தர்ம சக்கரப் பரிவர்த்தனம்! - போதியின் நிழல் 38

தர்ம சக்கரப் பரிவர்த்தனம்! - போதியின் நிழல் 38

சாரநாத்தின் மான்வனம் அந்திவேளையில் சிவந்து கிடந்தது. சிறுவயதில் தான் கல்விகற்க இங்குவந்ததிலிருந்தே இந்த பூமி இங்கே சிவந்து கிடக்க சரியான காரணம் என்னெவென்று தெரியாமல் தாரகேசி குழம்பியிருக்கிறார். வானின் மேகங்களை எட்டும் அளவுக்கு உயர்ந்திருந்த பிரம்மாண்டமான செங்கல் விஹாரத்தின் சிவப்பு இங்கே மேலும் சிவப்பை விதைக்கிறதா? அல்லது இங்குள்ள மண்ணின் சிவப்பு மேலும் சிவப்பை எங்கும் பெருகச் செய்துகொண்டிருக்கிறதா என தனிமையான மாலை நேரங்களில் தன் அறையின் சாளரம் வழியாகப் பார்க்கையில் தாரகேசிக்குத் தோன்றுவதுண்டு. ஸ்தவிரவாதிகளின் பௌத்தம் நிலைகொண்ட இடமாக விளங்கிய மான்வனம் ஆரிய வர்த்தம் முழுக்க மிக முக்கிய புனித இடமாகப் புகழ்பெற்று விளங்கியது.

கல்விக்காக சிறுவயதில் பாடலிபுத்திரத்தில் இருந்துவந்து அதன் பின் இங்கேயே பிக்குவாக துறவறம் பூண்டு பகவான் புத்தரின் தர்மத்தைப் பரப்பும் பணியிலும் ஈடுபட்டு வந்தவர் தாரகேசி. தர்மபிரச்சாரத்துக்காகபல ஊர்களுக்கு காலநடையாகப் பயணம் செய்யும்போதும் ஊருக்கு வெளியே தங்கும்போதும் தாரகேசி அந்திச்சூரியனின் அழகை ரசிக்கத் தவறமாட்டார்.

அன்று ஏனோ ஸ்தூபிகளும் விஹாரங்களும் முளைத்திருந்த மான்வனம் மிகுந்த அழகாக காணப்பட்டதாக உணர்ந்தார் தாரகேசி. அவர் இருந்த முதன்மை விஹாரத்தின் எதிரே அழகிய திறந்த வெளி இருந்தது. அதில் பல பிக்குகள் நடைபயின்று கொண்டிருந்தனர். சிலர் நடந்துகொண்டே தியானப் பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தனர்.

தர்மசக்கரத்தை புத்தர்பிரான் முதல்முதலில் சுழற்றிய மண் இந்த இடம்தான் என்பதால் மான்வனத்திற்கு பௌத்தர்கள் மத்தியில் பெரும் பக்தியும் பணிவும் உண்டு. பல்வேறு இடங்களில் இருந்து யாத்திரை வருபவர்கள் வந்து தங்கிச் செல்ல வசதியாக பல சத்திரங்களை அசோக மஹாராஜா காலத்திலிருந்து இங்கே கட்டி வைத்துள்ளனர் என்பதால் வாரணாசியில் இருந்து கங்கையைக் கடந்து இங்கு வரும் புத்தர் பிரானின் அடியார்கள் கூட்டம் இங்கு வசதிக் குறைவை அனுபவித்தது இல்லை.

வெளியே சரணகோஷம் காதைப் பிளந்தது. கண்டா மணிகள் முழங்கின. தாரகேசி கண்ணை இடுக்கி வெளியே பார்த்தார். ஒரு பயணக் குழுவினர் வந்துகொண்டிருந்தனர்.

அவர்களுக்கு நடுவே சிவப்பாய் உயரமாக ஒருவர் வருவதைக் கண்டார். உடனே அவர் யாராக இருக்க்க் கூடும் என்பதை தாரகேசி ஊகித்துவிட்டார். ஏனெனில் யுவான் சுவாங்கின் வருகை குறித்த தகவல் பலமாதங்களூக்கு முன்பே இங்கு எட்டியிருந்தது.

வெளியிலிருந்து வரும் முக்கிய விருந்தினர்களை உபசரிக்கும் பணி அங்கு தாரகேசிக்குத்தான் ஒதுக்கப் பட்டிருந்தபடியால் யுவான் சுவாங்குடன் அடுத்த இரண்டுநாட்களில் தாரகேசி நெருக்கமாகப் பழகிவிட்டார்.

அசோக மகராஜாவால் நிறுவப்பட்ட 100 அடி உயரமான ஸ்தூபிக்கு முன்னால் கம்பீரமாக நின்றது அவர் வைத்த கல்தூண். சுமார் எழுபது அடி உயரம். வழவழப்பாக இருந்த அந்தகல்தூணின் உச்சியில் பிரம்மாண்டமான நாற்திசையில் பார்க்கும் சிங்கங்கள். அவை அமைந்திருந்த மேடையில் நான்கு திசையிலும் தர்மச்சக்கரங்கள் பொறிக்கப் பட்டிருந்தன. அதன் அருகே யுவான் கண்களை மூடி மௌனமாக அமர்ந்திருந்தார். அதுவும் ஒர் மாலை நேரம். சற்று எட்ட நின்ற தாரகேசி மாலையை உற்றுக் கவனித்து ரசிக்க ஆரம்பித்தார்.

‘’சகோதரரேஸ”” யுவான் சுவாங் தாரகேசியை அழைத்தார்.

தாரகேசி அவர் அருகில் சென்று அமர்ந்தார்.

’’மாலை வேளையில் சூரியனை மிகவும் ரசிப்பீர்கள் போலிருக்கிறதே?””

‘’ஆம் சீனத்து சகோதரரேஸ எனக்கு சிறுவயதிலிருந்தே இந்த ரசனை உண்டு. ஒவ்வொருநாளும் புதிதாகப் பார்ப்பதுபோலவே இருக்கும்’’

‘’ம். இயற்கையின் அழகை ரசிக்காதவர்கள் யார்?’’

‘’அத்துடன் பகவான் புத்தர் ரசித்த மாலைச்சூரியனும் இதுதானே என்ற எண்ணமும் அவர் தர்ம சக்கரப் பரிவர்த்தனம் செய்த இடத்தில் இருந்து அந்த சூரியனைக் காண்கிறோம். நாளை நமது இடத்தில் இருந்து இன்னொருவரும் அதே சூரியனைக் காண்பார். அவர் மனத்திலும் இதே போன்ற எண்ணங்கள் தோன்றும் என்கிற ஒரு கருத்தும் என் மனதில் தோன்றுவதுண்டு”

‘’மான்வனத்தில் வசிக்கும் உங்கள் மனதில் இப்படிப் பட்ட எண்ணங்கள் தோன்றாவிட்டால்தான் ஆச்சரியம்’’

தாரகேசி எதுவும் கூறாது புன்னகை செய்தார்.

‘’கௌண்டியர், வாஷ்பர், பத்திரிகர், மகாநமா, அஸ்ஸாஜி- ஆகிய பஞ்சவர்க்கத்து பிக்குகள்தான் எவ்வளவு பாக்கியம் செய்தவர்கள். புத்தர் பிரானின் தவத்தின்போது அவருக்கு உதவி செய்தவர்கள். பகவான் ஞானம் பெற்றபோது முதல்முதலாக உருவேலாவில் இருந்து இந்த மான்வனத்துக்கு தேடிவந்து இவர்களுக்கு அல்லவா தர்மத்தை உபதேசம் செய்தார்! இதோ இன்று சீனத்தில் இருந்து யான் வந்து இங்கே அலைகிறேன் எனில் அதற்கு இங்கு சுழன்ற தர்மசக்கரத்தின் ஆரங்கள் அன்றோ காரணம்?”

‘’ஆம் சகோதரரே, சிலநேரங்களில் எனக்கு சிரிப்பு வரும். கடும் தவத்தை கைவிட்டு ததாகதர் உணவை எடுத்துக் கொண்டவுடன் இந்த பஞ்சவர்க்கத்துப் பிக்குகள் ஐவரும் அவரை விட்டு கோபித்துக் கொண்டு நீங்கினார்கள். எனவே சில காலம் கழித்து கோதமர் என்று அவர்களால் அறியப்பட்டிருந்த புத்தர் தங்களை நோக்கி வருவதை தொலைவில் இருந்து கண்டதும் அவருடன் பேசுவதில்லை என முடிவு செய்தனர். ஆனால் அவரது ஜோதிமயமான முகத்தைக்கண்டதும் தங்களை அறியாமல் அவரை வரவேற்று அவரது தர்மத்தை உபதேசிக்க சொல்லிக் கேட்டனர். ததாகதர் என்று தன்னை அழைக்குமாறு புத்தர் இங்குதான் கூறினார்.முதல்முதலில் பௌத்த சங்கமும் இங்குதான் உருவாகிற்று. ஆனாலும் அவரை மறுதலிக்கக் கருதிய அந்த ஐவரை நினைத்துப் பார்க்கிறேன். எவ்வளவு பெரிய வாய்ப்பை அவர்கள் நழுவவிட இருந்தார்கள்?’’


‘’தாரகேசியாரே.. நன்றாகப் பேசுகிறீர்கள். மனித இனமே அப்படித்தான். வாய்ப்புகள் தேடிவருகையில் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறவர்கள்தான் அதிகம். நாடி வருகிற எதையும் மட்டமாகப் பார்க்கும் மனநிலைதான் உலகில் நிலவுகிறது”

‘’சரியாகச் சொன்னீர்கள் சகோதரரே’’

யுவான் எழுந்தார். பின் மெல்ல இருவரும் நடந்து விஹாரத்துக்கு வந்தனர். உள்ளே நடுநாயகமாக தர்மச்சக்கரப் பரிவர்த்தனம் செய்யும் ததாகதர்.பொன் வண்ணத்தில் இருந்த அவரது சிலை அங்கிருந்த சிறுவிளக்கொளியில் பிரகாசித்தது. உட்கார்ந்த நிலையில் இருந்த அவரது கரங்கள் மார்புக்குக் கீழாக தர்மத்தை உபதேசிக்கும் முத்திரையில் இருந்தன. மூடிய அரைக்கண், அருள் பொங்கும் முகம்…. யுவான் அங்கேயே அமர்ந்துவிட்டார்.

தாரகேசி மெல்ல விஹாரத்துக்கு வெளியே வந்தார். இருள் சூழ்ந்துகொண்டு வந்த அவ்வேளையில் சரணகோஷம் மிகப் பலமாக வெளியே கேட்டது. அந்த சரணகோஷமாக தானும் ஒருகணம் மாறி காற்றில் மிதப்பதுபோல் உணர்ந்தார் தாரகேசி. மான்வனத்தின் உச்சியில் விண்மீன் ஒன்று மெல்ல கண்சிமிட்டியது.

பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com