சரிவிலிருந்து எழுச்சி!

சரிவிலிருந்து எழுச்சி!

ஆட்டத்தை முடிப்பவன் -2

2007 உலகக்கோப்பைக்குச் செல்லும் முன்பாக இரண்டு ஒருநாள் தொடர்களில் இந்தியா வென்றிருந்தது. திராவிட் தலைமையிலான அணி சுமாராகவாவது செயல்படும் என்று எண்ணப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பு பொய்த்தது வங்கதேசத்துடனான முதல் போட்டியிலேயே இந்திய அணி மண்ணைக் கவ்வியது. இதில் தோனி எடுத்த ரன்கள் பூஜ்யமே. அடுத்ததாக பெர்முடா அணியை வென்று, அதன் பின்னர் இலங்கை அணியை நல்ல ரன் விகிதத்தில் வென்றால்தான் சூப்பர் எட்டு போட்டிகளுக்குத் தகுதி பெறமுடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. பெர்முடா ஒரு சொத்தை அணி என்பதால் இந்திய அணி வென்றுவிட்டது. அடுத்து இலங்கை அணியுடனான போட்டியில் அது 254 ரன்களை எடுத்தது. இந்தியா இந்த இலக்கை எளிதாக துரத்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. தோனி இந்த போட்டியிலும் பூஜ்யமே. முரளிதரனின் பந்துவீச்சில் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ. முரளி அப்பீல் கேட்பதற்கு முன்பாகவே தோனி நடையைக் கட்டி விமர்சனத்துக்குள்ளானார்.

இந்திய ரசிகர்கள் இந்த கேவலமான செயல்பாட்டை ஏற்கவில்லை. கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே அவமானத்துக்குள்ளானார்கள். பயிற்சியாளர் கிரேக் சாப்பல் பதவி விலகினார்.. மூத்த பந்து வீச்சாளர் கும்ப்ளே ஓய்வு பெற்றார். கேப்டன் திராவிடின் பதவியும் ஊசலாடியது. “ தோல்விக்கு திராவிட் மட்டுமே காரணமில்லை. இருந்தாலும் எதிர்காலத்தை மனதில் வைத்து இளைஞர் ஒருவரை தயார்ப்படுத்தவேண்டும்,” என்றார் பிசிசிஐ செயலாளர் பிரித்வி ஷா.

தோனிக்கு உலகக்கோப்பை போட்டிகளை ஒட்டி மோசமான அனுபவங்களும் ஏற்பட்டன. வங்கதேசத்திடம் ’டக் அவுட்’ ஆனதும் ராஞ்சியில் சில ரசிகர்கள் தோனி புதிதாக கட்டிக்கொண்டிருந்த வீட்டைத்தாக்கினர். இந்த தாக்குதலில் ஒரு சுவரே சேதம் அடைந்துவிட்டது! இலங்கைக்கு எதிரான போட்டியில் மீண்டும் ”டக் அவுட்’ ஆனபோது தோனியின் பழைய வீட்டுக்கும் கட்டிக்கொண்டிருக்கும் இல்லத்துக்கும் போலீஸ் காவல் போடவேண்டியதாயிற்று!

இதைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு இந்தியா விளையாடச் சென்றது. உலகக்கோப்பையில் தோற்றதற்குப் பழிவாங்க இந்த தொடர் பயன்படுத்தப் பட்டது.

ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் ஆபத்து காத்திருந்தது. முதலில் ஆடிய வங்க தேச அணி 250 ரன்களை எடுத்தது. இந்தியா ஆடியபோது 114 ரன்களுக்கு ஐந்து விக்கெட் காலி. தோனியும் கார்த்திக்கும் களத்தில் இருந்தனர். தோனி இந்த ஆட்டத்தில் இரண்டாவது ஆட்டக்காரராக களம் இறங்கி இருந்தார். கார்த்திக்குடன் சேர்ந்து 100 ரன்களூக்கு மேல் குவித்து அணியை வெற்றிபெறச்செய்தார் தோனி. அவரது ரன்கள் 91. இந்த ரன்களை அவர் எடுத்த விதம் முக்கியமானது. 39 ரன்கள் எடுத்திருந்தபோது அவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு ஓடமுடியவில்லை. யுவராஜ் சிங் ‘ரன்னராக’ இறக்கப்பட்டார். தோனியின் கால்கள் வேகமாக இயங்காது என்பதால் வங்கதேச பந்துவீச்சாளர்கள் அவருக்கு வெளியே செல்லும் பந்துகளை வீசினர். ஆனால் தோனி சமாளித்து ஆடினார். ஒற்றை, இரட்டை ரன்களாகவே சேர்த்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்றார்.

“தோனி ஒரே மாதிரி ஆடமாட்டார். சூழ்நிலைக்கு ஏற்ப வேகமாகவோ மெதுவாகவோ ஆடுவார் இந்த சின்ன வயதில் இந்த முதிர்ச்சியான அணுகுமுறை அவருக்கு இருப்பது பாராட்டத்தக்கது” என்று புகழ்ந்தார் திராவிட்.

இதன்பின்னர் வங்கதேச தொடரை எளிதாக வென்ற இந்தியா மேலும் சில ஆட்டங்களுக்குப் பின்னர் இங்கிலாந்து சென்றது. அங்கே ஆச்சரியகரமாக டெஸ்ட் தொடரை வென்றது. முதல் டெஸ்ட்டின் இரண்டாம் இன்னிங்ஸில் தோனி 76 ரன்களை எடுத்து கடைசிவரை ஆடி ட்ரா செய்து கொடுத்தார். இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா வென்றது. மூன்றாவது ஆட்டம் டிரா. இந்த சமயத்தில்தான் அந்த அறிவிப்பு வந்தது. ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்டார். அப்போது அறிவிக்கப்பட்டிருந்த டி20 உலகக்கோப்பை அணியின் கேப்டனாகவும் தோனியே அறிவிக்கப்பட்டார்!

தோனி எப்படி கேப்டன் ஆனார்?

இதற்கான விடையை அப்போதைய பிசிசிஐ தலைவர் சரத்பவார் கூறுகிறார்:
“ இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது திராவிட் என்னிடம் கேப்டன் பதவியை விட்டு விலக விரும்புவதாகக் கூறினார். அப்படியென்றால் புதிதாக யாரைப் போடுவது நீங்களே சொல்லுங்கள் என்றேன். அவர் சச்சினை  நியமியுங்கள் என்றார். நான் சச்சினை கூப்பிட்டுக் கேட்டேன். அவர் நான் வேண்டாம். இளம் ஆட்டக்காரர் யாரையாவது போடுங்கள். தோனிதான் இதற்குச் சரியாக இருப்பார்! என்று சொன்னார். அதன் படி தோனியை தேர்வு செய்தோம். சச்சினின் கணிப்பு மிகச்சரியாக இருந்தது”

26 வயதில் டி20 அணி கேப்டனாக தென்னாப்பிரிக்காவுக்கு தன் அணியுடன் தோனி கிளம்பினார். தன்னை சிறந்த தலைமைப்பண்பு உடையவனாக நிரூபிக்க இது ஒரு அரிய வாய்ப்பு! அவருக்கு முன்னால் அணியில் இடம் பிடித்தவரான யுவராஜ் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் தன் தகுதியை நிரூபிக்கவேண்டிய கட்டாயம் தோனிக்கு! அவர் மிக எளிதாக அதைச் செய்தார். இந்த டி20 உலகக்கோப்பை வெற்றி தோனியின் பாதையில் முக்கியமான திருப்பம்!

(மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை அலசும் இத்தொடர் புதன் தோறும் வெளியாகும்)

ஏப்ரல்   24 , 2019  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com