கனா மீது வருபவன் - 35

“ எம்மவன் எந்த வம்புக்கும் தும்புக்கும் வாறவன் கெடையாது….. மொதல்ல ஒங்கப்புள்ளைய நேராக்கப் பாருங்கோ... அத விட்டுட்டுச் சும்ம அவனப் போட்டு ஏன் இழுக்கியோ...வாறவனும், போறவனும் அடிச்சிட்டுப் போறதுக்கா நா புள்ளைய வளக்கேன்... ” கோசலை வார்த்தைகளால் அவர்களைத் தடுக்க முயன்றாள். கூட்டம் எதிர்பார்ப்பில் மூழ்கியிருந்தது.

“ இன்னக்கிக் கோசலைக்க மவனா கெடச்சான் இடிவிழுந்தானுவளுக்கு...? போச்சி போ. தடியனுவ சும்ம வெறுங்கையோடப்  போவ மாட்டானுவளே தலைய எடுத்துட்டுல்லா போவானுவோ.....! ” என்றாள் நிலைமையை அனுசரித்துப் பார்த்த வடசேரி ஆத்தாள்.

சண்முகம் கூட்டத்தினைக் கடந்து வீட்டிற்கு வந்தபடியே “ கஞ்சிய ஊத்து புள்ளே...வயிறு காந்துது.....நாலு அந்தர் வெறவு கொண்டு போயிப் போடணும் ரெட்டமண்டக்காரரு வீட்டுக்கு...” என்றார் கோசலையிடம். பிறகு சுதாரித்து     “ இவாளுக்கு என்னவாம்...? ”  என்று புரியாமல் கேட்டார்.

ராசா எழுந்து வெளியே வந்தான். கமலம் தனது விசாரிப்பை அவனிடம் துவக்கப் போக அப்புவின் தந்தை அச்சுதன் அவளைத் தடுத்தார்.

“ நீ அப்புவ அடிச்சியாடே....? ” ராசாவிடம் கேட்டார்.

அவரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக ராசா “ ஆமாம் “ என்று தலையாட்டினான். பயில்வான் திமிறியபடி வெடுக்கென்று ஏதோ கேட்கப்போக அவனை நிறுத்திவிட்டு அச்சுதன் “ எதுக்குடே ?” என்று கேட்டார்.

“ அவனும் அடிச்சான் நானும் அடிச்சேன் ” என்றான் ராசா.

அவர் திரும்பி அப்புவைப் பார்த்தார்.

அப்பு “ லேய்.. ” என்று சீறிக்கொண்டு அவனை அடிக்கப் போக அவன் மண்டையைத் தட்டிவிட்டு  ராசாவிடம்,

“ அப்போ நீ அடிச்சே..... ம்...?”

“ நாந்தான் சொல்லுகம்லா.... அவனும் அடிச்சான் நானும் அடிச்சேன்.. ” என்றான் மீண்டும்.

“ இப்போ இங்க என்னா....? “ சண்முகம் இடைமறித்துக் கேட்க வர, “ நீரு இரியும்...நாங் கேக்கட்டு... ” என்ற அச்சுதன் ராசாவிடம் ” தள்ளுபிடி நடத்துற அளவுக்கு ஒங்களுக்குள்ள அப்பிடி என்னடேத் தகராறு ? ” ராசாவுக்கு நாசி அடைத்துக் கொண்டு அந்தது. அதன் தொடர்ச்சியாக, “ எப்பவும் எசலுதான்...சண்டைக்கு இழுக்கான்.. அடிக்கான்.. நா என்ன செய்யட்டும்...? எனக்கு வலிக்கில்லா..? ”

ராசா சொல்லிமுடிக்குமுன்னே அச்சுதன் சளாரென்று ஓங்கி அறைந்தார் அப்புவை. அப்பு உட்பட அனைவருக்குமே அது அதிர்ச்சியாக இருந்தது.

“ கொழுப்பாலே ஒனக்கு... எழவெடுத்தப் பயலே... படிக்கதுக்குத் துப்பு இல்ல...படிக்கப் பயலுவளையும் சண்டைக்கு இழுத்துக்கிட்டு வாரே...? ”

‘’ இல்லப்பா...அவந்தான்.... ” என்று அப்பு இழுக்கவும் “ அவன் பொய் சொல்லலலே... எனக்குத் தெரியிது. போ...போயி... கூறா நடந்துக்கிடப் பாரு... ” என்றவர் திரும்பி “ கொம்ம எதையாங் இழுத்து வுட்டான்னா... அந்தால சாரத்தைத் தூக்கிக் கெட்டிக்கிட்டு வந்துரப்புடாது. போங்கலே...வேல மயிறு இல்லாமத் திரியுதானுவோ...” என்று விரட்டி விட்டார்.

வழக்கமாக பூடம் இல்லாமலேயே அவர்கள் ஆடுவதைப் பார்த்துப் பழகியிருந்த தெருவினருக்கு பனி போல கலைந்து போன இந்த நிகழ்வு ஆச்சரியமளித்தது . அப்பு மேல்வலியுடன் திரும்பிப் பார்த்தான். ராசா உள்வலியுடன் கூர்ந்து பார்த்தான்.

அச்சுதன் கையை நீட்டினார். “ கொஞ்சம் பொடிகுடும் அண்ணாச்சி. மூக்கு நமைக்குது...” என்று. சண்முகம் தன் மடியினை அவிழ்த்து                   “ பொடிமட்டையை ” எடுத்துக் கொடுத்தார். மட்டையை உள்ளங்கை மீது இரண்டுத் தட்டுத் தட்டி விட்டு விரித்து ஒரு சிட்டிகையை இழுத்தவர்        “ வெள்ளப் பொடி ஒத்துக்கிடுது இல்ல. கருப்புதான் செரி அதாங்...  நம்ம ஆபிஸ்ல நாலு கள்ளிப்பெட்டி கெடக்குது கேட்டீரா... குடுக்காம போட்டு வச்சிருக்கேன்... நீரு வாரிரா ? வெலக் கொறச்சி வாங்கித் தாரேன்.......ஆளுக்கு ரெண்டா எடுத்திகிடலாம்.....பொடிஅடுப்பு வெறவுக்காவும்லா...? ”

“ சாயங்காலம் வரட்டா...? ” சண்முகம் பதிலுக்குக் கேட்டார். “ ஆபிஸ் முடியதுக்குள்ள வந்து பாத்துக்கிடும் ...பொறவு வாச்சிமேன் அவன் இஸ்டத்துக்கு வித்துட்டு பைசாவத் தூக்கிப் பாக்கெட்டுக்குள்ள போட்டுட்டான்னு பேரு வந்திரும்... ”

“ செரி, உச்சி வெயிலு தாரட்டும்....வாரேன் ன்னா..? ” அச்சுதன் பொடிமட்டையைத் திருப்பிக் கொடுத்து விட்டுச் சென்றார்.

மறுநாள் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஜோசப்பிற்கு அடிக்கடி வேட்டி ஏனோ அவிழ்ந்தது. மாணவர்கள் யாராவது கவனிக்கிறார்களாவென ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டார். அப்பு தலை கவிழ்ந்திருந்தான். அவனைப் பார்க்க அவருக்குக் குறுகுறுவென்று வந்தது. அவன் அருகில் வருவதும் அவனைக் கூர்ந்துப் பார்ப்பதும் பிறகு பாவாடையைப் போல வேட்டியின் பின்பகுதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நடப்பதுமாக இருந்தார். அவர் தன்னை உற்றுப்பார்க்கையில் அப்பு தீவிர கவனத்தில் இருப்பதைப் போல பார்வையை புத்தகவரிகளின் மீது வைத்துக் கொண்டு மனதால் அவரை விரட்டிக் கொண்டிருந்தான். வேலப்பன் காலையில் பள்ளிக்கு வரும்போது மலையாள வகுப்புப் பெண்களைக் கண்டக் கிறக்கத்தில் ஆழ்ந்து போயிருந்தான்.

ஒருநேரம் ஆசிரியர் வந்து தனது தலையை பல கோணங்களில் திருப்பிக் கொண்டு அவனை உறுத்துப் பார்த்தார். பிறகு ஏதோ ஒரு சிந்தனையின் முகமாகத் தனது விரலினை நீட்டி ராசாவை எழுந்திருக்கச் செய்தார். அவனை அழைத்து அப்புவின் மறுபக்கத்தில் உட்காரும்படி பணித்தார். அதன் பிறகு திருப்தியுடன் பாடத்தினை நடத்தத் துவங்கினார்.

புதிர்மையான அவரது குணம் ஒருவித அச்சுறுத்தல் போலவும் பரபரப்பின் மீது எதிர்பார்ப்பினை உருவாக்குவது போலவும் அமைந்திருந்தது. அப்பு சமாளிக்கத் தயாராகி விட்டிருந்தான். ஒருவருடமாக அவரை சமாளித்த அனுபவத்தை கைக்கொள்ளவே அவன் விரும்பினான்.

ஜோசப் “காணாமச்சொல்லும்” மனப்பாட லாவகத்தினை மாணவர்களிடத்தில்                அன்று கையளித்தார். ஒரு பத்தியினைப் படிப்பதும் அவர் கேட்ட கணத்தில் உடனே   தவறில்லாமல் ஒப்பிப்பதும் அதன் விதிமுறை . தவறினால் வகுப்பு முடிவில் தண்டனை.

முதல் ஆளாக அப்புவே சிக்கினான். மனப்பாடம் செய்யக் கிடைத்த நேரத்தில் மனதை பின்னோக்கி அழைத்துக் கொண்டு போனது பெரும் பிழையாகுமென அவன் அறிந்திருக்கவில்லை. அவன் ‘’காணாமச்சொல்ல’’ முடியாமல் தடுமாறினான். அவர் அவனை எழும்பி நிற்கச் செய்து “கள்ளப் பயலே...ஒனக்கு இருக்கு...” என்றுவிட்டு மற்றவர்களிடத்தில் தொடர்ந்தார். அப்புவிற்கு ஊனமாக இருந்தது. அவன் அவரை சபித்துக் கொண்டே நின்றான். சாபங்கள் தீர்ந்த நேரத்தில் தனது நோட்டினைப் பிரித்து ‘’ஜோசப் MAMA’’ என்று எழுதினான். அதனை ராசாவிடம் காட்டினான். ராசா கண்டுகொள்ளாதிருக்க மிகவும் சிரமப்பட்டான். வேலப்பன் பட்டென்று சிரித்துவிட்டான்.

ஜோசப் சிரிப்பு வந்த திசைக்குத் வேகமாகத் திரும்பினார். அவர் முகம் கோணியது. பாடத்தைக் கைவிட்டார். தன்னைப்பார்த்துக் கொண்டிருந்த  அவர் ராசாவிடத்தில் நேராக வந்தார்.

“ ஏம்லே சிரிச்சே...? ”

‘’ இல்ல சார்...நா சிரிக்கலே... ”

“ பொடதியிலக் குத்திருவேன்... ஏம்லே சிரிச்சே... மரியாதைக்கு சொல்லிரு... ஏம்லே சிரிச்சியோ...? ”

அனைவரும் அமைதியாக இருக்க, வேகமாகப் பிரம்பை எடுத்தார். டெஸ்க்கின் முன்புறம் தெரிந்த இடைவெளியில் கிடைத்தக் கால்களின் மீது ஓங்கிஓங்கி அடித்தார். அப்புக் காலைச் சுருக்கி வைத்துக் கொண்டான். அடி அதிகமும் நேராக ராசாவிற்கே விழ்ந்தது. அதுவும் எலும்பின் மீதே வந்து விழுந்தது. தாங்கிக் கொள்ள முடியாமல் அவன் அப்புவின் நோட்டை விரித்துக் காட்டினான்.

அதில் ஜோசப் MAMA என்று எழுதப்பட்டு அதன் அருகில் தமிழில் “மாமா” என்றும் எழுதப்பட்டிருந்தது.

ஜோசப்பின் ஆத்திரத்தின் வடிவம் விசுவரூபம் கண்டது. மூர்க்கத்தனமான அவரை முதன்முறையாக அந்த நாளில் வகுப்பறை சந்தித்தது. அப்பு துடித்துத் துவண்டு விழுந்தான்.

தனது கை ஓய்ந்தப் பின்னரே அவர் அவனை விடுவித்தார்.

“ வீட்டுக்குப் போ...போயி உங்கப்பனக் கூட்டிட்டு கிளாசுக்கு வந்தாப் போதும் அது வரைக்கும் நீ பள்ளிக்கூடத்துக்கு வராண்டாம்... ” என்றார்.

அப்புவின் உடல் மூச்சு விட இயலாமல் காற்றுக்காக ஏங்கியது. அவன் தள்ளாடி பிடிமானமில்லாது நடந்தான். வகுப்பறையும் மாணவர்களும் பள்ளிக்கூடமும் சபிக்கப்பட்ட நரகம் போல அவனுக்குத் தோன்றியது. உடல் இறைப்பது போல வலித்தது. வலிப்பது போல குத்தலெடுத்தது.  குத்தலைப் போல நுழைந்து கைகளின் வழியே மின்சாரமாக பாய்ந்தது. அவன் வெளியேறினான்.

வகுப்புத் தொடர்ந்தது என்றாலும் ஜோசப்பினால் மனம் ஒன்றி நடத்த முடியவில்லை. கரும்பலகையில் அவர் வரைந்த தேச வரைபடத்திலிருந்து கை விலகி பாதியில் வெளியே நின்றது முதன்முதலாக.

அவர் கைகளை உதறி விட்டுக் கொண்டு சரிசெய்யப் பார்த்தார். தோள்களை குலுக்கிவிட்டு உடலை நிமிர்த்தியும் பார்த்தார். பாவாடையைப் போல வேட்டியை பின்புறம் தூக்கிவிட்டு நடந்தும் பார்த்தார். ஒன்றும் சரிவரவில்லை.

அப்பு வெளிப்புறம் நின்றிருந்த பப்பாளி மரத்தருகேச் சென்றபோது மேற்கொண்டு உடலை நகர்த்த முடியாது என்று புரிந்தது. சிரமப்பட்டு மரத்தோடு தன்னைச் சேர்த்துக் கொண்டான். உடம்புக்குள் யாரோ அலறுவது போல இருந்தது. ஏதோ ஒரு நோவு சிக்கலை உண்டாக்கப் போவதைப் போல நெஞ்சில் எச்சரித்தது. அவன் திரும்பிப் பார்த்தான். அவனதுக் குழிந்த கண்கள் சுருங்கிக் காணாமல் போய்விட்டதைப் போல முகம் உப்பியிருந்ததை ராசா கண்டான். ராசாவிற்கு மனப்பாரம் உண்டானது.

ஒரு வீம்பிற்காக அப்பு நகர முயற்சிதான். அவனது நிக்கரின் பின்புறத்தில் கீழ்ப்பகுதி நனைந்திருப்பது ஈரமாகத் தெரிந்தது. வகுப்பு முடிந்ததாக மணி அறிவித்தது. மாணவர்கள் வெளியே வந்தார்கள். ராசா மரத்தினருகே வந்து பார்த்தான். அப்புவைக் காணவில்லை. ஆசிரியர் ஆரோக்கியமுத்து வருவது போல இருந்தது. இருப்பிடத்திற்குத் திரும்பி வந்தான். அன்று மனம் பாடத்தில் லயிக்காது வலியில் துளாவி விரிந்தது.

மறுநாள் அப்பு வரவில்லை. அவனது அப்பாவும் வரவில்லை. அதற்கு மறுநாளும் கூட அவன் வரவில்லை. அதன்பிறகு அப்பு பள்ளிக்கே வரவில்லை. அப்புவின் இடம் காலியாகவேக் கிடந்தது.

ராசாவினால் யாரிடமும் விசாரித்து தெரிந்து கொள்ளவும் இயலவில்லை.

“ இந்த... அப்புப் பயலுக்கு நெஞ்சுல ஹிருதயத்துல ஏதோ கோளாறாம்க்கா..... திருவந்தரம் மெடிக்கல் ஆசுபத்திரில சேத்திருக்காவோ... பொழக்கது கஷ்டமாம்..... இன்னக்கோ நாளைக்கோன்னு இழுத்துட்டு கெடக்காம்..” ராணி பாப்பாத்தையிடம் சொல்வதைச் செக்கின்  மண்டையில் உட்கார்ந்திருக்கையில் ராசா கேட்க நேர்ந்தது.

ராசாவிற்கு அது நம்பமுடியாததாகவும் அதிர்ச்சி தருவதாகவும் அமைந்தது. அப்புக் கடைசியாக அவனைத் திரும்பிப் பாத்ததும் அவனது நனைந்த பின்புற நிக்கரும்... ”ஜ்ஜெண்டக்” என தான் அழைத்த கணத்தில் அவனது கண்களில் தோன்றிய கருமையும் தொடர்ச்சியாக நினைவுக்கு வந்தன. அவன் ஒரு நிலையில் இல்லாமல் செக்கடிமாடன் நின்ற திசைநோக்கித் திரும்பினான். எதற்காகவோ கூட்டமாய் பறந்து சென்று கொண்டிருந்தன காகங்கள் .

(கனா தொடரும்)

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத்தொடர் இது.)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com