ஜென்மம் பொருள்பட ஒரு கவிதை

கவிதையின் கால் தடங்கள் - 39

“ஒரே ஒரு கவிதை போதும் 

இந்த ஜென்மம் பொருள்பட என்பது என் நம்பிக்கை

அதை எழுதிவிடக் காத்துக்கொண்டிருக்கிறேன்.”

# சுந்தர ராமசாமி

o

பொன் வாசுதேவனை நான் அறிய நேர்ந்தது "அகநாழிகை" என்னும் சிற்றிதழ் வழியாக. தற்சமயம் "அக ஒளி" என்னும் பதிப்பகத்தோடு, சென்னை சைதாப்பேட்டையில் "அகநாழிகை" என்னும் புத்தக கடையும் நடத்தி வருகிறார்.

பொன்.வாசுதேவன் கவிதைகள்

பொன்.வாசுதேவன் கவிதைகளில் சில:

 01

காத்திருத்தல்

நீர்ச்சுழல் வழியே

மேய்கிறது பார்வை

ஓசையின்றி மொழியைக்

கசிய விடும் மீன்களின் மீது

பயம் தீண்ட வாயவிழ்ந்து

கதறும் சின்னஞ்சிறு மீன்களை

பெருவைக்குள் மூழ்கடிக்கும் மீன்கள்

உதடசைத்து சுவைத்தபடி

தொடர்கிறது எனது

தூண்டிலின் புழுவைக் கவ்வ

காத்திருக்கிறேன்

தக்கையின் ஓரசைவிற்காக.

 02

மனமொளிர் தருணங்கள்

தளர்ந்து இறுகும் 

சிறகுகள் அசைத்துக்

கால் புதைய காற்றில்

நடக்கிறது ஒரு பறவை

என்னை நானே 

அருந்தி ரசிக்கும் தருணம் அது

காற்று உதிர்த்த

பறவைச் சிறகின் கதகதப்பைக்

கைப்பற்றி

கன்னம் வைத்து அகமகிழ்கிறேன் 

தூரத்தில் சென்று கொண்டிருக்கிறது

பறவை

உதிர்ந்த சிறகு குறித்த

கவலையேதுமற்று.  

 03

விடைபெற்றுக் கொள்கிறேன்

மரணத்தைப் பற்றிய இதுவரை

எழுதியதையெல்லாம் தயை கூர்ந்து

திருப்பிக் கொடுத்து விடுங்கள்

இல்லையெனில் மறந்து விடுங்கள்

மரணத்தைப் பற்றி அனுபவித்தறியாது 

அதை உங்களுக்கு விவரிப்பது

எவ்வளவு பொய்யானது

வெட்டுப்படப் போவதறியாது 

மழையில் நனைந்தபடி

தழையை ரசித்துச் சுவைக்கும்

ஆட்டின் உடலுதறளைச் 

சொல்வது போலல்லவா அது

வாழ்வைச் சலித்த

கடைசிக் கணங்களில்

ஒரு அழுகையில்

மன இறுக்கத்தில்

உணர்த்திவிட இயலாத

மரணம் குறித்து சொல்வதிலிருந்து

நான் விடைபெற்றுக் கொள்கிறேன்

மரம் இறுகிக் கல்லாகக் 

கிடக்கின்ற வழிப் பாதையில்

வந்து கொண்டிருக்கும்

நீங்களே சொல்லுங்கள்.    

04

கடவுளைச் சுமந்தவன்

அன்றிரவு 

கடவுளைத் தலைமேல் சுமந்து

செல்லும்படி பணிக்கப்பட்டிருந்தேன் 

ஊர்வலம் முடிய

இரண்டரை மணி நேரம் ஆகலாம்

என் தலைக்குமேல் தான்

கடவுள் அதுவரை

இரவை ஏங்கிக் காத்திருந்தேன்

இரவினில் கடவுள்

கடவுளாக இல்லாமல்

சிலையாகவே அலங்கரிக்கப்பட்டார்

புத்தாடை அணிவிக்கப்பட்டு

புதுமலர் சூடி

ஆனந்த ஆயத்தமாகினார் கடவுள்

இருக்கியா கயிறுகள் உடல் பொதிய 

கீழே விழுந்து விடாதபடிக்கு

கட்டைகளுடன் இணைத்து

இழுத்துப் பிணைக்கப்பட்டார் கடவுள்

அப்போதும் அவர் முகத்தில்

புன்னகை தேங்கியிருந்தது

ஊர்வலம் தொடங்கியது

என் தலைமேல் கடவுள்

சுற்றி முடிந்ததும்

களைப்பும் சோர்வும்

சேர்ந்தென்னை நசுக்கியது

பத்திரமாக கோவிலில்

இறக்கி விட்டேன் கடவுளை

நிம்மதியாகவும்

மனநிறைவாகவும் இருந்தது

கடவுளுக்கும்.

05

தவறுகளை சுமந்து திரிபவன் 

விரும்பிச் செய்த

தவறுகளின் கணங்களைத்

துழாவிக் கொண்டிருக்கிறது மனம்

இரைச்சல் அமைதி

இனிமை துயரம் என

தீராத உணர்வுகளால் நிரம்பியவை

அத்தவறுகள்

தவறுகளின் சாயல்

எல்லோருக்குள்ளும் பூசப்பட்டிருக்கிறது 

படர்ந்து கொள்ள ஆள் தேடி

தனித்து விடப்பட்டிருக்கும் தவறுகள் 

காற்றில் எப்போதும் அலைந்தபடியிருக்கின்றன

தவறுகளின் நிழலில்

இளைப்பாறுதல் இல்லாமல்

ஒரு வாழ்வைக் கடப்பது

எவ்வளவு கடினம் என்பது 

நீங்கள் அறிந்ததுதானே

ஒருவருக்கும் தெரியாமல்

அல்லது அவ்வாறெண்ணி 

நீங்களும் செய்திருக்கக்கூடும்

அவரும் செய்ததுதான்

எல்லோரும் செய்வதுதான்

பல தவறுகளைச் செய்த பிறகும்

தவறுகளைத் தவறாகவே

நீங்கள் பார்ப்பது ஏன்

ஒரு அடையாளத்திற்காகத்தான்  

இதைத் தவறு என்று 

சொல்லிக் கொண்டிருக்கிறேன்

மற்றபடி

அது சரியாகவும் இருக்கலாம்.

06

காயங்களை

வலிகளை

தழும்புகளை

மறந்து விடுவேன்

கருணையை

என்ன செய்ய.

07

 கிளையில் வந்தமர்ந்த பறவை

கிளம்பிச் செல்கையில்

ஏற்பட்ட சிறு அசைவில்

மரத்திலிருந்து 

மௌனமாய் உதிர்கிறது ஒரிலை

வலிகளற்று 

பார்த்துக் கொண்டிருக்கிறது மரம்.

08

பசித்துத் தேம்பியழும்

தாயிழந்த குழந்தைக்கு

சுரக்காத முலைகளை

உண்ணத் தருகிறாள்

கருணையில் தணிகிறது

குழந்தையின் பசி.

கவிதைத் தொகுப்புகள்:

1. “ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை", உயிர்மை  வெளியீடு (2012)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com