தமிழும் சித்தர்களும்-28

கடந்த 7000 ஆண்டுகளாகவே தமிழர்கள் உலகெங்கும் வணிகம் செய்தனர் என்பதை நான் தொடரின் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். சிந்துவெளி, சுமேரியா, எகிப்து, சீனா, அமெரிக்க தேசங்கள், இங்கெல்லாம் தமிழர்கள் கடல்வழி வணிகம் செய்ததையும் அறிவோம். தமிழ் சித்தர்களும் பகுதி சார்ந்த புதுவகை உயிரினங்களைப் படிக்கவும், வானராய்ச்சி செய்யவும், மழை, தட்பவெப்ப சூழல் போன்ற விஞ்ஞான தகவல்களைத் திரட்டவும், கடல் கடந்த தேசங்களுக்குப் பயணித்தனர். வணிக செட்டியார்கள் செல்வம் தேடி தேசாந்திரம் சென்றனர். சித்தர்கள் ஞானம் தேடி தேசாந்திரம் சென்றனர். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சார்ந்தே பயணம் மேற்கொண்டனர். கடல் பயணங்களில் திசை அறிந்து கப்பல் செலுத்த சித்தர்களின்; விஞ்ஞானம் உதவியது. தொலை தூர தேசங்களில் சித்தர்களின் வாழ்வாதாரத் தேவைகளை செட்டியார்கள் கவனித்துக் கொண்டார்கள். இந்த நடைமுறை யதார்த்தத்திலிருந்து செல்வத்தோடு ஞானம் சேர வேண்டிய தேவையை செட்டியார்கள் உணர்ந்தார்கள் எனலாம். இதை உணர்த்தும் செல்வத்தை குறிக்க செட்டியார்களின் பருமனான உடலோடு, ஞானத்;தை குறிக்க சித்தர்களின் அடையாள சின்னமான யானையின் தலையை இணைத்து உயர்ந்த நாயகன் என்று பொருள்பட வீ + நாயகன், வீ என்றால் உயர்ந்த, நாயகன் என்றால் தலைவன் என விநாயகன், விநாயகரானது வரலாறு. மனித வாழ்க்கைக்கு ஞானம், செல்வம் இரண்டுமே அடிப்படை என்பதே விநாயகரின் வடிவம் நமக்கு உரைப்பது. இன்றும் பிள்ளையார் பட்டி, செட்டியார்களின் நகரமாகி, 2500 வருட காலத்திற்கு முற்பட்ட கோவிலாக உள்ளது. அரசமரத்தடி ஆசிவகமானதால் தான், ஆசிவகத்தின் முழுமுதற் கடவுளான விநாயகர், அரச மரத்தடியில் வைத்து வணங்கப்பட்டார். இந்த விநாயகர், ஊர்களுக்கு வருகை தந்து, அரசமரத்தடியில் அமர்ந்து, ஊர்மக்களுக்கு தீர்வு வழங்கிய சித்தர்களையே குறித்தது. ஆசிவக  சித்தர்கள் குண்டலினியை எழுப்புவர்கள் என்பதை குறிக்கவே, விநாயகரின் இரண்டு பக்கங்களிலும், பின்னி பிணைந்த குண்டலினி பாம்பு வடிவங்களும் வைக்கப்படுகின்றன. விநாயகர் செல்வத்திற்கும், ஞானத்திற்க்குமான தெய்வம் என்று குறிக்கும் வகையில் ஒரு பக்கம் லட்சுமியும், இன்னொரு பக்கம் சரசுவதி என்ற கலை வாணியும் வீற்றிருக்கும் படத்தை வீட்டிலும், நிறுவனங்களிலும் வைத்து இன்று வரை நாம் வழிபடுவது, இந்தியா முழுவதும் உள்ள பண்பாடு என்பதே என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்த ஆராய்ச்சியை நான் அறியாத வரை, ஓர் கேள்வி, எதற்காக கடவுளை வணங்குகிறோம் என்பது  விலகி, இந்த சித்தர்களின் அறிவியலை தமிழ் மொழியில் எப்படி உலகிற்கு சேர்ப்பது என்ற நிலையில், என்னை கடவுளை வணங்க வைத்து விட்டது. பணம் சம்பாதிப்பதற்கான என்னுடைய வேலை பளுவையும் மீறி, ஏதோ ஓர் தெய்வீக சக்தி, எழுதுவதற்கு எனக்கு நேரத்தையும், கால துரிதத்தையும், ஆராய்ச்சி தன்மைகளையும் அமைத்துக் கொடுக்கிறது என்பது வரலாற்றை தக்க வைக்கும் சித்தர்களின் ஆசியாகவே இது அமைந்துள்ளது, நான் எப்பிறவியில் செய்த பாக்கியமோ. இந்த பிள்ளையாருக்கு, சித்த வழிபாட்டில் நான் பிள்ளையாகவே இருக்க நன்றி கடன்பட்டுள்ளேன், ஒவ்வொரு ஊரின் அரசமரத்தடியில் நாயகனாக அமர்ந்துள்ள அரசன், கண்ணதாசன் மொழியில் ராஜாவாகி விட்டான்.   

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா 

ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி  

ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை  

அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை 

படிச்சிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் - ஒருவன் 

படுக்கையிலே முள்ளை வைத்து பார்த்து மகிழ்ந்தான்  

பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று கால் என்றான்  

ஒருவன் பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான்  

பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்  

அதை பிள்ளைக்கு மேல் கண்களை போல் காத்து வளர்த்தார்  

உண்மை அன்பு சேவை என்ற மூன்றும் கொடுத்தார்  

அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார்  

சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை  

ஒரு துணையில்லாமல் வந்தது எல்லாம் பாரமுமில்லை  

நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா  

தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா  

- படிக்காத மேதை படத்திலிருந்து 

இப்பாடலில் ஒன்பது பிள்ளைகளை நவகிரகங்களாக பாவித்தால், அதன் படி தான் நாம் இயங்குகிறோம், நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளைதானடா என்ற கண்ணதாசன் வரியின் வாழ்க்கை தத்துவத்தை பிள்ளையாரிடமே விட்டு விடுவோம். இந்த பிள்ளையார் என்ற பெயர் எவ்வாறு வந்தது அதன் பின்னால் உள்ள மருத்துவ அறிவும், ஏன் விநாயக சதுர்த்தி கொண்டாடுகிறோம் என்ற அறிவியல் அறிவும் இனி காண்போம். யானை குருவிற்கான அதாவது வியாழன் கோளிற்கான வாகனம். புத்திரகாரகனே சோதிடத்தில் குரு தான். நம் புத்திர சந்ததி விருத்தியும், மேலே கூறிய பாடலின் தன்மையும் குருவின் கையில் தான் உள்ளது. மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பு குருவிற்கு ஜோதிடத்தில் எப்பொழுதும் உண்டு. எந்த கிரகம் வலுவிழந்தாலும்  ஒரு ஜாககத்தில் குருபகவான் மட்டும் வலுவிழக்க கூடாது என்பது ஜோதிடத்தில் ஒரு மறைமுக விதி. மேலும் எந்த ஒரு ராஜயோக ஜாதகத்திலும் லக்னத்தையோ, ராசியையோ, குறைந்தபட்சம் லக்னாதிபதியையோ குருபகவான் பார்த்தே தீருவார் அல்லது வலுப்பெற்று இருப்பார். அதேபோல குருவின் பார்வை கோடி நன்மை என்பதையும், ஏன் முருகன் சித்தர்களின் குறியீடாக யானை தலையை தேர்ந்தெடுத்தார் என்பது இப்போது புரியும். அதோடு ஒரு ஜாதகத்தில் ஏராளமான தோசங்கள் கெடுக்கும் நிலையில் இருந்தால் கூட குருவின் பார்வையோ, தொடர்போ அந்த தோச அமைப்புக்கு இருந்தால் அது கெடுதல்களைச் செய்யாது என்பதும் குருவிற்கே உள்ள தனிச்சிறப்பு.

குருவின் சிறப்பியல்புகளாக சொல்லபடுவது நல்ல நடத்தை, நற்சிந்தனை, ஒழுக்கம் ஆகியவை. ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தோடு குருபகவான் சம்பந்தபட்டால், அவர் நல்லவராகவே இருப்பார் என்கிறது மூலநூல்கள். குருபகவான் ஜாதகத்தில் வலுப்பெற்று லக்னத்தோடு சம்பந்தப்படும் நிலையில் ஜாதகர் மிகவும் நல்லவராக இருந்து தன்னைப் போலவே பிறரையும் நல்லவர்களாக நினைத்து சனியின் ஆதிக்கம் பெற்றவர்களிடம் ஏமாறுவார் என்பது இன்றைய யதார்த்த நிலை. இந்த புறஉலகம் தாண்டி அக உலகை கொண்ட ஆன்மீக எண்ணங்களுக்கு காரகர் குருபகவானே. இவற்றில் ஆன்மீகம் என்பது குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களின் கூட்டுச் சேர்க்கையினை குறிக்கும். இப்போது பிள்ளையார் என்ற சொல் எப்படி வந்தது. அதன் சொல்லாய்வை பார்ப்போம். விநாயகரும், விநாயக சதுர்த்தியின் மூலமும் ஆச்சர்யமான தகவல்கள் தாய்லாந்திலும், கிழக்காசிய நாடுகளிலும் வழிபடுவது தமிழராகிய நமக்கு பெருமை. என்ன இங்கே அரசமரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்கிறார், அங்கே நின்று கொண்டிருக்கிறார். விநாயகர் முழுமுதற் கடவுளாக தமிழரால் போற்றப்படும் தெய்வம், விநாயகர் இல்லையேல் தமிழரின் சித்த வாழ்வியல் இல்லை. இன்றும் விநாயர்            ஜைண மதத்திலும், புத்த மார்க்கத்திலும் போற்றப்படுகிறது, நமது சிறப்பு. என்னை பொருத்தவரை புத்தரும் ஓர் சித்தரே.

ஜைணமும், புத்தமும் தமிழரின் ஆசிவக வாழ்வியிலின் வட இந்திய சித்த பிரிவே என்பதால் தான் அவற்றிலும் விநாயகர் போற்றப்படுகிறார். ஆசிவகம் என்பது ஆசு + ஈவு + அகம் ஸ்ரீ உடனடிதீர்வு வழங்கல் இடம் என்று பொருள். இது சித்தர்கள், மக்களின் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கிய இடத்தை குறித்த சொல். இதிலிருந்து தமிழரின் வாழ்வியல் சித்தர்களை சார்ந்தே உள்ளது என்பது விளங்கும். சித்தம் என்றால் அறிவு, அறிவுள்ளவன் தானே நாட்டை ஆள்கிறான் என்பது அன்றைய கோட்பாடு, எனவே மக்களுக்கு அனைத்து வகை தீர்வுகளையும் வழங்கிய, ஆசிவக சித்தர்களே ஆதியில் நமது அரசர்கள். ஒவ்வொரு ஊரின் நிர்வாகத்தை அந்தந்தப் பகுதிகளிலுள்ள மலைக் குகைகளில் வாழும் சித்தர்களே மேற்கொண்டார்கள். இந்த சித்தர்களே அந்தப் பகுதி மக்களின் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு வழங்கினார்கள். சித்தர்கள் வளர்பிறையில் நான்காம் நாளும், தேய்பிறையில் நான்காம் நாளும் ஊர்களுக்கு வருகைதந்து அனைத்து விதமான சிக்கல்களும் தீர்வு வழங்கியது தமிழரின் அடிப்படை வாழ்வியல் பண்பு. இவை யாவும் பெரிய அரசமரத்தடியின் நிழலில் நடந்ததே, இன்றைய சித்தர்களின் வழிப்பாட்டின் விநாயகர் குறியீடாக அமைந்துள்ளது. அரசமரத்தடியில் ஞானம் பெற்றதால் அரச மரத்திற்கு, புத்தர் காலத்திற்கு பிறகு போதிமரம் என்றும் பெயர் கொண்டது. ஊர்மக்கள் சித்தர் வரும் நாளை, நிலவின் மூன்றாம் பிறை கொண்ட பண்பாட்டுடன், அடுத்த நாள் நான்காம் நாள், சதுர்த்தி திதி வரும். அந்த சித்தர் வருகை நாளே, ஊர்மக்கள் தீர்வுகளை பெற்று, திருப்பி வழியனுப்பி வைப்பதை வரலாற்றில் தக்கவைக்க விநாயக சதுர்த்தி ஆனது. விநாயகர் என்றாலே, சித்தர்கள் என்றாலே முதலில் மருத்துவம் தான் நினைவுக்கு வரும் நிலையில், அருகம் புல் கொண்டும், எருக்கம் பூ என்ற மூலிகை கொண்டும் விநாயகரை அலங்கரிக்கின்ற நிகழ்வு உருப்பெற்றது. அருகம் புல் இன்றும் நாம் பயன்படுத்தும் மூலிகை, விநாயகரோடு பின்னி பிணைந்துள்ளது. அதனால் தான் புல் + ஐ + ஆர் ® புல்லையார் மருவி பிள்ளையார் என்பது வியத்தகு அருகம்புல் கொண்ட ஆன்றோன் என பொருள்படுகிறது. நமது பண்டிகைகளில் பெரும்பாலானவை வரலாற்றைத் தக்க வைக்கும், அறிவியல் ரீதியான தமிழர் பண்டிகைகளே என்ற பெருமை இன்று யார் அறிவார்? இதனுடன் மருத்துவம் எவ்வாறு இணைந்துள்ளது என்பதையும் இனி காண்போம்.  

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்   

முற்பட எழுதிய முதலோன் விநாயகன்  

வேதத்தை தருகின்ற முத்தமிழை படைகின்ற ஆற்றலை தரும் விநாயகனுக்கு  ஆயுதமாக இருப்பதே அருகம்புல் மருத்துவ அறிவே, இன்றைய தலைமுறையினருக்கு அறிவாற்றலையும், ஞாபகசக்தியை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை தருபனவாகவும் உள்ளது தமிழ் சிறப்பு. ஆணை முகம் பெருமானுக்கு பக்தர்கள் அணிவிப்பதே அருகம்புல் மாலை தான்.   

‘ஆல் போல் தழைத்து அருகு போல் வேர்விட்டு வாழ்க” 

என்று நாம் மணமக்களை வாழ்த்துவதில் இருந்து அருகி என்பது அருகம்புல்லைத் தான் குறிக்கிறது.   

அருகம்புல் நற்சீர் மிளகதனுகவே இடித்து 

ஓர்படி நீர்கொண்டு  

எட்டு ஒன்றாக காய்ச்சு 

- சுப்ரமணியம் பிள்ளை  

ஒரு கிலோ நிழலில் உலர்த்தப்பட்ட அருகம்புல், 100 மில்லிகிராம் சீரகம், ஐம்பது மில்லிகிராம் மிளகு சேர்த்து அரைத்து, நாட்டு சர்க்கரையுடன் கலந்து தினமும் காலையில் நீங்களும், குழந்தைகளும் ஒரு தேக்கரண்டி உண்ணலாம், இதையே கொதிக்க வைத்தும் பருகலாம். மூன்று வேளையும் கூட இதனை உண்ணலாம். இது குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தியை தருவதும், தினமும் விநாயகன் வழிபாட்டாகவே இதை நாம் கருதலாம். ஒவ்வொரு மூலிகையையும், ஒவ்வொரு கடவுளருடன் இணைத்து, தெய்வீக தன்மையில் மனிதர்களாக வாழ்ந்த நமது சித்தர்களின் தலைமுறை தாண்டிய அறிவியல் விதைத்த விதை இன்று வனமாகி நிற்கிறது. ஆனால் வனத்தை அழித்தே வரலாறு நிலை நிறுத்தப்படுவது வருந்ததக்க விசயம். மேகங்களை ஈர்க்கும் மரங்களை கண்டறிந்து வனமாக்கினால் மீண்டும் வளம் பெறும் இந்த சித்தர் பூமி. அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு, வடிகட்டி, அதனுடன் பால், நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வர சிறுநீர் சம்பந்தமான நோய்கள் நீங்கி சிறு நீர்ப்பை நோய்கள் நீங்கி சிறுநீர்ப்பையும் பலப்படும்.  

அருகம்புல்லுடன் வெண்தாமரை பூவிதழ்களைச் சேர்த்து கசாயமாக்கி தினமும் இருவேளை குடித்து வர இதய பலவீனம் நீங்கி, இதயமும், ரத்தக் குழாய்களும் உறுதிபெறும். இறைவனின் குறியீட்டு வடிவங்களிலேயே நமது வாழ்வியலனுக்கான மருத்துவ அறிவை வைத்த ஒரே இனம் தமிழினம் ஒன்றே. விநாயகர் அமர்ந்திருக்கும் தாமரை மலரும், அவருக்கு மாலையாக அணிவிக்கப்படும் அருகம்புல்லும் ஒவ்வொரு தமிழரின் இதயத்தை அவருக்கு வலுப்படுத்தும். மறைமுகமாக யோசியுங்கள் தாமரையும் இதய வடிவம் கொண்டதே.  

அருகம்புல் வேர், ஆவாரம் பூ இவை இரண்டையும் நிழலில் உலர்த்தி இடித்து சலித்து பொடியாக்கி கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து அத்துடன் நெய் கலந்து சாப்பிட மூலநோய் குணமாகும். மூலமுதல்வன் விநாயகன், மொத்த சித்தர்களின் குறியீடு என்று முன்னரே குறிப்பிட்டிருந்தேன். மூல நோய் வந்தவருக்கு தான் அருகம்புல்லின் அருமை தெரியும்.  

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வெற்றிலை, அருகம்புல், வேப்பிலை, மிளகு, நாவல் கொட்டை, கீழாநெல்லி கசாயம் குடித்து வர வேண்டும். குருகிரகத்தின் வாகனமான யானை, சித்தர்களின் குறியீடு என்பதை முன்னரே உணர்ந்தோம். அத்தகை குரு வணக்கம், சித்தர்களின் மரபியலில் குரு, சிஷ்ய பாரம்பரியத்தின்                மீது கட்டமைக்கப்பட்டது. இங்கே குருவே எல்லாவற்றுக்கும் மேலானவராகவும், இறைநிலைக்கு இணையானவராகவும் வைத்து போற்றப்படுகின்றார். சித்தர்களின் எந்த ஒரு செயலும், முயற்சியும் தங்களின் குருவினை முன் வைத்தே துவங்கியிருக்கின்றனர். எந்தவிதமான எதிர்ப்பார்ப்புக்கும் உள்ளாகாத ஆன்மீக கிரகம் குரு என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு சித்தர்களுக்கான மூலமந்திரங்கள் ஒவ்வொன்றும், என்றும் சித்த புருசர்களை தங்கள் தொடர்பில் வைத்திருக்க சீடர்கள் பயன்படுத்திய சூட்சகமாகவே கருதப்படுகிறது. இந்த மந்திரங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம், தாங்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு செயலுக்கும், தங்கள் குருநாதரான சித்த புருசர்களின் அருளும் ஆசியும் கிடைக்கும் என்ற நிலையில் கண்ணதாசனின் சிவசம்போ மந்திர வரிகளை காண்போம்.       

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com