சுவையான சமையல் குறிப்புகள் - 5

சுவையான சமையல் குறிப்புகள் - 5
Published on

எள்ளுசாதம் :

வேலைக்குச் செல்லும் அவசரத்தில் சத்தானதாகவும், உடனடியாகவும் எடுத்துச் செல்ல ஏற்றது.

எள்ளுசாதம் – தித்திப்பு

தேவையான பொருட்கள்:

கறுப்பு எள் – 50 கிராம் 
வெல்லம் – 50 கிராம் 
சாதம் – 4 கப்

தாளிக்க:

உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன் 
கடுகு – 2 டீஸ்பூன் 
துருவிய வெல்லம் – தேவையான அளவு 
நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு  
முந்திரி அல்லது வேர்க்கடலை – விருப்பப்பட்டால் 
கருவேப்பிலை – சிறிதளவு

 
செய்முறை: எள்ளை கல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். உளுத்தம்பருப்பு, கடுகு, எள் இவற்றை நெய் அல்லது எண்ணெயில் வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

எள்ளுப்பொடியை வெல்லம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுசுற்றி வைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் சாதத்தைப் பரப்பி நல்லெண்ணெய் அல்லது உருக்கிய நெய்யை ஊற்றி அதில் சிறிதளவு தூள் உப்பு சேர்த்து பின்னர் எள்ளுப்பொடியைக் கலந்து கரண்டியால் கிளறவும்.

போக்குவரத்தின் போது சாப்பிட ஏற்றது. கைபடாமல் கிளறினால் 24 மணிநேரத்திற்கு சாதம் கெடாமல் இருக்கும். எள்ளுப் பொடியை ஒருவாரத்திற்கு வைத்துக் கொள்ளலாம். இதிலேயே காரசாதமும் செய்யலாம்.

எள்ளுசாதம் – காரம்

தேவையான பொருட்கள்:

கறுப்பு எள் – 50 கிராம் 
சாதம் – 4 கப்

தாளிக்க:

உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன் 
கடுகு - 2 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் – 3 அல்லது 4 
நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு 
முந்திரி அல்லது வேர்க்கடலை – விருப்பப்பட்டால் 
கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை: எள்ளை கல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.  உளுத்தம்பருப்பு, கடுகு, எள் இவற்றை நெய் அல்லது எண்ணெயில் வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில் சாதத்தைப் பரப்பி நல்லெண்ணெய் அல்லது உருக்கிய நெய்யை ஊற்றி அதில் சிறிதளவு தூள் உப்பு சேர்த்து பின்னர் எள்ளுப்பொடியைக் கலந்து கரண்டியால் கிளறவும். கருவேப்பிலையை எள்ளுப் பொடியுடன் சேர்த்து வறுத்தரைத்துக் கொள்ளவும். அல்லது தனியாக வறுத்து சாதத்துடன் கலந்துகொள்ளலாம்.

எள் சேர்ப்பது பெண்களுக்கு மிகவும் நல்லது. கருப்பைக்கு வலுசேர்க்கும். இரும்புச் சத்து நிறைந்தது. எள்ளுப் பொடியை தயாராக அரைத்து வைத்துக்கொண்டால் இட்லிக்குக் கூட தொட்டுக் கொள்ளலாம்.

(தொகுப்பு: பொடிசி)

(மெனு ராணி என்று அன்புடன் அழைக்கப்படும் செல்லம்மாள், தமிழகத்தின் பாரம்பரிய சமையல் உணவுகளின் நிபுணர். அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர். அவர் அந்திமழை வாசகர்களுக்கு வழங்கும் சுவையான சமையல் குறிப்புகள் வெள்ளி தோறும் வெளியாகும்.  சமைத்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.comக்கு எழுதலாம்)

logo
Andhimazhai
www.andhimazhai.com