கவிதை என்பது புதுமையின் முன்னோடி

கவிதையின் கால் தடங்கள் - 35

“கவிதை என்பது புதுமையின் முன்னோடி. 

சகல கலைகளுக்கும் உந்து சக்தியாக இருக்கும் முன்னோடி.”

# சுந்தர ராமசாமி 

“சமூகம், அரசியல் மற்றும் இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் உடையவை, இல்லாதவை என நவீன கவிதைகளைப் பிரித்தால் இரண்டாம் வகையில் சல்மாவின் கவிதைகள் அடங்கும். துணிச்சலும் நளினமும் சல்மாவின் கவிதைகளில் தெரிகின்றன. ” 

# ஞானக்கூத்தன்

சல்மா கவிதைகள்

சல்மா கவிதைகளில் சில:

 01

குழந்தைகள் உலகத்தில்

நுழைந்துகொள்வது

வேறெதைக் காட்டிலும்

அற்புதமானதாக இருக்கிறது.

வணக்கங்களோ

பாவனைகளோ பவ்யங்களோ

வேண்டியிராத

அவர்களுடனான சந்திப்புகள்

ஒரே அசௌகர்யம்

ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில்

அவர்கள் வெளியேற்றி

விடுகிறார்கள் என்னை

என் அனுமதியில்லாமலேயே.

02

புறக்கணிப்பு

கூடு தேடிச் செல்லும்

பறவைக் கூட்டம்

பொருட்படுத்துவதேயில்லை 

எனது வீட்டு தோட்டத்தின்

ஒற்றை மரத்தினை.

03

இந்த வாழ்வை

இன்றைக்கில்லையெனில் 

நாளை

நாளையில்லையெனில் 

இன்னுமொரு நாள்

இப்படித்தான் தெரியும்

வாழ்வை

நினைவு தெரிந்த நாளிலிருந்து.

04

இயலாமை 

இந்தக் கம்பினை 

பற்றிக்கொள்ள நீளும் கொடியின்

சமிக்ஜைகள் 

நான் கை தொட்டு

வழி காட்ட முயலும் வேளையில்

கை பற்றிப் படர்ந்துவிடும் எனில்

இடையறாத அந்த உயிரின் வேட்கையை

தவிப்பை

உதறிவிட்டுப் போவேன்.

05

தாம்பத்யம் 

என்னைத் தழுவிச் செல்லும்

தென்றல் அறியும்

எனது மென்மை 

என்னைச் சிதைத்து அழிக்கும்

வாழ்க்கை அறியும்

எனது உறுதி

நான் அணைத்து வளர்க்கும்

குழந்தை அறியும்

எனது நேசம்

என்றாவது வரும்

மழை அறியும்

எனக்குள் இருக்கும் கவிதை

பனிபடர்ந்த

புற்கள் அறியும்

எனது காதல்

எனது கவிதைகள் அறியும்

எனது பூகம்பங்கள் அறியும்

என்னை

எப்போதும்

அறிந்ததில்லை நீ

எனக்கு நேர்ந்த

எதையுமே.

06

உயிர்ப்பின் வெம்மை

முன் எப்போதோ 

தன் பறத்தலிலிருந்து

நிலம் மீண்ட மயிலறகு

ஒளிந்திருக்கிறது

என் குழந்தையின் புத்தக இடைவெளிக்குள்

தன் உயிர்ப்பின் வெம்மையோடு

அவனது கனவுகளை அடைகாத்தபடி.

07

நம் வீடு

ஆண்டுகளாய்த் திட்டமிட்டு

நம் கனவுகள் குழைத்துப் பூசிச் செதுக்கினோம் 

நீர் தெளித்து உரமேற்றிய சுவர்களுக்கு 

நம் பருவங்களின் நிறங்களையே தந்திருந்தோம்

சுற்றிலும் நட்டுவைத்தோம்

குட்டிச் செடிகளை வரவேற்பறையில் கொட்டிப்

பரப்பக் காத்திருக்கின்றன

குழந்தைகளின் குரல்கள்

அஸ்திவாரத்திலேயே தொடங்கிய

பிரார்த்தனைகள் 

முடிவுறுவதேயில்லை 

இத்தனைக்குப் பிறகும்

ஏன் ஒரு வனமாக மாறவில்லை

நம் வீடு.

08

பயங்கள்

இன்று மறுபடியும்

ஒருமுறை

என்னைக் கண்ணாடியில் பார்க்கிறேன்

பிறர் பயப்படும்படியாகக்

குறிப்பாக நீ பயம் கொள்ளும்படியாக இல்லை

என் தோற்றம்

என்னைத் தொலைபேசியில் அழைத்த

என் சிநேகிதியின் குரலில்

உன்னை இவ்வளவு கலவரப்படுத்தும்படி

ஒன்றுமேயில்லை

என்னிடம்

ஆயுதங்கலில்லையெனினும் 

நிச்சயங்களுடனில்லை நீ

நான் தூங்கும்போதும் 

அதைரியத்துடன் விழித்திருக்கிறாய்

என் சிறு அசைவுகளில் பதறி

உருகிவிடுகின்றன

உன் எக்குப் பிம்பங்கள்

இன்றும் 

என்னை வீழ்த்திக்கொண்டிருப்பது

உன் வலிமையில்லை

உன் பயங்கள்.

கவிதைத் தொகுப்புகள்:

1. ”ஒரு மாலையும் இன்னொரு மாலையும்” தொகுப்பு, காலச்சுவடு வெளியீடு (2000)

2. “பச்சைத் தேவதை” தொகுப்பு, காலச்சுவடு வெளியீடு (2003)  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com