காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு

நெஞ்சம் மறப்பதில்லை -14
காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு
Published on

அடுத்த வார கட்டுரைக்கான தலைப்பு "காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு " என நான் முடிவு செய்த ஓரிரு நாட்களில் மலேசியாவிலிருந்து சீனாவிற்கு கிளம்பிய விமானம் காணாமல் போய் விட்டதாக செய்திகள் வருகின்றன. அதில் பயணம் செய்த 239 பேரும் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. மகிழ்வோடு விமான நிலையத்திற்கு வந்து வழியனுப்பிய உறவினர்கள், அவர்களைத் தொலைத்து விட்டு கதறி கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நம் அன்றாட வாழ்விலும், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் நம் கண் முன்னே காணாமல் போய்க் கொண்டுதானிருக்கிறார்கள்.நாமே கூட பலரை பரிதவிக்க விட்டு காணாமல் போய்க் கொண்டிருக்கிறோம்.

மதுரைக்கு ஒருமுறை பேச போயிருந்தேன். சுவரொட்டிகளில் என் பெயரை பார்த்து விட்டு, என்னுடன் பல மேடைகளில் பேசிய ஒரு சகோதரி போன் செய்தார் ."எங்க ஊருக்கு வந்திருக்க....ஒரு போன் பண்ண மாட்டியா" என்றவர்,நான் தங்குமிடத்தை விசாரித்து விட்டு என்னைப் பார்க்க வந்தார் .மதுரை மல்லிகைப் பூ,கண்ணாடி வளையல்களை பிரியம் தோய்த்து என்னிடம் கொடுத்தார்.அவர் கொண்டு வந்திருந்த மதிய உணவின் ஒவ்வொரு வகையையும் ,அதற்கென சிறப்புப் பெற்ற உணவு விடுதிகள் ஒவ்வொன்றிற்கும் சென்று வாங்கி வந்திருந்தார்."இன்னிக்கு எங்க கல்யாண நாள்.அவர் ஹோட்டலுக்கு போலாம்னு சொன்னார்.நான் உன் கூட சாப்பிடுறேன்னு சொல்லிட்டேன் "என்றவரை ஆதூரத்துடன் அணைத்துக் கொண்டேன்.தன் இருப்பிடம் வந்த இராமனை தேனும் ,மீனும் கொடுத்து உபசரித்த குகனைப் போல,தன் அன்பில் என்னை திளைக்க வைத்தார் அந்த சகோதரி. நினைக்கும்தோறும் சிலிர்க்க வைக்கும் தொட்டணைத்தூறும் மணற் கேணி சந்திப்பு அது.

 ஒரு மாதம் கழித்து,லண்டனில் பத்து நாள் தொடர் சொற்பொழிவிற்கு என்னை அழைத்திருப்பதை அவரிடம் சொல்ல விரும்பினேன்..அவரின் அன்புத் தூறலில் ,துளிர்க்க ஆரம்பித்திருந்த சின்னஞ்சிறு செடியாய் ,அவரின் ஆசிர்வாத கொழுகொம்பைத் தேடி தொலைபேசி வழியே படர்ந்தேன் ."லண்டனில் பத்து நாள் தொடர் சொற்பொழிவுக்கு கூப்பிட்டு இருக்காங்கக்கா. பென்னியும்,பாப்பாவும் கூட்டிட்டுப் போலாம்னு இருக்கேன்" என்றதும்,"போ.....போ.....ஃபிளைட் கடலில் விழுந்து வெடிக்கும் "என்றார்.மனதை நொறுக்கிய வார்த்தைகள்."என்னக்கா இப்படி சொல்றீங்க...."என்று அழுததும் ,"நீ என்னை விட சின்ன பொண்ணு.இந்த வயசுலயே வெளிநாட்டுக்குப் போறேன்னு என்ட்ட சொன்னா எனக்கு பொறாமையா இருக்காதா " என்றார்.மதுரைக்கு பேச வரும் போது உபசரித்து மகிழ்ந்தவர் அயல் நாட்டிற்குப் பேச போகிறேன் என்றதும் பொறாமைப் படுகிறார் என்றால் , ஆயிரக்கணக்கான மைல்கள் தான் அந்த அன்பிற்கான அளவுகோலா என்ன.....மல்லிகைப் பூவோடும் ,வளையல்களோடும் மதிய உணவோடும் என்னைப் பார்க்க வந்த அந்த சகோதரி,அதன் பிறகு காணாமல் போய் விட்டார்.அவராலேயே அவரை கண்டுபிடித்து தர முடியாது அயல்நாட்டு பயணத்தையே சன்மானமாக கொடுத்தாலும் கூட....

என் பெரியம்மா இறந்த போது,அவரின் மூன்று பிள்ளைகளும் ஆளுக்கொரு உறவினர் வீட்டில் நாற்றங்காலாகினர்.என் தாய்மாமா வீட்டில் வளர்ந்த கோபியை , விடுமுறைக்கு வற்புறுத்தி தன் வீட்டிற்கு அழைத்துப் போனார் சித்தி முறை உறவினர் ஒருவர்."தாய் இல்லா புள்ள....நாம தான் பார்த்துக்கணும்.கை விட்டுட கூடாது "என்றபடி அடிக்கடி கோபியின் தலை கோதி விடுவார் சித்தி.அவர் வீட்டில் தங்கியிருந்த போது,அவருக்கு தெரியாமல் இரண்டு ஸ்பூன் ஹார்லிக்ஸை  சாப்பிட்டிருக்கிறான் கோபி.இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு ஹார்லிக்ஸ் என்பது மிகப் பெரிய ஆடம்பர வஸ்து.விஷயம் தெரிந்ததும் சித்தி,"யார் யாரை எங்கங்க வைக்கணுமோ, அங்கங்க தான் வைக்கணும் .உன்னை வீட்டுக்குள்ள விட்டது என் தப்பு தான்" என்று அடித்து துரத்தி விட்டார்.தன் வீட்டில் இரண்டு ஸ்பூன் ஹார்லிக்ஸ் குறைந்ததும், அவன் தாயில்லா பிள்ளை என்பது மறந்து விட்டது.கோபியின் தலை கோதியபடி "இவனை கை விட்டுட கூடாது "என்று சொன்ன சித்தி, காணாமல் போய் விட்டார்.இரண்டு ஸ்பூன் ஹார்லிக்ஸில் தொலைந்த நேயத்தை,அதன் பின் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

ஏழு வருடங்களாக என் பிறந்த நாளுக்கு கேக் வாங்கி கொடுத்த மாணவிகள் இருவரிடமிருந்து ,இந்த வருடம் ஒரு குறுஞ்செய்தி கூட வரவில்லை .கோபத்தில் நான் உதிர்த்த வார்த்தைகளால் காணாமல் போனவர்கள் ,இனி என் எந்த பிறந்த நாளுக்கும் வரப்போவது இல்லை.

 கிறிஸ்தவ கல்லூரிகளில் அய்க்கஃப் என்றொரு இயக்கம் செயல் படுகிறது. அந்த இயக்கத்தின் மூலம், கொடைக்கானல் அருகே உள்ள தாமரைக்குளம் என்ற ஊருக்கு பத்து மாணவர்கள் ,அங்கே தங்கி அந்த ஊர் மக்கள் குறித்து அறிந்துகொள்ள சென்றோம். சென்பகணூரிலிருந்து ஏழு கிலோ மீட்டர் ஒத்தையடி பாதையில் நடந்தால்,அந்த ஊரை அடையலாம் .பேருந்து வசதி,மின்சார வசதி எதுவும் அங்கே இல்லை. ஓட்டுக் கேட்க எந்த அரசியல்வாதியும் அந்த ஊருக்கு வந்ததில்லை .பக்கத்து ஊரில் ஒரு தொடக்கப்பள்ளி இருக்கிறது, அங்கே எந்த ஆசிரியர் பணிக்கு வந்தாலும்,உடனே மாற்றல் வாங்கிக் கொண்டு வேறு ஊருக்கு போய் விடுவார் என்று எங்களை அழைத்துக்கொண்டு போன, அலோசியஸ் அண்ணன் சொன்னார். கொடைக்கானலில் இருக்கும் அவர் இந்த ஊருக்கு வாரம் இருமுறை வந்து கல்வி,சுகாதாரம் போதிப்பதும், பணமோ....வேறு எதுவுமோ ....எதிர்பார்க்காமல் அந்த ஊர் மக்களின் நலனுக்காக உழைப்பதும் எங்களுக்கு பெரும் வியப்பைத் தந்தது.இரண்டு வருடங்கள் கழித்து, நான் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்த தொலைக்காட்சியில் அந்த ஊர் குறித்த செய்தியை ஒளி பரப்புவதற்காக,அவரைத் தொடர்பு கொண்டேன்." எனக்கு குடும்பம் இல்லையா.....அந்த ஊருக்கே உழைச்சுகிட்டிருந்தா என் பொண்டாட்டி, புள்ளைய யார் பாப்பா? கொஞ்சமாவது சுயநலமா இருந்தா தான் இந்த உலகத்துல  பொழக்க முடியும் "என்றார்.தாமரைக்குளம் மக்களின் முன்னேற்றம் ஒன்றே தன் குறிக்கோளாக செயல்பட்ட அலோசியஸ் ஏன் காணாமல் போனார்?

கோபம்,பொறாமை ,சுயநலம் போன்ற பூச்சாண்டிகளால் கடத்தப்பட்டு ,நாம் காணாமல் போய்க் கொண்டே இருக்கிறோம்.தப்பித்து திரும்பி வருகையில் , நம்மைத் தொலைத்தவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள் .தொடரும் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் ,யாரையும் முழுமையாக கண்டு பிடிக்க முடிவதே இல்லை.ஆனால் நாம் தொலைத்த மனிதர்கள் மீண்டும் வர மாட்டார்களா என்கிற ஏக்கம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.காணாமல் போய்,பின் கண்டடைந்த ஆட்டுக்குட்டியை கைகளில் ஏந்தி, சிரிக்கும் இயேசு கிறிஸ்துவின் மகிழ்ச்சி எல்லோருக்கும் வாய்த்து விடுகிறதா என்ன.....

(இத்தொடரை எழுதும் சுமதிஸ்ரீ, ஒரு சொற்பொழிவாளர், கவிஞர். புதன்கிழமை தோறும் இந்த தொடர் வெளியாகும் )

logo
Andhimazhai
www.andhimazhai.com