சமஸ்கிருதம் செத்த மொழியா? - அறம்பொருள் இன்பம்-சாரு பதில்கள் - 4

சமஸ்கிருதம் செத்த மொழியா? - அறம்பொருள் இன்பம்-சாரு பதில்கள் - 4

கேள்வி: சம்ஸ்கிருதம் செத்து விட்டது என்று சொல்கிறாரே மனுஷ்ய புத்திரன்?

ரங்கநாதன். ஆர்.

பதில்: கேள்விப்பட்டேன்.  சம்ஸ்கிருதம் என்றைக்குமே பாமர மக்களின் பேச்சு மொழியாக இருந்ததில்லை.  அது அறிஞர்களின் மொழி.  விஞ்ஞானிகளின் மொழி.  எனவே, வியாசனும், வால்மீகியும்   காளிதாஸனும், பாஸனும், பர்த்ருஹரியும், அற்புதமான கவித்துவத்தைக் கொண்ட வேதங்களும் இருக்கும் வரை சம்ஸ்கிருதம் இருக்கும்.  இன்றைய தினம் தமிழே அறிஞர்களின், புத்திஜீவிகளின், எழுத்தாளர்களின் மொழியாகி விட்டது.  தமிழ் சரியாக எழுதத் தெரிந்தவர்கள் ஊருக்கு நூறு பேர் கூட தேற மாட்டார்கள்.   தமிழ் இப்போது பேச்சு மொழி ஆகி விட்டது.  

இன்னொரு முக்கியமான விஷயத்தை மனுஷ்ய புத்திரன் மறந்து விட்டார்.  ஒரு ஆலம் விதை மண்ணில் விதைந்து மரமாகி விழுது விட்டு மாபெரும் விருட்சமாக வளர்ந்திருக்கும் நிலையில் அதன் வித்து செத்து விட்டது என்று யாரேனும் சொல்வார்களா?  மலையாள மொழியில் மூன்றில் ஒரு பங்கு சம்ஸ்கிருதம்தான்.  தமிழில் அந்த அளவுக்கு இல்லையென்றாலும் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றுக்கொன்று கொடுத்து வாங்கிக் கொண்டவை.  எனவே, இந்த மொழிகளிலும் சம்ஸ்கிருதம் தன் ஜீவனை வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.  ஏன், மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் கூட சம்ஸ்கிருதம் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறது? 

மதச் சண்டைகளை அரசியல்வாதிகள் செய்யட்டும்; கவிஞன் அதைச் செய்யலாமா?  ஒரு கவிஞன் எப்படி ஒரு மொழியை வெறுக்க முடியும் என்று எனக்குப் புரியவே இல்லை.   

 கேள்வி: மனிதப் பிறவியின் நோக்கம் என்று நீங்கள் எதை சொல்வீர்கள்?

எஸ்.அருண்பிரசாத்

பதில்: ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் வாழ்க்கைச் சரிதத்தைப் படித்தால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.  ஐம்பதே ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அந்த மகான் ஆறு மாத காலம் நிர்விகல்ப சமாதியில் இருந்தவர்.  நிர்விகல்ப சமாதி என்பது ஆத்மா உடலை விட்டுப் பிரிந்து பஞ்சபூதங்களோடு கலந்து இருத்தல்.  அப்பேர்ப்பட்ட ராமகிருஷ்ணர் மனிதப் பிறவியின் நோக்கம் இறை சக்தியை உணர்தல் என்கிறார்.  ஒரு மனிதன் எந்த உயிரையும் இம்சிக்காமல், வாடிய பயிரைக் கண்ட போதும் வாடுகின்ற மனதோடு வாழ்ந்தாலே அந்த நிலையை எட்டி விடலாம் என்பது என் கருத்து.  அந்த நிலையில் ஒரு மரத்தோடும் உங்களால் உரையாட முடியும்.  தொடர்பு மொழி தான் வேறாக இருக்கும். 

அரிது அரிது மானிடர் ஆதல் அரிது என்றார் ஔவை.  ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை.   என் நண்பரின் பக்கத்து வீட்டில் ஒரு மாபெரும் விருட்சம் இருந்தது.  எத்தனையோ பட்சிகள் அங்கே வாசம் செய்து வந்தன.  ஒருநாள் வீட்டுக்காரர் அந்த மரத்தை அடியோடு வெட்டிப் போட்டார்.  தரையில் இலைகள் கொட்டி குப்பை ஆகிறது என்பது காரணம்.  நூற்றுக் கணக்கான பட்சிகள் இல்லம் இழந்து எங்கோ போய் விட்டன.  மழை வேண்டும் மழை வேண்டும் என்றால் எப்படிப் பெய்யும்?  இது போன்ற மனிதர்களைப் பற்றி பாரதி பாடிய பாடலைப் படித்திருப்பீர்கள்.

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக்கு இரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

கேள்வி:

சுழியத்தால் ஞாலம் புகழை அடைந்தார்

வழிதனி கொண்டு படைத்தார் – செழித்த

உரைநடை யால்தமிழ் மேலும் வளர்த்தார்

திரைகடல் மாண்புற்ற சாரு

(சுழி=ஸீரோ டிகிரி)

ஆன்மீகத்தில் மூழ்கிய நம் சமூகம் காமத்தால் கரை புரளும் முரணுக்குக் காரணம் என்ன?

 

நம் குடும்பம், சுற்றம், ஆசான், கல்வி முறை, அரசாங்கம் மற்றும் அது சாரா அமைப்புகள் யாவுமே நம் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை வழக்கப்படுத்தாதற்குக் காரணம் என்ன?  அவர்களைத் தடுப்பது எது?

பெ. உலகநாதன், பெங்களூர்.

பதில்: வெண்பாவுக்கு நன்றி.  உங்கள் முதல் கேள்வி.  நம் சமூகம் ஒன்றும் ஆன்மீகத்தில் மூழ்கிக் கிடக்கவில்லை.  உலகிலேயே அதிக மதங்கள் தோன்றிய நாடு இந்தியா, இங்கேதான் எண்ணற்ற ஆன்மீக புருஷர்கள், ஞானிகள், சூஃபிகள், சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.  ஆனால் அதற்கும் மக்கள் கூட்டத்துக்கும் தொடர்பு விட்டுப் போய் பல காலம் ஆகிறது.  மக்கள் யாருக்கும் குற்றம் செய்வதில் பயம் இருப்பதாகத் தெரியவில்லை.  கொள்ளை அடிப்பது,  மலையையே வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்வது, பெண்களை வன்கலவி செய்து கொலை செய்வது,  கோடிக் கணக்காக தேசத்தின் சொத்தைச் சூறையாடுவது போன்ற எல்லா தீமைகளையும் செய்து விட்டு கடவுளிடம் செல்கிறார்கள்.  தேசத்தில் குற்றங்கள் பெருகப் பெருக கோவில்களில் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  இதெல்லாம் ஆன்மீகமா?

மக்களுக்குப் பேராசை அதிகமாகி விட்டது.  அதனால்தான் கோவிலுக்குப் போகிறார்கள்.  இதற்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமில்லை.  மேலும் நம் நாட்டு மக்கள் காமத்தில் ஒன்றும் கரை புரளவில்லை.  தேகத்தின் பசிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.  இப்போது ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் எத்தனை வயதில் திருமணம் ஆகிறது என்று உங்களுக்குத் தெரியும்?  30 வயதில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்வதெல்லாம் மிகவும் சகஜமாகி விட்டது.  அந்த வயது வரை ஒரு பெண்ணும் ஆணும் தன் தேகத்தின் தேவைக்கு என்ன செய்வார்கள்?  நம் நாட்டில் ஒரு ஆணும் பெண்ணும் பூங்காவிலோ கடற்கரையிலோ சேர்ந்து அமர்ந்திருந்தால் திருமணச் சான்றிதழ் கேட்கிறது போலீஸ்.  லத்தியால் அடித்துத் துரத்துகிறார்கள்.  காதலிப்பவரெல்லாம் கிரிமினல்களா?  ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் ஆகாமல் எங்கேயும் அறை எடுக்க முடியாது.  நட்சத்திர ஓட்டல்களில் கூட அது சாத்தியம் இல்லை.  சரி, பாலியல் தொழிலாளிகளிடம் செல்லலாம் என்றால் அங்கேயும் வந்து உள்ளே பிடித்துப் போட்டு விடுகிறது போலீஸ்.  புகைப்படமும் பத்திரிகையில் வந்து விடும்.  முன்பெல்லாம் அழகி கைது என்று பெண் படம் மட்டும் வரும்.  இப்போதெல்லாம் அழகியிடம் போன அழகனின் படமும் வந்து விடுகிறது.  அதை விட அவமானமும் தண்டனையும் வேறு ஏதும் உண்டா?  அழகனோடு சேர்த்து அவனுடைய குடும்பத்துக்கே ஆப்பு.  தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.  எல்லாம் ஒரு ஐந்து நிமிட சுகத்துக்காக.  சமூகம் முழுமைக்குமாக கலாச்சாரத்தின் பெயரால் செக்ஸை இப்படி அடக்க அடக்க அது எரிமலை வெடிப்பது போல் வெடிக்கிறது.  அதன் விளைவைத்தான் தினந்தோறும் தினசரிகளில் படித்துக் கொண்டிருக்கிறோம்.  சமீபத்தில் மூன்று வயதுக் குழந்தை ஒன்றை ஒருவன் வன்கலவி செய்திருக்கிறான்.  

உங்களுடைய இரண்டாவது கேள்வி.  ஆங்கிலேயன் வகுத்துக் கொடுத்த கல்வித் திட்டத்தை முழுமையாக ரத்து செய்து விட்டு, இந்தியப் பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைந்த கல்வித் திட்டம் வந்தால் ஒழிய நம் குழந்தைகளின் எதிர்காலம் இருளாகத்தான் தெரிகிறது.  எனக்குத் தெரிந்த ஒரு ஐஐடி பேராசிரியர்.  தன் மனைவியையும் மகனையும் அடிமைகளைப் போல் நடத்துகிறார்.  பெல்ட்டால் அடிக்கிறார்.   சைக்கோவைப் போல் நடந்து கொள்கிறார்.  இன்னொரு ஐஐடி கோல்ட் மெடலிஸ்ட்.  பெரிய உத்தியோகத்தில் இருக்கிறார்.  நாகேஸ்வர ராவ் பூங்காவில் வந்து எல்லா பூக்களையும் பறித்துக் கொண்டு போய் விடுகிறார்.    எல்லோரும் பணம் பண்ணும் எந்திரமாகி விட்டார்கள்.  நல்ல பழக்கம் எப்படி வரும்?  சிறு வயதிலேயே அதைக் கற்பிக்க வேண்டும்.  ஆபாசமான சினிமாவை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு,  பிள்ளைகளை படி படி என்று சித்ரவதை செய்கிறார்கள் பெற்றோர்கள்.  95 மதிப்பெண் எடுத்தால் கூட ஏச்சும் பேச்சும் தான்.  உன்னோடு படிக்கும் அந்தப் பையன் 98 எடுத்திருக்கிறானே, நீ ஏன் எடுக்கவில்லை?  பிள்ளைகள் ஸைக்கோ மாதிரியே நடந்து கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள்.  பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் பல மாணவர்களைப் பார்த்திருக்கிறேன்.  ஏதோ ரோபோ போலவே நடக்கிறார்கள், பேசுகிறார்கள்.  மதிப்பெண் எடுப்பதைத் தவிர வேறு ஒன்றுமே தெரியாத எந்திரங்களான இந்தக் குழந்தைகள் விடியோ கேம்ஸில் விளையாடுவதெல்லாம் கொடூரமான வன்முறை விளையாட்டுகளைத்தான். 

இலக்கியம் தெரியாது.  பாரம்பரியம் தெரியாது.  இயற்கையோடு உறவாடத் தெரியாது.  பள்ளிப் பாடங்களைத் தவிர வேறு எதையுமே படித்ததில்லை.  மாணவன் தன் பெற்றோரையும் ஆசிரியர்களையும் எதிரியாக பாவிக்கிறான்.  அவர்களோ இவனை எதிரியாக பாவிக்கிறார்கள்.  இப்படியாக நம் கல்விக் கூடங்கள் வெறும் மனநோயாளிகளைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.  இந்த மனநோயிலிருந்து கொஞ்சம் ஆசுவாசம் அடைவதற்காக பதினாறு பதினேழு வயதிலேயே குடிக்கவும் ஆரம்பிக்கிறார்கள்.  குடி வன்முறையின் ஆரம்பம்.  மனநோயோடு வன்முறையும் சேர்ந்தால் என்ன ஆகும்? 

இருபது வயது மாணவன் ஒருவனிடம் இந்த தேசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டால் அவன் என்ன சொல்லுவான் என்று யோசித்துப் பாருங்கள்.  அதற்குப் பதிலாக ஒரே ஒரு வாக்கியத்தைக் கூட சொல்ல முடியாதவனாக இருக்கிறான்.   தவறு அங்கேதான் இருக்கிறது.  

கேள்வி: தமிழின் எல்லா முக்கிய எழுத்தாளர்களும் தங்கள் உரைகளில் குறிப்பிடுவது / பரிந்துரைப்பது பிற மொழி எழுத்தாளர்களாக இருக்கின்றனர் . உதா: போர்ஹேஸ், காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ஜான் காக்தூ, கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ், ஹெர்மென் மெல்வில், தோரோ, ஹெர்மன் ஹெஸ்ஸே, மிரோஜெக், ரேமண்ட் கார்வர், செல்மா லாகர்லெவ்... இன்னும் பலர்!  ஒரு தமிழ் வாசகன் ஒரு தமிழ் எழுத்தாளரைப் படிக்கும் போது ஆயிரமாயிரம் ஆண்டுகள் வழமை வாய்ந்த தமிழ் இலக்கியப் பரிந்துரைகள் இருப்பதில்லை என்பது போக... குறிப்பிட்ட அயல் மொழி இலக்கியங்களைப் படிக்க முடியும் ஒரு தமிழ் வாசகன் மீண்டும் ஏன் தமிழ் எழுத்துக்களைப் படிக்க வெண்டும்?

P. வித்யாசாகர்.

பதில்: அயல்மொழி இலக்கியத்தைப் படிப்பது தமிழ் இலக்கியத்தை மறப்பதற்கோ அதிலிருந்து விலகி ஓடுவதற்கோ அல்ல.  இன்று நமக்குக் கிடைக்கும் அயல் மொழி எழுத்தாளர்கள் யாவரும் ஒரே மொழியைச் சேர்ந்தவர்கள் அல்லர்.   பரந்து பட்ட இந்த உலகின் பல்வேறு மொழிகளைச் சேர்ந்தவர்கள்.  இவர்களைப் படித்தால் நம் இலக்கிய அனுபவம் இன்னும் விசாலமடையும்.  பாரிஸ் நகரின் பஸ்களில் அந்த நாட்டின் இலக்கியக்கர்த்தாக்களின் மேற்கோள்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.  அதில் நான் திருக்குறளையும் பார்த்தேன்.  எனவே நீங்கள் தமிழ் மொழி என்று தனியாகப் பார்க்க வேண்டாம்.  எல்லா மொழி இலக்கியத்தையும் படிப்பது போல் தமிழ் இலக்கியத்தையும் ஒருவர் வாசிக்க வேண்டும்.  ஆனால் என்னைக் கவலை கொள்ள வைக்கும் விஷயம் என்னவென்றால், மார்க்கேஸையும் காஃப்காவையும் தெரிந்த தமிழர்களுக்கு ருத்திரசன்மனைத் தெரியவில்லை.  (அகநானூறைத் தொகுத்தவர்.)  அப்பரையும் ஆண்டாளையும் தெரியவில்லை.  கொஞ்ச காலத்துக்கு இந்த மொழிபெயர்ப்பு எல்லாவற்றையும் நிறுத்தி வைத்து விட்டுத் தமிழ் இலக்கியத்தை வாசித்து விட்டு வரலாம் என்று தோன்றுகிறது. 

கேள்வி: அகதிகள் என்று நம்மால் பெயர் சூட்டப்பட்ட நம் குலத்தைச் சார்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு எப்பொழுது  இந்தியாவில் குடியுரிமை  கொடுப்பார்கள்.

ஜோ.எமிமா

சென்னை.

பதில்: எப்போதுமே கொடுக்க மாட்டார்கள் எமிமா.  இந்தியாவில் இந்தியர்களையே அகதிகளை விடவும் கேவலமாக நடத்தும் போது வெளிநாட்டைச் சேர்ந்த தமிழர்களுக்கா குடியுரிமை கொடுப்பார்கள்?  மேலும், வட இந்தியர்களுக்கு தமிழர்களை நினைத்தால் அடிவயிறு கலங்கும்.  ஒரு காலத்தில் தனிநாடு கேட்டவர்களாயிற்றே என்றுதான் வடக்கில் தமிழர்களைப் பற்றி நினைக்கிறார்கள்.  தமிழர்கள் எல்லோரையுமே அவர்கள் பிரபாகரனாகத்தான் பார்க்கிறார்கள்.  பொதுவாக, தமிழர்கள் பற்றிய வட இந்தியர்களின் உளவியல் அதுதான்.  அந்த பயத்தினாலேயே அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள்.  ஐரோப்பாவிலும் கனடா, ஆஸ்திரேலியாவிலும் ஒதுங்கியவர்களின் வாழ்க்கை பரவாயில்லை.  தாய்நாட்டை விட்டுப் பிரிந்திருக்கும் மீளாத் துயரம் இருந்தாலும் அங்கெல்லாம் மனிதனை மனிதனாக மதிக்கும் சமத்துவம் வந்து விட்டது. 

கேள்வி:இந்தியக்கலை, கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் கலையுணர்வற்ற சினிமா ஆட்களை எதிர்காலத்தில் எப்படி கையாள்வது? (சமீபத்தில் அப்படிப்பட்ட ஒரு இயக்குனரை நீங்கள் சாடியதற்கு மிக்க நன்றி).
கே. ராமசாமி

பதில்: நம்மால் கையாள முடியும் நிலையில் அவர்கள் இல்லை.  அவர்களிடம்தான் கோடி கோடியாய் பணமும் அதிகாரமும் இருக்கிறது.  அவர்கள்தான் மக்களின் வழிபாட்டுக்குரிய தெய்வங்களாகவும் இருக்கிறார்கள்.   எனவே இணைய தளத்தில் நம் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டு ஒதுங்கிப் போக வேண்டியதுதான்.  வேறு வழியில்லை.  ஆனால் ஒன்று, இவர்கள் இப்படிக் கேவலப்படுத்துவதால் கலை கலாச்சாரத்துக்கு ஒரு கேடும் வந்து விடாது.  கார்ல் மார்க்ஸ் ஒருமுறை சொன்னார், உலகமே அழிந்தாலும் பீத்தோவனின் இசை அழியாது என்று.  அதே வார்த்தை நம்முடைய கர்னாடக சங்கீதத்துக்கும் பொருந்தும்.  மக்கள் அதைக் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, கர்னாடக சங்கீதம் உயிரோடு இருக்கும்.  அதை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கும் ரசிகர்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். 

கேள்வி: நம்மைச் சுற்றியுள்ள நிஜ உலகம் கற்றுத் தந்ததை விடவும் கதைகள் நமக்கு அதிகம் கற்றுத் தருகின்றன என்று சொல்கிறார்கள்.  எனில் சக மனிதர்களின் வாழ்வில் கதைகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஆர்.எஸ்.பிரபு, சென்னை- 90.

சமயங்களில் புத்தகங்களை விட நிஜ உலகம் அதிகமாகக் கற்றுத் தரும். சமயங்களில் நிஜ வாழ்க்கையை விட புத்தகங்கள் அதிகம் கற்றுத் தரும்.  இரண்டுமே உண்மைதான்.  எது உசத்தி என்றெல்லாம் சொல்ல முடியாது.  மேலும், நிஜ வாழ்வையும் புத்தகத்தையும் யார் எதிர் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் இது அமைகிறது.  தரிசனமும் கலாஞானமும் நிரம்பப் பெற்றவருக்கும் பாமரருக்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா?  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற வார்த்தைகளுக்கான அர்த்தத்தை நான் ஃப்ரான்ஸில் கண்டேன்.  எந்த அளவுக்கு ஃப்ரெஞ்சுக்காரர்கள் சக மனிதர்களைப் பேணுகின்றார்கள் என்றால் பாரிஸ் நகரின் பல பகுதிகள் மொராக்கோ, அல்ஜீரியா, மாலி போன்ற Maghreb நாடுகளைச் சேர்ந்தவர்களின் ஊர்களாகி விட்டன.  லா சப்பல் போன்ற பகுதிகள் இலங்கைத் தமிழர்களின் ஊர்களாகி விட்டன.  ஒரு மெத்ரோவில் ஏறினேன்.  இரவு நேரம்.  பத்து பேர் இருந்தார்கள்.  ஐந்து கறுப்பின மக்கள்.  மூன்று இலங்கைத் தமிழர் மற்றும் நான்.  ஒரே ஒரு ஃப்ரெஞ்சுக்காரர்.  இதனால் பாரிஸின் அமைதி போய் விட்டது.  திருட்டு அதிகமாகி விட்டது.  ஃப்ரெஞ்சுக்காரர்கள் பலர் பாரிஸை விட்டு உள்ளே வேறு நகரங்களுக்கும் சிற்றூர்களுக்கும் போய் விட்டனர்.   பாரிஸ் நகரமே அகதிகளின் ஊராகி விட்டது.  இந்த மனப்பான்மை எந்த தேசத்தவருக்கு வரும்?  நாம் விடுவோமா?  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று எத்தனையோ முறை படித்திருக்கிறேன்.  ஆனால் பாரிஸுக்கு நேரில் சென்று பார்த்த போதுதான் அவற்றின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன். 

அதேபோல் நிஜ வாழ்வை விட புத்தகங்கள் என் வாழ்வையும் சிந்தனையையும் மாற்றியதும் நடந்திருக்கிறது.  தருண் தேஜ்பாலை சர்வதேச இலக்கிய விழாக்களின் இரவு விருந்துகளில் மூன்று முறை சந்தித்திருக்கிறேன்.  என்னை அழைத்து மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்.  தெஹல்காவில் எழுதியிருக்கிறேன் என்ற முறையில் என்னை அவருக்குத் தெரிந்திருந்தது என்று நினைத்துக் கொள்வேன்.    நள்ளிரவு வரை பேச்சு தொடரும். பல எழுத்தாளர்களைப் போல் அவரே அறுக்காமல் நான் பேசுவதையும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பார்.  அப்போது எனக்கு அவர் தெஹல்கா ஆசிரியர் மட்டுமே.  நாவல் எழுதியிருக்கிறார் என்று தெரியும்.  ஆனால் படித்ததில்லை.  எல்லா பஞ்சாபிகளையும் போலவே சத்தம் போட்டுப் பேசுவார்.  மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்களைப் போல் சிப்பந்திகளிடம் எல்லாம் ஆங்கிலத்தில் பேசி அலட்டாமல் சாதாரணமாக இந்தியில் பேசுவார்.  திருவனந்தபுரத்தில் முதல் சந்திப்பு.  இவர் பேசிய இந்தி அந்த மலையாளி சிப்பந்திக்குப் புரிந்தது.  ஏனென்றால், இவர் சொன்ன வாக்கியத்தில் இருந்த ஒரு வார்த்தை.  (அரே பாய்… க்யா யார்…  பார் பார் வடா பஜ்ஜி லே கர் ஆ ரஹே ஹோ…  சிக்கன் லே ஆவ் யார்.)

ஒருநாள் எனக்கு ஒரு ஃபோன் வந்தது.  தெரியாத எண்.  எடுத்துக் கேட்டேன்.   ”ஹாய் சாரு, நான் தான் ஸோ அண்ட் ஸோ.  எப்படி இருக்கிறீர்கள்… சௌக்கியமா?  என் பிரதர் உங்களோடு பேச வேண்டும் என்கிறார்.  அதனால்தான் ஃபோன் செய்தேன்.”  பெண் குரல்.  மேட்டுக்குடியினரின் ஆங்கிலம்.  அவர் பெயர் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.  ஆனால் அவரோ நன்கு பழகியது போல் பேசினார்.  யார் உங்கள் பிரதர் என்றேன்.  ஓ ஸாரி, தருண் தேஜ்பால். நான் மிரண்டு போனேன்.  தருண் ஏன் நம்மிடம் பேச வேண்டும்?  புரியவில்லை.  நாங்கள் ஃபோனில் பேசியதில்லை.  ஃபோனில் பேசுவதெல்லாம் தெஹல்கா எம்.டி. ஷோமா சௌத்ரி தான்.  அன்றைய தினம் தருண் பேசியது ஸீரோ டிகிரி பற்றி.  பிரமாதமான நாவல்,  இப்படி ஒரு நாவலை படித்ததே இல்லை,  இத்யாதி.  தில்லிக்கு வாருங்கள்; ஒரு மாலையில் சந்தித்துப் பேசுவோம்.

அவரை தில்லியில் சந்திப்பதற்கு முன்னால் அவர் எழுதிய ஒரு நாவலையாவது படித்து விடுவோம் என்று The Alchemy of Desire-ஐப் படித்தேன்.   படிப்பதற்கு முன்பு, ‘நட்புக்காகப் படித்து விடுவோம்.  எப்படியும் நன்றாக இருக்காது.  அதைப் பற்றிய பேச்சைத் தவிர்த்து விடுவோம்’ என்றே நினைத்தேன்.  படித்த பிறகு அந்த நாவல் எனக்குக் கொடுத்த தரிசனத்தை புதிய நாவலாகவே (புதிய எக்ஸைல்) எழுதி விட்டேன்.  1700 பக்கங்களில்.  என்ன தரிசனம் அது?  பிறந்ததிலிருந்து நம்முடனேயேதான் இருக்கின்றன மரங்களும், பட்சிகளும்.  ஆனால் ஆல்கெமியைப் படித்த பிறகு ஒவ்வொரு மரமும் எனக்கு ஒவ்வொரு போதி மரமாகத் தோன்ற ஆரம்பித்தது.  இந்தியா பூராவும் மரங்களைத் தேடி அலைந்தேன்.  ஆல்கெமி ஒரு காதல் கதைதான்.  ஆனால் அதில் நான் அடைந்த ஞானம், அண்டமும் பிண்டமும் பற்றியது. 

புத்தகங்களின் மூலம் இப்படியும் நடக்கலாம்.  (பிறகு நான் தருணை கோவா சிறையில் தான் சந்திக்க நேர்ந்தது விதியின் விளையாட்டு என்றுதான் சொல்ல வேண்டும்.)

கேள்வி: வாழ்க்கையை அறிவு சார்ந்து வாழ்வதா அல்லது அனுபவம் சார்ந்து வாழ்வதா?

இரா. முரளி

பதில்: அறிவின் மூலமாக அனுபவத்தையும், அனுபவத்தின் மூலமாக அறிவையும் உணர்ந்து ஞானம் என்ற இடத்தை அடைவதே வாழ்க்கை. 

கேள்வி: காதல் தோல்விகளைக் கடந்து வர யோசனை சொல்லுங்கள் குருவே...
ஜேம்ஸ் ஆண்டர்சன்

பதில்: எனக்கு இந்த விஷயத்தில் நேரடி அனுபவம் கிடையாது என்பதால் அராத்துவிடம் கேட்டேன்.  அவர் சொன்னார்: காதலில் தோற்றதும் உடனடியாக அதை விடக் கடுமையாக, தீவிரமாக இன்னொரு  பெண்ணைக் காதலிப்பதுதான் ஒரே வழி.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com