கவிதை ஒரு சூட்சுமமான தளம் “

கவிதையின் கால் தடங்கள் - 33

“சிறுகதைகள், நாவல்கள் ஆகியவை செயல்படும் தளங்களுக்கு அப்பால் சில மேல்நிலைத் தளங்கள் இருக்கின்றன. இந்தத் தளங்களில் கவிதை செயல்படுகிறது. இது மிகவும் சூட்சுமமான தளம். அதிக அதிர்வுகள் கொண்ட தளம். படைப்பின் அளவிற்குச் சம்பந்தமில்லாத விரிவை மனதில் உருவாக்கும் தளம்.”

# சுந்தர ராமசாமி.

["சுந்தரராமசாமி படைப்புலகம்" - ராஜமார்த்தாண்டன், கலைஞன் பதிப்பகம் ]

O

எஸ். வைதீஸ்வரன் கவிதைகள் 

O

“வேர்ட்ஸ் வொர்த்தைப்போல இயற்கையைப் பாடும் கவி இவர். அதே நேரத்தில் நகரவாசி. நகரத்தை நேசிக்கிறவரும் கூட. இவரது கவிதைகளில் அக்ரினைப் பொருட்களைக் கூட இயற்கையின் வடிவில், இயற்கையின் உயிர்த்துடிப்பை கொண்டு கூட்டி அதனை ரசிக்கும் மனோலயம்.”

# இந்திரன்

(கணையாழி மே 1995 இதழில்) 

எஸ். வைதீஸ்வரன் கவிதைகளில் சில:

01

வீதியில்

என்னோடு கூடவே

 குதித்து வருகிறது

 பிண ஊர்வலம் ஒன்று.

 என்னைத் தோழமை கொள்ள

 துரத்தி வருவது போல்.

போகும் வழி வந்தவுடன்

 பேச்சில்லாமல்

 அவசரமாகப் பிரிந்து போனோம்,

 இருவரும்;

அவரவர் காரியத்திற்காக,

அதிக உத்தேசமில்லாமல்.

 02

 புதிர்

இருட்டை வரைந்திருக்கிறேன்

பார் என்கிறான்

தெரியவில்லையே என்கிறேன்

அது தான் இருட்டு என்கிறான்

இன்னும் தெரியவில்லை என்கிறேன்

மேலும் உற்றுப் பார்த்து

அதுவே அதனால் இருட்டு என்கிறான்

இவன் இருட்டு

எனக்கு எப்போது

வெளிச்சமாகும்.

03

மேலே

வெள்ளைச் சுவரில்

மெல்லிய நிழல்கள்

சிலந்தியின் கலைக்கு

செலவற்ற விளம்பரங்கள்.

04

உபதேசம் நமக்கு

அடுத்த வீட்டுக் காரனிடம்

அன்பாய் இருந்து தொலைத்து விடு

வம்பில்லை

பல்தேய்த்துக் கொண்டிருக்கும் போது

பக்கத்து வீட்டுக் காரனிடம்

வெள்ளையாய் சிரித்துவிடு

தொல்லையில்லை

என்றாவது

உன்வீட்டில்

மழை பெய்யும் போது

அவன் வீட்டில்

குடை இருக்கும்

என்றாவது உன் செடியை

ஆடு கடிக்கும் போது

அவன் கையில் ஆளுயரக்

கம்பு இருக்கும்

உன் வீட்டுக் குழந்தைகள்

ஓடியாட

அவன் வீட்டுத் தாழ்வாரம்

நீளமாயிருக்கும்

எதற்கும்

ஒரு விதமான தவமாக

தினந்தினம்

வேலியோரம் சற்றே

கால் சொறிந்து நில்லு

உளுந்தூரில் அவன் பாட்டி செத்ததால்

உனக்குப் போன தூக்கம்

ஊருக்குள் திருட்டு கற்பழிப்பு

உணவுத்தட்டு கருப்பு மார்க்கெட்டு

யாருக்கோ தவறிவிட்ட

லாட்டரிச் சீட்டு

எவனுக்கோ பிறந்து விட்ட

இரண்டு தலைப் பிள்ளை

இன்னும்

கிரஸின் விலை ஊசி விலை

கழுதை விலை காக்காய் விலை

எல்லா நிலையும் பந்தமுடன்

பல் திறந்து பேசிவிட்டு

வாய்க் கொப்பளித்து வந்துவிடு

தொந்தரவில்லை

என்றாவது நின்று போகும்

உன் சுவர் கடிகாரம் கூட

அவன் வீட்டில் அடிக்கும் மணியை

ஒட்டுக் கேட்கட்டும்

ஏசுவும் புத்தனும்

எதற்கு சொன்னான் பின்னே

அடுத்தவனை நேசி என்று

அவனால் உபகாரம்

ஆயிரங்கள் உனக்கு இருக்கும்

அதை மட்டும் யோசி

நீ ஒரு நகரவாசி.

05

கண்ணாடியை துடைக்கத் துடைக்க

என் முகத்தின் அழுக்கு

மேலும் தெளிவாகத் தெரிகிறது.

06

தன் கூட்டுக்கும்

வானுக்கும்

பாலம் தெரிகிறது

பறவைகளுக்கு மட்டும்.

07

எழுத நினைக்காத தருணம்

எழுத நேருகிறது.

மிகத்தெரிந்தது போல்

தெரியாததை எழுதிக்

கொண்டிருக்கிறேன்.

எழுதி முடித்தவுடன் தான்

எனக்கு வெளிச்சமாகிறது.

இதைத்தான் நான்

தெரிந்து கொள்ள வேண்டிக்

காத்திருந்தேனென்று.

08

பேச்சு வாழ்க்கை

அவர்கள் ஊமைகள் என்பதால்

பேசாமல் இருந்தேன்.

ஆனால் அவர்கள் தமக்குள் 

ஆனந்தமாகப் பேசிக்கொண்டே

போனார்கள்.

09

தீராத விளையாட்டு

அடிக்கடி 

வெயிலுக்குள் நகர்ந்துவிடும்

எங்கள் வீட்டை 

என்ன செய்வதென்று 

தெரியவில்லை.

கவிதைத் தொகுப்புகள்:

1. “நகரச் சுவர்கள்” தொகுப்பு, சினேகா வெளியீடு

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com