சுவையான சமையல் குறிப்புகள் - 4

சுவையான சமையல் குறிப்புகள் - 4
Published on

அரண்மனைக் குழம்பு

தென்மாவட்டங்களில் சின்ன சின்ன சமஸ்தானங்களில் மகாராஜாக்கள் இருந்த காலகட்டத்தில் செய்யப்படும் குழம்பு வகை இது.

தேவையான பொருட்கள்:

பிஞ்சுக் கத்தரிக்காய் – 2 கப் (கீறி வைத்துக் கொள்ளவும்)
சாம்பார் வெங்காயம் – 1 கப்
மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
கொப்பரை அல்லது தேங்காய் துருவல் – ½ கப்

வறுத்து அரைக்க:

கொத்தமல்லி (தனியா) – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ½ டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ½ டீஸ்பூன்
மிளகு -½ டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
சீரகம் – 1 டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:

எண்ணெய் காய்ந்ததும் தனியா, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, காய்ந்தமிளகாய், சீரகம் என ஒவ்வொன்றாக வறுத்து அத்துடன் சிறிதளவு சாம்பார் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். அதனுடன் தேங்காயை இலேசாக வறுத்து ஆறியதும் அரைத்து வைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்துத் தயாராக வைத்துக் கொள்ளவும்,

இப்போது அடுப்பில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, பெருங்காயம், வெங்காயம் தாளித்து கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் புளிக் கரைசலை ஊற்றி உப்புச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அரைத்த விழுதையும், சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து தளதளவென கொதிக்கவிடவும். வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

இதனை சாதம், இட்லி, ஊத்தப்பம், தோசை என அனைத்துக்கும் சேர்த்துக் கொள்ளலாம்.  

தொகுப்பு: பொடிசி

(மெனு ராணி என்று அன்புடன் அழைக்கப்படும் செல்லம்மாள், தமிழகத்தின் பாரம்பரிய சமையல் உணவுகளின் நிபுணர். அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர். அவர் அந்திமழை வாசகர்களுக்கு வழங்கும் சுவையான சமையல் குறிப்புகள் வெள்ளி தோறும் வெளியாகும்.  சமைத்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.comக்கு எழுதலாம்)

logo
Andhimazhai
www.andhimazhai.com