கவிதை ஆழமான அனுபவ அலைகளை எழுப்பக் கூடியது”

கவிதையின் கால் தடங்கள் - 37

“துணுக்கு கவிதை அல்ல. அரசியல் சுலோகங்கள், கருத்துப் பிண்டங்கள் கவிதைகள் அல்ல. கவிதை ஆழமான அனுபவ அலைகளை எழுப்பக் கூடியது. சொற்ச்சிக்கனம் கொண்டது. தொனி கொண்டது. நுட்பமும் கூர்மையும் கூடி மொழிக்கும் புதிய பரிமாணங்களை அளிக்கக் கூடியது.”

# சுந்தர ராமசாமி 

ரவி உதயன் கவிதைகள்

ரவி உதயன் கவிதைகளில் சில:

01

பிரிதுயர்

நேற்று இறந்துவிட்டான் 

இன்று பண்டிகை

நாளை இறந்திருக்கலாம்.

 02

 விடுதி அறையிரவு

நான்கு பக்கங்களிலும்

புணர்வை எதிர்நோக்கி

விழித்திருக்கும்

ஓட்டைகள்.

பாத்ரூம் கண்ணாடியில்

பெண்கள் விட்டுப் போன

ஸ்டிக்கர்ப் பொட்டுகள்.

இரண்டு படுக்கையுடன்

கூடிய அறையில்

நான் மட்டும் தனியாய்

ஒரு படுக்கையில்.

இன்னொரு படுக்கையில்

படுத்திருந்தது

என் காமம்.

03

இளைப்பாறுதல் 

எரியூட்டப்பட்ட மரச் சித்திரத்திலிருந்து 

வெப்பந் தாங்காது 

சிறகசைத்து வெளிப்பறக்கிற 

பறவைகளுக்கு 

அடுத்த குடியிருப்பை

எம்மரத்தில் வரைவேன்?

04

காலம் அகாலம்

சுக்கு நூறாய் உடைந்து

தெறித்த பிறகுதான் தெரிகிறது

கவனச் சிதறலின்

தன்மைகள் குறித்து.

இருந்தும் 

கை நழுவிக் கொண்டிருந்தானிருக்கிறது 

கண்ணாடிகளும்

காலமும்.

05

காதல்

கடைசியாக

அகப்பட்டுவிட்டது

கண்ணாம்பூச்சி ஆட்டத்தில்

ஒரு பட்டாம்பூச்சி

06

விசனம் 

பயணிகளில்லாத 

பேருந்திலேறி

பிச்சை கேட்கிற

குருடனின் தட்டில்

விழுமா சில்லறைகள்?

07

பேசும் அறை 

நாமில்லாத வேளைகளில்

நம் அந்தரங்கம் குறித்து

பிறருடன் பேசி விடுமோ

என்கிற பயத்தில்

அறையின் வாயடைத்துப் பூட்டி

வெளிச் செல்வேன்.

08

கவிதை முயல்கையில்

உலர்ந்த மரத்தில் பசுங்கொடி

பற்றிக் கொள்கிறதை

ஒன்றடுத்து ஒன்றாய் விழுகிற

கோடை மழைத்துளிகளை  

இருப்பற்று அலைந்து தவிக்கிற

காற்றை

பதுங்கி வாழ்ந்த பாம்பொன்று

இரைதேடி நெளிவதை

எங்கிருந்தோ மிதந்து வருகிற

ஒரு கிளிச் சிறகை

அணையாத மலை நெருப்புப் புகையை

எடுக்கச் சொல்லி நடுஇரவில்

கதறுகிற கைக்குழந்தையின் குரலை

ஒரு கவிதை முயல்கையில்

காண கேட்க நேர்ந்து விடுகிறது

பின்

எழுத வேறொன்றுமிருப்பதில்லையெனக்கு.

09

நாம் காத்திருக்கிறோம்

நாம் காத்திருக்கிறோம்.

திறந்தவுடன் மூடிக்கொள்ளும்

கதவிற்குப் பின்னே

அமர்ந்திருப்பவரிடம்

ஓர் ஆசீர்வாதம்.

கூச்சல் மனதை

ஆற்றுப்படுத்த ஒரு சொல்.

அல்லது

நம் மன்றாட்டுக்குச்

சிறுநேர செவி மடுப்பு.

மேலும்

மென்மையான

தேநீர்க்குவளைச் சூடுபோன்ற

சிற்றணைப்பு.

அல்லது

இது மனநோய் மருத்துவமனையல்ல

என்கிற

ஒரு மறுப்பின் குரல்

நாம் காத்திருக்கிறோம்.

10

பறவையின் பாடல்

நான் ஒரு பாடலை

எழுதிக் கொண்டிருந்தேன்

நீ ஒரு பறவையை

வரைந்து கொண்டிருந்தாய்

இப்பொழுது

உன் பறவையின் அலகில்

என் பாடலின் வரிகள்.

கவிதைத் தொகுப்புகள்:

1. “பழகிக் கிடந்த நதி” தேடல் வெளியீடு (2002)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com