கலையும் ஓவியத்தின் காட்சிப் படிமங்கள்

இதமாய் பெய்யும் மழை 4

" ஆற்றோர கிராமம் " குறு நாவல் தொகுப்பு " சிவக்குமார் முத்தையா... "

" ஆருரின் ஆழித்தேர் கண்டிருக்கிறீரா கவிஞரே .. காணவில்லையெனில் வாரும் வந்து பாரும்.." - கவிஞர் கம்பீரனின் அன்புகட்டளைக்கேற்ப 'விடுதலைக்குயில்கள்' நடத்தவுள்ள படைத்தவர்களுக்கும் படித்தவர்களுக்குமான உரையாடல் நிகழ்வில் -கலந்து கொள்ளும் வகையில் பண்பலை கேட்டபடி பேருந்தில் புறப்பட்டு விழிகள் எரிய விடிந்து பார்த்தால் அலங்காரத் தேர் தயாராக நிற்கும் ஆரூர்.!

சிவக்குமார் முத்தையாவின் ஆற்றோர கிராமம் - குறு நாவல் தொகுப்பை பற்றி பேச கட்டளையிடப்பட்டவன் நான் !ஆற்றோர நகரமான - திருவாரூரில் இருந்து இலக்கியம் படைக்கும் சிலரில் சிவக்குமார் முத்தைய்யாவும் உண்டு.சிறுகதை , குறு நாவல் எனக் கீழ்த்தஞ்சை வட்டார மக்களின் வாழ்வை மான்மொழியோடு பதிவு செய்யும் இளைஞர் .
சிறுகதை வெளியிடவே துணிச்சல் தேவைபடற காலத்தில் குறு நாவல் தொகுப்பு வெளியிடும் ' கொழுப்பு கூடிய ' மனுசனை பார்க்க ஆவலாதி ஆவல்.!என்னதான் தொலைப்பேசியில் கதைச்சாலும் முகம் பார்த்து பேசுரது போலாகுமா...!நகரெங்கும் குவியல் குவியலாக ஜனங்கள் ! வருசா வருசம் பார்த்தும் தேர் பார்க்க, ஊர்கூடி தேரிழுக்க உற்சாகமாய் புறப்பட்ட ஜனங்கள் ! அலங்காரம் , ஆனந்தம் , கும்மாளமென கும்பலாக புறப்பட்டு வலம் வரும் உறவுகள் ... நட்புகள் ... தேர் புறப்படுவதற்குள் ' ஆற்றோரகிராமம் ' நூலை ஒரு வட்டமடித்து விடுவோமோ...! பிரதர்!
இலக்கிய வகைப்பாடுகள் கதைகளை , குறு நாவல்களை , புதினங்களை , கவிதைகளை புனைவுகள் கற்பனைகள் என வகைப்படுத்தினாலும் , வாழ்வின் சாரமும் , மண்ணின் மொழியும், மனித உணர்வுகளும் ,சரியான சதவீதத்தில் இணையும் போது கலையாக பரிணமிக்கிறது.என்னதான் கற்பனை கலந்தாலும் நிஜமென முகங்காட்டி வாசனைத் தன்னுள் இருக்கிறது. படைப்பாளியின் கைவண்ணமும் அதற்கு முக்கிய காரணமாகும்.
சிவக்குமார் முத்தைய்யாவின் குறுநாவல் தொகுப்பான ' ஆற்றோர கிராமம் ' நூலும் தன்னளவில் தஞ்சை (கீழத்தஞ்சை) வட்டார மனிதர்களையும் , மன்மொழியையும் கொண்டு உருவாக்கபட்டுள்ளது.
இந்த நூலில் 4 - குறு நாவல்கள் உள்ளன

1 . ஓர் குதிரும் ரெண்டு கோட்டோவியங்களும் .
2. கதிர் காய்ச்சல்.
3. ஆற்றோர கிராமம்.
4. மூன்று விஜயாக்கள்.
குறு நாவல் என்றதும் ஞாபகம் வருதே .. ஞாபகம் வருதே.! கலைமகள் , தீபம் காட்டிய வழியில் கனையாழி குறுநாவல் போட்டிகளால் வளர்க்க ,குறு நாவல்ச் சுடரை கையிலேந்தி ஓட்டத்தை தொடர்கிறது யுகமாயினி ! பெரும்பாலான இதழ்கள் ஏன் குறு நாவல் எனும் அற்புதமான வடிவத்தை கை கழுவியது ஏனென்று இலக்கியத் தாயிடம் தான் கேட்க வேண்டும்.

குறு நாவல் நான்கும் கிராமியப் பின்புலம் சார்ந்தவை .. கீழத்தஞ்சையின் குறிப்பாக திருவாரூர் நாகை வட்டார சொல்லாட்சியும் மண்வாசமும் ததும்புபவை.
* ஓர் குதிரும் ரெண்டு கோட்டோவியங்களும்.
தொடர்பில்லாத மூன்று சிறு கதைகளை குறு நாவலாக தொகுத்திருக்கும் உத்தியின் மையச்சரடு - ஏமாற்றுவதும் ஏமாற்றபடுவதும், - மூன்று கதைகளிலும் கதை மாந்தர்களில் சிலர் ஏமாற்ற சிலர் ஏமாறுகிறார்கள்,ஆனால் ஏமாற்றத்தின் வலியையும் , வடுவையும் வாசகனுக்கு பாய்ச்சும் அல்லது காத்தும் கலையில் சிறப்பான வெற்றி பெறுகிறார் சிவக்குமார் முத்தய்யா...
தானியங்களை சேமிக்கும் குதிர் இக்கதையில் ஓர் குறியீடாகி முருகேஷன் காதலின் களஞ்சியமாகத் திகழ்கிறது.முறைப்பெண் மீனாட்சிக்கு வசதியான திருமண வாழ்வாள் குதிரும் , காதலும் உடைந்து நொறுங்குகிற அவலம் திரைபடக் கலைஞனின் கலாபூர்வ ரசனையோடு உருவாகி வாசகனை கவ்விக் கொள்ளும் என்பதில் அய்யமில்லை.

கதிர்காய்ச்சல்.
ஆத்மார்த்த அன்பும் பாசமும் கலந்த அப்பா - மகன் உறவு கதையின் அடித்தளமாகிறது.இணைந்து - செழித்து , காலத்தின் கோலத்தால் பிரிந்து சிதைந்து போனதுமான தாம்பத்யம்.
மனைவியின் எல்லைதாண்டல்,அதை சகிக்கவும் எதிர்கொள்ளவும் இயலாத நிலையில் தற்கொலையில் சரண்புகும் திராணியற்ற கணவன்.!



" உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்சகிளி பச்சமல பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க " என்ற புலமை பித்தனின் வரிகளின் கதை வடிவமிது.உறவுகள் பொருள் சார்ந்ததா .. மனம் சார்ந்ததா... உடல் சார்ந்ததா.. என்ற கேள்விகளை வாசகனுக்கு எழுப்பும் நுட்ப படைப்பிது.

ஆற்றோர கிராமம்...

உழைத்தால் தான் வாழ்வு .. என்கிற சூழலில் எல்லைதாண்டிய உறவால் , ஓர் ஏதுமறியாக் குடும்பம் காவல் துறையின் கைப்பிடிக்குள் சிக்கி தவிப்பது ஒருபுறமெனில் , தப்பித்து போன தம்பியும் , காமமெனும் மாயமோகினியிடம் சரணடையும் முரணை அழகியலோடு தருணங்களின் தரிசனமாக தந்துள்ளார் சிவக்குமார்.
மூன்று விஜயாக்கள்.

யுகமாயினி -யில் வெளிவந்த போதே பலரது பாராட்டுகளையும் பெற்ற வடிவ நேர்த்தி கொண்ட குறு நாவலிது.வெவ்வேறு பகுதிகள்... வேறு வேறு காலங்கள்...வேறு வேறு நபர்கள்... விஜயா என்ற பொது பெயரால் மூன்று கதைகளை இணைப்பது ஓர் உத்தி ! வெற்றி பெற்ற உத்தி...
பொதுவானப் பெயர்களுக்கு பின்னலிருக்கிற வாழ்க்கையின் குறுக்கு வெட்டு தோற்றமே இக்கதைகள்.
ஆற்றோர கிராமம் - நூலின் கதைகளுல் இழையோடுகிற அம்சம் காமம் ! காமம் இக்கதைகளில் மையச் சரடாகி வாழ்வெனும் பாய்மரக் கப்பலை வழி நடத்தும் காற்றாகிறது.சில நேரம் அமைதியான பயணம்.! சில நேரம் ஆக்ரோஷப்புயலிலே கப்பலே கவிழ்ந்து போகிற சூழலும் ஏற்படுகிறது.காமத்தின் பக்கவிளைவுகளை போதனைகள் ஏதுமின்றி தேர்ந்த புகைப்படக் காரனின் நேர்த்தியோடு கலாபூர்வமாக கதை சொல்லி இருப்பது சிவகுமாரின் வெற்றி.!
கதைகளின் பெரும்பாலான பெண் பாத்திரங்கள் வெகு சீக்கிரம் முடிவெடுக்கும் திறனுள்ளவர்களாகவும் , ஆண் பாத்திரங்களோ பிரச்சனைகளை எதிர் கொள்வதில் சிரமப்படுபவர்களாகவும் இருப்பது உளவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது.தெளிவான கதை சொல்லலும் , கிராமிய மொழியும், நவீனம் என்ற பெயரால் வாசகனை வறுத்தெடுக்கும் தண்டனை தராத எளிய சுவாரஸ்ய நடையும் , மிகச் சிறப்பான வடிவமைப்பும் - தொகுப்பில் சிறப்பெனில். எரிச்சலூட்டும் எழுத்து பிழைகளும், உலகமயமாக்கலின் தாக்கம் குக்கிராமங்களிலும் எதிரொலிக்கும் நேரத்தில் காமம் மட்டுமே கதை தளங்களா? என்ற கேள்வியும் நெருடல்கள் . கீழத்தஞ்சை பகுதி சாதியத் தாக்குதலுக்கும், நிலபிரிவுத்துவ அதிகாரங்களான சாட்டையடிக்கும் , சாணிப்பால் தண்டனைக்கும் பேர்போன சூழலில் வெறும் வயிற்றுப்பாடும், உடல் தேவைமட்டுமே கதை மாந்தர்களுக்கான பிரச்சனைகளா...?
தேர்பார்க்க வந்த திருவாரூர் வாசகர்கள் மாலையில் பெய்த பெரிய மழையால் முடங்கி போக கேட்பவரின்று குறுகி போனது இலக்கிய கூட்டம்.!


தேருக்குதிரளும்ஊர்... நல்லநாளுக்குஎப்போதுதிரளும்...?

தியாகராசருக்கும்கமலாம்பிகைக்குமாவதுதெரியுமாஇந்தசூட்சமம்.

மதிப்புரை - அன்பாதவன்

அன்பாதவனின்சொந்தஊர்விழுப்புரம். கவிதை, சிறுகதை ,கட்டுரைஎன்றுபரந்துபட்டுஇயங்கும்அன்பாதவனின்எழுத்Ðìகளைசிறுபத்திரிக்கைகளில்அடிக்கடிபார்க்கமுடியும்.அன்பாதவன்மதியழகன்சுப்பையாவோடுஇணைந்து 'அணி' என்கிறகவிதைக்கானசிற்றிதழைநடத்துகிறார்.

திங்கள்தோறும்இரவு - அன்பாதவனின்இதமாய்பெய்யும்மழைஅந்திமழையில்வெளிவரும்....

அன்பாதவனின் ' இதமாய்பெய்யும்மழை ' பற்றியஉங்கள்கருத்துக்களை
content(at)andhimazhai.com என்றமுகவரிக்குஅனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com