இது போலதொரு நாளினை வேலப்பன் தன் வாழ்நாளில் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. பறத்தல் அறியாத பறவையின் குஞ்சு ஒன்று தன் கூட்டினுள்ளே பகைக்கு அஞ்சி பதுங்கி கொண்டதைப் போல தன் வீட்டு மூலையில் அடைபட்டுக்கிடந்தான் அவன். அதற்கு நேர்மாறாக மிருகக் காட்சிசாலைக்கு பரிந்துரைக்கப்பட்ட குரங்குக்குட்டியினை கண்டுசெல்ல விரும்பி வருவது போல் வீட்டினுள்ளே வருவதும் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வதும் புறத்தாருடன் விவாதிக்கக் கிளம்புவதுமாக மக்கள் தங்களை பரபரப்புக்குள்ளாக்கிக் கொண்டுவிட்டார்கள்.
இதில் ஒரு பிரிவினர் சற்று கூடுதல் தகுதியுடன் வேலப்பனின் தாய் சுப்பம்மையிடம் குழந்தை வளர்ப்பினைப் பற்றி தங்களின் சீர்மிகு கருத்துகளையும் மதிப்புமிகுந்த அறிவுரைகளையும் வாரி வழங்கி வேலப்பனை பீதிக்குட்படுத்தினார்கள். முடிவுக்கு வராத அவ்வறிவுரைகளை தனிப்பட்ட முறையில் வேலப்பனிடம் வழங்கப்பட்டபோது ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்றபோதிலும் அவன் மலங்கமலங்கப் பார்த்தான். ஏனெனில் அதனைத் தவிர தற்போது அவனிடம் வேறேதும் வழியுமில்லை. அபிநயங்களில் மிகவும் வல்லமையுடையவளாக அறியப்பட்ட நெட்டைப்பாப்பாவை ஒப்பிடுகையில் திருவள்ளுவர் பஸ்ஸின் டிரைவர் மிகவும் புகழத்தக்கவர். குளிர்சன்னி வந்தவளைப்போல முகத்தினை வெட்டி இழுத்துக் கொண்டு பாவங்களுக்கு இடையில் வார்த்தைகளை சொருகுவதில் வாய்தேர்ந்தவளான அவளின் தீரத்திற்கு வேலப்பனின் புனர்வாழ்வின் முதல் நாள் இரையானது. அவள் ஏற்கனவே தன் வருகையினை பதிவு செய்துவிட்டுப் போன சரோஜாவினை தேர்ந்தெடுத்து மீண்டும் ஒருமுறை அழைத்து வந்தாள். அதன் இரகசியத்தினை அறிந்து கொள்ள விரும்பிய வேலப்பனுக்கு அவர்கள் சுப்பம்மையையே வெளியே அனுப்பி கதவை சாத்தியது விரும்பத்தக்கதாக இல்லை.
சரோஜா அடுக்களைக்கு ஓடிப்போய் ஒரு டம்ளரை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.
“அதுக்குப் பொறவு மோண்டியாலே?” நெட்டை பாப்பா கேட்டாள்.
“ஆங்...?”
“மோண்டியாலே? ஒண்ணுக்குப் போனியா?”
“ம்ஹும்” என மிரட்சியாக அவன் தலையாட்டினான்.
உடனே அவனிடம், சரோஜா “இந்தா இதுல போ”
“இதுலயா? தம்ளர்லயா? அய்யய்ய” என ஒடப்போனவனை எக்கிப்பிடித்தாள்.
“என்னலே வாயப் பொளக்கே? ஒடம்புக்குள்ள எங்கயும் முறிஞ்சுக் கெடக்கோ என்னவோ? செரியாக்கண்டாமா?”
“இது எனக்குப் புடிச்ச தம்ளரு..வேண்டாம்..”
“நீக்கம்புல போறதுக்கு! இது மருந்துலே! மூத்திரம்னு நெனைக்காம கண்ண மூடிட்டு சட்டுன்னு குடிச்சிரு. இல்லேனா ஒங்கம்மா வயித்தியருக்கிட்ட தூக்கிட்டுப் போவா. அவரு ஓந்தானையும் அடிச்சுப் போட்டு சேத்துல்லா குடிக்கச் சொல்லுவாரு!’’
ஆனால் வேலப்பனின் உடம்பு தகராறு செய்தது. தம்ளரைக் கண்டதும் ஏற்கனவே முட்டிக் கொண்டு வந்ததும் கூட அடங்கிவிட்டது. முக்கச் சொல்லி வேண்டியும் முணங்கச் சொல்லி மிரட்டியும் அது நிகழவே இல்லை. பதிலுக்கு, “ஓந்தானாம் ஓந்தான். ஒம்புள்ளைக்குக் கொண்டு போய் குடு” என்று முணங்கினான்.
இருந்தபோதிலும் இந்த சரக்கில் என்ன மருந்து இருக்கப்போகிறது என்ற மண்டைக் குடைச்சலை யாரிடமும் கேட்டுத் தெளிவு பெற இயலாத அவஸ்தையில் இருந்தபோது தன் தோழிகளுடன் ஷர்மிளா அவனைப் பார்க்க வந்தாள்.
“எப்படிலே ஆப்புட்டே?”
“அதுவா வீட்டுக்கு வாரதுக்காக அவசரமா ரோட்டைத் தாண்டி ஓடி வந்தனா...? பஸ்ஸுக்காரன் ஸ்பீடா வந்துட்டான். இடிச்சி சட்னியாக்கிட்டான்னு தான் நினைச்சேன். அப்பப் பாத்து ஒரு ஆளுட்டீ... மனுசன மாதிரிலாம் தெரியல. பெரியகை உள்ளவரு சடாருன்னு குறுக்க வந்தாரு. அவருக்க மொரட்டுக் கையால என்னைய இழுத்துத் தூக்கி எறிஞ்சிட்டாரு. நா டேவிட்டண்ணன் கட முன்னுக்கு நட்டு வச்சிருந்த வெத்தலக் கல்லு மேல மண்டையிடிக்கப் போயி விழுந்தேன். டிரைவரு இறங்கி வந்து கண்டபடி ஏசுதான். எனக்குக் காது கேக்கல.
“யாருல ஒன்னைய இழுத்து எறிஞ்சது?”
“தெரில. எங்கேருந்து அவ்வளவு ஸ்பீடா வந்தாருன்னும் தெரில. நா அவரப் பாத்தது கூட இல்ல...அதுக்குப் பொறவு நான் அவரைத் தேடிப்பாத்தேன் எங்கயும் காணலை”
உண்மையில் வேலப்பனின் மனப்பதிவில் சம்பவம் நடந்த விதம் இப்படியாகத் தான் பதிவாகி இருந்தது. மற்ற மனிதர்களின் கை வடிவங்களிலிருந்து வேறுபட்டு தடித்து உருண்டதாக காணப்பட்ட அது கை தானா என்ற ஐயமும் அவனுக்கு இருந்தது.
ஷர்மிளா விழிகளை உருட்டினாள்.
“ஏம்ட்டி கண்ணா உருட்டுதே?”
“எனக்குத் தெரியுமே யாரு ஒன்னயக் காப்பாத்துனதுன்னு...?”
“யாரு..?”
“அதே ரோட்டுல முந்தி ஒரு தடவை லாரி இடிச்சி செத்தாருல்லா சிதம்பரமாமா அவருக்க ஆவி தான ஒன்னையக் காப்பாத்திச்சி? ‘’
“மொதல்ல நீ இங்கேருந்து போறியாட்டீ”
அவளுக்கு உடனேப் போகவும் மனமில்லை. வேலப்பனை எப்போது சந்தித்தாலும் ஷர்மிளா ஒரு வழக்கத்தினை செய்வது உண்டு, பாலர் பள்ளியில் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து படித்தக் காலந்தொட்டே தொடர்ந்து வரும் பழக்கம். கோழி முட்டை போல வெள்ளையென உருளும் வேலப்பனின் கண்களை அருகில் பார்க்கக் கிடைத்த நேரங்களில் ஆர்வமிகுதியால் பொசுக்கென்றுக் குத்திவிடுவாள். அந்த குறுகுறுப்பு தான் இப்போதும் அவளை பிடித்து வைத்திருந்தது. ஆனால் பல தடவை குத்துப்பட்டு அழுது அனுபவித்திருந்தும் கூட வேலப்பன் அதனை மறந்து விடுவது ஆச்சரியமாகவே அவளுக்கும் இருந்தது.
“நீ இது மாதிரி வண்டில அடிபட்டிருக்கியா?” வேலப்பன் அவளிடம் கேட்டான்.
“ஓ! எத்தர தடவ? ஒரு தடவ நா எங்க வாப்பாக்கக் கூட சைக்கிள்ல வடசேரி சந்தைக்கு போயிட்டிருந்தப்போ ஒரு ஜீப்புக்காரன் வந்து எங்க சைக்கிளுக்க மேல இடிச்சிட்டாம்லா ?”
“அப்ப நீயும் மூத்தரத்தக் குடிச்சியா?” நொடிக்குள் அவள் தன் விரலை அவன் வலது கண்ணுக்குள் செலுத்தினாள்.
வேலப்பனின் சிகிச்சை தொடர்பான விவாதங்கள் பெண்கள் மத்தியில் விடாது தொடர அவன் கண் வலியுடன் அடுத்து வேறுவிதமான நிகழ்வுகளுக்குத் தயாரானான்.
டேவிட்டின் கடை வெற்றிலைக்கல் அவனது உடம்பிற்குள் போதிய உடைசலை உண்டு பண்ணியிருக்கக்கூடும் என்று தீர்மானிக்கப்பட்ட விவாதத்தின் முடிவாக, “குடிநீர்” மருத்துவம் செயல்படாத காரணத்தை முன்வைத்து முதலில் அவன் டாக்டர் பிரம்மநாயகத்திடம் கொண்டு செல்லப்பட்டான். அவர் அவனை விதவிதமாக பரிசோதித்துவிட்டு வீட்டிற்கு எத்தனையாவது பிள்ளை என்று விசாரித்தார். தலைப்பிள்ளை என்று சொல்லப்படவும் காரணத்தைக் கூறாமல் தலையை மட்டும் குலுக்கிக் கொண்டு ஒரு ஊசியைப் போட்டு சிலபல மாத்திரைகளையும் கொடுத்து அனுப்பினார்.
பொதுவாகக் குளிகைகளைத் தின்பதில் அதிக ஆர்வம் கொண்ட காளியாத்தாளுக்கு தன் மாத்திரைகளை அன்பளிப்பாகத் தந்த அவன் அவளின் நன்மதிப்பினையும் ஏற்றுக் கொண்டான். ஆனால் அதே நாள் நள்ளிரவில் தூக்கத்தின் போது பற்களை இறுகக் கடித்து புலம்பியதன் பேரில் சிகிச்சை மேலும் தொடர ஆலோசிக்கப்பட்டது. அப்போது வேலப்பன் அதற்குக் காட்டிய எதிர்ப்பு கூட அவனது நோயின் ஒரு கூறே என புரிந்து கொள்ளப்பட்டது பரிதாபத்திற்குரியது என்பதனை யாரும் உணரவில்லை.
அதிகாலையிலேயே சைக்கிளில் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டு பின்தொடர்ந்து வரும்படி தனது தம்பி சுந்தரத்திடம் கூறிவிட்டு அவள் வடசேரி பள்ளிவாசல் நோக்கி நடந்தாள். பில்லி,சூனியம், நோய்,பேய்,மந்திரம்,தந்திரம் என அவதிப்படும் மக்களுக்கு அங்கு வைத்து ஓதி எறிந்து நிவாரணம் செய்யும் சாகிபுவைக் காண வந்த அவள் அவர் பள்ளிவாசலுக்கு வருவதை நிறுத்திக் கொண்டதாக அறிந்தபின் அவரது வீட்டினை விசாரித்து நடந்தாள்.
நிதானிக்க முடியாத ஒரு நாளிலிருந்து தன் வாழ்க்கை சட்டென தடம் மாறி போய்க் கொண்டிருப்பதை சிந்தித்த வேலப்பன் ஒரு நோயாளியினைப் போல் தானேத் தன்னை பாவிப்பதை உணர்ந்து தன் மீதே வெறுப்பு கொண்டான்.
“ஏம்லே ? என்னச் செய்யுது?”
“பஸ்ஸு இடிச்சிச்சி சாயிப்பே” அம்மா பதில் சொன்னாள்.
“பஸ்ஸ நீ இடிக்கலேலா..?” வந்திருந்த சிலர் அதைகேட்டு சிரிப்பதைக் கண்டு வேலப்பனுக்குப் பொத்துக் கொண்டு வந்தது.
“ஆஸ்பத்திரியில காட்டலியா?”
“காட்டியாச்சு சாயிப்பே. ஆனாலும் பய முழிக்க முழி செரியில்ல. பயமா இருக்கு..”
“ஒறக்கத்துல அழுகானா?”
“ஆமா சாயிப்பே! ...யாரோ கையப் பிடிச்சி இழுத்ததாட்டு பொலம்பவும் செய்யான்”
“பல்லு கடிக்கானா?”
“ம்..தெவங்கவும் செய்யான்”
காம்பஸால் வரையப்பட்டதைப் போன்ற மீசையும் தலையில் தொப்பியும் வைத்துக் கொண்டு ஆசாரிமார் நெருப்பு ஊதுவது போன்ற தொட்டியின் மீது திரளும் ஊதுபத்தி புகையின் மத்தியில் பாய் விரித்து அமர்ந்திருக்கும் சாயிபு தான் ஒருவேளை தன்னைக் காப்பாற்றியிருப்பாரோ என்று எண்ணிய வேலப்பன் சாயிபுக்கும் சேட்டுக்கும் இருக்கும் உருவ ஒற்றுமைகளை பட்டியலிடத் துவங்கினான். அந்நேரம் சாயிபு அவன் தலையில் கைவைத்து ஓத அவன் உடம்பு குலுங்கியது.
சொம்பிலிருந்து நீர் எடுத்து சில துளிகளை ஓதி அவன் முகத்தில் தெளித்தார்.
“ கழிப்புக் கழிச்சுப் போட்டுருந்ததத் தாண்டிருக்கான். அதான் ஒறக்கத்துல கொழப்புது. பயப்படதுக்கு ஒண்ணும் இல்ல. இனிமே செரியாயிரும்”
“செரியாயிரும்லா?”
“செரியாவும். இல்லேனா அடுத்த தடவ வரும்போது ஒரு முட்டையும் அவன் சாப்பிடுத பலகாரம் இட்லி எதையாவது கொண்டு வாங்கோ. ஓதித் தாரேன்” என்றார்.
இனிமேல் எவ்வளவு வலித்தாலும் அழக்கூடாது என்று வைராக்கியத்துடன் சாயிபுவின் நடையை விட்டு இறங்கும்போது வேலப்பன் உறுதி எடுத்துக் கொண்டான். ஆனால் அந்த வைராக்கியத்திற்கும் கூட ஆயுள் குறைவுதான் என்பதை வேலப்பன் அறிந்து வைத்திருக்கவில்லை. அன்றைய இரவில் தூக்கத்தில் கனவின் மத்தியில் இருள் சூழ்ந்த ரோட்டினை அவன் கண்டான்.
துர்க்கை அம்மனுக்கு பயந்த அவன் சாலையைக் கடக்க முயற்சிக்கிறான். ஏற்கனவே கண்டிருந்த அதே பஸ் அவனை நெருங்கி வருகிறது. ரோட்டின் மையத்தினை கடக்க இருக்கும் நேரம். பஸ்சின் அதிரச் செய்யும் ஹாரன் ஒலி வேலப்பனை செயல்படவிடாமல் நிறுத்துகிறது. அவன் நடுரோட்டில் அப்படியே நின்றுவிடுகிறான். சாலையின் இருமருங்கிலும் இருப்பவர்கள் கூப்பாடு போடுகிறார்கள். அம்மா சுப்பம்மை தன் தலையிலடித்துக் கொண்டு அழுகிறாள். அதிர்ந்து போன அவன் அவளை நெருங்கப்போக, இந்நாள் வரையில் அழுதே பார்த்திராத தன் அப்பாவும் அங்கு வந்திருந்து தேம்பி அழுவதைக் காண்கிறான். சற்றுத் தள்ளி ஷர்மிளாவும் கூட நின்று மூக்கினை உறிஞ்சுகிறாள். அவர்களின் அழுகைக்கான காரணத்தை அறிய முடியாத வேலப்பன் குழப்பத்தோடு தான் நின்றிருந்த இடத்தினைத் திரும்பிப் பார்க்கிறான்.
அவர்கள் கைநீட்டிக் காட்டி அழுத இடத்தில் பஸ்ஸின் முன்பாக தான் மடங்கி விழுந்து கிடப்பது தெரிகிறது. தான் காண்பது கனவா? அல்லது நிஜமாகவே தன் உயிரானது உடலை விட்டு வெளியே வந்துவிட்டதா ? என்ற மகாக்குழப்பத்தில் அவன் பஸ்சின் முன்னே செல்கிறான். கீழே கிடக்கும் அவனது உடல் உயிரற்ற சவமாக அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அழுகைச் சத்தங்கள் பீறிட்டுக் கொண்டிருக்கின்றன.
(கனா தொடரும்)
(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கி வரும் இவர் தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத் தொடர் இது.)