சுழன்ற பந்து!

சுழன்ற பந்து!

அன்று ஏப்ரல் 1. முட்டாள்கள் தினம். ஆண்டு 1998. முகமது அசாருதீனின் தலைமையிலான இந்திய அணி ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை கொச்சியில் பெப்சி  முத்தரப்பு ஆட்டத்தொடரில் எதிர்கொண்டது. முதலில் மட்டை பிடித்த இந்தியா 309 ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சச்சினும் சித்துவும் சோபிக்கவில்லை. சச்சின் 8 ரன்களுக்கும் சித்து 1 ரன்னுக்கும் நடையைக்கட்ட, அசாருதீன் நின்று ஆடினார். அவர் 82 ரன்கள், அஜய்ஜடேஜா 105, கனிட்கர் 57 ரன்கள் என்று ரன் குவிக்க, 309 ரன்கள் என்ற நல்ல நிலையை எட்ட முடிந்தது.

310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியா ஆட்டத்தைத் தொடக்கியது. 31 ஓவரில் 200 ரன்களைக் கடந்தது அந்த அணி. எப்படியும் ஆஸி வெற்றிபெற்றுவிடும் என்று எதிர்பார்த்து கல்லூரி விடுதியில் நகத்தைக் கடித்தோம் நாங்கள்.

மூன்று விக்கெட் இழப்புக்கு 202 என்ற நிலையில் பந்தை அசாருதீன் சச்சினிடம் வீசினார். 32 வது ஓவரை வீசிய சச்சினிடம் 26 ரன்கள் எடுத்த நிலையில் பிடிகொடுத்து வெளியேறினார் கேப்டன் ஸ்டீவ் வாக். பந்தை இரு கைக்கும் மாற்றி மாற்றிப்போட்டு குழந்தையைப் போல் குதூகலித்தார் 26 வயதான் சச்சின்.

அடுத்து ஒரு ஓவர் கழித்து 36-வது ஓவரை வீசியபோது முதல் பந்திலேயே டேரன் லெஹ்மன் எல்பிடபிள்யூ முறையில் சச்சினிடம் வீழ்ந்தார்.

39 ஓவரில் 60 பந்துகளில் 75 ரன்கள் தேவைப்பட்டன. மைக்கேல் பெவன் ஒருமுனையில் நின்று ஆடிக்கொண்டிருந்ததால் ஆஸிக்காரர்கள் கவலையின்றி இருந்திருப்பார்கள். பெவன் மிகவும் ஆபத்தான, திறமை வாய்ந்த ஆட்டக்காரர். இலக்குகளைத் துரத்துவதில் அவருக்கு இணை அவரே.

நாற்பதாவது ஓவரில் இடது கை ஆட்டக்காரரான பெவன் சற்று இறங்கிவந்து சச்சின் பந்தை அடிக்க முற்பட்டு பந்தை தவறவிட்டார். மொங்கியா சட்டென்று பிடித்து ஸ்டெம்புகளை வீழ்த்தினார். பெவன் அவுட். எப்படி இருந்திருக்கும் ரசிகர்களுக்கு? ஒரே உற்சாக வெள்ளம்தான். நாங்கள் போட்ட சப்தத்தில் அங்கெங்கே விடுதி அறைகளில் தூங்கி கொண்டிருந்த நண்பர்கள் எல்லாம் எழுந்து வந்துவிட்டார்கள்.
’’மாப்ளே…. சச்சின் கலக்கிண்டாண்டா..”

‘’ இரு.. அவ்ளவு ஈசி இல்லை.. ஆஸ்திரேலியா காரன் கடைசி வரைக்கும் அடிப்பான்”

உரையாடல்களுடன் தொலைக்காட்சியில் கண்கள் பதித்திருந்தோம்.

வட்டத் தொப்பி கழுத்தில் வெள்ளைத் துணி… ஒரு ஹாலிவுட் நடிகர் போலிருந்த பெவன் வெளியேற உள்ளே வந்தவர் டேமியன் மார்ட்டின்.

41-வது ஓவரில் நிலவரம் 48 பந்துகளில் 57 ரன்கள் தேவை. ஆஸி ஆறு விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள். அந்த ஓவரில் டாம் மூடி பெவன் எப்படி அவுட் ஆனாரோ அதே போல் ஆட்டமிழக்க… ஆஸி அணி தடுமாறியது. அடுத்த ஓவரில் ஷேன் வார்னேவை கும்ப்ளே வீழ்ந்தினார். 44-வது ஓவரைப் போடவந்தார் சச்சின். டேமியன் மார்ட்டின் சச்சினின் பந்தை தூக்கி அடித்து ஸ்ரீநாத்திடம் பிடிபட்டார்.

 32 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அன்று சச்சின் ஆஸியின் படுதோல்விக்கு வித்திட்டார். 46-வது ஓவரில் ப்ளமிங்கின் விக்கெட்டை ஸ்ரீநாத் வீழ்த்தியதும் ஆஸியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சச்சின் தான் மேன் ஆப் தி மேட்ச்! இங்கே எங்கள் ஆரவார ஆட்டம் ஆரம்பமானது. 14 ஆண்டுகளுக்கு முந்தைய மேட்ச் அது. இன்றும் அதன் நினைவுகள் அதைப் பார்த்த ரசிகர்களிடம் தங்கியிருக்கும்.

சச்சின் டெண்டுல்கர் இதுவரை தன் 463 ஒருநாள் ஆட்டங்களில் 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் கொஞ்சம் அதிகமான விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருக்கமுடியும். டென்னிஸ் எல்போ எனப்படும் முழங்கைக் காயம் அவர் தொடர்ந்து பந்துவீசுவதைத் தவிர்க்கவைத்துவிட்டது.

அவர் முதல்முதலாக ஒருநாள் போட்டியில் பந்துவீசியது ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் 1990-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக. ஒரு ஓவர் வீசி பத்துரன்கள் கொடுத்தார். ஷார்ஜாவில் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியபோது ஒரு பந்துவீச்சாளராக அவருக்கு முதல்முதலில் மேன் ஆப்தி மேட்ச் விருது கிட்டியது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com