கர்ணனின் கதைகள்

செவக்காட்டு சொல்கதைகள் 11

சமீபத்தில் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாரயணன் அவர்களைப் புதுவை சென்று சந்தித்தேன். வருகிற செப்டம்பர் 16ல் 92வது வயதில் அடியெடுத்து வைக்க இருக்கிற ‘கி.ரா’ அவர்கள் உற்சாகத்துடன் படிப்பது , எழுதுவது , நண்பர்களுடன் உரையாடி மகிழ்வது என்று சந்தோசமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நானும் கி.ராவும் வழக்கம் போல் உரையாடி மகிழ்ந்தோம். பேச்சினூடே கி.ரா சில நாட்டுப்புறக்கதைகளையும் , வித்தியாசமான மக்களின் பழக்க வழக்கங்களையும் பற்றிச் சொன்னார். நானும் சில சொல் கதைகளை கிராவுக்குச் சொன்னேன்.

மகாபாரதத்தில் வருகிற கர்ணனைப் பற்றி கிராமத்து மக்கள் உருவாக்கி உலவ விட்டிருக்கிற சில கதைகளை கி.ரா என்னிடம் அப்போது கூறினார்கள். கர்ணன் பற்றி கிரா கூறிய கதைகளை மட்டும் இந்தவாரம் அந்திமழை மின்னிதழின் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

கர்ணனின் கொடைத்திறத்தை வியாச முனிவர் சொன்னதை விட , வில்லிப்புத்தூரார் சொன்னதை விட நாட்டுப்புறத்து மக்கள் தாங்கள் உருவாக்கி உலவ விட்ட கதைகள் மூலம் சொன்னதுதான் அதிகம் என்று எண்ணுகிறேன்.

அந்தக் காலத்தில் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, போன்ற மாதங்களில் அடைமழை பெய்யும். வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் கதவை அடைத்துக்கொண்டு மக்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பார்கள். எனவே தான் அதற்கு ‘அடை மழைக்காலம்’  என்று பெயர் .அப்போது அடைத்த கதவை திறக்க விடாமல் ஊத்தோ ஊத்தென்று ஊத்தும்பாங்க. பகலில் தினமும் மத்தியான நேரத்தில் மழை வெரிக்கும் . அதை ” உச்சி வெறிப்பு ” என்று சொல்வோம் . எனக்கு வனா (நினைவு)தெரிய அடை மழையை அனுபவித்திருக்கிறேன். இப்போது அந்தமழை எல்லாம் எங்கே போயிற்று என்றே தெரியவில்லை.

அப்படிபட்ட அடை மழைக்காலத்தில் கர்ணனிடம் போய் ஒரு கல்யாண வீட்டுக்காரன் காய்ந்த விறகை தர்மமாகக் கேட்டான்.கொடை வள்ளலான கர்ணன் தன் அரண்மனை ஊழியர்களை அனுப்பி தன் காட்டுபங்களாவில் இடிந்து தவந்து கிடந்த ஒரு கட்டிடத்தில் நனையாமல் உள்ள காய்ந்த உத்திரங்களையும் , நிலைக்கம்புகளையும் கொண்டு வரச் சொல்லி அதை அந்தக் கல்யாண வீட்டுக்காரருக்கு விறகாக கொடுக்க சொன்னானாம் , இது ஒரு கதை.

இன்னொரு கதை கர்ணன் எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு முதியவர் என் கடைக்குட்டி மகளின் கல்யாணத்திற்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கக் கர்ணன் தன் அருகில் எண்ணையுடன் இருந்த தங்க கிண்ணத்தை எடுத்து அந்தப்பெரியவருக்கு தானமாகக் கொடுத்தானாம். எண்ணெய் தேய்த்து கர்ணனுக்கு மசாஜ் செய்து கொண்டு இருந்த சேவகன் , ‘ராஜா ஏன் எண்ணெயுடன் தங்க கிண்ணத்தை கொடுத்தீர்கள் , வீட்டிற்குச் சென்று வேறு ஏதாவது ஒரு தங்க கிண்ணத்தைக் கொண்டுவரச்சொல்லி அதைக் கொடுக்கலாமே என்றானாம். அதற்கு கர்ணன் , அதற்குள் எனக்கு மனம் மாறிவிட்டால் என்ன செய்ய? எனவே தான் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த பின் தாமதிக்க கூடாது உடனே கொடுத்து விட வேண்டும் என்றாராம்.

யுத்தகளத்தில் சாகப்போகிற நேரம் கர்ணன் மார்பில் அம்பு பட்டும் உயிர் போகாமல் கிடந்த நேரம் கிருஷ்ணன் ஒரு முதியவரின் வேடமிட்டு , கர்ணா நீ செய்த புண்ணியங்கள் எல்லாவற்றையும் எனக்குத் தானமாகத் தா! என்று கர்ணனிடம் கேட்டதும் அதற்கு கர்ணன் தன் மார்பில் பாய்ந்திருந்த அம்பை உருவி அப்போது மார்பில் இருந்து வடியும் ரத்தத்தால் தான் செய்த தர்மங்களை எல்லாம் தாரை வார்த்து கொடுத்தான், அதன் பின் தான் கர்ணனின் உயிர் அவனை விட்டுப்பிரிந்தது என்ற கதை நமக்கெல்லாம் தெரிந்தது தான்.

கிருஷ்ணர் முதியவர் போல வேடமிட்டு யுத்தகளத்தில் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கும் போது யாசகம் கேட்கச் செல்லும் முன் உண்மையான முதியவர் ஒருத்தர் சாகப்போகிற நிலையில் குற்றுயிரும் , கொலை உயிருமாய் இருக்கிற கர்ணனிடம் போய் யாசகம் கேட்டார் என்று பாமர மக்கள் உண்டாக்கிவிட்ட கதை ஒன்று உள்ளது.

உயிர் போகப்போகிற நிலையிலும் தன்னிடம் யாசகம் கேட்டு வந்த முதியவருக்கு தன் வாயில் இருந்த தங்கப் பல்லை கழற்றிக் கொடுத்தார். என்கிறது அந்தக்கதை. ‘அந்த காலத்தில் தங்கப்பல் கட்டுகிற வழக்கம் இருந்ததா.? என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் போகக்கூடாது. கொடை கொடுக்க வேண்டும் , தானம் செய்ய வேண்டும் என்ற மனம் உள்ளவனுக்கு எந்தச் சூழலிலும் கொடுப்பதற்கு எதாவது கிடைக்கும் என்ற செய்தியை மட்டும் தான் நாம் இந்த சொல்கதையில் இருந்து எடுத்து கொள்ள வேண்டும்.

இவ்வளவு பெரிய கொடை வள்ளலுக்கு தன் வாழ்வில் ஒரே ஒரு தானம், செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. ஆம் கர்ண மகாராஜா அன்னதானம் செய்ய அவர் வாழ்வில் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இந்தச் செய்தியையும் ஒரு நாட்டுப்புறக்கதைதான் பதிவு செய்கிறது .

கர்ணன் தாய் இல்லாத பிள்ளையாக தந்தை இல்லாத பிள்ளையாக வளர்ந்தான். ஒரு தேரோட்டியின் வளர்ப்பு மகனாக இருந்தான், தாய் தந்தை பாசத்தை அறியாத கர்ணன் வளர்ப்பு பிள்ளைகள் அனுபவிக்கும் அத்தனை சோகங்களையும்  அனுபவித்து வாழ்ந்தான் . கர்ணன் குந்திதேவியின் மகன் என்று தெரிந்து கொள்ளாத அவன் மனைவியும் அவனிடம் பாசத்துடன் நடந்து கொள்ளவில்லை, எனவே தான் அவனால் அன்னதானம் மட்டும் செய்ய முடியவில்லை.

ஒரு நாள் கருக்கல் நேரம் ஒரு வழிப்போக்கன் கர்ணனைச் சந்தித்து ‘ஐயா எனக்கு பசிக்கிறது என்று கூறுகிறான் .

சற்று தொலைவில்தான் அன்னச்சத்திரம் இருந்தது. வெளியூர்க்காரனான வழிப்போக்கனுக்கு அன்னச்சத்திரம் இருக்கும் இடம் தெரியாமல் தான்     கர்ணனிடம் கேட்டிருக்கிறான், வழிப்போக்கனுக்கும் கர்ணன் அரசன் என்று தெரியாது, கர்ணனும் மாறு வேடத்தில் நகரச் சோதனைக்காகச் சென்றிருந்தான் எனவே தன் வலது கை ஆள் காட்டி விரலை நீட்டி அன்னச் சத்திரம் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டினான்.

வழிப்போக்கனும் அன்னச்சத்திரம் சென்று சாப்பிட்டுப்பசியாறி அன்றைய இரவுப் பொழுதைக் கழித்துவிட்டு மறு நாள் காலையில் எழுந்து தான் போக வேண்டிய ஊருக்கு சென்றான்.

கர்ணன் யுத்தகளத்தில் குற்றுயிரும் கொலை உயிருமாக கிடக்கும் போது அவனுக்கு தாகமெடுத்தது.அப்போது முதியவர் போல் வேடமணிந்து வந்த கிருஷ்ணனிடம் கர்ணன் ’ஐயா பெரியவரே எனக்குத் தாகமாக இருக்கிறது’ என்று கூறினான்.

முதியவர் வேடத்தில் இருந்த கிருஷ்ணர் , சாகக்கிடக்கிற கர்ணனிடம் ’நீ உன் வலது கையின் ஆட்காட்டி விரலை உன் வாயில் வைத்து சுவை , உன் தாகம் தீரும் வரை அந்த விரலில் இருந்து அமுதம் சுரக்கும் என்றார்.

‘அதெப்பெடிச் சுரக்கும்?’ என்று சந்தேகத்துடன் கேட்டான் பெரியவரைப் பார்த்த கர்ணன் .

முதியவர் , நான் சொன்ன படி செய் , உன் தாகம் தணியும் , என்றார் கர்ணனும் தன் வலது கையின் ஆள் காட்டி விரலைத் தன் வாயில் வைத்துச் சுவைத்தான் , என்ன ஆச்சரியம் கர்ணனின் ஆள் காட்டி விரலில் இருந்து அமுதம் சுரந்து அவன் தாகத்தைத் தணித்தது.

தாகம் தணிந்த கர்ணன் பெரியவரைப் பார்த்து எப்படி இந்த அதிசயம் நடந்தது என்று கேட்டான். முதியவர் வேடத்தில் இருந்த கிருஷ்ணர் அன்றொரு நாள் நீ மாறு வேடத்தில் நகர் வலம் வரும் போது வழிப்போக்கன் ஒருவன் உன்னிடம் ஐயா பசிக்கிறது என்று சொன்னான் , நீ அந்த வழிப்போக்கனுக்கு பசியார உணவு பறிமாரா விட்டாலும் , உணவு கிடைக்கும் அன்னச்சத்திரம் இருக்கும் திசையை உன் வலது கை சுட்டு விரலால் சுட்டிக்காட்டினாய் , அது ஒரு தர்ம காரியம்.

பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுக்கவில்லை என்றாலும் உணவு கிடைக்கும் இடத்தை நீ சுட்டிக்காட்டினாய் , அதுவும் ஒரு தர்ம காரியம் தான். அன்று உன் வலது கை சுட்டு விரல் செய்த தர்ம காரியத்தால் , இன்று உன் தாகத்தை தீர்த்திருக்கிறது. எல்லா தானத்தையும் விட உயர்ந்தது அன்னதானம் தான் என்று விளக்கம் கூறினார்.

முதியவர் கூறிய விளக்கத்தைக் கேட்ட கர்ணன். அன்னதானத்திற்கு இவ்வளவு பலன் இருக்கும் என்று தெரிந்திருந்தால் நான் வாழ்கிற காலமெல்லாம் அன்னதானம் செய்து வாழ்ந்திருப்பேனே ! என்று சொல்லி வருத்தப்பட்டானாம்.

கர்ணன் என்ற பாத்திரத்தை வைத்துக்கொண்டு இது போல எண்ணற்ற சொல் கதைகளை பாமர மக்கள் உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்கள் . உண்மையில் இந்தச் சொல் கதைகள் எதுவும் மகாபாரதத்தில் கிளைக்கதையாக கூட இல்லை.

மக்களுக்கு கொடைத்தன்மையின் சிறப்பைக் கூறவே இத்தகைய கதைகளை கதை சொல்லிகள் படைத்து உலவ விட்டிருக்கிறார்கள்.

“தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள் அன்னதானத்தின் பலனை விளக்கும் நாட்டுபுறக்கதைகளும் நடப்பில் உள்ளன என்று தன் பேச்சின் ஊடே கர்ணனை பற்றிய இந்தக்கதையை கூறினார் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

(இன்னும் சொல்லுவார்)

ஆகஸ்ட்   30 , 2014  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com