ச.விசயலட்சுமி

கவிதைத்திருவிழா
Published on

மரபின் எச்சம்

நீ சிரிக்கும்போது
நானும் சிரித்தேன்

நான் அழுகையில்
நீயும் அழுதாய்

அவரவராகவே
சுயமாயிருக்கிறோம்

இருள்கவியும் மாலை
நனைக்கவரும் அலையில்
நனையாமல் காக்க
தொட்டுத் தூக்கியம்
என் மனத்தில் முட நாற்றம்
உடல் குறுகினேன்

மரபின் எச்சம்
இன்னும் என்னுள்

****** ***** *****

முகவரி

குனிந்த தலை
கிளிப்பேச்சு
அன்ன நடை
அலங்காரப் பொருட்கள்
என
அடுக்கியதுபோதும்

என் முகவரி தேடினால்
நான் துறந்தவற்றைத்
தொடுப்பதேன்

உடல்மேயும் விழிகளே
எம் உயிர்த்துடிப்பைச்
சுவாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

****** ***** *****

வரைபடம்

காலம்
வரைய ஆரம்பித்த

வரையும் முன்பே
கண்காட்சிக்கூட்டம்

திரைமூட முயன்றும்
மொய்த்த கூட்டம்

கலைகளை ரசிக்கக்
கற்றுக்கொள்ள வேண்டுமென
முழுங்கியதன் தொடர்ச்சியில்

ஈட்டிகளால் கிழிக்கப்படுகிறது
வரைபடம்

****** ***** *****

இளப்பாறல்

அதிகாலைத் தொடங்கும் ஓட்டம்
நடுநிசி வரை
இளைப்பாறல்கள் கனவுகளாக
கனவுகள் முழுவதும்
வெற்றிடமாயினும்
ஈடுபாட்டுடன் செய்கிறோம்
ஒவ்வொரு பணியையும்

பன்முக மத்தளமாய்
பசிக்கு விள்ளப்படும் உணவாய்
அள்ள அள்ளக் குறையாத
அமுதசுரபியாய்

****** ***** *****

மௌனம்

சிந்தா ஓவியமென வாழ்வு
சாதனையெனக் கலந்த கலப்பு மணம்
நாட்கள் கடந்ததில்
அடிக்கடி வெடிக்கிற
மௌனம்

****** ***** *****

சிநேகம்

பத்து நிமிடப் பயண தூரம்
செல்பேசிக் கைகளோடு
பேசிக்கொள்கிறோம்
மாதம் ஒருமுறை
ஒருசில நிமிடங்கள்

****** ***** *****

வியக்கும் கண்கள்

அலங்கார அறை
ஏற்றப்பட்ட விளக்கு
மலர்கள் மிதந்த படுக்கை
அருகே பண்டங்களும் பாலும்

சேலை சரசரக்க உள்நுழைவு
கண்களில் உறக்கச் செறிவு
இதையும் கடந்து
பண்டங்கள் வியக்கும் கண்கள்
பண்டமே தான்தான் என்பதறியாமல்

****** ***** *****

பேச்சு

பேசிவிட வேண்டும் தெளிவான முடிவுடன்
நீளும் நினைவுகள் நிறுத்தப்படுகின்றன

பேசுவது யாருக்கும் கேட்காமலும் இருக்கலாம்
தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்


சென்னையில் பள்ளிக்கூட ஆசிரியையாக பணிபுரியும் ச. விசயலட்சுமியின் முதல் கவிதைத் தொகுப்பு ‘பெருவெளிப் பெண்’. வாழ்க்கையின் நடைமுறைகள் பற்றிய தெளிவோ, சுற்றியிருக்கும் சமூகம் குறித்த எண்ணங்களோ தோன்றாத பதின்மை வயதுகள் என் வாழ்வின் கவிதைக் காலங்கள் என்கிறார் கவிஞர். சமீபத்தில் தமிழ்க் கவிதைப் பரப்பில் பரந்து விரிந்து தளைத்திருக்கும் பெண் கவிதை மொழியில் புதிய குரலாக ஒலிக்கிற விசயலட்சுமியின் கவிதைகள். இவரது கவிதைகளில் பெண்ணின் உடல்சார்ந்த பதிவுகள் உரத்து இல்லாமல் மௌனமாக பதிவாகியுள்ளது.

மார்ச் 22, 2008

logo
Andhimazhai
www.andhimazhai.com