தமிழும் சித்தர்களும்-30

சிவசிவ என்சிலர் தீவினை யாளர்  

சிவசிவ என்றிடத் தீவினை மாளும் 

சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் 

சிவசிவ என்னச் சிவகதி தானே     

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் 

நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லை நும்சித்தத்து 

நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது

முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர் 

என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே 

-    திருமந்திரம்

அனைத்து உயிர்களையும் படைத்த இறைவன் ஒருவனே. அவனே சிவ சிவ என்றாகி, உச்சரித்து வாழ்ந்தால், உயிர்கள் மீண்டும், மீண்டும் பிறப்பதும், பிறவிகள் தொடர்வதும் அற்றுப் போகும். எனக்கு மறு பிறவி என்று ஒன்று உண்டென்பதால், இறைவனே என்னை அடுத்த பிறவியில், அழகு தமிழில் பாடி வணங்கி வாழ வேண்டுகிறேன் திருமூலர் போன்று. சிவம் எனப்படும் பிரபஞ்ச மகா சக்தியிடம் சித்தர்கள் தொடர்பு கொண்டு, நமக்கு அருளிய பாடல்கள் மந்திரங்களாகவும், காலவியல் விஞ்ஞான கணிதம் ஜோதிடமாகவும், பல பாடல்கள் மருத்துவமாகவும், நம்மை வலம் வந்து கொண்டிருக்கிறது. இதில் தைராய்டு கழுத்து பகுதியில், முக்கியமாக பெண்களுக்கு பிரச்சனையாக உள்ளது, பார்வதி தேவி சிவபெருமானின் கழுத்தை பிடித்ததால் வந்த வினையோ? அதற்கான மருத்துவ முறையை பார்ப்போம். திரிபலா சூரணத்தை தினமும் அரை தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம். இரவில் உணவிற்கு பின் இதை பயன்படுத்தலாம். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிகாய் கலவையே திரிபலா என்பது, அதற்கான பாடல்களை காண்போம்.

கடுக்காய்

கடுக்காயுந் தாயுங் கருதிலொன்றென் றாலுங்  

கடுக்காய் தாய்க்கதிகங் காணீ - கடுக்காய்நோ

யோட்டி யுடற்றேற்று முற்றவனை யோ 

சுவைகளுட்டி யுடற்றேற்று முவந்து

தான்றிக்காய்

ஆணிப்பொன் மேனிக்கழுகு மொளிவுமிருங் 

கோணிக் கொள் வாதபித்தக் கொள்கைபோந் 

தாணிக்காய் கொண்டவர்க்கு மேகனறுங்  

கூறா வனற்றணியுங் கண்டவர்க்கு 

வாதம் போங் காண் 

நெல்லிக்காய்

நெல்லிக்காய்க் குப்பித்த  நீங்கி

மதன் புளிப்பாற் செல்லுமே வாதமதிற் 

சேர்துவர்ப்பாற் - சொல்லுமைய 

மோடுமிதைச் சித்தத்திலுன்ன 

வனலுடனே கூடுபிர மேகமும் போங்கூறு

-  தாயினும் சிறந்தது கடுக்காய், நோய் எதிர்ப்பாற்றலுக்கு உகந்தது.

-  தான்றிக்காய் வாதம், பித்தம் போக்கி, சளியெல்லாம் நீக்கும். 

-  நெல்லிக்காய் தருவது நோய் எதிர்ப்பாற்றல், மற்றும் கபம் சம்மந்தப்பட்ட நிலையை சரிசெய்யும்.   

அயோடின் உள்ள உப்பு வகைகளை பயன்படுத்துவதும், கடல்பாசி உணவுகளை பயன்படுத்துவம், தைராய்டு கோளாறுகளுக்கு மிக முக்கியமானது. நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளித்து செயல்படுவதும் தேவை. தும்பை இலையை அரைத்து, கழுத்தை சுற்றி பூசி கொள்வதும் தேவை. கழுத்து பயிற்சியை கற்றுக் கொண்டு, தினமும் அவசியம் செய்யவும். இல்லையென்றால் 8 போன்ற நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். 8 போடுவதால் மூச்சு பயிற்சியும் செய்த பலனும் கிடைத்து விடும். 

தொண்டை அழற்சிக்கு, கடுக்காய் தோல், அரிசி திப்பிலி, சித்தரத்தை, வால் மிளகு, ஜாதிக்காய் இவற்றின் கலவை மிக அரிய மருந்தாகும். இவற்றை எவ்வாறு, எவ்வளவு அளவு கோலில் சேர்த்து உண்ண வேண்டும் என்பதை தேர்ந்த சித்த மருத்துவரிடம் தெரிந்து கொள்ளலாம். 

தைராய்டு பிரச்சனையில் முதலில் நாம் இழப்பது குரல் வளமை, அந்த குரல் வீணை போல் ஒலிக்க நந்தீசர் அருளிய விடத்தலைக் கற்பம் காண்போம். 

          வாறுகேள் விடத்தேர்வர் பட்டை வாங்கி  

          மருவநன்றாய்க் நிழலுலர்த்தி சூரணமே செய்து 

          பேறுகேள் பலம் நாலு நிறுத்துக் கொண்டு

          பேசரிய சூதமது பலந்தானாலு 

          தாறுகேள் கலவத்தி லிதனைப் போட்டு 

          சாதகமாய் மல்லிகையின் சாறுவிட்டு 

          தேறுகேள் எண்சாம மைபோலரைத்து 

          தேன்வார்த்து வுண்டைசெய்து சிமிழில் வையே. 

                            - நந்தீசர்

விடத்தலை மரத்தின் வேர் மற்றும் பட்டையை எடுத்து நன்கு இடித்து சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தச் சூரணத்தில் இருந்து நான்கு பலம் அளவு கொண்டு, அதனுடன் இரசம் (பாதரசம்) நான்கு மடங்கு சேர்த்து, மல்லிகை சாறுவிட்டு, எட்டு சாமம் வரை தொடர்ந்து அரைக்க வேண்டுமாம். பின்னர் இந்த கலவையுடன் தேன் சேர்த்து குழைத்து நிழலில் உலர்த்தி, சிமிழில் சேமிக்க வேண்டும் என்கிறார் நந்தீசர். இதனை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் உண்டு வந்தால் வாதம், பித்தம், கபம் ஆகியவை சரியான அளவில் அமைத்து, குரலும் வீணையின் ஒலிபோல் இருக்கும் என்கிறார். ஒரு மண்டலம் 48 நாட்கள் எவ்வாறு வந்தது என்று அறிவோமோ? அதற்கு முன்னர் நந்தீசரை பற்றியும், அவரை போற்றி வணங்க கூடிய மந்திரம் பற்றியும், அதுபோல் ஒவ்வொரு சித்தர்களின் மந்திரம் பற்றியும் அறிந்து கொள்வோம்.

நந்தீசரே திருமூலரின் குரு ஆவார். வைத்திய காவியம், கலை ஞான சூத்திரம், நிகண்டு, கருக்கிடை, சம்வாதம், ஞான சூத்திரம் ஆகிய நூல்கள் நந்தீசர் எழுதியதாக அறிய முடிகிறது. இவரது ஜீவசமாதி திருவாவடுதுறையில் உள்ளதாக நம்பபடுகிறது. விசாகம் நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கி வரலாம். இவரது மந்திரத்தையும் உச்சாடணம் செய்தும் வரலாம். நந்தீசர் தனது ‘நந்தீசர் நிகண்டு 300” என்னும் நூலை விநாயகர் வணக்கத்துடனேயே ஆரம்பிக்கின்றார்.  

     வெள்ளியங் கிரியான் தந்த  

     வேழமா முகனே யெந்தன் 

     உள்ளினுக் குள்ளாய் நாளும் 

     உரிவினுக் குருவாய் நின்று 

                      -    நந்தீசர்

ஒவ்வொரு சித்தரும் அவர்தம் குருவணக்கத்தை செலுத்தியே, அவர்தம் பணிகளை தொடர்ந்திருக்கின்றனர். சித்தர்களும் தங்களுடைய எந்த ஒரு நூலையும் விநாயகர் காப்புடனே துவங்கியிருக்கின்றனர். குருவின் வாகனம் யானை, விநாயகரும் எவ்வாறு கட்டமைக்கப்பட்டார் என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன், ஞாபகம் கொள்ளுங்கள்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com