
இழப்பதற்கு உயிரைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற சோகத்தேடு அகதிகளாக வருபவர்களின் நிலை வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது. உலகில் எந்த ஒரு இனத்திற்கும் இந்த நிலை வரக்கூடாது ( ஜூலை 2006 :தலையங்கம்)
1997 ஜனவரி மாதம் இனிய நந்தவனம் - மக்கள் மேம்பாட்டு இதழ் தொடங்கப்பட்டது. எட்டு பக்கத்தில் தொடங்கப்பட்ட இவ்விதழின் அப்போதைய விலை 3.00 ரூபாய். தொடக்க காலத்தில் மூன்று ஆண்டுகள் வெளிவந்து , பிறகு இரண்டு ஆண்டுகள் காலாண்டிதழாக வெளிவந்தது. அதன் பிறகு தொடர்ந்து மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன் ஆசிரியர் த.சந்திரசேகரன் முத்துக் கண்ணன் என்பவர் ஆரம்ப காலத்தில் இணை ஆசிரியராக இருந்தார். இப்போதைய இணை ஆசிரியர்கள் தன்னம்பிக்கை லெனா, சி.சங்கீதா , ஆலோசகர் புலவர் தியாக சாந்தன்.
இலக்கியத்தையும் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இவ்விதழில் , ஆரம்ப காலத்தில் கதை , கவிதை மட்டுமே வெளியாகி வந்தன. பிறகு தன்னம்பிக்கைத் தொடர், நேர்காணல் போன்றவை வெளியாகி வருகின்றன.
வெளிநாட்டு எழுத்தாளர் அனுபவத் தொடரில் வண்ணை தெய்வம் ( பிரான்ஸ்) , ந.பச்சை பாலன் (மலேசியா), விக்னபாக்யநாதன் (ஜெர்மனி) போன்றோர் தம் அனுபவங்களை எழுதியுள்ளனர்.அத்துடன் பல வெளிநாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளும் நேர்காணல்களும் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, சிங்கப்பூர் , ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இவ்விதழ் செல்வது குறிப்பிடத்தககது.
ம. திருவள்ளுவர் , கவிஞர் பீர் முகமது , லெணா , கன்னிக் கோவில் ராஜா, த.சுப்பிரமணியம் , வேதா இலங்கா திலகம் , வல்லிக் கண்ணன் , பொன்குமார் ,இரா.இரவி , மட்டுவில் ஞானக்குமாரன் , உணர்ச்சிக் கவிஞர் சிங்கார வேலன் , போன்ற பலரது படைப்புகள் இவ்விதழில் வெளியாகி வருகின்றன. தலையங்கம் நுழைவாயில் எனும் பெயரில் வெளியாகிறது. நந்தவனத்தார் பதில்கள் , கவி வனம் , நூல்நயம் ,வந்தவனம் (கடிதங்கள்) போன்ற பகுதிகளும் இவ்விதழில் வெளியாகின்றன.
லேனா தமிழ்வாணன் , பா.விஜய் , கல்யாண மாலை மோகன் , போன்ற வெகுஜன ஆளுமைகளின் நேர்காணல்கள் இவ்விதழில் இடம்பெறுகின்றன. இலக்கியத்தைக் காட்டிலும் தன்னம்பிக்கை தொடர்பான கட்டுரைகளே இதில் அதிகம் இடம்பெறுகின்றன.
இனிய நந்தவனம் அவ்வப்போது சிறப்பிதúகளையும் வெளியிட்டு வருகிறது. மருத்துவச்சிறப்பிதழ் , சித்திரை சிறப்பிதழ் , பொங்கல் சிறப்பிதழ் , தாய் மொழி சிறப்பிதழ் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும்
ஆசிரியர் பற்றி ...
நந்தவனம் சந்திரசேகரன் என்று அறியப்படும் த.சந்திரசேகரனுக்கு தற்போது 34 வயதாகிறது. இவர் ஈழத்தில் வவுணியாவில் பிறந்தவர். 1981 லிருந்து தமிழகத்தில் வசித்து வரும் இவர் , தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். பல்வேறு சிற்றிதழ்களில் கவிதை , கதை , கட்டுரை முதலியன எழுதி வரும் இவர், உலகத்தமிழ் சிற்றிதழ்கள் சங்கத்தின் பொருளாளராகவும் இருக்கிறார்.
செப்டம்பர் 15, 2006