கனா மீது வருபவன் - 33

புதிரைத் திறக்காத மர்மம் மதிய நேரத்தையும் தாண்டிச் சென்றது. மதியத்திற்குப் பிறகு வரலாற்று ஆசிரியர் ஜோசப் முதன்முதலாக வகுப்பு எடுக்க வந்திருந்தார். ஒற்றைக் கையால் வேட்டித் தும்பை விரித்தக் குடை போல பின்புறத்தில் பிடித்துக் கொண்டு குனிந்த தலையோடு சிந்தனையுடன் எதையோ தேடியது போல நடப்பவர் சட்டென நிமிரும்போது யாரை நோக்கித் தனது கேள்வியைக் கேட்கிறாரோ அந்த குணவாளன் அன்றைக்குத் தீர்ந்தான் என்ற விவஸ்தையை முதல் வகுப்பில் வைத்தே மாணவர்கள் கற்றுக்கொண்டனர். அதன் விளைவாக பார்வைகள் அவரது நடையைப் பின்தொடர்ந்து செல்வதும் அவர் நிமிர்கையில் தாழ்ந்து தொங்குவதுமாக பாசாங்குக்கு உட்பட்டைவைகளாக இருந்தன.



ஜோசப் சற்று விநோதமானவராகத் தென்பட்டார். அவரது வகுப்பு மிக சுத்தமாக இருக்க வேண்டும். அறிவியல் பாடத்தினை வேறு ஆசிரியர் தான் படிப்பிக்கிறார் என்றாலும் பாடத்திற்குண்டான தானிய வகைகளை தரம் பிரித்து பாட்டில்களில் எழுதி ஒட்டி பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். வகுப்பில் தன்னியல்பாக யாருமே பேசக்கூடாது. சிரித்துக் கொள்ளவும் கூடாது. முக்கியமாக பேசிக்கொண்டே சிரிப்பது கூடவேக் கூடாது. அவருக்கொரு சந்தேகம். தன்னைப் பற்றித் தான் ஏதோ பேசக்கூடாததைப் பேசிக்கொள்கிறார்களோ என்று. தனக்கென தனியாக ஒரு பிரம்பு, ஒரு டப்பா சாக்பீஸ், தனி டஸ்டர் ஆகியவற்றை வாங்கி வைக்க பைசாவினை வசூலிக்கும்படி அலியிடம் உத்தரவிட்டார்.



விநோதமாக, ஜோசப் சிரிக்கவைக்கக்கூடிய இயல்புடையவர். அது எந்த நேரம் என்று கண்டுபிடிப்பதுதான் மாணவர்களுக்கு பெரும்பாடாக இருந்தது. சாம்ராஜ்ய பாடத்தினை நடத்துகையில் சில சக்கரவர்த்திகளை நையாண்டி செய்ய அவர் மிகவும் பிரியப்படுவார். சக்கரவர்த்தியின் தோரணையில் நடக்க ஆரம்பிப்பவர் சற்றைக்கெல்லாம் ஒரு மேளக்காரனைப் போல கைகளை ஆட்டி அசைத்து நடனமாக கேலி செய்வார். அவர் ஆடும் அந்தப்புர நடனங்கள் மிகவும் ஈர்த்துப் போகவே வரலாற்றின் மீது விலகி இருந்தவர்களுக்குக் கூட அதன் மீது ஈடுபாடும் ரசிப்புத் தன்மையும் வைத்தது.ஆனால் சிரமமான காரியம் என்னவெனில் அவர் எப்போது தன் நகைச்சுவையை நிறுத்துகிறாரோ அந்த கணத்திலேயே மாணவர்களும் தங்களது சிரிப்பினை நிறுத்திவிட வேண்டும். அது மிகவும் சிக்கலாகவும் கடினமாகவும் இருந்தது அவர்களுக்கு.



முதல் நாளிலேயே தனது வகுப்பிற்கு மட்டும் மாணவர்களின் வரிசையைக் குலைத்து தனது விருப்பப்படி மாற்றி உட்கார வைத்தார். அதிர்ஷ்டவசமாக ராசா வேலப்பனை விட்டு விலகிப்போனான். துரதிருஷ்டவசமாக வேலப்பன் அப்புவின் அருகில் அமரும்படி நேர்ந்தது. தனது தெருவில் பிரசுரிக்கப்படும் அமங்கல வார்த்தைகளை நினைவுக்குக் கொண்டு வர முடிந்ததைக் கொண்டு அப்புவை மனதிற்குள் திட்டினான் அவன்.



ஜோசப் ஆசிரியரைப் பற்றிய பயம் இல்லாது வேலப்பனின் காதில் விழும்படியாக அப்பு தீரக்கதைகள் சிலவற்றை ஜோசப்பினை பற்றி சொல்லத் துவங்கினான். வேலப்பன் ஜோசப்பின் குனிந்த தலையிலேயே குறியாக இருந்தான். தனது நோட்டுத் தாளில் ‘MAMA’  என்று அப்பு எழுதி வேலப்பனிடம் காட்டினான். அவனுக்கு புரிந்தது என்றாலும் சிக்கலுக்கு அகப்பட்டுவிடக்கூடாது என கவனமாக இருக்க விரும்பி கண்டு கொள்ளாது இருந்தான். அப்பு அவன் காலை மிதித்தான். வலி சுண்டு விரலைத் தாக்கியது. எனினும் அஞ்சாதுஞ்சனாக இருக்க கடமைப்பட்டான் வேலப்பன். “தமிழ்ல படில” என்று மீண்டும் தாளினைக் காட்டினான். சட்டெனத் திரும்பிய ஜோசப்பின் உலைப் பார்வைக்கு பயந்த வேலப்பன் ஒரு மகானின் கனிவை முகத்தில் கொண்டு வர முயன்றான். ஆனால் எச்சரிக்கை மிகுந்த ஆசிரியரின் பார்வைக்கு அது பொருந்தவில்லை போலும், அவர் அவனை உற்றுப் பார்க்க அவன் தன்னை இறுக்கிக் கொண்டான்.


“ படிலே ” அப்பு தொடையில் கிள்ளினான். வாயைப் மீறி பீற்றிக் கொண்டு வந்த குரலை பல தடவை முழுங்கினான் அவன். தொடர்ந்து ‘ஓரொன்னு ஒன்னு, ஈரொன்னு ரெண்டு “ என வாய்ப்பாட்டினை உள்ளேச் சொல்லி மனதைத் திருப்பிப் பிடித்துக் கொண்டான் எனினும் கூட போராட்டம் கடுமையாக இருந்தது.



ஆசிரியர் ஒரு சாக்பீஸை எடுத்து இரண்டரை வினாடிகளுக்குள் ஒரு கோட்டின் மூலம் இந்தியாவை கரும்பலகையில் உருவாக்கி உட்புறத்தினை சிறு கோடுகளால் பங்கு பிரித்தார் விரலை எடுக்காமாலேயே. அதிசயத்தக்க அவரது வல்லமை அவர்களை திகைக்க வைத்த சமயம் ஒரு மாணவன் வாசலில் வந்து நின்றான். ஜோசப் வரைந்து முடித்துவிட்டு அவனிடம் சென்றார். அவன் எதையோ பணிவுடன் கூறினான். திரும்பி வந்தவர் பலகையில் மூன்று பெயர்களை இந்தியாவின் கீழே முக்கடல்களுக்கும் பாகம் பிரித்து எழுதினார், ராசா, அப்பு, வேலப்பன் என்று.



“ யாருலே இந்த சக்கரவர்த்தியோ? ”
மூவருமே எழுந்து நின்றார்கள்.


‘’ ஒங்கக் கிளாஸ் டீச்சர் கூப்புட்டு உட்டுருக்காரு போங்கோ ”என்றார். வேலப்பனுக்கு யாரோ தனக்கு செய்வினை வைத்திருப்பார்களோ தொடர்ந்து இப்படித் துரத்துகிறதே என்ற சந்தேகம் வந்தது. அப்பு இடது கையினை ஆட்டிக்கொண்டு தோரணையாக நடந்தான். ராசாவுக்கு நடை சிக்கியது.



மூவரும் வகுப்பு ஆசிரியரின் அறைக்குள் வந்தபோது அவர் தனது மேஜையின் மீது கால்களை நீட்டி எம்ஜியார் பாடலொன்றை முனகிக் கொண்டிருந்தார். குறைத் தூக்கத்தில் அந்தப் பாடல் குழைந்து நெளிந்து வந்து கொண்டிருந்தது.


“சார்..” அப்பு அழைத்ததும் அவர் நிமிர்ந்தார். சற்று எரிச்சலாகவே அவர்களைப் பார்த்தார். மேஜை மீது அவர் கால் வைத்திருந்த இடத்திற்கு அருகில் ஈர்க்குச்சிகள் கிடந்தன.


சட்டென அப்புவைப் பார்த்து அவர், “ ஏம்லே, இவன் போனாவ எடுத்து அவம் பைக்குள்ள போட்டே? ” என்று எடுத்த எடுப்பில் கேட்க, மூவருக்குமே திகைப்பு உண்டானது.


“ நா போடல சார் ” அப்பு மறுத்தான்.


அவர் மேஜை மீது தனியாக இருந்த ஒரு ஈர்க்குச்சியை எடுத்தார்.


“ இது ஒன்னோடது. இதுக்கு மொனை ஒடஞ்சிருக்கு. ஏன் ஒடஞ்சிது? தப்பு செஞ்சவன் குச்சி வளந்துரும்னு நா டூப்பு விட்டத நம்பிட்டே...


குச்சி வளந்திருக்கும்னு நெனச்சி ஒடச்சிட்டே.. ”


அப்பு எதுவும் பேசாமல் இருந்தான். உண்மையில் வேலப்பனுக்கு வேடிக்கையாக இருந்தது. ஏனோ குடையை உடுத்தியது போல ஆசிரியர் ஜோசப் கிண்டல் செய்வது தற்போது நினைவுக்கு வந்து சிரிக்க வேண்டும் போல் இருந்தது. அப்பு மாட்டிக்கொண்டதால் ஏற்பட்ட குதூகலமாகவும் இருக்கலாம்.
“சொல்லுலே..பொய் சொன்னே பேத்துருவேன்..” என்றார். அடி விழப்போகிறது என்று வேலப்பன் காத்திருந்தான். அப்புவின் வலது கை நடுங்கியது. சற்று மூச்சும் வாங்கியது,.


“ தெரியாம செஞ்சிட்டேன் சார்...மன்னிச்சிகிடுங்கோ. இனிமே செய்ய மாட்டேன் ” அப்பு தலை குனிந்தான். ராசா கண் நிறைந்தான்.


“ அவம் பையிலக் கொண்டுபோயி எதுக்குலே போட்டே? ”


“ கோவத்துல மாட்டி விடதுக்கு சார் ”


“ சோலிய பெருக்கிருவேன்..இது மாதிரி அடுத்த பயலுவளுக்கு கொடச்சல் குடுத்தேன்னா...சொல்லிட்டேன்...


‘’ ஒன்னயக் கள்ளப்பயன்னு கிளாஸ்ல சொன்னா எப்படியிருக்கும்லே? ”

அவன் மவுனமாக வெறித்துக் கொண்டு நின்றான்.


“ அசிங்கமா இருக்குமா இருக்காதா? ”


அவன் தலையாட்டினான்.


“ அது மாதிரித் தானே இருக்கும் அவனுக்கும்? ”


அப்பு நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.


“ இதோட உடுதேன். இதுக்கு மேலயும் இது மாதிரி போக்கிரித்தனம் எதையாவது செஞ்சி வச்சே..இந்த வருசமும் பாழாயிரும் குறிச்சு வச்சுக்கோ ”


அவர் திரும்பினார்.


“ கழிஞ்சது கழிஞ்சு போச்சி...இதோட விட்டுரணும். இனிமே செஞ்சா பாத்துக்கிடலாம். கிளாஸ்ல இதப் பத்தி யாரும் வாயத் தொறக்கக்கூடாது..ன்னா? ”


ராசாவும் வேலப்பனும் தலையாட்டினார்கள். வரும் வழியில் அப்புவின் அருகில் சென்ற ராசா சொன்னான். “ தீராதுலே...இதோட தீராது பாத்துக்கோ ” என்று. ஆனால் வகுப்பிற்கு வந்தபோது நிலைமை வேறு மாதிரி மாற்றிவிட்டது. மூன்று மூஞ்சிகளையும் பார்த்ததும் ஜோசப் கேட்டார்.

“ என்னலே சங்கதி? ”


மூவரும் எதுவும் பேசாமல் நின்றார்கள்.


“ வாயத் தொறக்கப்படாதா ? முந்திரிக்கொத்தையா உருட்டி வச்சிருக்கியோ? சொல்லுங்கலே? ”
எனினும் வாயைத் திறக்காது நின்றார்கள்.


அவர் சட்டென்று வேலப்பனைப் பிடித்தார். கையை ஆட்டினார். உதிர்ந்து விழுவான் போல அவனும் சேர்ந்து ஆடினான்.


“ ஏம்லே கள்ள முழி முழிக்கே? ”


“ எம் முழியே அப்படித்தான் சார் ”


“ யாரு சொன்னது? ”


“ நான்தான் ”


அவர் முதுகில் ஒன்று போட்டார்.


வேலப்பனுக்கு இது வழக்கம் தான். சம்பந்தமில்லாது தண்டனை வாங்குவது. அவனுக்கு வலியெடுத்தால் மரியாதை மாண்பு மறந்துவிடும் என்கிற காரியம் அவனாக அறிவித்தும் பழக்கமில்லை. பயத்தில் வார்த்தையைக் கட்டிக் கொண்டு நின்றான்.


“ என்னலே இவனுவளுக்கு? ” அலியிடம் கேட்டார்.


“ அவன் பேனா இவன் பைக்குள்ள கெடந்தது சார் ”


“ அப்ப இவனுக்கு என்ன வேலை? ” அப்புவைக் காட்டிக் கேட்டார். மாணவர்களுக்கும் அதுவே கேள்வியாக இருந்தது. அடுத்த அடி விழுவதற்குள் வேலப்பன் சொன்னான்.


“அப்புதான் எடுத்துப் போட்டான் ” என்று.


ஜோசப் செவியை இறுக்கிப் பிடித்தார். இரண்டு உதறு உதறினார். அப்புவிற்கு வலி மண்டையெங்கும் கதறியது.


“ அப்போ..கள்ளப்பயளாலே நீ? ”


வலி அவமானமாக கசந்தது. அவமானம் வழியாக துளைத்தது. அத்தனை பேருக்கும் தெரிய அப்புவைத் திருடன் என அறிவித்துவிட்டார் ஜோசப்.


செவியிலிருந்து கையை எடுத்த பிறகும் திருகிக் கொண்டிருந்த வலிஉணர்வு இருந்தது. வலது கை தொடர்ந்து துடித்துக் கொண்டே இருந்தது.


கடைசி பீரியடில் அனைவரும் உடற்பயிற்சி வகுப்பிற்காக ஓடினார்கள்  பைகளை எடுத்துக் கொண்டு. பள்ளி விட்டதும் அப்படியே வீட்டுக்குச் சென்று விடும் எண்ணத்தில். கபடி விளையாட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்புவும் இறங்கினான். ராசாவும் இறங்கினான். ஆட்டம் செம்மண்ணில் நுரைத்துப் புழுதிக் கிளம்பியது.


விளையாட்டின் நடுவே அப்புவும், ராசாவும் நேராக மோதிக் கொண்டார்கள். சண்டை நிஜமாக மாறிய தருணத்தில் அனைவரும் ஒதுங்கிக்கொள்ள இருவருமே ஒருவருக்கொருவர் பலமாகத் தாக்கிக் கொண்டார்கள். தொடர்ந்த அவமானத்தின் முடிவுக்காக வேண்டி ராசா சண்டையிட்டான். தனக்கு ஒரு அங்கீகாரத்திற்கு வேண்டி அப்பு மல்லுக்கு நின்றான். ராசா அவனைக் குப்புறப் பிடித்துத் தள்ளிய ஒரு கணத்தில் அப்பு  தவறிப்போய் கீழே விழுந்தான். மூச்சு சிதறியபடி வெளி வந்தது.


வாய் வழியே எச்சிலும், மூச்சுமாக கலந்து வெளி வந்தது. வடிந்தது.அப்புத் தோற்று விட்டான்.
அனைத்தையும் விட ராசா அவனது இடக்கையை வளைத்து “ நீ ஜெண்டக்கு தானலே? ஜெண்டக்கு ” என்றதும் தொடர்ந்து “ ஜ்ஜெண்டக் ” என்ற வார்த்தை மற்றவர்களால் கூறப்பட்டதுமே அப்புவிற்கு ஞாபகக் கடைசியின் மீதமாக இருந்தது. மைதானத்தின் நடுவே அவன் சுருண்டு படுத்தான்.

(கனா தொடரும்)

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத்தொடர் இது.)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com