கனா மீது வருபவன் -26

Published on

ஆயிஷா தான் குழப்பமாகும் சமயங்களில் அமைதியை தெரிவு செய்வாள். உதுமான் குழப்பமான சமயங்களில் அமைதியை குலைத்தெடுப்பார்.

“நிக்காம பொறுக்காம இப்படி சட்டுப்புட்டுன்னு வீட்ட மாத்தணும்னா..அது எப்படி? என்ன கதையாக்கும் இது....? இப்ப இந்த வீட்டுக்கு என்னா...?” ஆயிஷா உதுமான் மனதிலிருப்பதை எந்த வகையிலாவது நோண்டிப் பிடுங்க எண்ணினாள்.உதுமான் ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த தனது சட்டையினை எடுத்துப் போட்டுக்கொண்டு அலமாரியில் மடக்கி வைத்திருந்த வேட்டியை எடுத்து மாற்றிக்கொண்டார். ஆயிஷா “போக்கு எங்கயாக்கும்?” என்று கேட்டாள்.

“நா காதரு வீடு வரைக்கும் போயி எட்டிப் பாத்துட்டு வந்திருதேன்...ன்னா”

“மச்சான் வீட்டுக்கா? என்னத் திடீருன்னு? காரணம் இல்லாம அங்கயெல்லாம் காலு சமுட்ட மாட்டீங்களே... இப்ப என்னத்தெ அவசரம் வந்துட்டுதுன்னு அங்கப் போறீங்கோ?” ஆயீஷாவுக்கு சந்தேகம் வந்தது. அவர் துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டார்.

“மனசுலத் தோணிச்சு.....ரொம்ப நாளாச்சில்லா அவனப் பாத்து. வேற ஒரு காரியமும் இல்ல.’’

“கொல்லாமே...தம்பி வீட்டுக்கு போறதுக்கு அவசியமொண்ணும் தேவ இல்லத்தான் . ஆனா நீங்கோ விசயத்தோட போற ஆளாச்சே..என்னென்னு சொல்லிட்டு போனாத் தான் என்னவாம்?”

“ஏம்புள்ள போற நேரத்துலப் போயி எசலிக்கிட்டிருக்கே...சும்மாக் கெடக்க மாட்டியாலே?”

என்றவர் நடை இறங்கி சுவற்றோரம் சொருகி வைத்திருந்த செருப்புகளை எடுத்துத் தட்டியபடியே கீழேப் போட்டார். சற்று வளைந்திருந்த செருப்புகள் அவரது கால்கள் நுழைந்து தரையில் தட்டியதும் பிணைத்துக் கொண்டன.  

அவர் அங்கிருந்து அகன்றதும் ஆயிஷாவை யோசனைக் கடுமையாக உபத்திரவம் செய்தது. மச்சான் இவரைப்போல இல்லை. சகல நேரமும் பரபரப்பாக காணப்படுபவர். துணிவியாபாரி. யாரையும் மறந்துவிடுபவர் இல்லை என்றாலும் அனேக நேரங்களில் அவர் கண்டுகொள்ளாதபடிக்கு நடந்து கொள்வதைப் பார்க்கையில் புரிந்து கொள்வது சிரமமானதாக இருக்கும். அதனால் பணம் வந்து சேர்ந்ததும் கண் தெரியாமல் போனவர் என்ற பெயர் அவருக்கு வாய்த்தது. உதுமானே அடிக்கடி இதுபோன்று அவரைப்பற்றிக் கூறியிருக்கவும் செய்திருக்கிறார். என்றாலும் தம்பி ஊரும்பேரும் அறிந்தவர் என்பதாலும் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும் அவசரப்பட்ட  முக்கியக் காரியங்களுக்கு அவர் உதவியை தேடி நிற்பது குடும்பத்தாருக்கு வழக்கம். இந்த நேரத்தில்......  “வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு பேசற ஆளாச்சே அவரு..என்ன காரியமா இருக்கும்..?” ஆயிஷா எவ்வளவு யோசித்தும் அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

தபால் அலுவலகத்திற்கும் தாடியின் கடைக்கும் இடைப்பட்ட பகுதிக்கு நேரெதிரான வளைவுக் கம்பியின் மீது அமர்ந்து கொண்டு போவோர் வருவோர்களை வாய் பார்த்துக் கொண்டிருந்தான் ரவி. கீழ் ரோட்டின் வளைவிலிருந்து திரும்பி வரும் ஆட்களின் ஊடாக வரும் தாஜின் வருகையை நோக்கிய இருப்பில் அவனது கவனம் இருந்தது. கடைக்காரர் தாடி அவனை நோட்டமிட்டபடியே வியாபாரத்திலும் இருந்தார்.

ரவியின் எதிர்பார்ப்பை வீணாக்காத தாஜ் ஏற்றத்தின் மீது ஏறுவதற்காக முஸ்தீபு காட்டும் ஒருத்தியைப் போல கூடையைத் தூக்கிக்கொண்டு நாகம்மையுடன் வந்து கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் ரவிக்கு உடல் சிலிர்த்தது. உடனே தனது தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிவிட்டு கையால் முடியினைக் கோதிவிட்டான். அது அவ்வளவு திருப்தியாக இல்லை போலும். ரஜினியின் ஸ்டைலுக்கு முயற்சி செய்யப்போய் அது டி. ராஜேந்தரின் ஸ்டைலில் முடிந்தது போன்று அவனுக்குத் தோன்றியது. தரையில் குதித்த அவன் மீண்டும் ஒருமுறை தனது கையால் முடியை அழுத்திவிட்டு திருப்திப் பட்டுக்கொண்டு எங்கோப் பார்த்து விட்டுத் திரும்புவது போலத் திரும்பினான். அதிகாலை மழையின் ஈரம் வேறு காற்றில் ஒட்டி வந்து அவனை சுகந்தப்படுத்தியது.

தாஜ் அவனருகில் வந்தாள். ரவி ரஜினியை நினைத்துத் தனது உதட்டின் ஒரு பாதியைக் கோணலாக வைத்துக் கொண்டு அவள் பார்வையில் படும்படியாக நின்று புன்னகைக்க முயற்சி செய்தான். அவனை நெருங்கிய தாஜ் தனது கையில் மடக்கி வைத்திருந்த கடிதத்தை அவன் முன்னே விட்டெறிந்தாள். அது போதாதென்றக் கோபத்துடன்,

“இங்கப் பாரூ..இதுமாதிரி சோலியெல்லாம் வச்சிக்கிடாத ..ன்னா..? இதுலாம் எனக்குப் புடிக்காது.. இதுக்கு மேலயும் யாதாவது தொந்தரவு செஞ்சுக்கிட்டு எம்பொறத்தால வந்தே......பொறவு என்ன நடக்கும்னு தெரியாது. பாத்து நடந்துக்கோ.. ஆமா சொல்லிப்புட்டேன்....

இதுக்குமேலேய்யும் யாதாவது தொந்தரவு செஞ்சிக்கிட்டு எம்பொறத்தா...ல கறங்கிக்கிட்டு வந்தே....? பொறவு என்ன நடக்கும்னு தெரியாது. பாத்து நடந்துக்கோ..ஆமா சொல்லிட்டேன்.....”

நாகம்மா அவள் கைகளைப் பிடித்து இழுத்தாள். பேசியது பத்தும் என்று தீர்மானித்து தாஜ் அவளுடன் கிளம்பினாள். தாடி சத்தமாக சிரித்தார். அவனுக்கு அது துக்ககரமாக அமைந்தது. அவமானத்தை உடனே எந்த விதத்திலாவது துடைத்து விட எண்ணினான். எனினும் என்ன செய்வதென்ற குழப்பத்தில் வேகமாக முன்னே போய் நின்று அவளைத் தடுத்தான்.

“என்னட்டீ.....ரொம்பயும் பீத்திக்கிட்டு போறே...? என்னயக் கல்யாணம் பண்ணிக்கிடனும்னா நீ எவ்வளவு குடுத்து வெச்சிருக்கணும் தெரியுமா...? ஏதோ பாவப்பட்ட புள்ளயாச்சேன்னு நெனச்சா.....என்னா, ரொம்பத் துள்ளிப் பாக்கே..” என்று கதாநாயகனைப் போலவேத் தொடர்ந்து அவன் பேசிக்கொண்டே போனான்.

“யேட்டீ..... இங்கேரு, நாங் கெட்டுனம்னா ஒன்னத் தான் கெட்டுவேன். அதுல எந்த மாத்தமும் இல்ல கேட்டுக்கோ. அதே மாரி நீயும் என்னத் தான் கெட்டிக்கிடணும். அத வுட்டுட்டு வேல மண்ணாங்கட்டி காட்டுனேன்னு வையி..பொறவு எனக்கு கண்ணு மண்ணு தெரியாது. என்னப் பத்தி தெரியும்லா..?”

தாஜிற்கு இதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

கூடையை நாகம்மையிடம் நீட்டி “பிடிட்டீக் கூடைய” என்றவள், “என்னத்தத் தெரியனும் ....நீ என்ன என்னலேச் செய்வே?” என்று ஆத்திரத்துடன் அருகில் வந்தாள்.

“நீ யாருலே என்னையக் கெட்டதுக்கு? பெரிய்ய மகாராசா! போலே..வெறும் பொறுக்கிப் பயலே..மரியாதையாச் சொன்னா கேட்டுக்கிடனும். அது இல்ல...? எங்கிட்ட வாலாட்டுனே......? ஒண்ணு உட்டம்னு வையி வாயப் பொளந்திருவே. கெட்டப் போற ஆளையும் மோரையும் பாரு..” என்று சீறி விட்டு நாகம்மையின் கையிலிருந்த கூடையை வெடுக்கென்றுப் பிடுங்கினாள். நாகம்மைக்கு குளிரிலும் வேர்த்துவிட்டது.

தாஜ் நடந்த நடைக்கு நாகம்மையால் ஈடு கொடுக்க முடியவில்லை. நகர்ந்து கொண்டிருந்தக் கூட்டம் சில வினாடிகள் நின்று கவனித்தது. உண்மையில் ரவி தாஜிடம் இப்படியொரு சீற்றத்தினை எதிர்பார்க்கவேயில்லை என்பதால் அவளை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. அவளை மிரட்டினால் அவள் அடங்கிவிடுவாள் என்று தான் அவன் எண்ணியிருந்தான். அவள் வெடுவெடுவென்று பொரிந்து தள்ளியது . அவனை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. இதற்கு மேலும் நெருக்கினால் அவள் எப்படி நடந்து கொள்வாள் என்று தீர்மானிக்கவும் முடியவில்லை.

இதுபோக தாஜ் தன்னை விரும்புகிறாள் என்றும், தாஜ் மட்டும் அல்ல வயது பெண்கள் அனைவருமே தனது அழகின் மீது ஒரு கண் வைத்திருக்கிறார்கள் என்றும் தனது அழகிற்கு தகுந்த ஒருத்தியைத் தானே தேர்ந்தெடுத்தப் பிறகு அவள் அதை ஒரு பாக்கியமாகக் கருதி அவன் வேண்டுதலுக்கு இணங்குவாள் என்பதாகவுமே அவனது கதாநாயக புத்தி நம்பியிருந்தது. ஆனால் இப்படி ஒரு ரூபத்தில் தனது எண்ணத்தில் இடி விழுந்து தகர்க்கும் என்பது அவனுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. துயரத்திலிருந்து நிமிர வழி கிடைக்காது சகிப்பற்ற வெறுப்பு கொண்டும் கோபம் கொண்டும் அவள் போவதையேத் தான் அவனால் பார்த்துக் கொண்டிருக்க முடிந்தது. ஒருகட்டத்தின் மேல் இயலாமையின் நெருக்கத்திலிருந்து  தப்பிக்க அவன் தாடியின் கடைக்குத் திரும்பினான்.

தாடி வெகு ஜாக்கிரதையோடு முன்பேக் காசினை வாங்கிக்கொண்டு ‘’பாஸிங்ஷோ’’ சிகரெட் ஒன்றினை அவனைப் பார்த்துக் கொண்டே எடுத்துக் கொடுத்தார்.

“பொட்டப் புள்ளக்கி வந்தத் திமிர பாத்தேரா.....? இவ்ளோவளுக்கு என்ன மாதிரி நல்லவன் கெடக்கமாட்டான் பாத்துக்கிடும்.. இதுமாதிரி வாயாடியோக் கடைசீல  எவனாவது ஒரு வெளங்காத்தவங்கிட்ட மாட்டிக்கிட்டு நா படாத பாடுதான் படுவாளுவோ.....”

“என்னாலே பொட்டப்புள்ளன்னு நிசாரமாப் பேசுதே.....ஆம்பளப் பயக்க  லெச்சணங்கெட்டு நடந்தா பொட்டப்புள்ள என்னலேச் செய்யிம்? திமிரக் காட்டித்தாம்லே அடக்கும்? ஒனக்குக் கொழுப்பு  இந்த மட்டுக்கு அந்த மட்டுக்கா இருக்கு? அது அவக்கிட்டத் தான் அடங்கனும்னு ஒஞ்சாதகத்துல இருக்குப் போல . வேலையத்த மாமியாக் கழுதையைப் போட்டு செறச்சாளாம்.....ம்ஹூம்.”

“என்னவோய் நீரும் ஒளருதீரு...? நீரும் ஆம்பளத் தானே ? பொட்டச்சின்னா அடங்கித் தான் போணும்னு தெரியாதா வோய் ஒமக்கு?”

“ஒன்னமாதிரி தெறிதெறிச்ச பயக்க நெறைய பேர நாம் பாத்துட்டேம்புள்ளா.. நீச் சும்மக் கெடந்து வெடிக்காதே. இந்தப் போக்குலப் போனாக் கடைசிக் காலத்துல கஞ்சி ஊத்த ஆளுக்கிட்டாது “

“கிட்டலேன்னாப் போவுதுவோய். அப்படியொரு விதி எனக்குக் கெடையாது’’ 

“அத நீ சொல்லக்கூடாது ஒரு மனுஷன் சாவும்போதாவது நாலு ஆளு வேணும்லே... ஒன் ஆட்டத்த கொஞ்சம் சுருட்டி வச்சி நடந்துக்கிடது ஒனக்கு நல்லது. அது மாத்திரம் இல்ல. அமைதியா இருக்க புள்ளையோ அடங்கிக் கெடக்குதுன்னோ பயந்துக் கெடக்குதுன்னோ நெனச்சி கூறுக் கெட்டத்தனமா என்னத்தயாவது செஞ்சித் தொலைச்சிராதே.....கோரி மாத்திருவாளுவோ. பேந்து போச்சின்னா லெப்பம் .தடவுனாலும் செரியாவாது. ஆனா ஒரு காரியம். பாசத்துக்குத் தான் வெல. அகங்காரத்துக்கு இல்ல. பேப்பரு படிக்கது உண்டுமா? நீ என்னத்தப் படிச்சிக் கிழிச்சே? இப்பல்லாம் ரொம்பச் சாடுனா கீறிப்போட்டு உப்புக்கண்டம் வச்சிருவாளுவோ. நல்ல சோசியராப் போய்ப் பாத்து மொதல்ல ஒஞ்சாதகத்தக் காட்டு. தகுந்தமாதிரி எதமா நடந்துக்கோ. எனக்குச் சொல்லதுக்கு  அவ்வளோதான் இருக்கு”

“.சலம்பாதியும் ஓய் நீரு. ஒம்மள வச்சி என்னையக் கணக்குப் போடாதியும். நா ஒம்மள மாதிரி இல்ல. ஆளு வேறயாக்கும். பாத்துக்கிட்டே இரியும்!” என்று அங்கிருந்துக் கிளம்பினான்.

அவன் போவதைப் பார்த்த தாடிக்காரர் கடைக்கு வந்த ஒருவனிடம் இவ்வாறுக் கூறினார்

“கண்டத் தரத்துல அலையுதுக் கழுத. சாவதுக்கு நாளத்துத் திரிஞ்சா சாக்காலந்தான் வருமே தவிர நல்லக்காலமா வரும்? எமன வலியக் கூப்புடுதான், காலனுக்குக் கொடைக் குடுத்து மாளுமா?’’.

(கனா தொடரும்)

logo
Andhimazhai
www.andhimazhai.com