கனா மீது வருபவன் - 30

போகும் வழியெங்கும் காலத்தின் பரிசல்களை தன்னோடு இழுத்துக் கொண்டு செல்ல முயன்றது மனது. அதன் வருசைக் கிரமங்களைக் கலைத்துவிட்டு தன்னிஷ்டம் போல இழுத்துக் கொண்டும் சென்றது.

உம்மாவின் பூப்போட்ட சேலை, வாப்பா ஒளித்து வைத்திருக்கும் கருப்புக் கலர் கண்ணாடி, ரம்ஜானுக்கு முன்பு கிடைத்தப் புதிய வளையல்கள் , தொட்டு விளையாட்டு மைதானம், ஐஸ்பால் விளையாடிய கருங்கல் சுவர், டப்பாவில் பதுங்கி இருக்கும் கழச்சிகள், “ சர்க்கரை ஏலஞ் சுக்குப் போட்ட சோளாம் பொரி ‘’எனும் பொரிக்காரரின் வண்டி, ‘’ சங்கு சக்கரம் இந்திரம் நாகம் பால் ‘’ விளையாடும் கைகள், சுக்குப் பால் ஐஸின் சுவை, கதீஜாவின் உருண்டை மூக்கு, வகுப்பறையின் பச்சை நிற ஜன்னல், யாஸ்மினின் காதில் கிடக்கும் மூக்குத்தி, கருக்கலின் நீலநிறத்து மழை, தெருத் திண்ணையில் தூங்கும் வடசேரி ஆத்தாளின் கரிய கணுக்கால், மாதாக் கோயில் சப்பர வருகையைப்  பின்தொடரும் “மரியே மாதாவே” சிறுமிகளின் இரவு நேர சலங்கைக் குரல்கள், ஷேக் சின்ன மவுலானாவின் கிளாரினெட் வாசிப்பு , கூண்டிலிருந்து தப்பித்துச் செல்லும் கிளியின் ஓவியம், டவுன்.எல்,பி.எஸ் பள்ளிக்கூடத்தின் இரண்டாம் வகுப்பு ஆசிரியையின் தாடைப் பாலுண்ணி, மஞ்ஞாடி முத்துக்களுடன் கலந்து கிடக்கும் குன்னி முத்துகள், மைலாஞ்சியின் நிறத்தில் ஒளியும் தனது கைகள்..

தாஜ் தூக்கத்தினூடே பயணஞ்செய்யும் நினைவுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.

மழை வருவது போல் தெரிகிறது. மழையின் அறிக்கைக் கிடைத்தக் கடைகள் பூட்டிக் கிடக்கின்றன. கல்கோயில் சாலையின் இறக்கத்தில்  வந்து கொண்டிருக்கும் போது சிறிய கூட்டம் ஒன்று எதிரே யாரையோத் தேடியபடி வந்து கொண்டிருக்கிறது. கூட்டத்தின் நடுவே வரும் ஒரு சிறுமி தனது மைலாஞ்சி விரல்களை விரிக்கிறாள். அதன் புள்ளிகளின் அழகில் ரசனையைக் காட்டப் புன்னகைக்கிறாள். தாஜின் புன்னகையை ஒத்த அவள் பார்ப்பதற்கும் தாஜினைப் போலவே இருக்கிறாள். தாஜைக் கண்டதும் தனது தாயிடம் அவள் எதையோ மெதுவாகக் கூறுகிறாள். தாயானவள் எதிரே வரும் தாஜினைப் பார்த்து முகம் சுருக்குகிறாள். தாஜிற்கு சற்று படப்டபாகவே இருக்கிறது.

“நீ ஆயிஷா மவளா?” என்று கேட்கிறாள் அந்தத் தாய். தாஜ் “ஆமாம்” எனத் தலையை ஆட்ட “எம்பேரும் ஆயிஷா தான்!” என்கிறாள். தாஜிற்கு அது நம்பமுடியாததாக இருக்கிறது.

“எம்பேரு தாஜ்” என்கிறாள் அந்தச் சிறுமி.

“உம்மா..என்னையத் தெரியலியா?” என்று அந்தப் பெண்ணிடம் கேட்க வேண்டும் என நினைத்துக் கேட்காமல் விட்டு விடுகிறாள் தாஜ். . அந்தச் சிறுமி வானத்தைப் பார்த்து தனது  வெற்று வாயால் ஊதுகிறாள். உடனே அவள் வாயிலிருந்து குமிழ்கள் உருவாகி உயரேப் பறக்கின்றன. சற்று நேரத்தில் அந்த பிரதேசம் முழுவதும் குமிழ்களால் நிரப்பப் படுகின்றன. அனைவருடைய முகங்களும் நிறைய பிம்பங்களாக குமிழ்களால் எதிரொலிக்கப் படுகின்றன.

“பாவம் ஆயிஷா... ஒம்மேல ரொம்ப பாசம்லா வச்சிருக்கா..அவள நீ அழ விடாதே என்னா..” என்று அந்தப் பெண் நகரப் போக  தாஜ் அந்த வாக்கியத்தினை ஏற்றுக் கொள்வதாக தலையாட்டுகிறாள். அந்தப் பெண்ணுடன் வந்தக் கூட்டத்தினர் அதற்கு சற்று முந்திவிட்டதால் அவளை சத்தமிட்டு அழைக்கிறார்கள். அவள் அவர்களை நோக்கி வேகமாகச் செல்ல முற்படுகிறாள். சிறுமியின் கையை பலமாகப் பிடித்துக் கொள்கிறாள்.

அவள் போய் விடப்போகிறாள் என்று கருதிய சமயம் எதிர்பாராத கணத்தில் அந்தப் பெண் அவசரமாக தாஜிடம் கைநீட்டுகிறாள். “பைசாத் தாயேன்” என்கிறாள். தாஜ் அந்தப் பெண்ணின் கண்களைப் பார்க்கிறாள். கண்ணீர் நிறைந்து கொண்டு நிற்கிறது. தாய் கைநீட்டியதைப் பார்த்த சிறுமியும் உடனே தனது ஒருகையை நீட்டுகிறாள். தாஜ் அந்தப் பிஞ்சுக் கையினை நோக்க, கையின் நடுவே உள்ளங்கையின் மத்தியில் இரண்டு பிச்சிபூக்கள் இருக்கின்றன. மைலாஞ்சி வர்ணத்தின் மத்தியில் தெரிந்த பிச்சிப் பூக்களின் வெள்ளை தாஜினை கொள்ளை கொள்கிறது. அதை உணர்ந்து கொண்டோ என்னவோ சிறுமி சத்தமாக சிரிக்கிறாள். தாஜிற்கு வீட்டுக்குப் போகவேண்டும் என்கிற எண்ணம் வந்து அழுத்துகிறது. எனினும் சிரிக்கும் குழந்தையையும் அழும் தாயையும் வெறுமையாக விட்டுவிட மனமின்றி தனது பென்சில் டப்பாவைத் திறக்கிறாள்.. அதனுள்ளே இருபது பைசா நாணயம் ஒன்று கிடப்பது தெரிய அதனை எடுக்கிறாள். அதனை அப்பெண்ணிடம் கொடுக்கிறாள்.

அடுத்த வினாடி சென்று கொண்டிருந்த மொத்தக் கூட்டமும் அவர்களை நோக்கி வந்து “எனக்கு..எனக்கு..” என்று கைநீட்டியது. சிறுமியும் கைநீட்டியபடியே நிற்கிறாள். என்ன செய்வது என்று தெரியாமல் தாஜ் தன்னிடம் வேறு காசு எதுவும் இல்லை என கை அசைக்கிறாள். கூட்டத்தினர் விடாமல் காசு  கேட்டு கெஞ்சுகின்றனர். முதியவர் ஒருவர் கண்களை கசக்கி அழுகிறார். அவரை அக்கூட்டத்தினர் புறந்தள்ளிவிட்டு அவளை நெருக்குகிறார்கள். கைநீட்டிக் காசு கேட்கிறார்கள். பொறுத்துக் கொள்ள முடியாத சிறுமி தனது வயிற்றுப் பகுதியினை மறைத்திருந்த சட்டையினை லேசாக உயர்த்துகிறாள். ஒட்டிப் போய்க் காணப்பட்ட வயிறு வெளியே தெரிகிறது. தனதுக் கையிலிருந்த பிச்சிப்பூக்களைத் தலையில் சொருகி வைத்துக் கொண்டு தனது வயிற்றின் மீது தட்டத் துவங்குகிறாள்சிறுமி. கன்னத்தில் அறைவது போன்ற ஒலிஎழுப்புகிறது அவளது வயிற்றின் தாளம்.

சிறுமியின் தாயும் தனது வயிற்றின் மூலம் தாளத்தினை எழுப்புகிறாள். இருபது பைசா நாணயம் அவளது முன்பற்களுக்கு இடையே பாதுகாப்புக்காக கடிபட்டிருந்தது. அடுத்தக் கணம் சொல்லி வைத்திருந்ததைப் போல கூட்டத்தினர் அனைவரும் தங்கள் மேலாடைகளைக் களைந்தார்கள். கைகளால் தங்கள் வயிறுகளின் மீது ஓங்கி ஓங்கி அடித்தார்கள். பலநிறங்களில் பல அளவுகளிலான அவ்வயிறுகள் ஒரே தாளத்தில் ஒலிகளை உண்டாக்கி சாலையை நிரப்பி நிற்கின்றன. சிறுமி முன்பே உருவாக்கியிருந்த காற்றுக் குமிழ்கள் தாளத்திற்கு தக்கவாறு தங்கள் அசைவுகளை மாற்றிக் கொள்ளச் செய்தன. பெரிய உற்சவத்திற்காக எழுப்பப்பட்டதைப் போன்று அவர்கள் ஏற்படுத்திய பேரொலிகள் அந்தப் பிரதேசம் முழுவதும் ஒலிக்கத் துவங்கியது.

சிறுமி வலி பொறுக்காது கண்ணீர் விட்டபடி காசுக்காக மீண்டும் கைநீட்டியது.  தாஜ் இல்லை என்று கைவிரித்தாள். அது டப்பாவைக் காண்பித்தது. தாஜ் தனது பென்சில் டப்பாவை அசைத்து “இல்லை” என்றாள். சிறுமி அதனைத் திறந்து பார்க்கும்படி வேண்டுகிறாள். தாஜிற்கு கோபமாக வருகிறது. எனினும் சிறுமியின் பல தடவையான வேண்டுகோளைப் புறக்கணிக்க சங்கடப்பட்டு தனது பென்சில் டப்பாவைத் திறக்கிறாள். கூட்டத்தினர் மேலும் மேலும் ஆவேசமாக ஒலி எழுப்புகிறார்கள். முதியவர் சற்றுத் தனியாகப் போய் சாலையின் நடுவே நின்று கொண்டு நடனமாடியபடி வயிற்றில் ஓங்கி ஓங்கி அறைகிறார். அவரைப் பார்ப்பதற்கு நீரை விட்டுத் துள்ளிவிழும் மீனின் அவஸ்தையைப் போல இருக்கிறது. குமிழ்கள் பல்கிப் பெருகுகின்றன. தங்கள் அளவினை பெரிதாக்குகின்றன.

தாஜின் பென்சில் டப்பா முன்பு போல் இல்லாமல் திறப்பதற்கு சற்றுக் கடினமாகவே இருக்கிறது. அவள் தனது பல்லால் கடித்து டப்பாவைத் திறக்கிறாள். திறந்த கணம் அவளை மலைக்கச் செய்கிறது. டப்பாவினுள்ளே ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து எனக் காசுகள் கொட்டிக் கிடக்கின்றன. அவள் அதிர்ச்சியோடு பார்க்கிறாள். கூட்டத்தினரின் ஒலியெழுப்புதல் முடிந்தபாடில்லை. அவளுக்கு இப்போதுச் சற்று அச்சமாகவே இருக்கிறது. அவர்களை விட்டு அகல விரும்பிய தாஜ் டப்பாவினுள் நிறைந்து கிடந்த காசுகளை அள்ளியெடுகிறாள். அவற்றை அவர்களை நோக்கி விட்டெறியப் போகிறாள்.

“பைசாவத் தூக்கி எரியாத மக்கா...” இறைஞ்சினாள் சிறுமியின் தாய்.

“ஆமா..எறியாதே..நீ எறியவேக் கூடாது. நீ எம்புள்ளைலா..எறியாதே..!கையில தா..” என்கிறாள் அவள்.

“இது என் பைசா..” என்று மீண்டும் எறியப் போகிறாள் தாஜ். உடனே முன்வந்து தடுக்கும் அந்தப் பெண் ”இல்ல இது உங்க உம்மாப் பைசா..உங்க வாப்பா உம்மாக்கிட்டக் குடுத்து வச்சப் பைசா..”என்கிறாள். அந்த நேரம் தாஜின் கையினை டப்பாவோடு  சேர்த்து இழுக்கிறாள் நாகம்மை.  தாஜ் திரும்பிப் பார்க்கிறாள்.

“விடு பைசாவக் குடுத்துட்டு வந்துருதேன்..” என்கிறாள் நாகம்மையிடத்தில் தாஜ்.

“வேண்டாம்ட்டீ..அவங்களுக்கு பைசால்லாம் குடுக்கக்கூடாது... வா போகலாம்” என்கிறாள் நாகம்மை. கூட்டத்தினர் நாகம்மையின் வரவை சங்கடமாக உணருகிறார்கள். முதியவரின்  உடல் குறுகிவிட்டிருந்தது எனினும் அவர் சுழன்று சுழன்று அடித்து ஒலியெழுப்பியபடியே இருக்கிறார்.

“இல்லட்டீ... இத நா இவங்களுக்கு குடுக்கணும்னு நெனச்சிட்டேன். நெனச்சிட்டா குடுக்காமப் போவக்கூடாது” என்று தாஜ் நாகம்மையிடம் மறுப்பு தெரிவிக்கிறாள்.

“அவசியம் இல்ல...வேணும்னா நாளைக்கு குடுத்துக்கிடலாம்..”

“நாளைக்கு வராட்டா..?”

அவள் சத்தங்களுக்கிடையே அந்தப் பெண்ணிடம் கேட்கிறாள், “நாளைக்கு வருவீங்களா..?”

அந்தப் பெண் விசும்பி அழுகிறாள். அதைப் பார்த்து சிறுமியும் அழுகிறாள்.

தாஜிற்கு சங்கடமாகப் போய்விட்டது. தான் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாக அப்போது தான் அவளை உணரச் செய்தாள் நாகம்மை.

எனினும் தனது டப்பாவிலிருந்து காசுகளை பெண்ணின் அறிவுறுத்தலையும் மீறி வேறு வழியில்லாமல் அவர்களை நோக்கி எறிந்தாள்.

அவள் எறிந்தக் காசுகள் ஒன்றுகூட உடனே அவர்களிடத்தில் செல்லவில்லை. அவை வெகு உயரத்தில் பறந்து மழையைப் போல, மழையின் தடித்தத் துளிகளைப் போல அவர்களின் மீது விழுவதற்காகச் சென்று கொண்டிருந்தன.

தாஜிற்கு பெருவியப்பாய் போய்விட்டது. அவளால் நம்ப முடியவே இல்லை. வானூர்தியைக் காணும் ஆர்வத்தைப் போல காசுகளை நோக்கி கைகளை உயரேத் தூக்கினார்கள் அவர்கள். தங்கள் மீது பட்ட காசுகளை பிடிப்பதும் விழுந்த காசுகளை எடுப்பதுமாய் இருந்தார்கள். சிறுமி மட்டும் தன் மீது விழும் துளிகளைப் போல காசுகள் உடல் மீது விழுவதை அனுமதித்து ரசித்துக் கொண்டிருந்தாள். முதியவர் ஒரு அட்டையைப் போல சுருண்டு துள்ளிக் கொண்டிருந்தார். சத்தங்கள் ஓய்கின்றன. குமிழ்கள் மீன் செதில்களைப் போல உதிர்ந்து அவர்களின் உடல்கள் மீது ஒட்டிகே கொள்கின்றன. அவர்கள் அங்கேயிருந்து நகரத் துவங்குகிறார்கள். அட்டை போன்ற சுருங்கிப் போயிருந்த பெரியவரைத் தனது கைக்கொண்டு தூக்குகிறாள் சிறுமி. ஒரு பிச்சிப்பூவினுள் அவரைக் கிடத்தி அப்பூவின் இதழ்களால் அவரை மூடி முத்தமிட்டுக் கொள்கிறாள் அவள்.

(கனா தொடரும்)

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கி வரும் இவர்  தன் இளமைக்கால நினைவுகளில் இருந்துமீட்டு எழுதும் கதைத்தொடர்இது.)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com