அமெரிக்காவில் பொருட்களுக்கு , நிறுவனங்களுக்கு பெயர் தேர்ந்தெடுத்து கொடுப்பதற்கென்று சில நிறுவனங்கள் இருக்கின்றன. பொருளின் தன்மை , என்ன மாதிரியான வாடிக்கையாளர்கள் , வாடிக்கையாளர்களின் ரசனை என்று பல விஷயங்களை ஆய்ந்து பெயர்களை சிபாரிசு செய்வார்கள். அதில் உங்களுக்கு பிடித்தமான பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
' பெயரை ' தேர்ந்தெடுத்து கொடுக்க பத்தாயிரம் டாலரிலிருந்து ஒரு லட்சம் டாலர்கள் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ( 4 லட்சத்து 30 ஆயிரத்திலிருந்து 43 லட்சம் வரை) பெயருக்கே இவ்வளவா? என்று கேட்காதீர்கள், பெயரா அவ்வளவு முக்கியம் . பிலிப் நைட்டிற்கு ' Nike ' என்ற பெயர் காசு செலவில்லாமல் ஊழியர் மூலம்
கிடைத்துவிட்டது.
' Nike ' நிறுவனத்திற்கு லோகோ (Logo) கிடைத்ததும் சுவாரசியமான கதை தான். கூடுதல் வருமானத்திற்காக போர்ட்லாண்ட் மாநில பல்கலைக்கழத்தில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது பிலிப் நைட் கிராபிக் டிசைன் மாணவியான கரோலினை சந்தித்தார். கரோலினுக்கு ' Nike ' நிறுவனத்தின் டிசைனிங் வேலைகள் கொடுக்கப்பட்டது. நிறுவனத்தின் லோகோ இயக்கத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டுமென்று பிலிப் நைட் விரும்பினார். கரோலின் பல விதமான டிசைன்களை கொண்டு வந்து கொடுத்தார். ஆனால் பிலிப் மனதிலிருப்பதை எந்த டிசைனும் பிரதிபலிக்கவில்லை.
அப்போது மெக்சிகோவிற்கான 'ஷூ’ஆர்டர் தயாராகிக்கொண்டிருந்தது. முக்கியமான அந்த ஆர்டரின் ஷூ அட்டை பெட்டிகளில் லோகோவை பதிக்க விரும்பினார் பிலிப். நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தது , கரோலினும் பல டிசைன்களைக் கொடுத்தார். பிலிப்பிற்கு எதுவும் பிடிக்கவில்லை.
' ஷூ' அட்டைப்பெட்டிகள் தயாராக காத்திருந்தது. அப்போது பிலிப் கரோலினின் ' Swoosh' டிசைனை தேர்ந்தெடுத்து விட்டு , ' என் மனதிற்கு இந்த டிசைன் பிடிக்கவில்லை. இருந்தாலும் வேறு வழியில்லாமல் தேர்ந்தெடுக்கிறேன் ' என்றார்.
வேண்டா வெறுப்பாக பிலிப் நைட் தேர்ந்தெடுத்த ' Swoosh' லோகோ வடிவமைத்ததற்கு கரோலின் கேட்ட கூலி வெறும் 35 டாலர் மட்டும் தான்.
பின்னர் கரோலின் நைக் நிறுவனத்தின் விளம்பரப்பிரிவை தலைமை தாங்கி நடத்தினார்.
கரோலினின் ' Swoosh ' லோகோ நைக்கிற்கு அட்டகாசமாக பொருந்தியதாக உலகம் கருதியது. நைக்கும் லோகோவும் உலகப்புகழ் பெற்றது.
லோகோ டிசைன் செய்யப்பட்டு பன்னிரண்டு வருடங்களுக்குப்பின் அதாவது 1983 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் கரோலினை மதிய உணவிற்கு அழைத்தார் பிலிப். குறிப்பிடப்பட்ட இடத்திற்கு வந்த கரோலினுக்கு ஆச்சரியம். அங்கு பெருங்கூட்டம் கரோலினுக்காக காத்திருந்தது. ' Swoosh' லோகோவை டிசைன் செய்ததை பாராட்டி கரோலினுக்கு வைரம் பதிக்கப்பட்ட ' Swoosh' வடிவிலான தங்க மோதிரமும் சர்டிபிகேட்டும் கொடுக்கப்பட்டது. உடன் ஒரு கவரில் நைக் நிறுவனத்தின் பங்குகளையும் கரோலினுக்கு கொடுத்தார் பிலிப் நைட். எவ்வளவு பங்கு கொடுத்தார் என்பது மட்டும் ரகசியம். பிலிப் நைட்டிற்கு நிறுவனத்தின் பெயரும் லோகோவும் அதிக செலவில்லாமல் கிடைத்தது போல் எல்லோருக்கும் அமைவதில்லை.
ஆரம்ப காலங்களில் பிலிப் நைட் விளம்பரங்களை விட அதிகமாக விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த வேண்டுமென்பதில் அதிக கவனம் செலுத்தினார். பிலிப்பின் ஓட்டப்பந்தய கோச்ச்சும் ஆரம்பகால பங்காளியுமான பில் போவர் மேன் அமெரிக்க ஒலிம்பிக் டீமின் கோச்சானார். அவர் மூலம் மேலும் பல விளையாட்டு வீரர்களுக்கு நைக் அறிமுகமானது. நைக் ஷூ பயன்படுத்திய வீரர்கள் வெல்லும் போதெல்லாம் ரசிகர்களின் மனதில் மௌனமாக இடம்பிடித்தது நைக்.
புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான ஜான் மெக்கன்ரோ தனது முட்டில் அடிபட்ட பின் நைக் ஷூவின் ஒரு மாடலை பயன்படுத்தினார். உடனே அந்த மாடல் ஷூவின் விற்பனை பத்து மடங்கு எகிறியது.
பிலிப் நைட்டைப்போல் சாதகமான சூழல்கள் பல வேளைகளில் நிகழாது. எது நல்ல பெயர் என்று சொல்வதற்கில்லை. ஆனால் வெற்றி பெற்ற பிராண்டுகளின் பெயர்கள் சில அடிப்படை விதிகளுக்குள் அடங்கும் . அவை:-
1. பெயர் சின்னதாக இருக்க வேண்டும்.
உ.ம்.:- Tide , Tata , Apple , Surf
2. உச்சரிப்பதற்கு இலகுவாக இருக்கவேண்டும்.
உ.ம்:- Target, Feelings , Polo, Ipod
உச்சரிப்பதற்கு சிரமமான பிராண்ட்
உ.ம்:- Hoechst
3. சில நேரங்களில் பெயர் அதிர்ச்சிகரமானதாகவோ ஆச்சரியப்படுத்தக்கூடியதாகவோ இருக்கலாம்.
உ.ம்.:- FCUK (French Connection United Kingdom)
என்பது ஐரோப்பாவில் புகழ்பெற்ற துணி பிராண்ட் . Monster , Virgin , Diehard , Kamasutra போன்ற பிராண்டுகளும் இந்த வகைதான்.
4. தனித்துவத்துடன் இருக்கவேண்டும்.
உ.ம்:- Xerox , ரஜினிகாந்த் , Lexus
இவையெல்லாம் சில அளவு கோல்கள் தான் நல்ல பிராண்டுகள் எல்லா விதிகளையும் மீறியும் தோன்றலாம்.
- ந.இளங்கோவன்
(இன்னும் வரும்)
ஜுன் 01, 2007