கவிதை அனேக உள்சலனங்கள் கொண்டது

கவிதையின் கால் தடங்கள் - 38

கவிதை அனேக உள்சலனங்கள் கொண்டது. ஏற்ற இறக்கங்கள், அழுத்தம், அழுத்தமின்மை போன்ற பல குணங்கள் கொண்டது. மையமும் மையத்திற்கு அழுத்தம் தரும் பல வார்த்தைகளும் அதில் அருமையாக இடம் பெற்றிருக்கக் கூடும்.

# சுந்தர ராமசாமி

 அனார் கவிதைகள்

அனார் கவிதைகளில் சில:

01

ஓவியம்

ஒவ்வொரு

வர்ணமாய்ப் பிரித்து

தரையில்

கரைத்து சிந்தும்

ஓவியம் இது

இதன் இதயத்திலரும்பிய 

கவிதைகளும்

பாவப்பட்டவைதான்

வெறும் ஓவியத்தின்

வாழ்வில்

என்ன அர்த்தமிருக்க முடியும்

அசைய முடியாக் கைகளும்

நகர முடியாக் கால்களும்

பேச முடியா உதடுகளும்

சந்தேகமே இல்லை

வாயில்லா ஜீவன் 

ஆடாதசையாது

சுவரில் மாட்டப்பட்டிருக்கிறது

பல்லிகள் 

எச்சில் படுத்துவதையும்

எதிர்க்காமல்

வருகிறவர்களுக்கென்ன 

வரைந்தவனை

வாழ்த்திவிட்டுப் போகிறார்கள்

சட்டங்களால்

சிலுவையறையப்பட்டிருக்கும்

ஓவியத்தைப் பார்த்து

உண்மை தெரியாதவர்கள்

உயிரோவியம்

என்றார்கள்.

 02

சிசு வதை 

உடலை வளர்த்தாய்

மனசை வளர விடாமல்

சொல்லித் தந்தாய்

கேள்வி கேட்க முடியாமல்

வயதுக்கு வயது அறிவூட்டினாய்

செயற்பட வழியில்லாமல்

உயிரைத் தந்து

உணர்ச்சிகளை பறித்தாய்

சாட்சிகள் எத்தனை

சரியாய் இருப்பினும்

மனிப்பையன்றி 

மரண தண்டனை தான் விதிக்கிறாய்

எனை ஒத்தவர்கள்

குளிரோடையில் படகு விட்டுக்

குதூகலிக்கிறார்கள் 

அனலோடைக்குள்ளகப்பட்ட 

என் ஓடத்துக்கு 

துடுப்பாவது நீ தரவில்லை

வாரிசுகளை வரவேற்க

அவர்கள் கைகளில் 

பூங்கொத்துகள் 

உன் கரத்தில் மட்டும் ஆயுதம்

03

பெண்பலி

அது போர்க்களம்

வசதியான பரிசோதனைக் கூடம்

வற்றாத களஞ்சியம்

நிரந்தரச் சிறைச்சாலை

அது பலிபீடம்

அது பெண் உடல்

உள்ளக் குமுறல்

உயிர்த் துடிப்பு

இருபாலாருக்கும் ஒரே விதமானது

எனினும்

பெண்ணுடையது என்பதனாலேயே 

எந்த மரியாதையும் இருப்பதில்லை அதற்கு

என் முன்தான் நிகழ்கின்றது

என் மீதான கொலை.

04

அறைக்கு வெளியே அலையும் உறக்கம்

துணிகளை மடித்து

அலமாரியில் அடுக்கினேன்

அறை விளக்குகளைக் குறைத்து வைத்தேன்

விரிப்பை நேர்த்தியாக்கி

இரண்டு தலையணைகளை

அருகருகே இணைத்தேன்

தளர்வான இரவு ஆடையை

அணிந்து கொண்டேன்

விசமேறிய இரவின் பானம்

என் தாகத்தின் முன் உள்ளது

ருசிகள் ஊறிய கனவுகளுடன்

என் உறக்கம்

அறைக்கு வெளியே அலைகிறது.

05

எனக்குக் கவிதை முகம்

எல்லா மயக்கங்களுடனும்

மெல்ல

அதிர்கிறது இசை

படிக்கட்டுகளில் வழிந்தோடும் நீர்ச் சொரியலாய்

வறண்ட சுண்ணாம்புப்

பாதைகளின் மேற்கிளம்பும் 

வெண்புழுதியில் மணக்கிறது

அவன் குதிரை குளம்பொலி 

சாம்ராஜ்யங்களின் 

அசைக்க முடியாக் கற்றூண்களை 

பிடுங்கி ஒரு கையிலும்

போர்களை வெற்றி கொண்ட

வாள் மறு கையிலுமாய்

அதோ வருகிறான் மாவீரன்

இரு புறமும் பசுமரங்கள் மூடியிருக்க

மூடுபனி தழுவி நிற்கும்

சிறுத்து ஒடுங்கிய பாதையில்

என் கனவின் உள் புகுந்து

தாவுகின்றன இரண்டு முயல்கள்

விடிந்தும் விடியாத

இக் காலைக் குளிரில் 

முகை வெடித்த பூக்களின் காதுகளுக்குள் 

கோள் மூட்டுகின்றது    

பெயர் தெரியா ஒரு காட்டுப் பூச்சி 

அதனாலென்ன

எனக்குத் தெரியும்

அவன் வாள் உறைக்குள்

கனவை நிரப்புவது எப்படியென்று

எனக்குத் தெரியும்

மகத்துவம் மிகுந்த இசை

தீர்வதேயில்லை 

நான் பாடல்

எனக்குக் கவிதை முகம்.    

06

வெளியேற்றம்

என்னுடைய வரிகளில் 

என்னைத் தந்து முடிவதும் இல்லை

எடுக்கவும் முடிவதில்லை

சொற்களின் சுழற்சித் தீவிரத்தில்

நினைவு ரயில் விரைந்து கடக்கையில்

பாய்கின்றது

என்னை வெளிப்படுத்தக்கூடிய

ஒரே ஒரு வார்த்தை

கருநொச்சிப்  பூ...

கிளி...

நத்தை...குறித்த

வார்த்தைத்தன்மைகள்

மிகுதியான இறுக்கத்துடன்

விபத்தின் உருக்குலைவில் கதறும் பிராணி

இல்லையேல்

தற்கொலை பற்றியே யோசிக்கின்ற பைத்தியம்

மழையில் நனைவதை விட்டுவிட்டேன்

கஜலின் மிருதுவான ஆலாபனையொன்றுடன் 

இழைந்து 

கிடந்ததையும்

கொதிநிலை விதிக்கப்பட்டிருக்கும் 

எரிமலை நெருப்பு உங்கள் முன்

மெழுகு வர்த்திகளில் ஏற்றப்பட்டும்

ஊதுபத்தியில் புகையவிடப்பட்டும்

அவமானத்துக்குள்ளாவதன் சித்திரவதை நான்

இதே கவிதையின்

ஏதோ வரியில்

எங்கோ ஒரு சொல்லில்

எல்லாவற்றிலும் எனது வெளியேற்றம் இருக்கலாம்

... .... ....

இல்லாமலும் இருக்கலாம்.      

07

பாணன்

ஒரு முற்றிய முழுமரத்தின் கீழிருந்து 

தளர்ந்துபோன உடலுடையவன்

இசைக்கருவியை இசைத்துக்கொண்டிருந்தான் 

சுழல் காற்றில் புழுதியும் 

சருகுகளும் மேற்கிளம்பிப் பறந்தன

பிச்சைவிரிப்பில் வழிப்போக்கர்களின்

சில்லறை நாணயங்கள் 

விழுந்து சிதறியிருந்தன

எதற்காகவோ உருக்கமாய்ப் பீறிட்டு 

மனதைப் பிசையும் அவனது இசையில்

நிராசைகள் மிகுந்திருந்ததாக உணர்ந்தேன்

வெயில் திரும்பிச் செல்லும் பாதையில் 

அலைகளை ஏவிக் கொண்டிருப்பவனாய் 

அதிர்வுகளை சிதறுகிறான்

கசங்கிய போர்வை நுனி எழும்பி

ஓவியமென நெளிகின்றது

அந்தரத்தில் உதறிப்போகிற நிம்மதியற்ற ஆர்ப்பரிப்பை

முகில்களிடம் அள்ளி வழங்கிக் கொண்டிருந்தது

பானானில் இசைக்கருவி

எதிலும் கவனமற்றவனாக நிரம்புவதும் வடிவதுமான

அவனது இசையின் தவத்தினுள்

நுழைந்து கொள்ள முனைபவனாக மூர்க்கமாகிறான் 

வெம்மையான தெருக்களில் நடந்து களைத்த 

உயிரின் ஊடுருவும் ஓலம்

விரைவாக சூழலில் இருட்டை கவியச் செய்கிறது

அவன் பொருட்டு இசையில் உருக்கப்பட்ட 

மதியப் பொழுதின் பிரார்த்தனைகளை

ஏழு வானங்களுக்கும் கொண்டுசெல்கிறது காற்று

அசையாமலிருந்தேன் 

அவன் சென்றதன் பிறகும்

வெகுநேரமாகியும்... 

கவிதைத் தொகுப்புகள்:

1.  ஓவியம் வரையாத தூரிகை, மூன்றாவது மனிதன், இலங்கை வெளியீடு (2004)

2.  எனக்குக் கவிதை முகம், காலச்சுவடு வெளியீடு (2007)

3.  உடல் பச்சை வானம், காலச்சுவடு வெளியீடு (2009)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com