கவிதை என்பது மெளனமாக நிகழ்வது

கவிதையின் கால் தடங்கள் - 34

“நவீன கவிதை என்று வருகையில் இலக்குகளை, கூற்றுகளை, எய்தல்களை நான் பொருட்படுத்துவதில்லை. எனது கவிஞன் என்னிடம் எதையும் கூறுவதில்லை, வெளிப்படுத்துவதுமில்லை. அவன் மெளனமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறான். தெரிந்ததும் தெரியாததுமான செடிகளும் உயிரினங்களும் முடிவின்றி தங்களை நிகழ்த்தும் ஒரு அடர்ந்த காடு போலிருக்கும் நான் விரும்பும் கவிஞனின் அகம். ஒரு தொகுப்பு பல சமயம் ஒரு கவிஞனின் அகத்தின் தோராயமான பிரதிபலிப்பாகும். அமிர்தம் சூர்யாவின் இத்தொகுப்பு நான் சமீபத்தில் வாசித்த மிக முக்கியமான தொகுப்புகளில் ஒன்று.”

# ஜெயமோகன்  (முன்னுரையில்)   

அமிர்தம் சூர்யா கவிதைகள் 

அமிர்தம் சூர்யா கவிதைகளில் சில:

01

தேநீர்

என்னைத் தேடிக் கொண்டிருந்த நீ

ஆயுதமற்ற என் பதுங்குக் குழியில்

கால் இடறி வீழ்ந்தபோது 

ஆயுதத்தைத் தவற விட்டதையும்

நிராயுத பாணியான நாம் இப்போது 

தேநீர் பருகிக் கொண்டிருப்பதையும்

நமது அதிகார வாதிகளுக்கு

தெரிவித்துவிட வேண்டும் பாவம்

ஆசுவாசமாய் தேநீர் குடித்து

நீண்டநாள் ஆனது அவர்களுக்கும்.

 02

வீட்டைவிட்டு விரட்டப்பட்ட

தனது அரவாணி சிற்றப்பாவை 

சின்னம்மா என்று ஒரு திருவிழாவில்

அறிமுகப்படுத்தி அவளிடம்

ஆசி வாங்கியவனின்

நண்பன் நான்.

03

அவதானிப்பு

கிணற்றிலிருந்து தைலத்தை,

உறிஞ்சி திருடிக்கொள்வதாய்,

எழுந்த வாஸ்துவின் புகாரால்,

அகத்தின் முற்றத்திலிருந்து,

தைல மரத்தை அப்புறப்படுத்த,

நாள் குறித்ததை அறியாது,

தன் கூட்டின் அழகிய வரைபடத்தை,

முக்கிளை சந்திப்பில் குறித்துவிட்டு,

சுள்ளி பொறுக்கப் போன,

பறவையின் திசையை,

கண்காணித்தபடியேயிருந்தது - 

சாலையோர ட்ரான்ஸ்பார்மரின்

இடுக்கில் கூடு கட்டியிருந்த

கரும்பட்சி.    

04

அகங்கள் 

வார்த்தை யுத்தத்தின்போது

 பொறுக்கிப் புதைத்திருந்த 

சொற்களின் அழுகல் நாற்றம்

 கசிகிறது ஞாபகக் குழியில்

 மறதியில் மறைக்கத் தெரியாமல்

 தடவிக் கொண்டு பார்க்கிறேன் - 

நெளிந்தபடி செதுக்கும்

 மனப்புழுவின் தடயத்தை.

 ஏதும் நடவாதது போல் 

மனைவிக்கு தலைவாரிக் கொண்டிருக்கிறாள்

அம்மா.

05

பிறகெப்படி தயாரிப்பது ஆல்பத்தை

இளம்பிராயத்தில் கூட

வாங்கியது கிடையாது 

பட்டாசு.

நெருப்பைத் திரியில் ஓட்டவைப்பதைத் தவிர

வாங்கி வெடிப்பவனுக்கும்

பார்த்து ரசிப்பவனுக்கும்

வித்தியாசம் தெரியாததால்...

பார்வையைப் பதியமிடுவேன்

வழக்கம்போல் நின்றபடி

ஏளனத்தை சிரிப்பால் செதுக்கி 

வேடிக்கை பார்க்கத்தான் லாயக்குயென்பர்.

சூதாடும் நண்பர்களிடம்

நானும் சொல்லிவைத்தேன் - 

நால்வரையும் நானே மாறியாடியதை.

அப்பா சொல்வார்:

பார்வையாளனாய் வாழத் தெரிவது

ஞானியின் அம்சம்'

திருஷ்டி கழிப்பாள் -

'எம்மவன் தாமரை மாதிரி'

ஒத்தி வைத்திருக்கிறேன் - அசல் 

முகங்களின் ஆல்பத் தயாரிப்பை.

தோற்க பயந்து பயத்தை மறைத்து

நத்தை ஓட்டிற்குள் 

இழுத்துக் கொள்ளுமென் முகம்

இல்லவேயில்லை 'நெகடிவ்'விலும்.

06

ஒரு மரத்தின் குறுக்கு வெட்டும் இரு குரல்களும்

"காலத்தையும் வாழ்க்கையையும் 

இரு வேறு நிறத்தில்

ஒன்றினுள் ஒன்றாய் தன்னுள்

வரைந்திருக்கும் மரம்."

அக்றிணை யோ உயர்திணையோ 

எதுவாயிருக்கட்டும்

உங்கள் அர்த்தப்படுதல் 

அபத்தமானது.

ஒன்றுமேயில்லை

எதனுடைய குறுக்குவெட்டுத் தோற்றத்திலும் 

அதனின் வழியைத் தவிர."

07

நவீன வரைபடம் 

மீண்டும் மீண்டும்

வண்ணத்துப்பூச்சிகளை 

நசுக்கியபடியே வாகன கால்கள்

பாதையில் சஞ்சரிக்க 

மழை படிந்த நெடுஞ்சாலையில்

சிந்திய பெட்ரோல் துளியில்

கருக்கொண்ட எண்ணற்ற நிறங்கள்

வண்ணத்துப் பூச்சிகளாய் மாறி 

ஆயிரமாயிரம் ஆண்டுக்கு முன் 

அழிந்த வனத்தையும் தன் 

ஆதி இருப்பையும் 

வரைந்தபடியேயிருந்ததை 

தன வெளிச்ச விரலால்  தடவித் தடவி

எல்லோர்க்குமாய் படிக்கிறான்

நம் பழைய சூரியன்.  

08

எவ்வளவு அழகு பாரேன்

உறங்கும்

வெற்றிடத்தை எழுப்பிவிட 

அறிவு தானமாய்

புத்தக மனிதர்களையும்

மனித புத்தகங்களையும் சேமித்து

தன்னை நிரப்பிக்கொண்டே 

கொடுத்தும்

நெருக்கடி நேரங்களில் ஞாபக் குச்சியால் 

துழாவி துழாவி எடுத்துக் கொள்ளவும் 

முடிந்த நம் கபால உண்டியலை 

அந்த மயான சிறுவன் தன சகாக்களோடு 

கால்பந்தாய் எட்டி உதைத்து 

விளையாடுவது எவ்வளவு

அழகு பாரேன்.

கவிதைத் தொகுப்புகள்:

1. "உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை" தொகுப்பு (2000)

2. "பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு" தொகுப்பு, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் (2006)

3. “வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்" தொகுப்பு, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் (2012)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com