சச்சின் என்ன பெரிய கொம்பா?- ஒலங்கா, கேடிக், அக்தரைக் கேளுங்கள்!

சச்சின் என்ன பெரிய கொம்பா?- ஒலங்கா, கேடிக், அக்தரைக் கேளுங்கள்!

விடைகொடு ரசிகனே- சச்சின் -7

சச்சினுக்குக் கோபம் வந்து பார்த்திருக்கிறீர்களா? அது வரவே வராது. மைதானத்தில் எப்போதும் அவர் முகத்தில் தெரிவது ஒரு மிகப்பெரிய தவம் செய்யும் ஞானியின் கூர்ந்த கவனமே. அந்த கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டதில்தான் அவரது 24ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது.

ஆனால் அவர் கோபப்பட்ட ஆட்டமும் ஒன்று உண்டு. அதனால் பாதிக்கப்பட்டவர் பெயர் ஹென்றி ஒலங்கா.

ஞாபகம் இருக்கிறதா ஷார்ஜாவில் 1998-99 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஒரு நாள் போட்டித் தொடரை? அந்த தினம் 13, நவம்பர் 1998.

இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய மூன்று அணிகளும் கலந்துகொண்ட முத்தரப்பு கிரிக்கெட் தொடர். இலங்கை சொதப்பி இறுதிப் போட்டிக்கு தகுதியை இழந்தது. இறுதிப் போட்டிக்கு ஜிம்பாப்வேயும் இந்தியாவும் தகுதிப் பெற்ற நிலையில் கடைசி லீக் போட்டியில் இந்தியா ஜிம்பாப்வேயிடம் கேவலமாகத் தோற்றுப் போனது. ஜிம்பாப்வே 205 ரன்களை எடுக்க, அதைத் துரத்திய இந்திய அணி 192 ரன்களுக்கு அதிர்ச்சி அவுட் ஆனது. சச்சினின் விக்கெட் உள்பட நான்கு விக்கெட்டுகளை அந்த அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஒலங்கா வீழ்த்தி ஆர்ப்பரித்தார். கறுப்பாய் ஒல்லியாய் திரிதிரியான முடியுடன் இருக்கும் ஒலங்கா சச்சின் விக்கெட்டை வீழ்த்தியதுடன் இந்திய அணியையும் தோற்கடித்ததால் எங்களைப் போன்ற ரசிகர்கள் கோபம் அடைந்தோம்.

இறுதிப்போட்டியில் ஜிம்பாப்வே அணியை நம் வீரர்கள் நொறுக்க வேண்டும். அதே சமயம் அந்த ஒலங்காவை பின்ன வேண்டும் என்று ஆசைப்பட்டோம்.

ஆனால் நம்மை விட சச்சின் டெண்டுல்கர் செமை கடுப்பில் இருக்கிறார் என்பது இறுதிப் போட்டியில் தெரிந்தது. ஏனெனில் சச்சின் அவுட் ஆன விதத்தைப் பார்த்து சகவீரரான அஜய் ஜடேஜாகூட நக்கல் அடித்ததாகப் பேச்சு.

இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே முதலில் பேட் செய்து 192 ரன்கள் எடுத்தது. இனி சச்சினும் கங்குலியும் ஓபனிங்.

அதில் ஒலங்கா வாங்கிய அடியைப் பார்க்க வேண்டுமே…. அவர் போட்ட ஒவ்வொரு பந்தையும் வெறியுடன் அடித்தார் சச்சின். அது பறந்தது. பாயிண்ட் திசையில் அவர் அடித்த சிக்ஸரைப் பார்த்து எல்லோரும் குதித்தோம். அதற்கு அடுத்த பாலில் 4 ரன்கள். எதிர்முனையில் இருந்த கங்குலி ஓடி வந்து ’’வேணாம் கொஞ்சம் பார்த்து ஆடுங்க சோட்டே பாபு.. ” என்றார்.

’’தாதி.. சும்மா இருங்க..” சச்சினின் கோபம் முகத்தில் தெரிந்தது.

அப்புறம் ஒரே டமால் டுமீல்தான். லெக் ஸ்பின்னர் பால் ஸ்ட்ராங்கை.. நல்லா ஸ்ட்ராங்காக அடித்து சிக்ஸர் மூலமாக 50 ரன்களைக் கடந்தார். அடுத்து ஒரே அடி.. அது வானத்தில் நட்சத்திரங்களுக்குப் பக்கமாகச் சென்று கீழே இறங்கியது. ஆன்டிபிளவரும் பால் ஸ்ட்ராங்கும் அதைப் பிடிக்க ஓடி நழுவவிட்டார்கள்.

ஏம்பா சச்சினுக்கு லைப் கொடுக்கலாமா? சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவாரு.. லைப் குடுத்தா….

அன்னிக்கு ஆறு சிக்ஸ், 12 பவுண்டர் அடித்து 92 பந்துகளில் 124 ரன்களை எடுத்தார் சச்சின். ஒலங்கா ஆறு ஓவர்கள் போட்டு 50 ரன்கள் கொடுத்து காணாமல் போனார். கங்குலி அவர் பங்குக்கு கிராண்ட் பிளவர் பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்ஸர் தூக்கி பந்தை காணாமல் அடித்தார். 30 ஓவர்களில் அன்று 196 ரன்களை அனாயசமாக இந்திய அணி கடந்தது. கடைசி பந்தில் ஒரு பவுண்டரி அடித்து சச்சின் ஆட்டத்தை முடித்தார். விக்கெட் இழப்பின்றி வென்ற ஆட்டம் அது.

இன்று விராட் கோலி அடித்து ஆடுகிறார். சேவாக் பவுலர்களை உரிக்கிறார். 20-20 வந்துவிட்டது. டோனியைப் பார்த்தாலே பவுலர்கள் கதறுகிறார்கள் என்றால் அதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி என்று சச்சினைத்தான் சொல்லவேண்டும். ஆரம்பத்தில் ஒருநாள் போட்டிகளில் சச்சின் லோயர் ஆர்டரில்தான் இறக்கப்பட்டார்.  அங்கேயே ஆடி 14 அரைசதங்களை அடித்திருந்தார். 1994-ல் நியூசிலாந்தில் இந்தியா ஒருநாள் போட்டித்தொடரில் ஆடச் சென்றிருந்தபோது ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் மூன்றாவது போட்டி.

அன்றுதான் சச்சினின் ஒருநாள் போட்டி சாதனைகளுக்கான வித்து ஊன்றப்பட்டிருந்தது.  தன்னுடைய முதல் 65 போட்டிகளில் அவர் ஓபனிங் இறங்கியதே இல்லை. வழக்கமாக ஓபனிங் செய்யும் சித்துவுக்கு அன்று கழுத்துவலி. சச்சின் கேப்டன் அசாருதீனிடம் சென்று தன்னை ஓப்பனிங் இறக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டார். அஜித் வடேகர் அப்போது மேனேஜர். நியூசிலாந்து அணி 142 ரன்களுக்கு அவுட் ஆகியிருந்தது.  எளிதான இலக்குதான். எனவே இருவரும் ஒப்புக்கொள்ள, அன்று ஒபனிங் இறங்கியவர் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். கெவின் லார்சனின் பந்தில் சிக்சர்க்ளும் பவுண்டரிகளும் பறந்தன. விகெட்டைக் காப்பாற்றிக்கொண்டு ஆடும் ஓபனிங் ஆட்டங்கள் அன்றுமுதல் மாறின. 49 பந்துகளில் 82 ரன்களை அடித்தார். 15 பவுண்டரி, 2 சிக்ஸ். அன்று மேட்ச் 23 ஓவர்களில் முடிந்துவிட்டது.

2003 உலகக்கோப்பை போட்டி. பெப்ரவரி 23. இந்தியா இங்கிலாந்து இடையிலான மோதல். இங்கிலாந்து பவுலர் ஆண்டிரூ கேடிக் அதற்கு முன்னால் சச்சின் என்ன பெரிய கொம்பா என்று சொல்லியிருந்தார். அவர் வீசிய ஓர் ஓவரில் ஒரு ப்ளிக் ஆடி, பவுண்டரி. அடுத்ததே ஒரு ஹூக் ஷாட்டில் ஒரு மெகா சிக்ஸ்… கேடிக் சச்சின் யார் என்று புரிந்துகொண்டார். 52 பந்துகளில் 50 ரன்களை அடித்து சச்சின் அவுட் ஆனார்.

அதே உலகக்கோப்பையில் ஷோயப் அக்தர் கதி?

பாகிஸ்தான் 273 ரன்களை குவித்திருந்தது. இந்தியா கவனமுடன் ஆடினால்தான் வெற்றிபெற முடியும். பொதுவாக சேவாக்தான் முதல் பந்தை எதிர்கொள்வார். சச்சின் எதிர்முனையில் இருப்பார். ஆனால் அந்த ஆட்டத்தில் சச்சின் முதல் பந்தை எதிர்கொண்டார். வாசிம் அக்ரம்  வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரி. அடுத்து ஷோயப் அக்தர். ஓடிவந்து பந்தை எறிந்தது ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ். அந்த ஒவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 18 ரன்களை அடித்தார் சச்சின்.. அவ்வளவுதான் அக்தர் காணாமல் போய்விட்டார். 75 பந்துகளில் 98 ரன்கள். அத்தனைக்கு அவர்க்கு தொடையில் வலி வேறு. இந்தியா 45 ஓவர்களில் வென்றது.

இதுபோல எத்தனையோ பவுலர்களை பின்னி பெடலெடுத்த சச்சினுக்கு மெல்ல மெல்ல வயதின் தாக்கம் இடுப்பு வலி, டென்னிஸ் எல்போ எனப்படும் முழங்கை வலி, கால்மூட்டு உடைதல் என்று உடல் கோளாறுகள் வந்தன. சாதாரணமாக எந்த வீரருக்கும் இந்த தொல்லைகள் அவர்களை ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற வைத்துவிடும். ஆனால் இவற்றை சச்சின் தன் கவனமான பயிற்சிகள் மூலம் வென்றார். பேட்டின் எடையைக் குறைத்தார். புல் ஷாட் ஆடுவதைத் தவிர்த்தார். ஸ்பின்னர்களை ஏறிவந்து அடிப்பதை நிறுத்தினார்.  24 ஆண்டுகள் அவரது கிரிக்கெட் வாழ்வு தொடர்ந்ததன் பின்னால் ஒரு தனிமனிதனாக அவர் மேற்கொண்ட கவனமான உழைப்புதான் அடங்கி இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com