கருத்து சுதந்திரம்

சா.கந்தசாமியின் எழுத்தோவியம்-22
கருத்து சுதந்திரம்
Published on

கருத்து என்பது ஒன்று. சுதந்திரம் என்பது இன்னொன்று. அதாவது இரண்டும் ஒன்றில்லை.ஆனால் இரண்டையும் சேர்த்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. இல்லாததை இருப்பதாக சொல்வது.

கருத்து என்பதை தன்னுடையதாக வைத்துக் கொள்கிறவரையில் சிக்கலில்லை. கதைவெளியில் செல்கிறபோது சட்டம், அமைதி- என்பதெல்லாம் வந்துவிடுகிறது. அரசாங்கம் என்பது ஒன்று வந்துவிட்டதும் கதையை காப்பாற்ற சட்டம் வந்துவிட்டது.

சுதந்திரம் என்பது சட்டத்திற்கு உட்பட்டதுதான்.சட்டத்திற்கு மேலான சுதந்திரம் இல்லை. அதாவது பரிபூரண சுதந்திரம் என்பது கிடையாது. அது நிஜம், யாதார்த்தம் ஆனால் அதை எதிர்த்து சரித்திரம் முழுவதும் போராடி வந்திருக்கிறார்கள். அது நீண்ட சரித்திரம். இன்று சுதந்திரம் என்று அனுபவிக்கக் கூடையதெல்லாம் போராடிப் பெற்றதுதான். இப்படிப் போராடியவர்கள் பட்டியலில் முதலில் வருகிறவர் சாக்ரடீஸ்.

தன் கருத்து முக்கியமென நம்பினார். அதைச் சொல்ல தனக்கு உரிமை இருக்கிறது என்று நம்பினார்.எனவே அவற்றைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். அரசாங்கம் அவர் கருத்துகள் கலவரமூட்டூகிறது.

இளைஞர் சமூகத்தைக் கெடுக்கிறது என்று வழக்குத் தொடுத்தது.கீரிஸ் நாட்டில் நடைமுறையில் இருந்த சட்டத்தின்படி மரண தண்டனை கொடுத்தது.விஷம் குடித்துச் சாகவேண்டும் என்பது தீர்ப்பு.தன் கருத்தைச் சொன்னால் அரசாங்கம் என்ன மாதிரி வெகுமதி கொடுக்கும் என்பதற்கு அரிச் சுவடி. தன் கருத்தைச் சொன்ன சாக்ரடீஸ் ஓடி ஒளியவில்லை.மன்னிப்புக் கேட்கவில்லை, தன் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.தன் கருத்தை மாற்றி திருத்திச் சொல்கிறார்கள் என்று மற்றவர்கள் மீது பழி போடவில்லை.

நாட்டின் குடிமகன் என்ற பெயரில் நடைமுறையில் உள்ள சட்டத்தை மதிப்பது தன் கடமையென சொல்லி குடித்தார். அதுதான் கருத்து என்பதன் முக்கியத்தை காலம் காலமாக ஜீவிதமாக வைத்து இருப்பது.

இன்னொரு எடுத்துக்காட்டு ஏசுநாதர். அவர் தன் காலத்தின் நடைமுறைகளுக்கு விரோதமாக சமய சமூகத்திற்கு எதிராக பேசுகிறார் என்பதற்காக சிலுவையில் ஆணி வைத்து அடித்தார்கள். ஆளை, ஆணி வைத்து அடிக்க முடிந்தவர்களால் அவர் கருத்தை ஆணி வைத்து அடிக்க முடியவில்லை. அது நாடு நாடாக பரவி உலகம் முழுவதும் பரவிவிட்டது.

இவர்கள் முரட்டுத்தனமான கருத்துவெறியர்கள். தங்கள் கருத்துகளுக்காக பொறுப்பேற்றுக்கிறவர்கள்.அதன் பொருட்டு சிறிது கூட அச்சமின்றி உயிர்விடக் கூடியவர்கள். எளிய மனிதர்கள் போன்று தோற்றமளிக்கும் மகா தைரியசாலிகள்.

உலகத்தில் மகாதைரியசாலி என்று பட்டியல் போட்டால் அதில் முதல் இடம் மகா அலெக்ஸாண்டர், சீசர், அசோகர், ராஜராஜ சோழன் - என்று வராது.

சாக்ரடீஸ், ஏசுநாதர், மகாத்மாகாந்தி என்றுதான் வரும். ஏனெனில் அவர்கள் போலிகள் இல்லை.இன்னொருவரை மாட்டிக் கொள்ள வைத்துவிட்டு தப்பித்துக் கொள்ளும் தந்திரசாலிகள் இல்லை. படைகள் , ஆயுதங்கள், சூழ்ச்சித் திட்டங்கள் கொண்டவர்கள் இல்லை.

கருத்தைச் சொன்னதற்காக பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள்.அதன் காரணமாக சரித்திரம் முழுவதிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

கருத்து சுதந்திரம் என்பது சுதந்திர நாட்டில் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. அரசியல் சட்டத்தின் வழியாக வழíப்பட்டிருக்கிறது என்று தந்திரமாகச் சொல்கிறார்கள். எல்லையற்ற சுதந்திரம் இல்லை. அரசியல் சாசனத்தின் வழியாக முதலில் வழங்கப்பட்ட சுதந்திரம் திருத்தங்கள் வழியாக கட்டுப்படுத்தப் படுகிறது.முன்னதைச் சொல்லும் போது பின்னதையும் பார்க்க வேண்டும்.

தமிழ் நாட்டில் பெரியார் கருத்துச் சுதந்திரவாதி. அவர் திருமணம், கல்வி, சாதி, அரசியல் சட்டம், நீதி எல்லவற்றையும் பற்றி தனக்கென கருத்தை வைத்துக் கொண்டிருந்தார். அதை அவர் தன் வாழ் நாள் முழுவதும் பேசியும் எழுதியும் வந்தார்.அவர் பேச்சு- எழுத்து நாட்டின் சட்டத்திற்கு எதிராக உள்ளது . கலவரத்தை ஏற்படுத்துகிறது என்று அரசாங்கம் கருதியபோது கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றங்கள் அவருக்குத் தண்டனை கொடுத்தன. அவர் தன் வாழ்நாள் முழுவதும் தன் கருத்துகளை பிரசாரம் செய்துவந்தார்.அதில் சொந்த விருப்பு, வெறுப்பு ஏதும் கிடையாது.நன்பர், பகைவர் என்ற பாகுபாடு இல்லை. கருத்தையே முக்கியமாக நம்பினார்.

எனக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. அது இந்திய அரசியல் சட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ளது என பிரசாரம் செய்கிறவர்கள் திருத்தம் பற்றியும் சொல்ல வேண்டும்.

இன்னொருவரை அவதூறு செய்ய, பொது அமைதியை கெடுக்க - கலவர சூழ்நிலையை உருவாக்க சுதந்திரம் இல்லை. அப்படிச் செய்வது தண்டனைக்குரியது.

சுதந்திரம் என்பது ஓர் வரையறைக்குட்பட்டது.அது வழங்கப்படுவது. எல்லை உடையது. அது யதார்த்தம்.சுதந்திரம் எல்லையற்றது என்பது கற்பனை.

சொந்தமாக கருத்தைக் கொண்டவர்கள் சட்டம் , வரையறை என்பதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. சமூகத்தின் மீதும் மக்கள் மீதும் கொண்ட பற்றின் காரணமாக தங்கள் கருத்துகளை தைரியமாகச் சொல்கிறார்கள்.அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஒருபோதும் கவலைப்படுவதில்லை என்பது சரித்திரமாக உள்ளது.

மார்ச் 01 ,2006

அடுத்த பகுதி>>>

logo
Andhimazhai
www.andhimazhai.com