கனா மீது வருபவன் - 9

Published on

“தமிழுல எழுதுன்னு சொன்னா ஒன் இஷ்டப்படிதான் எழுதுவியோலே?” தமிழாசிரியர் ஆரோக்கியமுத்து தனது கட்டைக் குரலால் அதட்டியபடியே ராசாவை நோக்கி வந்தார். அவரது கை விரல்களுக்கு இடையே அவனது தாள் தொங்கிக் கொண்டிருந்தது. அப்பு அதனைச் சுட்டிக்காட்டியபடி அவனது சங்கு ஊசலாடுவதாக பழிப்புக் காட்டினான். ராசாவுக்குத் தனது தவறு புரிபடவில்லை. அவன் தாளினை உற்று நோக்க முயற்சித்தான்.

“சொல்லுலே...எழுத்தாலே இது?” என்று அருகில் வந்து கேட்டார். தாள் முகத்துக்கு நேராகவே வந்து ஆட அதுவரையில் அவனை ஆட்டங்காட்டிய தவறு அப்போது தான் அவனுக்கு புலப்பட்டது.

“சார்..வந்து..” என்று அவன் தயங்கினான்.

“ம்..நா எழுதச் சொன்னேன் இவன் படம் வரைஞ்சி வச்சிருக்கான்..”

அனைவரும் ராசாவின் தாளினையே உற்றுப் பார்த்கார்கள்.

வேலப்பன் சற்று எட்டிக்கூட பார்த்தான்.

“இது படம் கூட இல்லலே..”

“ஓவியம்! சித்திரம்!” அவரது முகம் இறுக்கம் தளர்ந்து ஒரு குழந்தையின்  புன்னகைக்கு மலர்ந்தது.

“ஒலகத்துல சித்திரம் மாதிரி எழுத்து இருக்கலாம். ஆனா அதெல்லாம் எளிமையா இருக்காது. தமிழ் எழுத்து மட்டும்தாம்ல ஒவ்வொருத்தருக்கும் புடிச்ச மாதிரி வளச்சும் நொடிச்சும் இழுத்தும் முத்துமுத்தாவும் சித்ரமாவும் வகவகயா எளிமையா எழுத முடியும். ஒன்னைய யாருல இப்படி எழுத பழக்குனது?”

“அது..எங்கப்பா சார்..”

“ஒங்கப்பாவா? அவரு தமிழ் வாத்தியாராலே?”

“இல்ல சார். அவருக்கு தமிழுன்னா ரொம்பப் புடிக்கும் சார்.... புது வருசந்தோறும் எனக்காக கடகடயாப் போயி நெறைய காலண்டர வாங்கிட்டு வருவாரு சார்.. அதுல உள்ள எழுத்துக்களக் காட்டி எவ்வளவு அழகழகா எழுதியிருக்கான் இது மாதிரி எழுதிப் பழகுன்னு சொல்வாரு.. நானும் அவரு சொன்னமாதிரி அதப் பாத்து எழுதிப் பழகுவேன். அதான் சார்..”

அவர் அவன் நோட்டினைப் பிரித்தார். முதல் பக்கத்தில் சி.ராசா என அவன் தன் பெயருக்கு எழுதியிருந்த அட்சரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வடிவத்தில் அழகழகாக நின்று அவரை ஈர்த்தது. இடையில் வைத்திருந்த புள்ளியினை அவர் கூர்ந்து பார்த்தார். அது அடர்த்தியாகவும் சிறிய கோலம் போலவும் காணப்பட்டது. பள்ளிக்கூடத்தின் பெயரினை சுழிகளுடன் அவன் இணைத்திருந்த விதம் ஒரு பண்பட்ட ஓவியனின் தூரிகையை அவருக்கு நினைவுப்படுத்தியது. அவர் கண்களை மூடி மானசீகமாக உள்ளுக்குள் ரசித்தார். பிறகு சட்டென நாவினால் சப்புக்கொட்டி சுவையை உணர்த்துவது போன்ற ஒருசப்தத்தை எழுப்பினார்.

மாணவர்கள் ராசாவின் நோட்டினை எட்டிப் பார்க்க மிகுந்த ஆவல் கொண்டனர். வேலப்பன் தனது நோட்டினை தள்ளிவைத்துவிட்டு அருகில் இருந்த திரவியத்தின் நோட்டினைப் பிரித்துப் பார்த்து “ப்ர்ர்” என்று வாய்க்குள் சிரிக்க திரவியம் கோபத்தில் கையைமுறுக்கி அவனது கால்மூட்டின் மீது ஓங்கிக் குத்தினான். சமயோசிதமாக வேலப்பன் விலகிவிட பெஞ்சின் மீது கை மோதியதில் வலியில் திரவியத்தின் கண்கள் சிவந்தன. அவன் தனது  நோட்டின் கடைசிப்பக்கத்தை எடுத்து அதில், ‘செத்தெலே’ என்று எழுதிக் காட்டினான். வேலப்பன் இரண்டு விரல்களை எம்ஜியார் போல் காட்டி “பச்சம்” என்று கூறிவிட்டு விரலினை அவன் பிடிப்பதற்குள் ஒளித்துக் கொண்டான்.

“ஒங்கப்பா என்னச் செய்யாரு?”

ராசா சற்றுத் தயங்கினான்.

“சொல்லு..”

“வண்டி இழுக்காரு சார்..”

“என்ன வண்டி..?”

“கைவண்டி சார்..”

“பார வண்டியா..?”

“ஆமா சார்..வெறகு போடது..வீடு மாத்தது..மாதாக் கோயில் சப்பரத்துக்கு மோட்டார் இழுக்கது..கல்யாண வீட்டுக்கு சாமாங் கொண்டு போறது..”

தருவிக்காத இயல்பான தனது புன்னகையுடன் அவர் அவனைத் தட்டிக் கொடுத்துவிட்டு

“நீ தான் எங்கிளாசுக்கு இனிமே லீடர்” என்றார்.

கிணற்றுக்குள் தவறி விழுந்து தப்பி வந்தவன் போல நம்ப முடியாமல் திணறிப் போய் நின்றான் ராசா.

அவன் உடலெங்கும் பரபரத்தது. ஈரக் காற்று வீசியதில் சட்டை உடலிலிருந்து பறக்க விழைந்ததில் உடல் சற்று இளைத்து விட்டது போல இலகுவாக இருந்தது. உடல் பரவசம் கண்டது. மைதானத்தில் எங்காவது ஓடிச்சென்று துள்ளிக் குதிக்க வேண்டும் போல இருந்தது. போரின் கடைசிச் சுற்றில் வென்ற மகராசனாக தன்னை அவன் நினைத்துக் கொண்டான். தான் இழந்த தேசத்தை மீட்டுக் கொண்டு வந்ததாக பெருமிதமும் கொண்டான்.

தமிழாசிரியர் அவனை அமர்த்திவிட்டு அப்புவிடம் சென்றார்.

“நல்லதா கெட்டதான்னு யோசிக்காம யாரப் பத்தியும் கோளு மூட்டக் கூடாது..இன்னைக்கு போவட்டும். இனிமே வேண்டாம்..”

என்று கூறிவிட்டு சென்றார்.

அப்புவின் முகத்தின் மீது துயரம் அறைந்து சாத்திக் கொண்டு நின்றது. மிகவும் பலவீனப்பட்டும், அவமானப்பட்டும் விட்டதாக ஒரு தோன்றல் உள்ளுக்குள் உருவானதில் இடது கை துவண்டது. நெஞ்சின் மையத்தில் அடர்த்தியாக எதுவோ வந்து உட்கார்ந்து கொண்டு அழுத்தியது. சற்றுப் படுத்து ஆசுவாசப்பட்டுக்கொள்ள உடல் வேண்டியது.

கண்கள் நிறைந்து கொண்டு வந்தன.

அவன் ராசாவைப் பார்த்தான். ராசா அவனைப் பார்த்தான்.வேலப்பன் இருவரையும் பார்த்தான். ஓரக்கண்ணால் திரவியத்தையும் பார்த்துக் கொண்டான். மெதுவாக ராசாவிடம் “வீட்டுக்குப் போனதும் ஒங்கம்மைக் கிட்டச் சொல்லி உப்பும், மொளவும் சுத்திப் போடச் சொல்லு”

ஏம்ல?”

“கண்ணு விழுந்திருச்சிலே..நெறைய கண்ணுலே..அதுவும் சாதாரணக் கண்ணு கெடையாது. கள்ளக் கண்ணு, நொள்ளக் கண்ணு, நாய்க் கண்ணு, பேய்க் கண்ணு, நொண்டிக் கண்ணு, முண்டக் கண்ணு, முக்குனக்கண்ணு, மூதேவிக்கண்ணு, அப்புக்கண்ணு..”

“நிறுத்துப் போதும்லே..”

“நாஞ் சொன்னது சும்மா இல்லலே..சுத்திப் போடலைனா புடிங்கிக்கிட்டு வயித்தாலப் போவும் பாரு. லேசுல நிக்காது. மாத்திர மருந்துக்கெலாம் அடபடாது. பொறவு வடசேரி சாயிபு வீட்டுக்குப் போவணும். அவரு முட்டைக் கடை வக்கதுக்கு முட்டை வாங்கிக் கேப்பாரு..”

என்று கூறி சிரிக்க அது கண்ட அப்புவிற்கு மகா தோல்வியாகப்பட்டது.

தமிழாசிரியர் மேசையின் அருகில் வந்து நின்றார். கைகளைக் கட்டிக்கொண்டார். சில வினாடிகள் கண்களையும் மூடிக்கொண்டார். ஒரு ஆசிரியரின் வழக்கமற்ற செயல்பாடு கொண்ட அவர்மீது மாணவர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியது. கண்களைத் திறந்த போது அவரை முன்னிலும் பிரகாசமாக ஒரு ஒளியோடு கண்டது போல இருந்தது.

“தமிழுன்னா என்னா?”

அவர் அனைவரையும் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு சுந்தரத்திடம் கேட்டார். அவன் எழுந்து,

“மொழி சார்” என்றான்.

“இரி” என்றார்.

அடுத்தச் சுற்றில் சந்திரனிடம் “என்ன மொழி?” என்று கேட்க “தாய்மொழி சார்” என்றான் அவன்.

“அது எப்படி இருக்கும்னு யாருக்காவது சொல்லத் தெரியுமா?”

“நல்லா இருக்கும் சார்” லலிதராஜன் எழுந்து சொன்னான்.

“நல்லான்னா எப்படி?”

“பேசுறதுக்கும் எழுதறதுக்கும் நல்லா இருக்கும் சார்”

“அதுக்கு சுவை உண்டுமா?”

அனைவரும் யோசிக்கத் துவங்கினார்கள். பெஞ்சுக்கு பெஞ்சு கூடிப் பேசினார்கள். ஆளுக்கு ஆள் கிசுகிசுத்துப் பார்த்தார்கள்.

“என்னா? கண்டுபிடிச்சாச்சா?”

“எங்களுக்கு சொல்லித் தரல சார்” என்றான் இளங்கோ.

தமிழாசிரியர் பெருமூச்சு ஒன்றினை நீட்டி விட்டார். பிறகு தனது இடதுகையினை குவித்துக் காட்டி

“இது ஒரு பாத்ரம்..வட்டைன்னு நெனச்சுக்கோ , மட்டிப்பழம் தெரியுமா?

“தெரியும் சார்..தெரியும் சார்” என்றார்கள் அனைவரும்.

“நல்லக் கனிஞ்ச மட்டிப்பழம் ஒன்ன உரிச்சி இந்த வட்டைக்குள்ள போடுதேன்..இப்போ அது கூட ஒரு நல்ல பழுத்த செங்கவருக்க மாம்பழத்துண்டு, அது எப்படீனா தரையில விழுந்தா ஒட்டிக்கிடும். ஒங்க டெஸ்க் மேல விழுந்தா கையால எடுக்க முடியாது. சொரண்டனும். அந்த அளவுக்கு பழுத்தது..தோல சீவி அதுல ஒரு நயந்துண்ட இதுல போடுதேன்...

ஆசிரியர் மாணவர்களின் முகங்களை ஒருதரம் பார்த்தார். அவர்கள் அவரின் சொற்களுக்காக காத்துக்கிடந்தார்கள்.

“இப்போ ஒரு துண்டு சக்கைப்பழம். மூஞ்சிக்க நேரா தூக்குனா சாறு வடியனும். அப்படி ஒரு துண்டு...அதையும் இதுக்கக் கூட போடுதேன்..”

பிறகு வலது கையினைத் தூக்கி “இதக் கரண்டின்னு நெனச்சுக்கோ. ஒரு ரெண்டுகரண்டி தேனு..எப்படியாப்பட்ட தேனுன்னா தாள் உறிஞ்சாது. தண்ணீல சேராது. அதையும் வுடுதேன். இப்போ கரண்டியால நொங்கு சர்பத்த அடிக்கமாதிரி நல்லா அடிக்கேன்.. கொஞ்ச நேரத்துல எல்லாத்தையும் அடிச்சி ஊற வச்சிட்டேனா?..இப்போ கரண்டியால இந்த வட்டைக்கு மேல் பக்கம் வச்சு அமுக்குனா என்ன வரும்? ஆங்? சாறு மட்டும் தேனு மாதிரி கரண்டிக்குள்ள வரும்..வருதா?

“வருது சார்..வருது சார்..”

“அதுல முக்கி கரண்டிய மட்டும் தூக்கி நாக்கு மேல காட்டுனா..சொட்டு சொட்டா வடியுமே!  ..’’

அவர் நிறுத்திவிட்டு கண்களை மூடிக் கொண்டார். நாக்கை மேலண்ணத்தில் ஒட்டி ‘சட்’ என்று சப்புக் கொட்டி நொட்டை போட்டு கண்களைத் திறந்தார். மாணவர்கள் அனைவரும் சொக்கிக் கிடந்தார்கள். அனைவரின் வாயோரமும் எச்சில் ஊற, நாக்குகள் மிதந்தன .வேலப்பன் உதடு வரையிலும் நக்கி விட்டான்.

“எப்படி இருக்கும்?”

“ஒருவராலும் பதில் சொல்ல இயலவில்லை. தொண்டைக்குள் உமிழ்நீரை இறக்கினார்கள்.

“இதுதாம்லே தமிழ்”

தமிழை ஒதுக்கிய சிலர் உட்பட அனைவரும் தமிழுக்கும் தமிழாசிரியர் ஆரோக்கியமுத்துவுக்கும் அடிமையானார்கள். அவர் சொன்னதன் மூலம் தமிழின் சுவையை ராசாவின் மனம் உறிஞ்சத் துவங்கியிருந்தது. அவன் மயக்கத்திலாழ்ந்தவனைப் போல, ஒரு நோயாளியினைப் போல தன் வயத்தினை இழந்திருந்தான். அருகில் வேலப்பன் தன் விரலினை ரகசியமாக உறிஞ்சிக் கொண்டிருந்தான்.

“தமிழ் மொழிக்கு சுவைக் கூடுமே தவிர ஒரு போதும் குறையாது. இனிமே யாருக்காவது தமிழப் பிடிக்காம போகுமாடா?”

“இல்ல சார்..தமிழ் ரொம்பப் புடிக்கும் சார்”

ராசாவின் மனதில் தமிழின் சுவை கூடி ஈ மொய்க்கத் துவங்கியிருந்தது. ஆசிரியர் தன் நாவன்மையால் அன்றைய வகுப்பில் அனைவரின் வாயையும் கட்டிப் போடுவதற்குப் பதில் திறக்க வைத்திருந்தார்.

அன்று மாலை வேலப்பனும் ராசாவும் வீட்டுக்கு ஒன்றாகச் சேர்ந்து கிளம்பினார்கள். ஐயர் குடி வழியாக செல்லும் யோசனையை வேலப்பன் முன் வைத்தபோது சுற்றிச் செல்லும் வழியை எப்போதும் மறுத்து விடும் ராசா தமிழின் புலம்பலில் ஒத்துக் கொண்டான்.

“நம்ம தமிழ் சாரு பழக்கடை வச்சிருப்பாரோ?”

வேலப்பன் கேட்டான்.

“ஒரு வேள அவரு மட்டும் பழக்கடைய நடத்துனாருனு வையி பழம்லாம் பிச்சிக்கிட்டு விக்கும்..பழம் என்னாலே பழம்? காயக் கூட வாங்கிட்டுப் போயி தின்னு தீத்துருவோம்.’’

ஐயர் குடியிலிருந்து முடுக்கு வழியாக மணிமேடையின் கிழக்குப்புற ரோட்டுக்கு அவர்கள் திரும்பிய சமயம் நீண்டு கிடந்த அந்த முடுக்கின் மறுமுனையை கடக்கவிருந்த அப்பு அவர்கள் வருவதைக் கண்டான்.

அடுத்த கணமே திரும்பி அவனும் முடுக்கினுள் நுழைந்தான். முடுக்கின் இருபுறங்களிலும் ராசாவும் அப்புவும் ஒருவரையொருவர் எதிரெதிராக மோதவிருக்கும் வாய்ப்பினை நோக்கி நடந்தார்கள்.

இதுபோன்ற சமயங்களில் வழக்கம்போல தனக்குள் ஏற்படும் உடல் மாற்றத்தினை புறந்தள்ளி விட்டு கொழுத்த வன்மம் மிகுந்த மனதோடு வந்த அப்பு தனது உள்ளங்கையினை முறுக்கிக் கொண்டான்.

ராசா திரும்பிப் பார்த்தான். வேலப்பனைக் காணவில்லை. எந்தக் கணத்தில் தப்பினான் என்று தெரியவில்லை. உடலெங்கும் பரபரத்தது. நடு நெஞ்சில் திக்திக்கென்று துடித்தது. இருவரும் ஒருவரையொருவர் நெருங்கினார்கள்.

(கனா தொடரும்)

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கி வரும் இவர்  தன் இளமைக்கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத்தொடர் இது.)

logo
Andhimazhai
www.andhimazhai.com