ஜேதா வனம்! - போதியின் நிழல் 35

ஜேதா வனம்! - போதியின் நிழல் 35

அரச விவகாரங்கள் எல்லா இடங்களிலும் மிகக் கொடூரமானவை கௌசாம்பியில் இருந்த சுமார் 300 பிக்குகளாலும் பெரிது மதிக்கப்படுகிற மூத்த பிக்குவான தர்மகீர்த்தி, தன்னைக் காண வந்திருந்த யுவான் சுவாங்கை மிகுந்த மலர்ச்சியுடன் வரவேற்றார்.

அவரது விஹாரம் நகரத்தின் நடுவே சிதிலமடைந்திருந்த ஓர் அரண்மனை வளாகத்தின் மையத்தில் இருந்தது. பரந்து விரிந்து கிடந்த விஹாரத்தின் மைதானத்தின் வழியாக தர்மகீர்த்தி யுவானை அழைத்துச் சென்றார்.

‘‘சீனத்து அறிஞரே, எந்த ஊர் வழியாக வருகிறீர்கள்? பயணம் எப்படி இருந்தது?’’

‘‘ இதற்கு முன்பாக பிரயாகையில் சில நாள் தாமதித்தேன். அங்கிருந்து தென்மேற்காக புறப்பட்டோம். அடர்ந்த வனம் ஒன்றின் வழியாக சுமார் ஏழுநாட்கள் நடந்து இங்கே வந்துசேர்ந்துள்ளோம்.’’

‘‘பிக்குவே, உங்கள் பிரயாணக்களைப்பைப் போக்கிக்கொள்ள முதலில் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.. பின்னர் இந்த விஹாரத்தைச் சுற்றிக் காண்பிக்கிறேன்’’

‘‘ஓய்வு எனக்கு இப்போது தேவைப்படவில்லை. பயணமே வாழ்வாகக் கொண்டவனுக்கு பயணம்தான் ஓய்வு. பயணம்தான் உணவு. பயணம்தான் மகிழ்ச்சி. இங்கு மன்னர் உதயணன் செய்வித்த சந்தனத்தால் ஆன ததாகதரின் சிற்பம் இருப்பதாக வழியெல்லாம் கேள்விப்பட்டேன். அதை முதலில் தரிசித்துவிடுகிறேன்’’

‘‘ உங்கள் விருப்பப்படியே ஆகட்டும். ஒரு மழைக்கால ஓய்வு மாதத்தில் ததாகதர் தன் தாய் மாயாதேவியாருக்கு தர்மத்தை உபதேசிக்க திராயசிம்ம சொர்க்கத்துக்குச் சென்றிருந்தார். உதயணனுக்கு ஓர் ஆசை. அவர் திரும்பி வருவதற்குள் அவரைப் போலவே ஒரு சிலையை வடித்துவைக்க வேண்டும் என்பது அந்த ஆசை. எனவே பகவானின் முதன்மைச் சீடர் மௌத்கல்யாயணாவிடம் வந்தான். அவரது சக்தியால் திராயசிம்ம சொர்க்கத்துக்கு ஒரு திறமை வாய்ந்த சிற்பியை அனுப்பி வைக்குமாறும். அவன் ததாகதரைக் கண்டுவந்து இங்கே அவரைப் போலவே ஒரு சந்தனச் சிலையை வடிக்க அது உதவியாக இருக்கும் என்றான். அவரும் தன் வலிமையால் ஒரு சிற்பியை அனுப்பி, அவன் ததாகதரின் உருவ அம்சங்களை நேரில் கண்டு மனதில் இருத்திக் கொண்டு திரும்பி வந்து பகவானின் சிலையைச் செய்தான். புத்தர் திரும்பி வந்தபோது தன்னைப் போலவே இருந்த சந்தனச் சிலையைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார் என்பார்கள்’


கல்மண்டபம் ஒன்றில் ஆளுயரச் சந்தன சிலையாக ததாகதரைக் கண்டார் யுவான். பேரெழுச்சியுடன் மனம் ஆர்ப்பரிக்க, அப்படியே விழுந்து வணங்கினார். பூக்களால் சிலை இருந்த மேடை அலங்கரிக்கப் பட்டிருந்தது. ததாகதரின் கரங்கள் முழங்கால் வரை நீண்டிருக்க, அகன்ற பெரிய விழிகளில் இப்பிரபஞ்சத்தின் பேரன்பு முழுக்க சொட்டுவதாக உணர்ந்தார்.
மெல்லிய அகிற்புகை நிறைந்த அம்மண்டபத்தில் மும்முறை ததாகதரை வலம் வந்தார் யுவான். மனதில் நிறைவு ஏற்பட்டிருந்தது.

‘‘இதே போன்ற ஒரு சிலையை கோசலதேசத்தின் அரசன் பிரசேனஜித் தன் தலைநகரான சிராவஸ்தியில் செய்வித்தான். உதயணன் சந்தனத்தில் சிலை செய்வித்ததைக் கேள்வியுற்ற அவன், தானும் எப்போதும் ததாகதரை தர்சித்தவண்ணம் இருக்கவேண்டும் என்பதற்காக பொன்னால் ஆன சிலையை வடிக்கச் செய்து இன்புற்றான். நீர் சிரவஸ்திக்குச் செல்லும்போது அதைப் பார்க்கலாம் அசிரவதி (இப்போது ராப்தி) நதிக்கரையில் உள்ளது சிராவஸ்தி’’ என்றார் தர்மகீர்த்தி.

‘‘ஆஹா....’’ மிகுந்த மகிழ்ச்சியுற்றார் யுவான்.

‘‘ஆனால் பிரசேனஜித்துக்கு ஏற்பட்ட முடிவுதான் விந்தையானது. கேட்போரை மனம் வருந்தச் செய்வது. ததாகதரின் மீது பேரன்பை வைத்திருந்த அவன் இறுதிக்காலத்தில் அவன் மகன் விடூடபனால் நாட்டை விட்டு விரட்டப்பட்டான். கோசல நாட்டு அரியாசனத்தில் விடூடபன் உட்கார்ந்தான். பிரசேனஜித்துக்கு புகலிடம் இல்லை. மாறுவேடத்தில் மகதத்தின் மன்னனும் தன் மருமகனுமாகிய அஜாதசத்ரூவைச் சென்றடையலாம் என்று ராஜகிருகம் நோக்கிப் புறப்பட்டான். ராஜகிருகத்துக்கு வெளியே ஒரு தர்மசத்திரத்தில் தங்கியிருந்தான். மாறுவேடத்தில் இருந்த அவன் உடல்நலிவடைந்து அங்கேயே இறந்துவிட்டான்’

யுவான் பதில் பேசாமல் ததாகதருக்கு முன்னால் மிக அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் பூக்களைக் கவனித்தார். பின்னர் ‘‘அரச விவகாரங்கள் எல்லா இடங்களிலும் மிகசிக்கலானவையாக கொடூரமானவையாகவே இருந்திருக்கின்றன. ததாகதர் எவ்வளவுதான் அன்பையும் கருணையையும் அள்ளித் தந்தாலும் இப்பூமி அவர் காலத்திலேயே ரத்த சிவப்பாகிக் கொண்டுதான் இருந்திருக்கிறது அல்லவா தர்மகீர்த்தியாரே..’’ என்றார் ஓர் ஆழ்ந்த பெருமூச்சுடன்.
‘‘ஆம். ததாகதரின் சங்கத்துக்கு முதல் முதலில் நிலம் வழங்கிய பெருமைக்குரியவன் மகதமன்னன் பிம்பிசாரன். ததாகதர் சித்தார்த்தராக இருந்தபோதே அவரை ராஜகிரகத்தில் கண்டு, ஞானம் அடைந்தபின்னர் தனக்கு அதைப் போதிக்குமாறு வேண்டிக்கொண்டவன். அதன்படியே ததாகதராலேயே தர்ம உபதேசம் பெற்றவன். அவனுக்கு என்ன நேர்ந்தது? சொந்த மகன அஜாதசத்ருவால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சிறைச்சாலையின் ஒரே சாளரத்தின் வழியாக கிரிதகூட மலை உச்சியைப் பார்த்தவாறே மரணமடைந்தான்’’

‘‘புத்தரின் சாக்கியகுலம் கூட பெரும் கொடூரத்தைச் சந்தித்தது அல்லவா?’’

‘‘ததாகதர் இரண்டுமுறை கோசல அரசன் விடுடூபனின் மனத்தை மாற்றி அவனது கோபத்தைத் தணித்திருந்தார். சாக்கியர்கள் வேசி மகன் என்று இழிவாக விடுடூபனைக் கூறி அவமானப்படுத்தியதே அவனது கோபத்துக் காரணமாக இருந்தது. மூன்றாவது முறை விடுடூபன் படையெடுத்தபோது ததாகதர் அங்கில்லை. சாக்கிய குலத்தையே அவன் பூண்டோடு அழித்துவிட்டான். இத்தகவலை ஆனந்தர் வாயிலாகக் கேள்வியுற்ற ததாகதர் பெரும் கவலை கொண்டார். ஆனால் விடுடூபன் நிலை என்ன வாயிற்று? சாக்கிய குலத்தின் ரத்தத்தைக் குடித்து தன் படைகளுடன் அசிரவதி நதிக்கரையில் அவன் முகாமிட்டான். அசிரவதி பொங்கி எழுந்து அவனது படைகளுடன் விடுடூபனையும் விழுங்கிவிட்டாள்’’

‘‘வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் பல இடங்களில் கசப்பை விழுங்கித்தான் தீர வேண்டியுள்ளது’’

‘‘கசப்பு எல்லாக் காலங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது சீனப்பிக்குவே... ததாகதரின் தர்மம் ஒன்றுதான் அதற்கு மாற்று மருந்து’’

தர்மகீர்த்தி ததாகதரை நோக்கி வணங்கினார். பின் இருவரும் மண்டபத்தை விட்டு வெளியே வந்தார்கள். பெரும் குடையாக வளர்ந்திருந்த ஓர் ஆலமரத்தின் அடியில் கிடந்த கல் ஆசனங்களில் இருவரும் அமர்ந்தார்கள்.
மரியாதையுடன் சற்றுத் தள்ளி யுவானுடன் வந்து கொண்டிருந்த பயணக்குழுவினரும் விஹாரத்து இளந்துறவிகளும் நின்றனர். அதைக் கவனித்த தர்மகீர்த்தி யுவானின் பயணக்குழுவினரை அவர்கள் தங்கவேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்லுமாறு இளம் பிக்கு ஒருவருக்கு உத்தரவிட்டார்.

‘‘கௌசாம்பியிலிருந்து அடுத்து எங்கு போகப்போகிறீர்கள்...?’’

‘‘விசாகம். பின்னர் சிராவஸ்தி. அங்கிருந்து கபிலவாஸ்து. பிறகு ததாகதர் பரிநிர்வாணம் எய்திய குசிநகரம் என்று திட்டமிட்டுள்ளேன்’’

‘‘மிக நன்று. ததாகதர் தன் எண்பது ஆண்டு வாழ்நாளில் இந்த இடங்கள் முழுக்க கால்நடையாகவே அலைந்து திரிந்து தர்ம உபதேசம் செய்தார். மக்களுடன் பழகினார். மன்னர்கள், பிரபுக்கள், வணிகர்கள் என அவரை ஆதரிக்காத யாரும் இல்லை. பல புனித இடங்கள்..... புனித விஹாரங்கள்... என்று இப்பகுதி முழுக்க ததாகதரின் நினைவுகளால் நிரம்பியுள்ளது’’

‘‘சிராவஸ்தியில்தானே அனந்தபிண்டிகரின் ஜேதவனம் உள்ளது?’’

‘‘ஆமாம் சகோதரரே.... அனந்தபிண்டிகன் பெரும் வணிகன். ஏராளமான செல்வத்துக்குச் சொந்தக்காரன். ராஜகிருகத்தில் புத்தர் பிரானின் சொற்களைக் கேட்டு அவரது அடிபணிந்தான். சிராஸ்திக்குத் திரும்பியதும் பிக்குகள் தங்குவதற்காக ஒரு இடத்தைத் தெரிவுசெய்தான். ஜேதா என்ற இளவரசன் ஒருவனின் அழகிய தோட்டம் அது. தேஜவனம் என்று அது அழைக்கப்பட்டது அவனைச் சந்தித்து அந்த இடத்தைத்தருமாறு கேட்டான். முதலில் ஜேதாவனத்தைத் தர இளவரசன் ஜேதாவுக்கு விருப்பமே இல்லை. அனந்த பிண்டிகனை அதிர்ச்சியில் ஆழ்த்த வேண்டும். அதிக விலை சொன்னால் கேட்கமாட்டான் என்று எண்ணி, ‘என் தந்தை எனக்கு அளித்த தோட்டம் அது. அதை நான் உனக்குத் தரவேண்டுமெனில் அந்த தோட்டம் முழுக்க பொற்காசுகளால் நிரப்பி அவற்றை எனக்குத் தரவேண்டும்’ என்றான்.
ஜேதாவுக்குத்தான் அதிர்ச்சி காத்திருந்தது. ‘‘ நாளையே தோட்டம் முழுக்க தங்கத்தால் நிரப்பி உங்களுக்குத் தந்துவிடுகிறேன்.. ஜேதாவனத்தை எனக்குத் தர ஒப்புக் கொண்டதற்கு நன்றி’’ என்று அறிவித்தான் அனந்த பிண்டிகன்.
ஜேதா அரசகுலத்தைச் சார்ந்தவன். அவன் கூறிய வார்த்தைகளைத் திரும்பப் பெற இயலாது. எனவே மறுநாள் தங்கத்தைப் பெற்றுக் கொண்டு தோட்டத்தை அவனிடம் ஒப்படைத்தான்.’’

‘‘இந்த ஒரு சம்பவம் நாடுமுழுக்க புத்தரின் புகழ் பாடியிருக்குமே..’’

‘‘ஆமாம். புத்தருக்காக அனந்தபிண்டிகன் ஒரு பெரும் விலை கொடுத்து ஜேதாவனத்தை வாங்கியது கோசல நாடு முழுக்க புத்தர் மீதான ஆவலைத் தூண்டியது. புத்தரும் அவரது பிக்குகளும் ஜேதவனத்தில் மாரிக்காலத்தில் வந்து தங்கியபோது, அவரைச் சந்திக்க தேசமே அலை மோதியிருக்கும். மன்னன் பிரசேனஜித்தும் ஆவலோடு அவரைச் சந்தித்து தர்மத்தை ஏற்றுக் கொண்டிருக்கவேண்டும். பெரு வணிகர்களும் மன்னர்களும் தந்த ஆதரவுதான் தர்மம் வளர, பரவ உதவியது. இன்று நீரும் நானும் பேசிக்கொண்டிருப்பது இதனால்தான்’’

தர்மகீர்த்தி புன்னகைத்தார்.

காற்றில் ஆலமரத்தின் இலையொன்று உதிர்ந்து யுவான் சுவாங்கின் மடியில் விழுந்தது. இரண்டு பிக்குகளும் வெகுநேரம் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com