டி20 உலகக்கோப்பை 2007

டி20 உலகக்கோப்பை 2007

ஆட்டத்தை முடிப்பவன் - 4

டி20 உலகக்கோப்பை 2007ன் இறுதி ஆட்டமும் மிகுந்த போராட்டமாகவே இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் என்பதால் பரபரப்பு அதிகமாக இருந்தது. இதில் இந்தியா முதலில் ஆடியது. இந்த ஆட்டத்தில் சேவாக் காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்குப் பதிலாக யூசுப் பதான் இறக்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரரான கவுதம் கம்பீர் 74 ரன்களை எடுத்தார். ரோகித்சர்மா கடைசி கட்டத்தில் பதினாறு பந்துகளில் 30 ரன்களைக் குவிக்க ஐந்து விக்கெட் இழப்புக்கு 157 என்கிற ஓரளவுக்கு சுமாரான எண்ணிக்கையை எடுக்க முடிந்தது.

பாகிஸ்தான் ஆட வந்தபோது இர்பான் பத்தானும் ஆர்பி சிங்கும் அருமையாக பந்துவீசி கட்டுப்படுத்தினர். 24 பந்தில் 54 ரன்கள் எடுக்க வேண்டும் கைவசம் மூன்று விக்கெட்டுகளே உள்ளன என்ற நிலை வந்தபோது இந்தியா எப்படியும் வென்றுவிடும் என நினைத்தார்கள். ஆனால் களத்தில் இருந்த பாக்.கேப்டன் மிஸ்பா வேறுமாதிரி நினைத்தார். அப்போது பந்துவீசிய ஹர்பஜனின்  ஓவரில் மூன்று சிக்ஸர்களைத் தூக்கினார். சொஹைல் தன்வீர் நான்கு பந்துகளில் 12 ரன்களைச் சேகரித்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டன. இறுதி விக்கெட் ஜோடி அது! எல்லோரும் நகம் கடிக்கத் தொடங்கினர்.

இப்போது தேவை பதற்றப் படாத ஒரு பந்துவீச்சாளர்!  ஹர்பஜன் சிங்கை மிஸ்பா ஏற்கெனவே பிளந்து கட்டிவிட்டதால் அவர் நடுங்கிக்  கொண்டிருந்தார். தோனி ஜோகிந்தர் சர்மாவை அழைத்து கையில் பந்தை அளித்தார். மிஸ்பா பந்தை எதிர்கொள்ள தயார் ஆனார். சர்மா அவ்வளவாக அனுபவம் இல்லாதவர். இவரிடம் ஏன் இவ்வளவு முக்கியமான ஓவரைக் கொடுக்கிறார் என்று ரசிகர்கள் நினைத்தனர். அவர்கள் நினைத்தவாறே  சர்மா முதல் பந்தை வைடாகப் போட்டுவிட்டார். ஜோகிந்தரை அழைத்து தோனி என்னவோ சொன்னார். அடுத்த பந்தில் மிஸ்பா ரன் ஏதும் எடுக்கவில்லை! அதற்கடுத்த பந்து புல் டாஸ்! ஒரே அடி! அரக்கத்தனமான அடி.. மிஸ்பா அடித்த அடியில் டர்பனில் இருந்து அது லாகூருக்கே போய் விழுந்திருக்கலாம்! அவ்வளவு பெரிய சிக்ஸர்! இப்போது நாலு பந்தில் ஆறு ரன்கள் தேவை! என்னவொரு எளிதான இலக்கு!

மிஸ்பா அடுத்த பந்தை பைன் லெக் திசையில் தட்டிவிட்டார்! அவரது கணிப்பு தவறிவிட்டது! அங்கே ஸ்ரீசாந்த் காத்திருந்தார்! அவர் அதைப் பிடித்தபோது இந்திய ரசிகர்களின் உற்சாகத்தில் சின்னதாக ஒரு பூகம்பமே ஏற்பட்டிருக்கலாம்! இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பை கிடைத்தது!

இந்த இறுதிப்போட்டியில் தோனி ஜோகிந்தர் சர்மாவிடம் பந்தைக் கொடுத்த முடிவு பெரிதாகப் பாராட்டப்பட்டது. தோனி பிற்காலத்தில் எடுக்கப்போகும் பிரபலமான புத்திசாலித்தனமான முடிவுகளுக்கெல்லாம் முன் அறிவிப்பு செய்வது போல் இந்த முடிவு அமைந்தது!

ஜோகிந்தர் முதல் பந்தை வைடாகப் போட்டு சொதப்பியபோது அந்த இளம் கேப்டன் என்ன சொன்னார்?

“ஜோகிந்தர் இந்தியாவில் பல உள்ளூர் போட்டிகளில் நீ தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பந்துவீசியிருக்கிறாய். அப்போதெல்லாம் உன்னை யாருமே கவனிக்கவில்லை! கவலைப்படாதே கிரிக்கெட் உன்னைக் கைவிடாது!”

அந்த வெற்றியின் மூலம் ஜோகிந்தர் சர்மா கிரிக்கெட் வரலாற்றில் நிரந்தர இடம்பிடித்தார். விபத்து ஒன்றால் அவர் கிரிக்கெட்டிலிருந்து விலக நேர்ந்தாலும் ஹரியானா அரசு காவல்துறையில் பணி கொடுத்தது. அவரை கிரிக்கெட் கைவிடவில்லை! தோனியையும் தான்!

(மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை அலசும் இத்தொடர் புதன் தோறும் வெளியாகும்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com