கனா மீது வருபவன் - 31

சில்லறைக் காசுகளால் சூழப்பட்டிருந்த கூட்டத்தினர் இருண்ட வானத்தின் நட்சத்திரங்களைப் போல புள்ளிகளாக ஜொலிக்கத் துவங்கினார்கள். அவர்களை விட்டு விலகியிருந்த தாஜ் ஒரு தனித்த வினோத பறவையாக பறந்து சென்று கொண்டிருக்கிறாள். அந்தமில்லாத உலகம் மரணமில்லாத வெளி என வேறொரு காலத்தைத் தேடி.


“ கண்ணு...கண்ணு...ஏலே...தாஜு... ” என்று வெகுநேரமாக அவளைத் தட்டிக்கொண்டிருந்த ஆயிஷாவின் குரல் எங்கிருந்தோ அவளை அழைக்கிறது. ஒரு சிறிய திடுக்கிடலில் மூலம் தாஜ் தன் கண்களைத் திறக்கிறாள். பயணம் முறிகிறது. பிரிதலின் மூலம் கனவு விடைபெற்றுக் கொள்கிறது. மழைவிட்டு விட்டது என்றாலும் மழையின் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது காதினுள். முதன்முதலாக தன் உடலின் மீது விழுந்த அடியின் கணம் நினைவின் பதிவிலிருந்து எழுந்து கொள்கிறது. திசைகள் மாறுகின்றன. அடிகள் விழுந்து கொண்டிருக்கின்றன.


தாஜ் பகலினைப் புறக்கணித்து இரவினைப் பின்தொடரத் துவங்குகிறாள். பகல் அவள் எல்லையை இருண்டதாக்குகிறது. இருள் ஒரு பரந்த நிறமாக அவளை பாதுகாக்கிறது. பகலில் வகுப்பறைகள் தினமும் சோர்வையும் தூக்கத்தையும் வாரி வழங்குகின்றன. பாடங்களுக்கும் அவளுக்கும் இடையே ஒரு வரி போல் இடைவெளி முதன்முதலாக விழுவதை தாஜ் கவனித்திருக்கிறாள். சொற்ப நேரத்திலேயே அதனை அலட்சியப்படுத்தவும் செய்கிறாள். போகப்போக இடைவெளி தன் தூரத்தினை வளர்த்தெடுக்கிறது. தாஜ் தனக்குள் காணாமலாகிறாள். சபிக்கப்பட்ட பூனையைப் போல தாஜ் வெறும் வழமைகளை மட்டுமே பூர்த்தி செய்பவளாக தன்னை உருமாற்ற காலத்தை அனுமதித்தாள்.


தங்கையா தனது கண்ணீரால் துயரத்தைக் கழுவிவிட இயலாத நிலையில் சுடலையுடன் மானசீகப் போராட்டத்தில் அகப்பட்டு போயிருந்தார்.


துயரங்களை வாழ்ந்து அடக்கத்தான் முடிந்திருக்கிறதே தவிர அவற்றை கழிக்க இயலவில்லை. மரணத்திற்கு முன்னால் வேறு என்னென்ன விளையாட்டையெல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறதோ? விளையாடித் தீர்க்க வேண்டி இருக்கிறதோ? ஒருவகையில் பார்வதி தனக்கு ஒரு நிரந்தர துயரம். அப்படிஎன்றால் அவளுக்கு நான்? அவளுக்கு அவள்? கண்ணீர் வழியும் போது தோன்றியது, இதற்கென்ன அவசியம்? அழுது எவற்றை சாதிக்க முடியும்? எவற்றை சாதித்திருக்கிறேன்?


அடுத்த கணமே நெஞ்சதிர கேட்டது செம்பிவளத்தாள் பார்வதியின் குரல்.


‘’ ஏ ..சண்டாளா.....


 ஏ...பேதியிலயே போவானே...


 ஏ...நீ பேதியிலேயேதான் போவணுமா?


 ஏ..கரிகட்டையா போறவனே..


 ஏ..நீ கரிகட்டையாத் தான் போவியா...


 ஏ...நாசம் அத்துப் போவானே... ’’


தங்கையா உடல் நடுங்கிவிட்டார். சட்டென வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.


கைகள் நடுங்க, நடுத்தெருவில் பற்றிக்கொள்ளக்கூட வழியில்லாதபடி கிழவி தடுமாறிக்கொண்டிருந்தாள். அவள் கையிலிருந்த ரோசாப்பூ நிற சேலையைக் காணவில்லை. அவர் ஓடிவந்து அவளைப் பிடித்துக்கொண்டார். அவள் வாய், முகம், தலை என உடல்பூராவும் மண்ணாகக் கிடந்தது. பார்க்க பெரும் பாவமாக இருந்தது.


கிழவி விடாமல் அடிவயிற்றிலிருந்து மீண்டும் கத்தினாள். ஆக்ரோஷமாக தங்கையாவைப் பிடித்துக் கீழேத் தள்ளினாள்.


“ ஏங்கேன்..? என் தேகம் பூரா மண்ணா அள்ளிப் போட்டிருக்கானுவளே.. அப்ப எங்கய்யாப் போனே..? நீதான் சொல்லிக்குடுத்தியா?


என்னையப் பாடாப் படுத்தாதியோ..


ஒங் கொலம் நிலைக்காது கேட்டுக்கோ ....நாஞ் சொல்லுதேன்.


என்னைய ஆரும் தொடாதீங்கோ... ’’ வழக்கம்போல இல்லாமல் குரல் பலகீனமடைந்து தேய்ந்து போயிருந்தது.


“ செரி ரோட்டுலக் கெடந்து ஆளக்கூட்டாதே...வீட்டுக்கு வா.. ”


என்று அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் வீட்டினுள் நுழைத்தார்.
அவளை அடக்குவது சிரமமானதாகத் தான் இருந்தது. வேதனையும், பலகீனமும் அவளைச் சோர்வடைய செய்திருந்த நேரத்திலும் கூட அவள் சபித்துக் கொண்டிருக்கவே  முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவர் வெளியே வந்து பார்த்த போது அவள் நின்ற இடத்தில் மண்ணும் குப்பையுமாகக் கிடந்தது. சேலை மடை நீரில் விழுந்து இழுபட்டுக் கொண்டிருந்தது. அதன் நனைந்த பகுதி மட்டும் சிவப்பு நிறம் போலத் தெரிந்தது. கழுவிக் காய்வதற்காக கொடியில் போட்டபோது, “ ஏ...நாசமாப் போறவனே... எந்தலையில மண்ணை அள்ளிப் போட்டக் கைய துண்டாக்கலாம்லா... பின்ன என்னாத்துக்கு நெலை போலே நிக்கே? ஒன்னையைக் கும்புட்டுத்தான் என்னத்தைய கண்டோம்.....? போ..போ..நிக்காம வேற எங்கயாவது போ. சொடலையாஞ் சொடல.. ”
அரைக் கிறக்கத்தில் கிழவி அரற்றிக்கொண்டிருந்தாள்.

காலைப் பிரார்த்தனைக்காகப் போய்விட்டு மாணவர்கள் அனைவரும் வகுப்பிற்குத் திரும்பி வந்து சேர்ந்திருந்த நேரம், வேலப்பன் பெரும் ரகளையை ஏற்படுத்தி அனைவரையும் பீதியடைய செய்யத் துவங்கினான். ராசா பலவிதமாக சமாதனப்படுத்த முயற்சித்துப் பார்த்தும் அது தோல்வியில் தான் முடிந்தது. வகுப்பாசிரியர் தங்கப்பனும் வந்துவிட்டார். ஆனாலும் வேலப்பன் அடங்கியபாடில்லை.


“ ஏம்லே..பேய்பிடிச்ச மாதிரி துள்ளுகே? ”
பிரம்பைகே கையில் எடுத்தார்.


“ எம் பென்னக் காணல்ல சார்... ..எவனோ எடுத்துட்டான்...புது பென்னு சார்..எங்கம்மக் கொன்னுருவா சார்.. ”


கதிகலங்கி சொன்ன போது வேலப்பன் குரங்கு போல சுருங்கிவிட்டான். ஆசிரியர் மாணவர்களைப் பார்த்தார். அனைவருமே பேனாவைப் பறிகுடுத்தவர்களைப் போலவே மிரண்டு போய் காணப்பட்டார்கள்.


வேலப்பன் கூறுவதும் உண்மை தான். சுப்பம்மை தனது மகன் மேல் அதிக சிநேகம் கொண்டவள் தான் என்றாலும் கோவம் வந்துவிட்டால் வேலப்பன் கோலப்பனாக மாறும் அளவுக்கு அடித்து அவன் கோலத்தை மாற்றிவிடுவாள். யார் யாரிடமெல்லாம் அவளுக்கு பிரச்சனை இருந்ததோ அதற்கெல்லாம் வேலப்பன் தான் வடிகாலாய் அடி வாங்குவான்.


“ ஒங்கப்பன் வேல செய்து அந்த பைசாவுலையால ஒன்ன வளக்கேன்...சொல்லுலே.. ”
‘’ இல்லம்மா இல்ல ‘’முதுகில் ஒன்று விழும்.


“ நாலணா கடன் வச்சதுக்கு எட்டணா பொருள ஈடுகட்டுனவ வாயில இருக்கத எல்லாம் கேக்கணும்னு எனக்குத் தலைவிதியாலே...? எல்லாம் ஒனக்காவத்தானலே..? ”


‘’ ஆமம்மா ஆமா ‘’ பின்புறத்தில் இரண்டு விழும்.


“ இப்பவே ஏதும் ஒர்ஷாப்புல வேலைக்கிவிட்டா வேலைப் படிச்சிக்கிடுவாம்லா..எதுக்கு படிக்க வச்சிக்கிட்டு..ன்னு ங்கொப்பனுக்கு ஆளுவோ கேட்டதையெல்லாம் மீறி எதுக்குலே படிக்க வக்கேன்..நீ நல்லாவனும்னு தானலே? ‘’


‘’ செரிதாம்மா செரி ‘’



மிச்சம் மீதி இருக்கிற இடங்களிலெல்லாம் அடிவிழும். அடியிலிருந்து அவனால் தப்பி ஓடவும் முடியாது. அடிப்பதற்கு முன்பே முற்றத்துத் திண்ணைக் கம்பில் உடம்பில் துணியில்லாமல் கட்டி வைத்திருப்பாள். வேலப்பனுக்கு சுற்றுப்புறச் சூழல் கதைகள் தனக்கு எதிராக எவ்வாறு விளையாடுகிறது என்பதை இதுபோன்று அடிவாங்கும் நேரங்களை வைத்து தான் தெரிந்து கொள்வான். அடிவிழுந்தாலும் சுள்ளென்று இருக்கும். காளைமாட்டை அடிக்க வைத்திருக்கும் கம்பு அது.


ஒருவகையில் அடியைக்கூட வாங்கிக் கொள்ளலாம் இரண்டு நாட்கள் விளையாட்டின் போது மறந்துவிடும். ஆனால் அம்மணங்குண்டியோடு தொங்குவது தான் மறக்க முடியாது போய்விடும்.
ஆளாளுக்கு வந்து விசாரிப்பார்கள். கேலி செய்வார்கள்.


“ ஏம்ல...ஒங்கம்ம நல்லபெருமாள்ல துணியெடுக்க போயிருக்காளா..? ஒண்ணும் உடுத்தாம கட்டிப்போட்டுருக்கு.. ”என்று கேட்பவள் சும்மா போய்விட்டால் பரவாயில்லை. ஒரு சுண்டு சுண்டிவிட்டுப் போவாள். இதையெல்லாம் விட விசேஷம் பிள்ளைகள் தான்.


எப்படித் தான் தெரிந்துவிடுமோ தெரியவில்லை. கல்யாண வீட்டிற்கு வருவது போல் களைகட்டிக் கொண்டு வருவார்கள். ஷர்மிளா ஒரு படையோடவே வந்துவிடுவாள். அவனைக் கட்டிப்போட்டிருப்பதோ, துணி இல்லாமல் அவன் கூசி போயிருப்பதோ அவளுக்குத் தெரியாதது போல எதிர்த் திண்ணையில் உட்கார்ந்து தாயம் ஆடுவாள். டைம் டேபிள் போட்டு தெருவில் பிள்ளையார்ப்பந்து விளையாடுவாள். பாண்டி ஆடுவாள். ஐஸ்காரன் வந்தால் எல்லாருக்கும் ஐஸ் வாங்கிக் கொடுப்பாள். வாட்ச் மிட்டாய் வாங்கிக்கொடுப்பாள். திருவிழா போல கொண்டாடுவார்கள். வேலப்பனுக்குக் காவல் என்பது போல ஆள் உயிரோடு இருக்கிறானா என்று அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்துக் கொள்ளவும் செய்வாள். வேலப்பன் கண்களை மூடிக்கொள்வான். அவளைப் பற்றி அவனுக்குத் தெரியும். நேரம் பார்த்துக் கண்ணை குத்திவிடுவாள்.
அவனுக்குத் தன்னைக் கொல்லக் கொண்டு வந்தது போல இருக்கும்.


” பொய் சொல்லாதலே.. ” ஆசிரியர் தங்கப்பன் கம்பை ஓங்கினார்.


“ சத்தியமா சார்..”


வேலப்பன் கெஞ்சவும் அவருக்கு சங்கடமாகிவிட்டது.


“ செரி ஒண்ணு செய்யி. எல்லாப் பையையும் நீயே தேடிப் பாரு ” என்றார். வேலப்பன் அழுதுகொண்டே ஒவ்வொரு பையாகத் தேடினான். அப்புவின் பையை எடுத்ததும்,  “ கைய வுட்டே..? ” என்று அப்பு தொடையில் கிள்ளிவிட்டான். பயந்துகொண்டே வேலப்பன் உள்ளே தேடினான். அடைமாங்காய் ஒரு துண்டு கையில் சிக்கியது. அந்த நேரத்திலும் வேலப்பனுக்கு எச்சில் ஊறியது. “ சௌமிட்டாய் ” பிளாஸ்டிக் பேப்பருக்குள் இளகிக் கிடந்தது. பேனா கிடைக்கவில்லை. முதல் வரிசையில் முடிந்தது. அனைவரும் தாங்களாகவே பைகளை எடுத்துக் கொடுத்தார்கள். ராசாவின் முறை வந்தது. பையில் கைவிட்டபோது கல்லின் கூர்மைக் குத்தியது. கையை எடுக்கப்போனவன் கண்களில் ஏதோ மின்னியது. சட்டென நோட்டுகளை விலக்கிப் பார்த்தான் புத்தகத்தின் மத்தியில் தங்க நிறத்தில் வேலப்பனின் பேனா இருந்தது.



“ நீ இவ்வளவு பெரிய கள்ளனாலே..எங்கிட்டேயே அடிச்சிட்டியேல.. ” என்றவன் பேனாவுடன் ஆசிரியர் முன்பு போய் ,


“ சார் இதான் சார் என் பென்னு ” என்று நீட்ட அவர் அதனை வாங்கிப் பார்த்தார்.


புத்தம் புதிய ஹீரோ பேனா.


ராசா வேர்த்து நடுங்கிவிட்டான். அவனால் எதையும் நம்பவே முடியவில்லை. அனைவரும் அவனைப் பார்த்த பார்வையில் ஒரு ஏளனம் இருந்தது. ஆசிரியர் அழைத்ததும் அவர் அருகில் சென்றான். அவர் சட்டென அவன் காதைப் பிடித்து வேகமாகத் திருகினார்.


“ நா எடுக்கல சார் ”


அவன் சொன்னதை ஆசிரியர் ஏற்றுக்கொள்ளாமல் மேலும் திருகப்போக,


“ சார் எங்க அம்ம சத்தியமா நா எடுக்கல சார்.. சார்..சத்தியமா சார் நா எடுக்கல சார்.. ”


“ ஒம்பையில தானலேக் கெடந்துது? ”


‘’ ஆமா சார்..ஆனா நா எடுக்கல சார் ”


“ நீ எடுக்காம ஒம்பையில எப்படி வந்துது ?”


“ தெரில சார்..ஆனா நா எடுக்கல சார். வேற யாரோ எடுத்துப் போட்டுட்டாங்க சார் ”


அவர் யோசித்தார்.


“ யாருல இவம்பையில போட்டது? ”


அனைவருமே ‘இல்லை’ என்று தலையாட்டினார்கள். யோசிப்பதற்கு ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டார்.


ராசாவின் கண்களில் நீர் திரண்டது.


“ யாருமே எடுக்கலே..இவனும் எடுக்கல..பேனாவுக்கு உடையக்காரனும் போட்டிருக்க மாட்டான்..அப்படித்தானே...? ”


“ செரி ஒங்களுக்கு அஞ்சு நிமிசம் டைம் தாரேன். அதுக்குள்ளே எடுத்தவன் வந்து ஒத்துக்கிடணும்..அப்படி ஒத்துக்கிடலேன்னா நா மந்திரம் போட்டு அவனக் கண்டுபுடிச்சிருவேன்” என்றார்.


ஐந்து நிமிட கணக்கிற்காக “வாட்சில் “ நேரம் பார்த்துக் கொண்டார். முழுக்கவனமும் அவர் மீது இருந்தது மாணவர்களுக்கு. கதையின் திருப்பம் வேலப்பனுக்கு திகைப்பாக இருந்தது. புதிர் அவிழப்போகும் தருணத்திற்காக அவர்கள் காத்திருந்தார்கள்.

(கனா தொடரும்)

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும்இவர்  தன் இளமைக்கால நினைவுகளில் இருந்துமீட்டு எழுதும் கதைத்தொடர் இது).

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com