உயிரற்ற தனது சவத்தினை நோக்கி அழும் கூட்டம் உயிரோடு இருக்கும் தன்னை கண்டுகொள்ளாதது குறித்து வேலப்பனுக்கு அச்சம் உண்டாகியது. ஏதேனும் ஒரு தவறில் உயிரோடு இருக்கும் தாம் சடலமாக பிறழ்ந்து விடுவோமோ என்கிற அவ்வச்சத்தின் காரணமாக அவன் அவ்விடத்தினையும், தனதுசவத்தினையும், மொத்தக்கூட்டத்தினையும் புறந்தள்ளிவிட்டு அங்கிருந்து தெற்கு நோக்கி நடையைக் கட்டினான். மரக்கடை, கருப்பட்டிக் கடை, அரவை மில், அறுவை மில் என சத்தங்களை வைத்தே தான் கடந்த இடங்களை அறிந்து கொண்டானே தவிர அவனுக்கு இடம் பார்த்து நடக்கும் தைரியம் கூடவில்லை. பள்ளிவாசல் வந்த போதுதான் அவன் நின்றான். எதிரில் சாகிபு வந்து கொண்டிருந்தார். ஒரு கணத்தில் அவன் திகைத்துப் போய்விட்டான்.
“வடசேரி சாயிபு மீனாச்சிபுரத்துக்கு எதுக்கு வந்தாரு?”
அவர் அவன் எதிரில் வந்தார்.
“முட்டையக் கொண்டு வரச் சொன்னம்லலே ஏம்ல கொண்டு வரல?” என்று கேட்டார்.
“அது..சாயிப்பே..வந்து எங்களுக்கு கோழி இல்ல..அதனாலா முட்டை போடல..”
“கடைல வாங்க வேண்டியது தானே?”
அவர் நூல் மீசை சிணுங்கக் கேட்டார்.
“அதாம் போயிட்டுருக்கேன்”
அவர் அவனை அவநம்பிக்கையோடு பார்த்தார். அப்போது பின்புறத்திலிருந்து ஒரு பெண்ணின் பலத்த கதறல் சத்தம் கேட்டது.
“யாரோ போயிட்டாங்க..” என்றார் சாயிபு. தான் தான் போனது என்று சொல்ல வேலப்பனுக்குத் துணிவு வரவில்லை. அவன் அதனை மறைத்துக் கொள்ளவும் விரும்பினான். இருந்தபோதிலும் சாயிபு கண்டுபிடித்துவிடுவாரோ என்கிற பயம் வேறு அவனை உந்தித் தள்ள அவன் அவரிடமிருது விடுபட்டான். அப்போது தான் பின்புறம் கேட்கும் பெண்ணின் அழுகையின் குரல் மிக நீண்டுகொண்டே போக அது தன் தாய் சுப்பம்மையின் குரலோடு ஒத்துபோவதை அவன் உணர்ந்தான். தாகம் எடுத்தது.
தோப்புவணிகர் தெருவின் முன்பு நின்றிருந்த சிறிய தண்ணீர்க் குழாயின் திருகைத் திறந்து கையால் தண்ணீரை வாரிக் குடித்தான். நீர் பெருக்கிக் கொண்டு ஓடியது. சற்று நேரத்தில் சாலையெல்லாம் நீர் பெருக்கெடுத்தது. மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்தவன் சட்டென்று திருகினை அடைத்தான். என்ன முயற்சித்தும் திருகு நிற்கவில்லை. தண்ணீரின் வேகத்தில் திருகு எதிர்த் தெருவினை நோக்கி வீசப்பட்டது.
தண்ணீர் மேலும் மேலும் அதிகரித்ததில் சாலை நிறைந்தது. தெருக்கள் நீரில் மூழ்கின. வீடுகள் இடம்பெயர்ந்து மிதந்து நகர்ந்தன குடிசைகள் வழிந்தோடின. நீர் மலை போல உயர உயர மேலேச் சென்றது. வேலப்பன் நீரின் மேற்புறத்தில் மாட்டிக்கொண்டு உயரத்திற்கு போய்க் கொண்டிருந்தான்.
எஸ்எல்பி பள்ளிக்கூடத்தின் இடிதாங்கிக் கம்பிக் கீழே புள்ளியாகத் தெரிந்தது. வேலப்பனுக்கு மிகவும் பயமாக இருந்தது. இரண்டு கால்களுக்கும் நடுவே நீர் இழுத்து இழுத்து ஓடிக்கொண்டிருந்தது. எந்த நிமிடமும் சமநிலை தவறி விழுந்து விடுவோமோ என அச்சம் உணர்த்திக் கொண்டே இருந்தது. அழுகைகள் கேட்கவில்லை. அவன் திரும்பி முயற்சித்தான். அப்போது சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலும் அதனைச் சுற்றி நிறைந்து கன்னியாகுமரி வரை பறந்து கிடந்த கடலையும் மட்டுமே அவன் காண நேர கொடும்பயத்தின் கைப்பிடியிலிருந்து நழுவ இயலாமல் அவன் மனத்தின் அடியாழத்திலிருந்து குரலெடுத்தான்.
காலைப் பொழுதின் முதல் மணி அடித்தபோது ஒருவர் கூட விடுபடாமல் அனைவருமே வகுப்பில் இருந்தார்கள். கரும்பலகையின் பின்புறத்திலிருந்த கள்ளிப்பெட்டி மாணவர்களின் மதிய உணவிற்கான பாத்திரங்களை சுமந்து நின்றது. வகுப்பு ஆசிரியர் தங்கப்பன் உள்ளே நுழைந்ததும் அனைவருமே எழுந்து நின்று தங்கள் வணக்கங்களை தெரிவிக்க அவர் ஒரு புன்னகையின் மூலம் சூழ்ந்திருந்த இறுக்கத்தினை துடைத்து எடுத்தார்.
இடப்பக்கம் இரண்டாவது வரிசையின் நடுவில் இடம்பிடித்திருந்த அப்பு ஆசிரியரைக் கண்டதும் தலை குனிந்து கொண்டான். மவுனத்தின் இடையே ஓரக்கண்ணால் அவன் ராசாவைத் தேடினான். அப்புப் பார்வையினால் துழாவுவதைக் கண்ட வேலப்பன் அவன் தன்னைத் தான் தேடுகிறானோ என்ற சந்தேகத்தின் பேரில் “மூக்குத்திப் பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா...” என்று அப்புவைப் பார்க்காது பாடுவது போல பாடலை முணுமுணுத்தான்.
அருகிலிருந்த ராசா “வாய மூடுல வாத்தியாரு பாக்காரு” என்றான்.
“போன வருசம் அஞ்சாங்கிளாசுல லீடரா இருந்தவங்கள்லாம் எந்திங்கல” என்றார் வகுப்பு ஆசிரியர்.
எழுந்துகொள்ளப்போன ராசா படபடவென அதிகம் பேர் தனக்குமுன்பே எழுந்து நின்றதைக் கண்டதும் தன்னை மீறிவந்தக் கீழுணர்ச்சியால் தயங்கிவிட்டான்.
“பேரு என்னாலே?”
“ஷேக் முஹம்மது செய்யது அலி” என்றான் ஒருவன்.
“எந்த ஊருலே?”
“காலேஜு ரோடு”
“ஒம் பேருல?”
“ஞான ராஜ்”
“எந்தூரு?”
“கோட்டாறு”
“ஒம் பேரு?”
“இளங்கோ”
“எந்தூரு?”
“வாகையடித் தெரு”
அவர் கேட்டுக் கொண்டேப் போக தனக்குக் கிடைத்த வாய்ப்பினைத் தானே அவமதித்துவிட்ட கழிவிரக்கத்தில் நெஞ்சுப் பொறும உட்கார்ந்திருந்த ராசாவிடம் –
“நீ ஏம்ல எந்திக்கல?” என்று வேலப்பன் கேட்டான்.
“நா மட்டுந்தானேனு நெனச்சேன். எல்லா ஸ்கூல்லருந்தும் லீடர் பயக்களா இங்க வந்து சேருவானுங்கன்னு நா நெனைக்கல..”
“அதுக்கு ஒனக்கென்னல நீ எந்திக்க வேண்டியது தானே?”
“பாக்கதுக்கு நம்மளவிட நல்லா இருக்கானுவோ...நல்லாப் படிப்பானுவோ மாதிரிலா இருக்கு”
தவறவிட்ட வேதனையின் துயரம் அவன் சிந்தனைகளை இடறிக் கொண்டிருக்கையில்.
“லேய் இனி நீ தான் கிளாஸ் லீடர்”
“செரி சார்” என்றான் அலி.
அலியின் இடுக்குப் பற்கள் கூட மகிழ்ச்சியில் சிரித்தன. தேர்ந்தெடுக்கப்படாத மற்றவர்களை ஆசிரியர் கையமர்த்த, அவர்கள் உட்கார்ந்தார்கள்.
“அனாவசியமா எவனும் கிளாஸ்ல சத்தம் போடக்கூடாது...... எவனாவது சட்டம்பித்தனம் காட்டுனாம்னா ஒடனே ஏங்கிட்ட வந்து சொல்லிரணும். டெய்லி ஒருத்தன வச்சி பானையில தண்ணிப் பிடிச்சு வக்கணும்..ஒரு நாளைக்கு ஒரு பெஞ்சுன்னு மொற வச்சு கிளாஸ்ரூம தூத்துட்டுத் தான் வீட்டுக்குப் போவணும்..... போர்டு க்ளீனா இருக்கணும். செம்பருத்திப் பூவும் கரியும் தேய்ச்சு விட்டுட்டு மறுநாள் காலையில கழுவி வக்கணும்...எல்லாம் ஒம்பொறுப்புதான் ..என்னா..” என்று அலியைப் பார்த்துக் கேட்டார்.
“செரி சார்” என்றானே தவிர , இது புலிவால் கதியாகுமோ என்ற அச்சம் வந்தது அலிக்கு.
“டப்பா டப்பா பீடப்பா
எப்பன்டா கல்யாணம்
மாசம் பொறக்கட்டும்
மல்லிகப்பூ பூக்கட்டும்
எம்ஜியார் சண்ட
பார்வதிக் கொண்ட
கொளத்துலக் கொக்கு
கோழிப்பீய நக்கு”
வேலப்பன் ராசாவைப் பார்த்து மெதுவாகப் பாடினான். அடிக்கடித் திரும்பி பக்கவாட்டில் பார்த்துக் கொண்டிருந்த அப்புவிற்கு ராசா தன்னை அடித்த கிண்டலுக்கு வேலப்பன் சிரிக்கிறான் என்று பட்டது.
ஆனால் ராசா உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தான். .
‘’எந்திரிச்சிருந்தா எல்லார்கிட்டயும் எஸ்பியில 6 பி-ல நாந்தான் லீடருன்னு கெமையா சொல்லியிருக்கலாம்” என்ற மனப் புலம்பலில் தன்னைத் தானே வெறுத்துக் கொண்டிருந்த வேளையில் ஆசிரியர் தங்கப்பன் பலகையில் ஏதோ எழுதிவிட்டு ஒரு மாணவனை அழைத்துப் படிக்கச் சொன்னார்.“சாப்பா டுப்போ டப்பா டும்” என்றான் அவன். மற்றவர்கள் சிரித்தார்கள்.
”பள்ளிக்கூடத்துலேயே சாப்புட இஷ்டம் உள்ளவங்களுக்கு இங்கயே சாப்பா டுப்போ டப்பா டும்” என்றார் ஆசிரியர்.
மேற்கொண்டு அவர் எழுதியிருந்த கால அட்டவணையை அனைவரும் குறித்துக் கொள்ளத் துவங்க, அடுத்த வகுப்பிற்கான மணி அடித்ததும் அனைத்து வகுப்புகளிலிருந்தும் புறப்பட்ட மாணவர்களின் சத்தம் பெரும்படை கொண்டு வந்ததைப் போல கேட்டது. ஆசிரியர் தங்கப்பன் வகுப்பிலிருந்து எழுந்து போனதும் அப்பு தன் அருகில் இருந்த சங்கரனிடம் சொன்னான், “தங்கப்பன் வாத்தியாருக்கும் மெர்லின் டீச்சருக்கும் இதுவாக்கும்” என்று.
“மெர்லின் டீச்சரு யாரு?”
“வருவாப் பாரு”
என்று பொடி வைத்து காதில் ஓதினான் அப்பு.
தமிழ் வகுப்பிற்கான நேரம். ஆசிரியரின் வருகைக்கான காத்திருப்பில் நேரம் செலவழிந்து போய்க் கொண்டிருக்க எங்கிருந்தோ அவசரமாக வருபவரைப் போல உள்ளே நுழைந்தார் தமிழ் ஆசிரியர். வந்ததும் கூட இருக்கையில் உட்காராமல் மரியாதைக்கு எழுந்து நின்ற மாணவர்களையும் உட்காரச் சொல்லாமல் ஒருமுறை அவர்களைச் சுற்றி வந்தார். அதன்பிறகு அவர் மாணவர்களை உட்காரவைத்தது அனைவருக்கும் புதியதாக இருந்தது.
“ஒவ்வொருத்தரும் பேரு, ஊரு, படிச்ச பள்ளிக்கூடத்த சொல்லுங்க பாப்பம்”
என்று அவர் கேட்க, வகுப்பு களைக் கட்டத் துவங்கியது. ஒவ்வொருவரும் தங்கள் பெயர், ஊர், பள்ளிக்கூடத்தினை சொல்லிக் கொண்டு வந்தார்கள். அப்புவின் முறை வர, அவன் எழுந்திருக்கவில்லை. அடுத்து இருந்தவன் என்னச் செய்வது என்று தெரியாமல் முழிக்க வகுப்பு மவுனம் கண்டது. தமிழாசிரியர் அவன் அருகில் வந்தார்.
“எந்தில..” என்றார். அப்பு தயங்கித் தயங்கி எழுந்தான்.
“சொல்லு..” என்றார். அவன் மௌனத்தைக் கைவிடாது நின்றான்.
‘’கேக்கம்லா சும்மச் சொல்லு ‘’என்று மிக நெருக்கத்தில் வந்தார்.
‘’அப்பு, வீடு மணிமேடைப்பக்கம் ,பள்ளிக்கூடம் எஸ்ல்பி ‘’என்றதும் எல்லோரும் சிரித்தார்கள்.
அவர் அப்புவைப் பார்த்துத் தோளில் தட்டி உட்காரச் சொன்னார்.
“அவன் தோத்ததுனால தானே சிரிக்கியோ. ஒண்ணும் பிரயோசனமில்ல? அவன் தோத்தவன் தான். ஆனா தோத்துட்டு ஒடுனவன் இல்ல. திரும்பவும் இதே கிளாசுல படிக்க வந்திருக்கான்.அப்ப என்ன அர்த்தம்?
போன வருசம் அவன் படிச்சுத் தெரிஞ்சிக்கிட்டத இந்த வருஷம் தெரிஞ்சுக்கிட்டுப் படிக்கப் போறாம்னு அர்த்தம். இனிமே பாரு அடுத்த வருஷம் இந்தக் கிளாசுல அவன் இருக்க மாட்டான்” என்றவர் அப்புவிடம் வந்து,
“பொஸ்தகத்த எடுத்துப் படிக்கதுக்கு முந்தி படிக்கணும்னு நென. நல்லாப் படிப்பே..என்னா?” என்றார் அவன் குனிந்தபடியே தலையாட்டினான். கண்கள் சுற்றிலும் திரிந்து சிரித்தவர்களை கண்டு குறித்து வைத்துக் கொண்டன. அவன் உட்கார்ந்ததும்,
“எல்லாருமே தாள் வச்சிருப்பேள்லா..!எடுத்துக்குடுங்க..அதுல நாஞ்சொல்றத தப்பில்லாம எழுதித் தரணும்..என்னா?”
ஆளுக்காள் பழைய நோட்டிலிருந்து தாளினைக் கிழித்து எடுத்தார்கள்.
சிலர் மற்றவர்களிடம் கடன் வாங்கினார்கள்.
“அகத்திலிருந்து புறத்திற்கும்
புறத்திலிருந்து அகத்திற்கும்
காணென் தமிழை”
என்று ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்திச் சொன்னார்.
“எழுதியாச்சா? கீழே ஒங்கப் பேர போட்டுக்குடுங்க” என்றார்.
மாணவர்களின் தோள்களில் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.
எழுதிக் கொள்வதும் எழுதியபின் மற்றவர்களை எட்டிப்பார்த்து தங்கள் சந்தேகத்தினை நிவர்த்தி செய்து கொள்வதும் பிறகு நம்பிக்கைக் கொண்டு கிசிகிசுப்பதுமாக செல்ல, ஆசிரியர் பலகையில் “ஆரோக்கிய முத்து” என்று தனது பெயரினை எழுதினார்.
அலி எழுந்தான்.
“என்னலே?”
“நா கிளாஸ் லீடர் சார்” என்றான்.
அவர் அவனைக் கூர்மையாகப் பார்த்தார்.
“யாரு சொன்னா?”
“கிளாஸ் சார்” என்றான்.
‘’செரி..இரி..” என்று கையமர்த்தினார். அலி உட்கார்ந்தான்.
‘’எங்கிளாசுக்கு மட்டும் தனி லீடராக்கும்‘’ என்றார் அவர் .
அனைவரும் திகைத்தார்கள்.
அவர் அப்புவிடம் வந்து ‘’ தாள வாங்குலே ‘’ என்றார்.
மாணவர்கள் மேலும் திகைத்தார்கள். அதே சமயம் ராசா அன்றைய நாள் முழுதுமே தனக்குத் தோல்வியின் நாளாக அமைந்துவிட்டதாக கருதினான். அப்பு அனைவரிடமும் வந்து தாளினை வாங்கி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கொண்டே வந்தான். வேலப்பனின் தாளை வாங்கியதும் அலட்சியமாக தலையாட்டி அதனை இடையில் செருகினான். பிறகு ராசாவிடம் கையை நீட்டினான். தாளினை வாங்கியதும் உள்ளேப் படித்துப் பார்த்தான். மறுகணம் ராசாவை அவன் ஏற இறங்கப் பார்க்க, பார்வை சீறிக் கொண்டுவந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு ராசாவினுடையத் தாளினை மட்டும் அடியில் வைத்தான். அனைத்தையும் வாங்கியப் பிறகு ஆசிரியரிடம் கொண்டுபோய் கொடுத்து ராசாவைப் பார்த்து அவரிடம் ஏதோ மெதுவாக சொன்னான்.
அவர் தாள்களைப் படித்துத் திருத்தத் துவங்கினார்.. திருத்தல் முடிந்ததும் பெயர்களைச் சொல்லி அவரவர் தாளினை வழங்கினார். கடைசித் தாள் மட்டும் அவரிடமே இருந்தது.
அனைவரும் அதனைப் பார்க்க, ராசா பதட்டத்திற்கு உள்ளானான். அவனது தாள் அவனுக்கு கிடைக்கவில்லை.
“ராசா யாருல?”
அப்புவின் உதட்டில் ஒரு புன்னகை குசும்பாய் பிறந்து அலட்சியமாக மாறியது.
ராசா எழுந்தான்..
“இது என்னதுல?” என்று தாளினைக் காட்டிக் கேட்டார்.
என்ன தவறு செய்தோம் என்று அறியாத பயத்தில் கண்ணில் நீர் முட்டிக் கொண்டு வந்து நின்றது.
‘’செத்தான் நரசப்பன்’’ என்று தலையில் கை வைத்தான் வேலப்பன்.
(கனா தொடரும்)
(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கி வரும் இவர் தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத்தொடர் இது.)