ப்பாள். அப்போது அவர் தனது காலினை மடக்கிக் காட்டுவார். அதைக் கண்டதும் ஆயிஷா ”கால ஒடச்சிக் கையில குடுப்பிரோ?” என்று சத்தமாகக் கேட்பாள்.

காத்திருந்தது போல அவர் மண்டையைக் கனமாக ஆட்டிக் கைகளைக் குவித்து அடுப்பு போல சைகை செய்வார்.

“ஓ! அடுப்புக்குள்ளே பூத்திருவே?”

“அதே தான் “ என்பது போல புன்னகையுடன் அவர் கைகளைத் தட்ட

உடனே ஆயிஷா,

”எங்கையக்கால ஒடச்சி அடுப்புக்குள்ளப் போட்டிருவாராம். கேட்டுக்கிடுங்கோ” என்பாள்.

அவரும் விடாமல் தொடர்ந்து தனது கழுத்தில் கைகளை வைத்து நெறித்துக் காட்டுவார்.

“நெறிச்சேக் கொன்னாலும் கொல்லுவே. எம்மேல அவ்வளவு ஆச....செரியா?” என்று ஆயிஷாக் கேட்க , “ஆமா.ஆமா..” என்பது போல அவரும் வேகமாகத் தலையை ஆட்டுவார். பிறகு சிறிது நேரம் புதியதாக வெற்றிலையை எடுப்பதும் கோரைப்பாக்கினைப் பல்லால் கடிப்பதும் நடைபெறத் துவங்கும். அதே இடைவெளியில் ஆயீஷாவும் வெற்றிலைப் போட்டுக் கொள்வாள். இது அவர்களுக்கு வெற்றிலை இடைவேளை.

முதல் சுற்று சுவைத்ததும் அவர் ஏறிட்டு அவளைப் பார்ப்பார். அவள் “ம்..அப்புறம்?” என்றுக் கேட்பது போலத் தலையாட்டுவாள். அவர் வேகமாக பல அடிகள் முன்வந்து கால்பந்தை உதைப்பது போல செய்து காட்டுவார். இப்போது ஆயிஷா பயம் விலகி அதே இடத்தில் நின்று, “ஓ! பந்தடிக்க மாதிரி!” என்றுக் கேட்டுக் கொள்வாள்.

அவர் மெலிதாக மறுத்துத் தலையசைக்க அவள், “என்னைய எத்தோயெத்துன்னு எத்துவே! அப்படித்தானே...?” என்று சந்தேகமாகக் கேட்பாள். . அவர் ஆமோதிப்பது போல வெகு சந்தோசமாக பலதடவை தலையாட்டுவார். அதன் தொடர்ச்சியாக தனது கைகளை விரித்து வானத்தைக் காட்டியும் அபிநயிப்பர். அந்நேரம் எச்சில் வாயோரம் ஒழுக நேர, துப்பி விட்டு சாரத்தால் துடைத்துக் கொள்வார். அதற்கு அவள், “அப்படியே ஏரோப்ளேன்ல தூக்கி எறிஞ்சிருவே! விசா இல்லாம....நானா லண்டனுக்குப் போயிச் சேந்திருவேன்..” என்பாள் . அவர் இல்லை என்று தலையாட்டி, பிணம் போல நடித்துக் காட்டுவார்.

“தூக்கி எரிஞ்சுருவே நா ஏரோப்ளேன்ல போயி இடிச்சிக் கீழ விழுந்து மய்த்தாயிருவேன்..”

உதுமான் இந்தத் தடவையும் சந்தோஷமாக தலையாட்டுவார். பிறகு விரலை அவளை நோக்கிச் சுண்டிக் காட்டி விட்டுத் துணியைப் பிழிவது போலச் செய்வார்.

“ம்க்கும் அப்பவும் என் உயிரு போவாது..நீ துணிய முறுக்க மாதிரி புழிஞ்சு எடுப்ப..அப்பத்தான் போவும்”

“அப்பவாவது நீ அடங்குவியா....?”

ஆயிஷாத் திருப்பிக் கேட்பாள். அவர் மாட்டேன் என்று இரண்டு விரல்களையும் நீட்டிக் காண்பிப்பார்.

“கண்ணு முழியக்கூட வுட்டு வக்கப்பிடாது. தோண்டி எடுத்துருவே..”

இது நாள் பூராவும் நடந்து கொண்டிருக்கும் வைபவம். மறுநாளைக்கும் தொடரும். மூன்றாவதுநாள் நான்காவதுநாள் தான் சற்று அடங்கும். உதுமான் கடைக்குப் போய் எடுப்பு சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவார்.

“சாயிபே..ஒம்ம பொண்டாட்டிக்கும்.. கொஞ்சம் குடுமே..”

என்று யாரவது கேட்க, அவர் அதற்கு பதில் சொல்பவரைப் போல சாப்பாட்டினை வீட்டு நடையில் எடுத்து வைத்து சுவைத்துச்சுவைத்து சாப்பிடுவார். ஆயிஷா அதிகமாகக் கடைச் சாப்பாடு சாப்பிடுபவள் இல்லை. இரவில் தெருக்காரர்கள் யாராவது தங்கள் வீட்டில் தங்கிக்கொள்ள அழைப்பார்கள். ஆயீஷவும் தங்கிக் கொள்வாள்.. சண்டைக்கால நாட்களில் ஆயிஷா அதிகம் ஆகாரம் எடுத்துக்கொள்வதில்லை. அதிகமும் வெற்றிலை தான். அடிக்கடி சாயா. சாதாரணமாக விசேஷம், உறவுச் சிக்கல்கள் என்றால் உறவினர்களின் வீடுகளுக்குக் செல்லும் ஆயிஷா இந்தக் காலக்கட்டங்களில் மட்டும் எங்கும் செல்வது  இல்லை. யாரிடமும் பிராது சொல்வதும் இல்லை. சொந்தக்காரார்கள் யாராவது கேள்விப்பட்டு வந்து அழைத்தாலும் கூட நகர மாட்டாள். பள்ளிக்கூடம் விட்டதும் தாஜ் ஓடிவந்து உம்மாவிடம் ஒட்டிக் கொள்வாள். கருக்கல் வரைக்கும் வைத்திருந்து பின்னர் அவளையும் வீட்டிற்கு அனுப்பிவிடுவாள் ஆயிஷா. தாஜிற்கு மனமிருக்காது. எனினும் வேறு வழியிருக்காது. இரவுகளில் தூக்கம் பிடிக்காமல் தாஜ் வெகுநேரம் முழித்திருப்பாள். எதிர்காலம் குறித்து நிறையக் கனவுகள் காணுவாள். வாப்பா நினைத்ததற்கு மாறாக உம்மாவை அவள் ஏரோப்ளேனில் வெளிநாடுக்கு அழைத்துச் செல்வாள். இதேக்கனவை பல்வேறு கோணங்களில் அவள் நினைத்துப் பார்ப்பதும் உண்டு.

சட்டென்று மழை நின்றுவிட்டது போல ஓய்ந்தது தெரியாமலேயே சண்டை நின்றுவிடும். அன்று தாஜின் வீட்டிலிருந்து பிரியாணி மணம் கசியும். உதுமான் கடைக்குப் போய் வருவார். யாராவது கிண்டலுடன்  “சாயிப்பே சேந்தாச்சா?” என்று மடக்குவது போல் கேட்டால், “ஆமா தெரியாதா? எங்க சண்ட தீந்து போச்சி. வீட்டுல பிரியாணில்லா” என்பார். அதைத் தெரிவிப்பதற்காகவே அடிக்கடிக் கடைக்குச் செல்வார். அதோடு விடாமல் அவரே கூட எதிர்ப்படுபவர்களில் தன்னைக் கிண்டல் செய்யும் குணமுடையவர்கள் இருப்பதைக் கண்டால் அவர்களிடம் “சண்டப் போச்சி. பிரியாணியாக்கும்” என்று வயிற்றைத் தட்டிக் காண்பிப்பார். அவர்களில் யாருமே வாய்த் திறக்கமாட்டார்கள். ஆயீஷா எந்த வீட்டில் ஒதுங்கியிருந்தாளோ அந்த வீட்டுக்கெல்லாம் பிரியாணியைக் கொண்டுபோய் அவர் கொடுப்பார். தாஜ் வாப்பாவுடன் கூடச் செல்வாள் என்றாலும் இறைவன் இவற்றைக் கண்காணிப்பதற்காகவே அனுப்பி வைக்கிறான் என்றும் நினைத்துக் கொள்வாள்.

திடீரெனத் ஆயீஷா யார் வீட்டிற்குள்ளாவது பரபரப்பாக வேகமாக ஓடிவருவாள். காதில் கிசுகிசுப்பது போல “புள்ள, கோழிக்குஞ்சி வளத்துதேல்லா..எனக்கொண்ணு வேணும் தருவியா?” என்று கேட்பாள். கேட்டால், “வாப்பாவுக்கு நெஞ்சு வலி. அதான் கோழிக்குஞ்சிய இடிச்சு சூப்புப் போட்டுக் குடுக்கணும்” என்பாள். குஞ்சு வளர்க்கிறவர்கள் எல்லோரும் கொடுக்கமாட்டார்கள் என்றாலும் யாரையாவது பிடித்து யாரிடமாவது வாங்கி வந்து விடுவாள்.

அதன்பிறகு ஒல்லியான ஆயிஷா உதுமானுடன் எங்கேயாவது வெளியேப் போய்விட்டு ஒன்றாக வந்தால், “சாயிப்பே ஒம்ம பொண்டாட்டிய எடுத்து இடுப்புல சொருவிக்கிடக் கூடாதா?” என யாராவது கேட்பார்கள். உதுமான் அடுத்த கணமே ஆயீஷாவைப் பிடிக்கப் போக மாட்டினால் வசக்கேடு தான் என்று ஆயிஷா வெட்கத்துடன் பறந்துவிடுவாள். தெரு விழுந்து விழுந்து சிரிக்கும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com