காண்பதும், காண்பதில் திளைப்பதுமின்றி கவிதையில் புரிந்தாக வேண்டியதென்ன?

கவிதையின் கால் தடங்கள் - 36

காண்பதும், காண்பதில் திளைப்பதுமின்றி கவிதையில் புரிந்தாக வேண்டியதென்ன?“ 

# லா. சா. ரா.  

குவளைக்கண்ணன் கவிதைகள்

குவளைக்கண்ணன் கவிதைகளில் சில:

01

தருவதும் பெறுவதும்

அலைகளிடமிருந்து பெற்ற

 இரைச்சலை

 பிள்ளைகள்

 கரையெங்கும் இறைத்துக்கொண்டிருக்க

 பிள்ளைகளிடமிருந்து பெற்ற

 குதூகலத்தோடு

 கொட்டி முழக்குகிறது கடல்.

 02

 அன்பின் நகரம் 

எங்கணும் கசிகிறது,

 ஊற்றெடுத்துப் பொங்கி

 நுரைத்தோடுகிறது,

 அள்ளிக் குடிக்கிறார்,

 முங்கிக் குளிக்கிறார்.

போதுமென்பதே எங்கும் ஒலிக்க

 தகதகக்கிறார்கள் ஆண்கள்.

 தளதளக்கிறார்கள் பெண்கள்.

 வீடுண்டு கதவில்லை.

அமோகம் விளைய, 

பொழுது சாய்ந்ததும்

அனைவரும் குழந்தையாகிறார்கள்.

03

குழந்தைகள் நகரம்

காக்கை, குருவியை

ஆடு, மாடை வேடிக்கை காட்டியபடி

குழந்தைகளுக்குத் திணிக்க,

நேண்டாம் நேண்டாம் என்றபடி

தலையைத் திருப்புகின்றன குழந்தைகள்.

இடுப்பு மாற்றி அமர்த்தி 

தம் நிறைவேறாத ஆசைகளை

திணித்து வளர்க்க 

பெரியவர்களான குழந்தைகள்

நகரெங்கும் கக்கிக்கொண்டிருந்தன

தங்கள் வாழ்நாள் முழுக்க.

04

பாடலைக் கேள் கண்ணே!

எப்போதும் போகும் வனத்துக்குள் 

நுழையும் தருணத்தில் 

வெளியேறியவர்

அமர்ந்து ஆசுவாசபட்டுக்கொண்டிருந்தார்.

ஆளற்ற வனத்துக்குள் 

நுழையுமுன் பேச விரும்பி

என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

என்று கேட்டேன்.

சற்று நேரம்

கண்களை மூடித் திறந்தவர்

அண்ணாந்து பார்த்தபடி 

பாடத் துவங்கினார்.  

உள்ளிருந்து புறப்பட்ட குரல்

பறவைகளின் ஒலியாக 

விலங்குகளின் உறுமலாக

பெருங்காற்றில் சாயும்

மரங்களின் சடசடப்பாக ஒலித்தது.

பன்னெடுங்காலமாய் வறண்டிருந்த

ஏரி நிரம்பியது

தள்ளாடி மயங்கினேன்

விழித்துப் பார்க்கும்போது

அவரைக் காணோம்

வானத்தையும் காணோம்.  

வெற்றிடங்களை நிரப்பியபடி

இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது

துயரத்துடன் போராடச் சொல்லித் தரும்

சொல்லற்ற பாடல்.

நீயும் கேட்கலாம்

கொஞ்சம் உள்ளே போய்க் கேள் கண்ணே!

05

பிள்ளை விளையாட்டு

வினோத அணிவகுப்பு

ஒரு குதிரை வலது முன்னணி ஓரத்தில்

மற்ற குதிரை அதன் பின்னால்

வீரர்கள் ஒட்டகத்துக்கு அருகாக

அரசருக்கு அருகாக என

கலந்துகட்டி நிற்கிறார்கள்

ஆரம்பித்துவிட்டது

வெண்படை ஒருபுறம்

கரும்படை ஒருபுறம்

யானை குதிரை ஒட்டகம் அமைச்சர்

அரசர் வீரர்கள் என அனைவரும்

ஒவ்வொரு கட்டமாக முன்னேறலாம்

எதிரியைத் தாண்டி அப்புறம் போகலாம்

எதுவும் வேட்டுப்படுவதில்லை

கரும்படை நின்ற இடத்தில் வெண்படை

வெண்படை நின்ற இடத்தில் கரும்படை

ஆட்டம் முடிந்தது

யாரும் தோற்பதில்லை

குழந்தையுடன் விளையாடும்போது 

என்னிடமே விளையாடிக் கொள்கிறேன்

நான் பூனை

நான் யானை

நான் புலி

நான் சிங்கம்

நான் பல்லி 

நான் டைனோசர்

நான் வானம்

நான் நட்சத்திரம்

நான் நிலா

நான் சூரியன்

நான் வீடு

நான் கதவு

நான் ஜன்னல்

நான் பேன்

நான் டுயூப் லைட் 

நான் பேனா

நான் பென்சில்   

ஏற்கனவே உலகில் உள்ளவற்றுக்கு 

என்னிடம் பெயர்களைக் கற்கிறது குழந்தை

ஏற்கனவே உலகில் உள்ள என்கனவேயை 

அழிக்கக் கற்கிறேன் குழந்தையிடம்.

06

பன்றிகளைப் பற்றி எனக்குத் தெரிந்தவை

பன்றிகளுடனான முதல் பரிச்சயம்

எனது ஆரம்பப்பள்ளிக் கட்டத்தில் நிகழ்ந்தது

ஒரு அருமையான காலை வேளையில் 

தெருவில் மலங்கழித்துப் கொண்டிருந்த என்னை

தனது காலை உணவு அவசரத்தில்

குப்புறத் தள்ளியது

இவைகளைப் பிடிப்பது

அதுவும் குட்டிகளை மிகவும் சிரமம்

ஒரு நீண்ட கழியின் முனையில்

சுருக்குக் கயிறுடன் நடந்த 

பல பன்றி வேட்டைகளைப் பார்த்ததுண்டு 

சமீபத்தில் குட்டி போட்டவை

கிட்ட நெருங்க விடாது

இடமும் போக விடாது

வலமும் போக விடாத 

ஒன்றின்மேல் வாகனத்தை இடித்து 

காயப்பட்டிருக்கிறேன்

எங்கள் பகுதியில்

வேட்டைகளை அம்பாரமாகக் குவித்து

பழம் பாய்களால் மூடியிருப்பார்கள்

இதன் இறைச்சி 

அதிக எண்ணைப் பசையுடன் 

கொழுப்பு மிகுந்ததாய் இருக்கும்

உடலுக்குக் குளிர்ச்சி என்று சொல்வார்கள்

அனைத்துண்ணிகளான இவற்றை

கொள்வது மிகவும் சிரமம்

அடிமுடி தேடுவோர் அனைவரும்

பன்றியாகத்தான் இருந்தாக வேண்டும்

கடைசியாக

பன்றிகள் தங்களைத் தாங்களே

விற்றுக் கொள்வதில்லை.   

கவிதைத் தொகுப்புகள்:

1. “பிள்ளை விளையாட்டு” தொகுப்பு, காலச்சுவடு வெளியீடு (2005)

2. “கண்ணுக்குத் தெரியாததன் காதலன்” தொகுப்பு, காலச்சுவடு வெளியீடு (2011)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com