கீரைத்தண்டு கூட்டு
கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அடிக்கடி மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியமிருக்காது. அந்தளவுக்குக் கீரை மிக அவசியமானது. கீரையை பெரும்பாலும் பொரியலும், கூட்டும் செய்வார்கள். கீரையின் தண்டை அவ்வளவாக யாரும் பயன்படுத்துவதில்லை. கீரையுடன் தண்டையும் சேர்த்து கூட்டு வைத்தால் சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கீரைத்தண்டு - 2 கப்
வெந்த பாசிபருப்பு - 1 கப்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
மிளகு - அரை டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 4
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
தேங்காய் - கால்கப்
ஒவ்வொன்றாக எண்ணெயில் வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைத்து விழுது எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை:
கீரைத்தண்டை முதலில் சுத்தப்படுத்திக் கொள்ளவும். வாழைத்தண்டைப் போல கீரயின் தண்டையும் அதன் மேல்தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அதாவது பீன்ஸ், முருங்கைக்காய் இவற்றின் தோலை உரிப்பதுபோல் என்று கூட வைத்துகொள்ளலாம்.
கீரைத்தண்டை உப்பு, மஞ்சள் சேர்த்து முதலில் வேகவைத்துக் கொள்ளவும். சிறிதுநேரம் கழித்து வெந்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும். வெந்ததும் இறக்கி உளுந்தம்பருப்பு கடுகு சேர்த்து தாளித்து பரிமாறவும்.
(மெனு ராணி என்று அன்புடன் அழைக்கப்படும் செல்லம்மாள், தமிழகத்தின் பாரம்பரிய சமையல் உணவுகளின் நிபுணர். அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர். அவர் அந்திமழை வாசகர்களுக்கு வழங்கும் சுவையான சமையல் குறிப்புகள் வெள்ளி தோறும் வெளியாகும். சமைத்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.comக்கு எழுதலாம்)