கே.பி. ஜானகி 'அம்மா’

மதுரைக்காரய்ங்க- 31

இது மதுரை மண்ணின் வரலாற்று அரசியல் நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் பரபரப்பான அரசியல் தொடர், காலத்தின் முன்னும் பின்னும் சென்று, முக்கியமான அரசியல் நிகழ்வுகளை இத்தொடரில் படம் பிடிக்கிறார் சஞ்சனா மீனாட்சி

தமிழகத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் தீவிரமாக பங்கேற்று சிறை சென்றதும் மதுரை மாவட்டத்துக்கான தனிச் சிறப்புகளில் ஒன்றாகும். மதுரை நகரில் மட்டும் எஸ். ஜானகி, ஆர்.ஜானகி. டி.வி. ஜானகி, கே.பி. ஜானகி என நான்கு ஜானகிகளைச் சிறைக்கு அனுப்பியது சுதந்திர போராட்டம். மேலும் ஜெயலட்சுமி, கே.டி. கமலா, எம்.எஸ்.கே. கமலாட்சி அம்மாள், கமலவேணி, கீழவளவு தமயந்தி, தனம்மாள், சின்னக் கொண்ட சூரம்மாள், காயம்பட்டி அங்கச்சி, தாயம்மாள், அகிலாண்டத்தம்மாள், மதுரை லட்சுமி, பெரியகுளம் லட்சுமி, பி. லட்சுமி, ஜி. லட்சுமி, லட்சுமிபாய், மீனாட்சி. மீனாம்பாள், பத்மாசினி அம்மாள், பங்கஜத்தம்மாள், பர்வதவர்த்தினி, பெரியகுளம் ரங்கம்மாள், சீதாலட்சுமி அம்மாள், சீலக்கரையம்மாள். சொர்ணம்மாள், சூரியவதி, வர்த்தினி, வத்சலாமணி, விசாலாட்சி.. என மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பல மாதம் சிறைத்தண்டனை அனுபவித்தார்கள். இவர்களில் இன்றும் கம்யூனிஸ்ட் தோழர்களால் அம்மா என வாஞ்சையுடன் என்றழைக்கப்படுவர் வாழ்ந்து மறைந்த தியாகி கே.பி. ஜானகி.

இவரது வாழ்வும் தியாகமும் குறித்து மதுரை நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் ஜோதிராம் அவர்கள் என்னிடம் பலமுறை பகிர்ந்திருக்கிறார். நாடகமேடைகளில் பாடி, நடித்து செல்வச் செழிப்போடு வாழ்ந்த ஜானகி, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு அனைத்தையும் இழந்தார். சிறை புகுந்தார். சிறை அவருக்கு ஆஸ்துமாவை பரிசாகத் தந்தது. இறுதிகாலம் வரை மக்களுக்காக உழைத்து மறைந்த அவரது வரலாறு நினைவில் நிறுத்தவேண்டிய ஒன்று.

மதுரையில் 1917-ம் ஆண்டு ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் ஜானகி. இவரது தந்தை பத்மனாபன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வறுமை என்றாலும் ஒரே மகளான ஜானகியை பெற்றோர் செல்லமாக வளர்த்து வந்தனர். ஜானகியின் எட்டாவது வயதில் தாய் லட்சுமி அம்மையார் இறந்தார். பின்னர் ஜானகியின் வளர்ப்பு பாட்டியைச் சார்ந்ததாயிற்று. மதுரையிலுள்ள அரசு பள்ளியில் எட்டாவது வகுப்பு வரை படித்தார். நல்ல குரல் வளமிக்க அவருக்கு படிக்கும் போதே இசையும்  பயிற்றுவிக்கப்பட்டது. 

அந்த காலத்தில் நாடகங்கள் மூலமே சமூக சீர்திருத்த, விடுதலை போராட்டக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டன. மக்கள் மத்தியில் அதற்கு மிகப்பெரிய ஆதரவும் இருந்தது. மதுரையில் செயல்பட்டுவந்த பழனியாப்பிள்ளை பாய்ஸ் கம்பெனி என்ற நாடகக் கம்பெனியில் இருந்த ஒரு பெண்ணுக்குத் துணையாக ஜானகி அவரது 12-வது வயதில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு மாதச் சம்பளமாக 25 ரூபாய் வழங்கப்பட்டது. நல்ல குரல் வளம் கொண்ட அவர், மேடையில் பாடவும் செய்தார். மின்சார ஒலி பெருக்கி இல்லாத அந்த காலத்தில் கணீர் குரலில் பாடி மக்களை தன் பக்கம் திரும்ப வைக்கும் ஆற்றல் ஜானகிக்கு இருந்தது. அதனால் மளமளவென நாடக மேடையில் புகழேணியில் ஏறினார்.

            வள்ளி திருமணம், கோவலன், மனோகரா, நல்ல தங்காள், பவளக்கொடி, அரிச்சந்திர மயானகாண்டம் போன்ற நாடகங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றார். கோவலன் நாடகத்தில் கண்ணகி, மாதவி என இரட்டை வேடத்தில் நடித்தார். இவருக்கான பாடல்களை பாஸ்கரதாஸ், உடுமலை நாராயணக்கவி ஆகியோர் எழுதினர். நாடகங்கள் இரவு பத்து மணிக்குத் துவங்கி அதிகாலை மூன்று மணிக்கு முடிவடையும். சோர்வின்றி நடித்தார் ஜானகி. இலங்கையில் ஆறுமாத காலம் சுற்றுப்பயணம் செய்து நாடகங்களை நடத்தினார். இதனால் இவர் வெளிநாடுகளிலும் அறியப்பட்டார். அவரது ஊதியமும் உயர்ந்து கொண்டே போனது.

            அவரது நாடகங்களில் காந்தி, நேரு குறித்த பாடல்களும் அத்தோடு காங்கிரஸ் இயக்கத்தைப் பற்றியும் காங்கிரசார் எப்படி தொண்டாற்ற வேண்டும் என்பதையும் பாடல்களிலேயே விளக்கினார். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பிரசாரமாக அமைந்தது. அப்போது சுதந்திர இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுடன் இருந்தவர் எஸ். குருசாமி. இவர் நாடகத்தில் ஆர்மோனியம் வாசிப்பவர். இவர் தான் ஜானகிக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தியவர். ஜானகிக்கும இருவருக்கும் இடையேயான நட்பு காதலாகி  1934-ல் திருமணத்தில் முடிந்தது..

            திருமணத்துக்குப் பின் நாடகக் கம்பெனியில் நடிப்பதை நிறுத்திய ஜானகி, சிறப்பு நாடகங்களில் மட்டும் நடிக்கத் தொடங்கினார். ஒரு நாடகத்தில் நடிப்பதற்கு துவக்கத்தில் நூற்றைம்பது ரூபாய் வாங்கினார். படிப்படியாக அது முன்னூறு ரூபாயாக உயர்ந்தது.

            தேசபக்திமிக்க நாடக நடிகரான எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் அந்த நாட்களில் மிகச் சிறந்த பாடகருமாவார். அவர் எந்த நாடகத்தில் நடித்தாலும் அதில் தேசபக்தி பாடல்கள் ஏராளமாக இருக்கும். அதனால் நாடகங்கள் முடியும் நேரத்தில் அவரைக் கைது செய்வதும் பின்னர் அவரது நாடகத்துக்கு தடை விதிப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்தது. விஸ்வநாததாஸ் சிறந்த நடிகர், பாடகர், மக்கள் செல்வாக்குப் பெற்றவர் என்றாலும் அவர் மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்ற காரணத்தால் அவருடன் கதாநாயகியாக நடிக்க எவரும் முன்வரமாட்டார்கள். ஆனால் இந்த சாதீய ஏற்றத்தாழ்வுகளை துச்சமாகக் கருதி விஸ்வநாததாசுடன் நாடகங்களில் இணையாக நடித்தார் ஜானகி. இது நாடக உலகில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.. மேல்சாதியினரின் விமர்சனங்களை அவர் தூக்கியெறிந்தார்.

சிறந்த பாடகரும் நடிகருமான விஸ்வநாததாஸ் ஜில்லா போர்டு உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிட விரும்பினார். வந்த வருமானத்தையெல்லாம் தேசபக்தர்களுக்கு செலவிட்ட நிலையில் டெபாசிட் செலுத்த அவரிடம் பணம் இல்லை. அப்போது அவருக்காகப் பணம் கட்டியவர் ஜானகி. அந்தத் தேர்தலில் அவர் வெற்றியும் பெற்றார். மதுரை தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கத்தின் தலைவராக விஸ்வநாததாசும் துணைத் தலைவராக கே.பி. ஜானகியும் இருந்தனர்.

            நாடகங்களில் நடிப்பதை படிப்படியாக விட்டுவிட்ட ஜானகி அரசியலில் ஆர்வம் கொண்டார்.. அப்போது அவருக்கு மதுரை மேலமாசிவீதியில் இரண்டு வீடுகளும் ஏராளமான சொத்துக்களும் நகைகளும் இருந்தன. கணவரின் ஆலோசனைப்படி காங்கிரஸ் கூட்டங்களில் மட்டும் ஜானகி தேசபக்தி பாடல்கள் பாடிவந்தார். பாரதியின் "விடுதலை விடுதலை", பாரதசமுதாயம் வாழ்கவே" "வந்தேமாதரம்" போன்ற பாடல்களைப் பாடினார். உடுமலை நாராயணகவியின் "காந்திச் சொல்லைத் தட்டாதீங்க காங்கிரஸ்காரர்களே" என்ற பாடலுக்கு கூட்டத்தினரிடமிருந்து "ஒன்ஸ்மோர்" வரும். ஜானகி பாடுகிறார் என்றால் அதைக் கேட்கவே பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வது வாடிக்கையாகிவிட்டது. இந்தக் கூட்டங்களுக்குச் செல்ல அவர் பணம் வாங்குவதில்லை. சொந்தச் செலவில் செல்வார். 1930 முதல் ஆறு ஆண்டுகள் வரை தேசபக்தி பாடல்களை மட்டுமே பாடிவந்தார்.

            ஜானகி 1936-ல் காங்கிரஸ் கட்சி உறுப்பினரானார். அப்போது மதுரையில் வைத்தியநாதய்யர், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், என்.எம்.ஆர். சுப்பராமன் போன்றோர் பிரபல காங்கிரஸ் தலைவர்களாக இருந்தனர். ஜானகியும் விரைவிலேயே அரசியலில் பிரபலமானார். "ஜானகி தேசபக்தி பாடல்களைப் பாடும் கூட்டங்களில் தான் நாங்கள் பேசுவோம்" என வைத்தியநாதய்யரும் என்.எம்.ஆர். சுப்புராமனும் சொல்வதுண்டாம்.

            தேசபக்தி பாடல்கள் மட்டுமின்றி சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் போன்றவற்றை வலியுறுத்தி ஜானகியும் அவரது கணவர் குருசாமியும் பேசியது காங்கிரசார் மத்தியில் புதிய சிந்தனையை விதைத்தது. குருசாமியை சந்திக்க காங்கிரசார் அவரது இல்லத்திற்கு அடிக்கடி வருவதுண்டு. தினமும் பதினைந்து பேராவது குருசாமி வீட்டில் சாப்பிடுவது உண்டாம். விருந்தினர்களை உபசரிப்பது ஜானகிக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.

            1930-க்குப் பின்னர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கும் பணி  நடந்தது. மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் ஊழியர்களிடையேயும தலைவர்களிடையேயும் இக்கட்சிக்கு பெரும் ஆதரவு கிடைத்தது.

            1938-ம் ஆண்டு வத்தலக்குண்டில் காங்கிரஸ் அரசியல் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு பார்வையாளராக ஜானகி சென்றிருந்தார். மாநாட்டின் துவக்கத்தில் தேசபக்தி பாடல் பாட கூட்டத்திலிருந்து யாராவது முன்வரவேண்டும் என மேடையிலிருந்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். பார்வையாளராக கீழே இருந்த ஜானகியைப் பார்த்த பலர் மேடை சென்று பாடுமாறு கேட்டுக்கொண்டனர். மேடையேறி ஜானகி தேசபக்தி பாடல்களை பாடினார். இதுதான் அவரது முதல் அரசியல் மாநாட்டு மேடை. இந்த மாநாட்டில் தான் அவர் முதல்முறையாக ஜீவா, பி. ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்ராமன் போன்ற தலைவர்களுக்கு அறிமுகமானார்.

            "ஜானகியை தீவிர அரசியலுக்குக் கொண்டு வருவது நல்லது" எனக் கருதினார் தோழர் ஜீவா. இது தொடர்பாக ஜானகியிடமும் குருசாமியிடமும் நீண்ட நேரம் வலியுறுத்தினார். அரசியலில் ஈடுபடுவதற்கான துணிவையும் தெளிவையும் தந்தார். ஜீவாவுடன் நடந்த சந்திப்பு குறித்து " முதல் சந்திப்பிலேயே என்னிடம் நீண்ட காலம் பழகிய நண்பர் போல உரையாடினார். நாட்டுவிடுதலையில் பெண்களின் பங்கு பற்றியும் சமுதாயத்தில் பெண்கள் அடிமைப்பட்டு தவிப்பது பற்றியும் எனக்கு ஒரு மணி நேரம் விளக்கமளித்தார். அந்த ஆவேசமிக்க, தேசபக்தத் துடிப்புள்ள உரைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன" என்கிறார் ஜானகி. ஜீவாவை தன் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார்.

            இதன் பிறகு தலைவர் எம்.ஆர். வெங்கட்ராமன், ஜானகியை அவரது வீட்டில் சந்தித்து, ஜானகி பாடுவதோடு நின்றுவிடாமல் கூட்டங்களில் பேசவும் வேண்டும்" என்ற வேண்டுகோளை வைத்தார். அத்தோடு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி கொள்கைகளைப் பற்றி நீண்ட நேரம் விளக்கினார். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் கம்யூனிஸ்டுகள் செயல்படுவது குறித்து ஆவேசமாக அவர் விளக்கியது ஜானகியை பிரமிக்கவும் யோசிக்கவும் வைத்தது. எம்.ஆர். வெங்கட்ராமன் மதுரை வரும்போதெல்லாம் சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து ஜானகி  வாசிக்கக் கொண்டு வருவார். "சோவியத் நாட்டைப் போன்ற அமைப்பை இந்தியாவிலும் கொண்டு வரவேண்டும். பெண்கள் சக்தி ஓரணியில் திரளவேண்டும்" என்ற சிந்தனையை ஜானகியின் மனதில் விதைத்தவர் இவர் தான்.

            ஒரு கட்டத்தில், " தெருத்தெருவாக.. வீடுவீடாகச் சென்று உண்டியல் வசூலிக்க வேண்டும்" என எம்.ஆர். வெங்கட்ராமன் ஜானகியிடம் சொல்ல அவர் அதிர்ந்து போனார். பிரபல நாடக நடிகையாக இருந்திருக்கிறோம். தெருத்தெருவாகப் போகவேண்டுமா என்ற யோசனை அவருள் எட்டிப்பார்த்தது. என்றாலும் வசதியான குடும்பத்தில் பிறந்து, பிரபல வழக்கறிஞராக திகழ்ந்து நாட்டு விடுதலைப்போரில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் எம்.ஆர். வெங்கட்ராமனே சொல்லிவிட்டார். அதை நிறைவேற்றிட வேண்டும் எனக் களத்தில் இறங்கினார். உண்டியல் மூலம் வசூலித்தார்.

            மதுரையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கும் பொருட்டு ஏ.கே. கோபாலன், பி. ராமமூர்த்தி, ஜீவா உள்ளிட்ட தலைவர்கள் அடிக்கடி மதுரை வரலாயினர். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், ஏ. செல்லையா, குருசாமி, ஜானகி போன்றோர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்காக உழைத்தனர். மதுரையில் கட்சிக்கென அலுவலகம் இல்லாததால் மதுரை வரும் ஜீவா உள்ளிட்ட தலைவர்கள் குருசாமி (ஜானகி) வீட்டில் தங்கினர். தேசபக்தி பாடல்களை பொருளுக்குத் தகுந்த உணர்ச்சியோடு பாடுவது எப்படி என ஜீவா ஜானகிக்கு பாடி காட்டிய சம்பவமும் நிகழ்ந்ததுண்டு.

            ஜானகியை மேடையில் பேச ஜீவா வலியுறுத்திபோதும் அவர் தட்டிக்கழித்து வந்தார்.. ஒரு நாள் ஒருதுண்டு பிரசுரமும் அத்தோடு சேர்ந்து ஜீவாவின் கடிதமும் ஜானகிக்கு வந்தது.  "தென்னாற்காடு மாவட்டத்தில் சோசலிஸ்ட் பிரசார சுற்றுப்பயணம்- ஜீவா, கே.பி. ஜானகி பங்கேற்கிறார்கள்" என அந்த துண்டு பிரசுரத்தில் அச்சிடப்பட்டிருந்தது. இந்த பிரசாரப்பயணத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அத்துடன் இணைக்கப்பட்ட கடிதத்தில் ஜீவா எழுதியிருந்தார்.   தர்மசங்கடமான நிலைக்கு ஆளானார் ஜானகி.

(தொடரும்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com