கலை வளர்த்த மதுரை

மதுரைக்காரய்ங்க-39

இது மதுரை மண்ணின் வரலாற்று அரசியல் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பரபரப்பான அரசியல் தொடர், காலத்தின் முன்னும் பின்னும் சென்று, முக்கியமான நிகழ்வுகளை இத்தொடரில் படம் பிடிக்கிறார் சஞ்சனா மீனாட்சி

இந்தவாரம் மதுரையின் முக்கியமான  கலைஞர்கள் பற்றி பார்ப்போம்.

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி..

   தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் புரியாதது மாதிரி இருக்கும். ஆனால் இசையின் ராணியென வர்ணிக்கப்பட்ட எம். எஸ். சுப்புலட்சுமி பெயர் விரிவாக்கம் தான் இது. .  "இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்" என புகழ் பெற்ற இசைமேதை எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார்.

 எம். எஸ். சுப்புலட்சுமி 1916 -ம் ஆண்டு மதுரையில் பிறந்தார். தாய்  இசைக்கலைஞர் மதுரை சண்முகவடிவு தந்தையார் சுப்பிரமணிய அய்யர் . எம்.எஸ். தனது சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருடன் இசை தொடர்பான சூழலில் வளர்ந்தார்.  சுப்புலட்சுமியின் பாட்டியார் அக்கம்மாள் ஒரு வயலின் கலைஞர். தாயாருக்கும் சகோதரிக்கும்  வீணை மீட்டுவதில் ஆர்வம் அதிகம். சகோதரர் சக்திவேலுக்கு மிருதங்கத்தில் ஈடுபாடு அதிகம். இவர்கள் இருவரும் இளவயதிலேயே காலமாகி விட்டனர்.

சுப்புலட்சுமிக்கு அவரது தாயாரே முதலில் குருவானார்.  வீணையுடன் சேர்ந்து பாடி வந்த இவர் இசையில் வெகுவிரைவில் புகழ் பெற்றார். சுப்புலட்சுமிக்கு எட்டு வயதாக இருக்கும் போது சென்னையைச் சேர்ந்த உயர்அதிகாரி ஒருவர் சண்முகவடிவின் வீணை இசையை ஒலிப்பதிவு செய்யச் சென்றார். அப்போது அருகிலிருந்த சுப்புலட்சுமியையும் பாடச் சொன்னார். சிறுமி சிறிதும் தயங்காமல் பாடினார். இதைக் கேட்டவர் ஆச்சரியமடைந்து அந்தப் பாடலையும் ஒலிப்பதிவு செய்து கொண்டார்.

  செம்மங்குடி சீனிவாச ஐயர், முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், ராஜ மாணிக்கம் பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளை, பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், ஜி. என். பாலசுப்பிரமணியம் போன்ற ஜாம்பவான்கள் இடம் பெறும் இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில் கண்டு ரசித்தார். இந்துஸ்தானி இசையை இவர் பண்டித நாராயணராவ் வியாசியிடமிருந்து கற்றார். அப்துல் கரீம்கான் மற்றும் பாதே குலாம்கானின் இசையையும் ஆழ்ந்து ரசித்தார். தாயுடன் கச்சேரிகளுக்குச் சென்று வந்ததால் ஐந்தாவது வகுப்பு வரையே இவரது கல்வி அமைந்தது.

.

 1926ம் ஆண்டு வெளியான இசைத்தட்டில் "மரகத வடிவும் செங்கதிர் வேலும்" எனும் பாடலை சண்முகவடிவின் வீணையும், எம். எஸ். சுப்புலட்சுமி பாடலும் இணைந்து வெளிவந்தது. எம். எஸ். சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு இதுதான். மிருதங்க ஜாம்பவான் எனப் புகழப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப்பிள்ளை தொடக்க காலத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார். அவரது மணிவிழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது. 1935ம் ஆண்டில் நடைபெற்ற இந்தக் கச்சேரி, எம். எஸ். சுப்புலட்சுமியின் சங்கீதத் திறனை வெளியுலகம் அறியச் செய்தது. அதே ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரி செய்தார். அது முதற்கொண்டு தென்னிந்தியாவின் எல்லா ஊர்களிலும் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரிகள் நடைபெற்றன.

 அந்தக் காலத்தில் பாடகிகள்தான் நடிகை ஆக முடியும்.. எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலைக் கேட்ட திரைப்படத் தயாரிப்பாளர் மதுரை நாட்டாமை மல்லி.என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் கே. சுப்பிரமணியம் ஆகியோர் அவரை "சேவாசதனம்" படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது. அப்போது சுப்புலட்சுமிக்கு துணையாக வந்தவர் சதாசிவம். 1936- 1937 களில் வெளிவந்த படத்தில் "ஆதரவற்றவர்க்கெல்லாம்" என்ற ஜோன்புரி இராகப்பாடலும், "இஹபரமெனுமிரு" என்ற சிம்மேந்திரமத்திமம் இராகப் பாடலும் இன்னும் பலரின் நினைவில் உள்ளன.

அதனைத் தொடர்ந்து காளிதாசனாரின் சகுந்தலை படத்தில் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார். "மிகக் குதூகலிப்பதும் ஏனோ", "எங்கும் நிறை நாதப்பிரம்மம்", "பிரேமையில் யாவும் மறந்தேனே" ஆகிய பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. இப்படத்தில் துஷ்யந்தனாக நடித்தவர் சங்கீத வித்துவான் ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆவார். எம். எஸ். சுப்புலட்சுமி இப்படத்தில் கோகிலகான இசைவாணி என விளம்பரம் செய்யப்பட்டார். சகுந்தலை படத்தைத் தயாரித்தவர் கல்கி சதாசிவம்..

இசையில் ஈடுபாடு கொண்ட சதாசிவம் 1940ம் ஆண்டு சுப்புலட்சுமியை திருமணம் செய்து கொண்டனர். 1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டினார்கள். ஆனால் ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமி மறுத்து விட்டார். அப்போது எழுத்தாளர் கல்கி ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி இருந்தார். கல்கியும் சதாசிவமும் சேர்ந்து சொந்தப்பத்திரிகை ஆரம்பிக்க விரும்பினர்.. ஆனால் போதிய பணம் இல்லை. ஆதலால் சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அதற்கான சம்பளத்தை வாங்கிக் கொடுத்தால் அந்தப் பணத்தைக் கொண்டு புதுப்பத்திரிகை ஆரம்பிக்கலாம் என சதாசிவம் எம். எஸ். சுப்புலட்சுமியிடம் சொன்னார். அதற்காகவே சாவித்திரி படத்தில் நாரதர் வேடத்தில் சுப்புலட்சுமி நடித்தார். அதற்குக் கொடுக்கப்பட்ட சம்பளத்தொகையில் கல்கி இதழ் தொடங்கப்பட்டது. சாவித்திரி படத்தில் "மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப் பதமே", "மங்களமும்பெறுவாய்" போன்ற சில பாடல்கள் புகழ் பெற்றவை.

மனைவியின் இசையை பக்தி மார்க்கத்துக்குத் திருப்ப சதாசிவம் முடிவு செய்தார். இதையடுத்து பக்த மீரா எனும் திரைப்படம் 1945 இல் வெளியானது.. இந்தப் படத்தில் இடம்பெற்ற "காற்றினிலே வரும் கீதம்", "பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த", "கிரிதர கோபாலா", "எனது உள்ளமே" போன்ற அற்புத பாடல்கள் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பக்த மீரா இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, வட நாட்டவருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இந்தியாவின் கவர்னர்ஜெனரலான மவுண்ட்பேட்டன் பிரபு தம்பதியினர், பிரதமர் ஜவஹர்லால் நேரு, கவியரசு சரோஜினி நாயுடு ஆகியோரின் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு "இசையின் ராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே" எனப் பாராட்டினார்.

இந்தியில் வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே சுப்புலட்சுமிக்கு அங்கீகாரத்தைத் தந்தது. 1944 இல் இசை நிகழ்ச்சிகள் நடத்தி கிட்டிய இரண்டு கோடி ரூபாயை மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிட்டார். மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது.

 பத்மபூசண் (1954) சங்கீத கலாநிதி (1968), இசைப்பேரறிஞர் விருது (1970), மக்சேசே பரிசு (1974) பத்ம விபூசண் (1975), காளிதாச சன்மான் (1988), நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது (1990), பாரத ரத்னா (1998) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

மதுரை சோமு

  தேவரின் தெய்வம் படத்தில் "மருதமலை மாமணியே முருகையா.." பாடலுக்கு இன்றும் உருகிப்போகிறார்கள் தமிழறிந்தவர்கள்.  பல பாடல்கள் பாடி ஒரு பாடகர் அடையும் பெரும் புகழை, அந்த ஒரே பாடலில் பெற்றவர் மதுரை சோமசுந்தரம்.

 அவர் குறித்து இசைக்கலைஞர் ஒருவரிடம் பேசியபோது, "சோமசுந்தரம் குருகுல முறைப்படி இசை பயின்றவர். மதுரை சேஷா பாகவதர், அபிராம சாஸ்திரி, சேத்தூர் சுந்தரேச பட்டர் ஆகியவர்களிடம் ஆரம்பப் பாடங்கள் கற்றார். பின்னர் சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையிடம் சிட்சை. அவரிடம் மட்டுமே பதினான்கு ஆண்டுகள் பயின்றிருக்கிறார்.  இசையை உணர்ச்சிகரமான ஊடகமாகக் கருதிய கலைஞர் அவர். அவருடைய குரலே உணர்ச்சிகரமானது. அதனால் தான் அகில இந்திய வானொலியில் சம்மேளனக் கச்சேரியும் சபா கச்சேரிகளும், இவரைத் தேடி வந்தன."

  ‘சம்பூர்ண ராமாயணம்’ சினிமாவில் ஸி.எஸ்.ஜெ., இரண்டு பாடல்கள் பாடியிருப்பார். அவை இரண்டையும் முதலில் மதுரை சோமுவைப் பாடவைத்துப் பதிவும் செய்திருந்தார்கள். (அந்தப் பாடல் பதிவின் போது அங்கிருந்த சிவாஜி, சோமுவின் பாடலில் மனதைப் பறிகொடுத்து, தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி சோமுவுக்கு அணிவித்தார். இந்தச் செய்தி போட்டோவுடன் அப்போதைய ’பேசும் படம்’ திரைப்பட இதழில் வந்தது.) ஆனால், சினிமாவில் ராவணனாக நடித்திருந்த டி.எஸ்.பகவதியின் குரலுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் மீண்டும் ஸி.எஸ்.ஜே குரலில் பதிவு செய்யப் பட்டது. இந்தத் தகவலை, பின்னாளில் ஒரு கச்சேரியின்போது மதுரை சோமு சொல்லியிருக்கிறார்."

 "அந்த காலத்தில் மதுரையில் இசைக்கலைஞர்களுக்கு பஞ்சமிருக்காது. மேல அனுமந்தராயன் வீதியில் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாவின் வீடு இருந்தது. மேலச்சித்திரை வீதியில் மதுரை சோமு அவர்களின் வீடு இருந்தது. மேல ஆவணி மூல வீதியில் இருந்து வடக்கு கிருஷ்ணன் கோயில் தெரு வழியாகச் சென்றால் வரும் சங்கீத விநாயகர் கோயில் தெருவில் தில்லானா மோகனாம்பாள் புகழ் சேதுராமன் பொன்னுச்சாமி இருவரின் வீடுகளும் உள்ளன" என்றார் அந்த இசைக் கலைஞர்.

மதுரை மணி ஐயர்

 "ஒரு ஊரில் சங்கீத ரசிகர்கள்  எல்லாரையும் ஒருசேர பார்க்கவேண்டும் என்றால் மதுரை மணி கச்சேரி நடக்கும் போது போய்ப்  பாருங்கள் “ என்று கல்கி மதுரை மணி ஐயர் குறித்து சிறப்பித்து எழுதினார். கர்நாடக இசையுலகில் புகழ்பெற்ற ஒரு இசைக்கலைஞர் மணி ஐயர். சுவரம் பாடுவதில் வல்லுநர். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன், காலப்போக்கில் இது சுருங்கி மணி ஆனது. மதுரையில் எம்.எஸ்.ராமசுவாமி ஐயர், சுப்புலட்சுமி ஆகியோருக்குப் 1912 அக்டோபர் 25-ம் தேதி பிறந்தவர். இவருக்கான இசை, தந்தை வழியாக வந்தது எனலாம்., ராமசுவாமி ஐயர், அக்காலத்தில் பிரபலமான இசைக்கலைஞரான வித்துவான் புஷ்பவனம் அவர்களின் சகோதரர்.

  சிறு வயதிலேயே மணி ஐய்யருக்கு கர்நாடக இசையை முறையாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது.  இவரது முதலாவது ஆசிரியர் எட்டயபுரம் ராமச்சந்திர பாகவதருடைய மாணவர் ராகம் பாகவதர். அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு மதுரை தியாகராஜ சங்கீத வித்தியாலயத்தில் மாணவராகச் சேர்ந்தார். மணி ஐயர் ஆங்கிலக் கல்வியில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர். ஆங்கில இலக்கியத்தை விரிவாக வாசித்தவர். தமிழிலக்கியத்தில் தி.ஜானகிராமனுடன் நெருக்கமான உறவுள்ளவராக இருந்தார்.

    "சுவரம் பாடுவதில் நிகரற்று விளங்கிய மதுரை மணி, ராக ஆலாபனைகளை தேவையானபோது விஸ்தாரமாகப் பாடுவார். அந்தந்த கிருதிக்குத் தக்கவாறு சுருக்கமாகவோ, நடுத்தரமாகவோ, விவரித்தோ பாடும் திறன் மணியின் சிறப்பு.. அவரால் பிரபலம் அடைந்த கீர்த்தனைகள் ஏராளம். நளினகாந்தி போன்ற அப்போது அபூர்வமாக இருந்த ராகங்களை சர்வ சாதாரணமாக பாடும் திறன் கொண்டவர். சங்கீத உலகில் இலவசமாகவும் கொடுத்ததை வாங்கிக்கொண்டும் கச்சேரி செய்ததில் மதுரை மணியின் ரெகார்ட் பிறரால் மீற முடியாததாகும்." என்றார் இசைக்கல்லூரி ஆசிரியர் ஒருவர்.

  “மணி அய்யர்வாள்! போன மாசம் கல்யாணத்திலே உங்க கச்சேரி கேட்டேன். நீங்க பாடின காபி (ராகம்)  அருமை!” என்று பாராட்டிய பெரியவரிடம் “கல்யாணம்னா காபி நன்னா இல்லேன்னா ரொம்ப தப்பாயிடுமே ” என்று அவர் அடித்த ஜோக் பிரபலம். இயலாது போன அவரது கடைசி நாட்களில், அவரை கைத் தாங்கலாக தூக்கி வந்து மேடை ஏற்றுவார்கள்.  அந்த நிலையிலும் அவர் அளித்த இசை அமுதம்  நிகரற்றது."  என்கிறார்கள் அவரைத் தெரிந்தவர்கள்.

             ஒருமுறை காஞ்சிப் பெரியவர் கூப்பிட்ட போது, ‘இன்னும் குளிக்கவில்லையே’ என்று சொன்ன மதுரை மணியிடம், “உனக்கு உன் இசைதான் ஆசாரம், அனுஷ்டானம் எல்லாம். குளிக்காட்டா பரவா இல்லே.” என்று சொன்னாராம் பெரியவர்.   கான கலாதரர், சங்கீத கலாநிதி விருது, இசைப்பேரறிஞர் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர் மணி ஐயர்.

டி.ஆர். மகாலிங்கம்

மதுரை சோழவந்தான் தென்கரையில் பிறந்தவர் தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் என்ற டி. ஆர். மகாலிங்கம் 1923-ல் பிறந்தவர். 1950களில் பிரபலமாயிருந்த ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர். ஐந்து வயதில் மேடையேறி நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார். மகாலிங்கத்துக்கு சேஷ அய்யங்கார் மிருதங்கமும் பாட்டும் சொல்லிக் கொடுத்தார். பிரபல பாடகர் எஸ். சி. கிருஷ்ணன் அவரது நெருங்கிய நண்பர். அந்தக் காலத்தில் ஒலிபெருக்கிகள் அதிகமாக இல்லாததால் பாடகர்கள் மிகவும் சத்தமாகப் பாட வேண்டியிருந்தது. அதனால் அக்காலத்துப் பாடகர்கள் எஸ். ஜி. கிட்டப்பா, மகாலிங்கம், எஸ்.சி.கிருஷ்ணன், எம். கே. தியாகராஜ பாகவதர் போன்றோர் தங்கள் குரலை அதற்குத் தகுந்தவாறு பக்குவப்படுத்த வேண்டியிருந்தது.  மகாலிங்கம் ஒரு நாடகத்தில் நடித்து பாடிக்கொண்டிருந்தபோது அதைக்கேட்டு மெய்சிலிர்த்து போன ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் தனது படத்தில் அவரை அறிமுகப்படுத்த தீர்மானித்தார். இப்படி மகாலிங்கத்துக்கு 13வது வயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1937ல் ஏவிஎம் இன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நந்தகுமார் என்ற படத்தில் நடித்தார். எஸ். வி. வெங்கட்ராமன் இசை அமைத்த பாடலை பாடியபடியே அறிகமானார் மகாலிங்கம். அதிக வெற்றி பெறவில்லை. ஆனாலும் இப்படத்தின் பாடல்கள் பிரபலமாயின. அதன் பின்னர் பிரகலாதா, சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார்.திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தார். வள்ளி திருமணம், பவலக்கொடி போன்ற நாடகங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தந்தன. இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1945 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஸ்ரீவள்ளி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார். அவர் நடிகராகவும் பாடகராகவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அப்படம் பெரிதும் காரணமாய் இருந்தது. 55 வாரங்கள் இத்திரைப்படம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.

 டி.எம்.எஸ் 

 எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், எஸ்.எஸ். ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான, தனித் தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்னில் நிலை நிறுத்தும் ஆற்றல் டி.எம். சௌந்திரராஜனுக்கு மட்டுமே உண்டு. இன்றைய முன்னனி திரைப்பட நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கும் பாடியுள்ளார். சிவாஜி. எம்.ஜி.ஆர். மக்கள் மனதில் நிலைத்து நிற்பதற்கு இவரது குரலும் ஒரு காரணமாக இருந்தது என்பதை மறுக்கமுடியாது. டி.எம். சௌந்திரராஜன் தாய்மொழி சௌராஷ்டிரம் என்றாலும் இவரது தமிழ் உச்சரிப்பை யாராவது குறை சொல்லமுடியாது. 

 டி.. எம். எஸ் 1923 மார்ச் 24-ம் ஆண்டு மதுரையில் சௌராட்டிரக் குடும்பத்தில் மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர்.  டி.எம்.எஸ். என்பதில் உள்ள `எஸ்’ என்றால், சௌந்தரராஜன்: `எம்’ என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்: `டி’ என்பது அவரின் குடும்பப் பெயர் `தொகுளுவா’, கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது

 பிரபல வித்துவான் பூச்சி சீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) சினிமாவில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்தார். பட்டினத்தார் படத்தில் பட்டினத்தாராக நடித்தார். மேலும் அருணகிரிநாதர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து, முருகக் கடவுள் மீது இவர் பாடிய “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடலை முருகபக்தர்கள் இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்கள். டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும் `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்....’ `உள்ளம் உருகுதய்யா முருகா’, `சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா’, `மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர். இவர். இசையமைத்துப் பாடிய `கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ இன்றளவிலும் இந்துக்களால் நேசிக்கப்படும் பக்திப் பாடல்.

வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் உள்ளிட்டவற்றை சிறப்பாக வெளியாற்றும் ஆற்றல் பெற்ற இவர் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட சினிமா பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். 

  நீராரும் கடலுடுத்த..’ என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், `ஜன கண மன’ என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன் வராத நிலையில் டி.எம்.எஸ்சும் பி.சுசீலாவும் இணைந்து பாடியளித்தது  அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது. 2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவான “செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும். . நாற்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட குரலோல் 2013 மே 25-ம் தேதி சென்னையில் காலமானார்.

பத்மஸ்ரீ,, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவருக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ச்செம்மல் விருது வழங்கியது. அப்போது அவரை நான் பணியாற்றிய பத்திரிக்கைக்காக பேட்டிக்காணச் சென்றபோது அவரோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது டி.எம்.எஸ். என்பதற்கு அவர் சொன்ன விளக்கம் வித்தியாசமாக இருந்தது. " தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே டி.எம்.ஸ் குறிக்கிறது என்றார். மேலும் தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று சொல்லி சிரித்தார்.

 

ருக்மிணி தேவி

ருக்மிணி தேவி, 1904ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள் தம்பதியருக்கு மகளாக, மதுரையில் பிறந்தார். தந்தை அரசு பொறியாளர் என்பதால் ஊர் ஊராக மாற்றலாகிக் கொண்டிருந்தார். சாஸ்திரி தனது பணி ஒய்வுக்கு பிறகு சென்னையில் உள்ள அடையாரில் தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அங்கிருந்த தியசோஃபிக்கல் சொஸைட்டியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் ருக்மிணி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய மாலினி என்ற நாடகத்தில் நடித்தார். மேலும் ஒரு பாடலும் பாடினார். இதைப் பார்த்த அவர் தந்தை இசை பயில மகளை ஊக்கப்படுத்தினார். ருக்மிணி, கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார்.

ருக்மிணி, தனது சிறுவயதிலேயே, கலைகளில் நாட்டம் கொண்டவராக இருந்தார். ஆனால் 1900களில்  இளம்பெண்கள், பாட்டு மற்றும் நடனம் கற்றுக்கொள்வது சமூகத்தில் ஒரு இழுக்காகக் கருதப்பட்டது. ஏனெனில் பாட்டு மற்றும் நடனம் போன்றவை தேவதாசிகள் என்று அழைக்கப்பட்ட சமூகத்தினரால் மட்டுமே செய்யபட வேண்டியது என்ற எண்ணம் பரவியிருந்தது.

   1920ஆம் ஆண்டில், ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பவரை இங்கிலாந்தில் இருந்து கல்வி மற்றும் இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காக, அன்னி பெஸண்ட் தியசோஃபிக்கல் சொஸைட்டிக்கு அழைத்தார். அன்னி பெஸண்ட் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், ருக்மிணியும் கலந்து கொண்டனர். இருவரும் ஈர்க்கப்பட்டு, அன்னி பெஸண்ட்டின் அனுமதியோடு, ருக்மிணியின் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டனர்.

 ருக்மிணி, ஜார்ஜுடன் ஐரோப்பாவிற்கு பயணம் சென்றார். அங்கு இசை, சிற்பம், ஆப்பரா, பாலே முதலிய பல கலைகளுக்கு அறிமுகமானார். ரஷ்ய நாட்டு பாலே கலைஞரான அன்னா பாவ்லோவாவிடமும், க்ளியோ நார்டி என்பவரிடமும், பாலே நடனம் கற்றுக்கொண்டார். பாவ்லோவா, இந்திய பாரம்பரிய நடனத்தினையும் கற்குமாறு ருக்மிணியைக் கேட்டுக்கொண்டார். அதுவரை சதிர் என்ற இந்திய பாரம்பரிய நடனத்தினை ருக்மிணி கண்டதில்லை.

 1933ஆம் ஆண்டில், கிருஷ்ண அய்யர், சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமியில், சதிர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதைக் காண ருக்மிணியை அழைத்திருந்தார். அக்கலையினை கற்க வேண்டும் என்று தீர்மானித்தார். முதலில் மைலாப்பூர் கௌரி அம்மாவிடமும், பிறகு பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் நடனம் பயின்றார் நாட்டியத்தில் நன்றாக பயிற்சி பெற்று, 1935ஆம் ஆண்டு, தியசோஃபிக்கல் சொஸைட்டியின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது ருக்மணியின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது.

சதிர் என்ற பரதநாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டிய ஒன்று என்பதில் திண்ணமாக இருந்தார், ருக்மிணி. இதற்காக, கலாக்ஷேத்ரா என்ற கலைப் பள்ளியினை1936 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ருக்மிணி தேவி அருண்டேல் மற்றும் அவரது கணவர் ஜார்ஜ் அருண்டேல் ஆகியோரினால் சென்னையில் அடையாறில் பிரம்மஞான சபையின் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கலாசேத்திராவின் முன்னேற்றத்துக்கு அன்னி பெசன்ட் அம்மையார், டாக்டர் ஜோர்ஜ் அருண்டேல், டாக்டர் ஜேம்ஸ் கசின்ஸ், டாக்டர் சி. பி. இராமசுவாமி ஐயர், ஸ்ரீசுப்பிரமணிய சாஸ்திரி போன்ற பெரியோர் உறுதுணையாக இருந்தனர்.

 இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்த போது, விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றினார். 1977ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ருக்மிணியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார். 1986ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 24ஆம் தேதி, ருக்மிணி இறந்தார். அதன் பிறகு, அவர் துவக்கிவைத்த கலாக்ஷேத்ரா தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக பாராளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது. பத்மபூஷண் விருது, காளிதாஸ் சம்மன் விருது, சங்கீத நாடக அகாதெமி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.

(தொடரும்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com