சின்ன சின்ன சா-ஷேவில் சிந்தனை பதிவுகள்

இதமாய் பெய்யும் மழை 6

தலித் பெண்ணிய அழகியல் "அரங்கமல்லிகா "

தம் வாழ்வின் மீது திணிக்கபட்ட சமூக , பொருளியல் , பண்பாட்டு வன்முறைகளை செரிக்கவியலாவிடினும் குப்பை கூடைகளாய் , தலித் மக்கள் பொறுத்து பொறுத்து குமுறல்களோடும் கனத்த மவுனங்களோடும் அடங்கி கிடந்ததொரு காலம்.தொன்னூறுகளுக்கு பிறகு ஏற்பட்ட தலித் அரசியல் விழிப்புணர்வால் தலித் சமூகத்து படிப்பாளிகளும் கலைஞர்களும் தம் வாழ்வின் மீதான வன்முறைகளை குரூரங்களை , வரலாற்று வடுக்களை தமக்கே உரிய தனித்துவமிக்க அழகியலோடும் அரசியலோடும் பதிவு செய்து வருகின்றனர்.

கவிஞராக தொடங்கி சமகால பிரச்சனைகளின் மீதான விமர்சனத்தை கட்டுரைகள் மூலம் பதிவு செய்யும் இரவிக்குமார் , தலித்களின் பொருளியல் முன்னேற்றத்திற்க்காக காத்திரமானத் திட்டங்களை முன்னுரைக்கும் திரு கிருஸ்துமஸ் காந்தி ஐ.ஏ.எஸ் மண்ணுரிமை , பெண்ணுரிமை, போராட்டங்களில் தன்னை இணைத்து கொண்டு தம் படைப்புகள் மூலம் விவாதங்களை பதிவு செய்யும் ப.சிவகாமி ஐ.ஏ.எஸ். தமிழ் அழகியல் , தலித் அழகியல் , கறுப்பு இலக்கியம் என தமிழுக்கு புது ரத்தம் பாய்ச்சும் கலை விமர்சகர் கவிஞர் இந்திரன் என்ற வரிசையில் பெண்ணியம் தலித்தியம் , தலித் பெண்ணியம் குறித்த தனது திடமான சிந்தனைகளை கருத்தரங்குகள் , கட்டுரைகள் , கவிதைகள் மூலமாக பதிவு செய்யும் சிந்தனை போராளியாய் மிளிர்பவர் கவிஞர் அரங்கமல்லிகா.

தலித் இலக்கியமும் பெண்ணியமும் , பெண்ணியக் குரலதிர்வும் தலித் பெண்ணிய உடல் மொழியும் என்ற காத்திரமான கட்டுரைத் தொகுதிகளையும் ' நீர் கிழிக்கும் மீன் ' என்ற சிறப்பான கவிதை தொகுதியையும் தொடர்ந்து முனைவர் அரங்கமல்லிகா தந்திருக்கும் கட்டுரை நூல் ' தலித் பெண்ணிய அழகியல் '

தலித் - குறித்த 13 குறுங்கட்டுரைகளை கொண்டு பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழியில் இக்கட்டுரைகளை (கவிதைகள், நாட்டுபுறபாடல்கள் , பழந்தமிழ் இலக்கியம் , அறிஞ்கர்களின் வாக்கியங்கள் என மிகச் சிறந்த எடுத்துக் காட்டுகளோடு படைத்திருப்பது அரங்கமல்லிகாவின் கைவண்ணம்.) எனினும் பெரும்பாலான கட்டுரைகள் அறிமுக நிலையிலேயே நின்று விடுவது தேர்ந்த வாசகனுக்கு ஏமாற்றமளிக்ககூடும் , அதே நேரம் தொடக்க நிலை வாசகன் வேறு வேறு செய்திகளை தேடி படிக்கும் வகையில் அமைந்திருப்பது கூடுதல் அம்சம்.

தமிழ் அழகியல் , மார்க்கீய அழகியல் , தலித் அழகியல், குறித்தெல்லாம் தமிழில் நூல்கள் வெளிவந்துள்ளதை அறிவோம் , ஆனால் இன்றைக்கும் பரவலாக பேசபடும் பெண்ணியம் குறித்து பெண்ணிய அழகியல் என்ற புதிய சங்கதியை தமிழில் முதல்முறையாக பதிவு செய்கிறது இந்த நூல்.

அதைபோலவே தலித் பெண்ணிய அழகியல் , கறுப்பு பெண்ணியம் போன்ற தமிழுக்குத் தேவையான புதிய அனுபவங்களை அறிமுகம் செய்து முன்னோடி சிந்தனையாளர்களில் ஒருவராகவே பரிணமிக்கிறார் முனைவர் அரங்கமல்லிகா.எழுச்சி என்ற தலித் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளாதலால் பக்க வரையரைக்குள் சிக்கி தவிப்பதும் சட் சட் என சிந்தனை தாவித் தாவி சென்று விடுவதும் விபத்துகள் என எடுத்து கொள்ளலாமா ..?
இந்திய விடுதலை போராட்ட களத்தில் தம்மை இணைத்து கொண்ட ஞானாம்பாள் , ரெங்க நாயகி அம்மாள் , மீனாம்பாள் , மற்றும் சொர்ணமாதேவி போன்ற தலித் போராளிகள் குறித்து அரங்க மல்லிகா முயற்சி எடுத்து விரிவான தகவல் தருவது இன்றைய தலித் சமூகத்துக்கு பயனளிக்கும் , அதைபோலவே பெண்ணிய அழகியல் , தலித் பெண்ணிய அழகியல் , கறுப்பு பெண்ணியம் போன்ற புதிய செய்திகளை தமிழ் கூறும் நல்லுலகுக்கு விரிவாக தரவேண்டிய மிகமுக்கிய சமுக பொறுப்பு அரங்கமல்லிகாவுக்கு இருப்பதை அவரே மறுக்கவியலாது.

' உடல்மொழி ' குறித்து விவாதங்களை தொடங்கி வைத்த முனைவரால் மேற் சொன்னதும் முடியும் .
தலித் சிறுகதைகள் குறித்து கட்டுரை அபூர்வமாய் முடிகிறது , வேறு சில கட்டுரைகள் மிக சிறப்பாக தொடங்கி சட்டென்று முடிந்து போவதும் வாசகனுக்கு ஏமாற்றமளிப்பதாகும் ,மெண்ணிய முழு இரவு செபத்தை போல கூடிக் கலைவதாய் உள்ளது . காத்திரமான கருத்தியக் கொண்டு பெண்ணுக்கான அரசியல் இயக்கம் பெண்களால் உருவாகாத வரை பெண் விடுதலை வெறும் ஏட்டளவிள் தான் இருக்கும் . அதற்கான முயற்சியை அரங்கமல்லிகா போன்றவர்களால் உருவாக்கமுடியும் , அதற்கு இந்த நூல் ஒரு புரிதலை உருவாக்கும் என முன்னுரைத்திருக்கும் முனைவர் முருகு பாண்டியனின் சொற்கள் சத்தியம் நிறைந்தது , அது அரங்கமல்லிகா வின் சிந்தனைகளை போலவே அழுத்தமானது.

மதிப்புரை - அன்பாதவன்

அன்பாதவனின் சொந்த ஊர் விழுப்புரம். கவிதை, சிறுகதை ,கட்டுரை என்று பரந்துபட்டு இயங்கும் அன்பாதவனின் எழுத்Ðìகளை சிறுபத்திரிக்கைகளில் அடிக்கடி பார்க்க முடியும்.அன்பாதவன் மதியழகன் சுப்பையாவோடு இணைந்து 'அணி' என்கிற கவிதைக்கான சிற்றிதழை நடத்துகிறார்.


திங்கள் தோறும் இரவு - அன்பாதவனின் இதமாய் பெய்யும் மழை அந்திமழையில் வெளிவரும்....

அன்பாதவனின் ' இதமாய் பெய்யும் மழை ' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com