"நாளையைப் பற்றி நாம் பேசவேண்டாம். இன்று இரவு இசையைப் பேசவைப்போம். அது நம்மை விட இனிமையான மொழியில் அழகாகப் பேசும்." -வில்கி கோலின்ஸ்.
கல்வி-செல்வம்-வீரம் மூன்றிலும் உயர்ந்தது எது என்ற கேள்வியை முன்வைத்து ஒரு சுவராசியமான திரைக்கதையை அமைத்து கருத்தாழம் மிக்க வசனங்களை எழுதி - அவற்றுக்கு உயிர் கொடுக்க நடிகர் திலகம் சிவாஜிகணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, சிவகுமார், ஜெமினி கணேசன், பத்மினி, தேவிகா என்று திறமைசாலி நட்சத்திரங்களை நடிக்க வைத்து ஏ.பி.நாகராஜன் "சரஸ்வதி சபதம்" படத்தை இயக்கி இருந்தார்.
கவியரசு கண்ணதாசன் அணுவைத் துளைத்து கடலைப் புகுத்தியது போல அற்புதமான கருத்துக்களை எளிமையான வார்த்தைகளில் வடித்துக் கொடுத்தார்.
அந்தப் பாடல்களுக்கு கே.வி.மகாதேவன் அமைத்த இசை படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றது.
"திருவிளையாடல்" படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது புராணப் படங்களை கே.வி.மகாதேவனின் இசையோடுதான் தொடங்குவது என்பதை ஒரு கொள்கையாகவே கடைப்பிடிக்க ஆரம்பித்தார் ஏ.பி.நாகராஜன்.
அதற்கேற்றமாதிரி சரஸ்வதி சபதம் படத்தின் ஆரம்பக் காட்சியும் கே.வி. மகாதேவனின் இசையில் அமைந்த பாடலோடுதான் தொடங்குகிறது.
கலைமகளின் அறிமுகக் காட்சி - அன்னை கலைவாணி கோமாதா பூஜை செய்யும் பாடலோடு கண்முன் தோன்றுகிறது.
புலவர் திரு நாவிற் பொருந்தும் தமிழ் வாழ்க.
கன்னித் தமிழோடு கலந்த நற்கவி வாழ்க
அன்னை கலைவாணி வண்ணப் பெயர் வாழ்க வாழ்கவே"
மங்கள வழக்குடன் வாழ்த்துக்களோடு ஒரு தொகையறாவாகப் பாடல் தொடங்குகிறது.
அதனைத் தொடர்ந்து வரும் சொற்கட்டுக் கோர்வைகளை முழக்கும் தாளவாத்தியங்களின் தனி ஆவர்த்தனம் காட்சிக்கே ஒரு தனி கம்பீரத்தைச் சேர்க்கிறது.
"தனி" முடிந்ததும் பி.சுசீலாவின் குளுமைக் குரல் "கோமாதா எங்கள் குலமாதா" என்று பீம்ப்லாஸில் எடுப்பாக ஆரம்பிக்கும் போதே நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது.
சரணங்களை இணைக்கும் இணைப்பிசையில் கே.வி.மகாதேவனின் கற்பனைத் திறம் நம்மை பிரமிக்க வைக்கிறது.
இறுதியில் கோரஸ் பாடகியரின் குரலிலும் பி. சுசீலாவின் குரலிலும்
“நலம் நீயே
வளம் நீயே
நதி நீயே
கடல் நீயே "
என்று மாறி மாறி வரும் வரிகள் உச்சத்தை எட்டும்போது பி. சுசீலாவின் குரலை
“உலகம் யாவும் கருணையோடு பெருகி வாழ அருள்வாயே " என்று உச்சத்தில் ஏற்றி நிறுத்தி பாடலை முடிக்கிறார் கே.வி. மகாதேவன்.
மத்யம ஸ்ருதியில் துவங்கும் பாடல் படிப்படியாக மேலேறி உச்சத்தில் முடிகிறது.
பொதுவாக பாடல்களை மத்யம சுருதியிலேயே துவங்குவது கே.வி.மகாதேவனின் வழக்கம். இந்தப் பாடலும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
ஆரம்பத்தில் கடைசியில் வரும் "நலம் நீயே" என்று துவங்கும் வரிகளை பி.சுசீலாவே முழுவதுமாக பாடுவதாக இருந்தது. ஒலிப்பதிவு நேரத்தில் கோரஸ் பாடகியரும் இணைந்தால் இன்னும் எடுப்பாக இருக்கும் என்று தோன்றியதால் மாற்றி அமைத்தாராம் கே. வி.மகாதேவன்.
இந்தப் பாடல் மட்டும் என்று அல்ல. மகாதேவனின் இசையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் இசை அரசி பி. சுசீலா பகிர்ந்து கொண்ட தகவல் இது.
அது மட்டும் அல்ல. அவருடன் பணியாற்றிய அனுபவங்களாக பி.சுசீலா பகிர்ந்து கொண்ட தகவல்கள்... அப்பப்பா.. எப்படிப்பட்ட இசைமேதைகள் நம்மிடையே இருந்திருக்கிறார்கள் என்று வியக்க வைக்கின்றன.
"பொதுவா "மாமா" ஹார்மோனியம் உபயோகப் படுத்தவே மாட்டார். பாட்டுக்குத் தான் டியூன் போடுவார். பாட்டு வரிகளைப் பார்த்ததும் புகழேந்தியைப் பார்த்து 'புகழேந்தி ராகத்தை பாடிக்காட்டு" என்று சொல்லுவார். புகழேந்தி பல்லவியோட முதல் வரியை பாடுவார். உடனே கடகன்னு ஆரம்பிச்சு முதல் சரணம், ரெண்டாவது சரணம் வரைக்கும் மாமாவே பாடி முடிச்சுடுவார். புகழேந்தி நொட்டேஷன் எடுக்க முடியாம திணறிடுவார். "திரும்பிச் சொல்லுங்கோ மாமா" என்று கேட்டால் .. "டேய். அதுபாட்டுக்கு தானாவே வந்துது. திருப்பிச் சொல்லச் சொன்னா எப்படிடா" என்பார்." - என்று மலரும் நினைவுகளில் மூழ்கினார் பி.சுசீலா.
"மாமாவோட மியூசிக்லே பாடறப்போ நான் ரொம்ப ஹோம்லியா பீல் பண்ணுவேன்."மறக்க முடியாத பல பாடல்களை எனக்கு கொடுத்து இருக்கார் மாமா. அதுலே இந்த "கோமாதா" பாட்டும் ஒண்ணு." -
கலைமகளின் அறிமுகம் இந்தப் பாடலுடன் என்றால் திருமகளின் அறிமுகக் காட்சிக்கு "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு" என்ற பெரியாழ்வார் பாசுரத்தை ஆலயங்களில் பட்டாச்சாரியார்கள் ஓதுவதைப் போலவே கோரஸ் பாடகியரைப் பாடவைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.
அடுத்து வரும் மலைமகளின் அறிமுகமோ சக்தி நடனத்துடன்..
தாளவாத்தியங்கள் மட்டுமே ஒலிக்கும் இந்தக் காட்சிக்காக கே.வி.மகாதேவன் மேற்கொண்ட சிரத்தையும் ஈடுபாடும் நம்மை வியக்க வைக்கின்றன. சதுஸ்ர நடை, திஸ்ர நடை, மிஸ்ர நடை, கண்ட நடை ஆகிய நான்கு நடைகளையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி இந்த நாட்டியக் காட்சிக்கான பின்னணி இசையை அமைத்திருக்கும் லாவகம் அபாரம்.
வெறும் மூன்று நிமிடக்காட்சிக்காக இப்படி மெனக்கெட்டிருக்கும் அவரது தொழில் பக்தி இன்றைய தலைமுறை இசை அமைப்பாளர்களுக்கு சரியான முன்னுதாரணம்.
"கல்வியா செல்வமா வீரமா" - டி.எம்.சௌந்தரராஜன் பாடும் இந்தப் பாடலை காம்போதியில் ஆரம்பித்து காபி. பாகேஸ்ரீ, சிவரஞ்சனி ஆகிய ராகங்களில் ஒரு அருமையான ராகமாலிகையாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.
தொடர்ந்து பிறவி ஊமை - கலைமகள் அருளால் - பாடும் வல்லமை பெறும் காட்சி.
"அகர முதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி." -கவியரசு கண்ணதாசன் ஒரு அட்சரமாலையாக அமைத்துக் கொடுத்த அற்புதப் பாடலை இன்றளவும் நிலைக்க வைத்திருக்க மகாதேவன் கையாண்ட ராகம் "நடபைரவி" என்றால்..
"தெய்வம் இருப்பது எங்கே" பாடலுக்கோ சிந்துபைரவி.
அன்றாடம் பிச்சை எடுத்து பிழைக்கும் ஒருத்தியை நாட்டுக்கே ராணியாக ஆக்குகிறாள் திருமகள்.
"தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா" - பி.சுசீலாவின் குரலில் ஒரு சோகமான பாடல். இந்தப் பாடலில் பட்டினத்தாரின் பாடல் கருத்தை சரணத்தில் எளிமையாகக் கொடுத்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன்.
"மாதாவும் உடல் சலித்தாள்.
வல்வினையோன் கால் சலித்தேன்.
வேதாவும் கைசலித்து விட்டானே. - தாதா.
இருப்பையூர் வாழ் சிவனே.
மீண்டும் ஒரு கருப்பையூர் வாராமல் கா" - இது பட்டினத்தடிகள் வாக்கு.
இதையே சரணத்தில் -
"பெற்றவள் உடல் சலித்தாள்
பேதை நான் கால் சலித்தேன்
படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா
மீண்டும் பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா" - என்று கண்ணதாசன் எளிமைப்படுத்தி பாமர மக்களையும் சென்றடையும் வண்ணம் பாடலாக வடித்திருக்கிறார் என்றால் அந்த வரிகள் மக்களைச் சென்றடையும் வண்ணம் கே.வி.மகாதேவன் வார்த்திருக்கும் இசை ஒரு பாடலை எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கு சாட்சி.
அடுத்து "உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி" - பாடல்.
ஏற்கெனவே "பாஞ்சாலி" படத்தில் ஏ.எல்.ராகவன் பாடிய "ஒருமுறை பார்த்தாலே போதும்" - பாடலின் இன்னொரு இசை வடிவம் தான் என்றாலும் மகாதேவன் காட்டி இருக்கும் வித்தியாசம் பாடலின் வெற்றிக்கு சான்று.
"ராணி மகாராணி" - தெம்மாங்கு மெட்டில் அமைந்த ஒரு பாடல்.
"சரஸ்வதி சபதம்" - படம் மகத்தான வெற்றி பெற்றது.
தொடர்ந்து ஏ.பி.நாகராஜனும், கே.வி. மகாதேவனும் மறுபடியும் இணைந்தார்கள்.
இந்த முறை ஏ.பி.நாகராஜனின் சொந்தப் படம் அல்ல. கவியரசு கண்ணதாசனின் மூத்த சகோதரர் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தனது ஏ.எல்.எஸ். ப்ரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்த புராணப் படத்துக்காக.
படம் : " கந்தன் கருணை."
கந்தன் கருணை படப் பாடல்களிலும் பின்னணி இசையிலும் மகாதேவனின் கடின உழைப்பு நன்றாகத் தெரிந்தது.
தேவேந்திரனின் மனைவி இந்திராணி தேவர் குறை தீர்க்கவேண்டி சிவபெருமானிடம் முறையிடும் காட்சிக்காக "வெள்ளிமலை மன்னவா" பாடல் - எஸ். வரலக்ஷ்மியின் உணர்ச்சி பொங்கும் குரலுக்காகவே பாடலைக் கேட்கலாம். சாருகேசியில் மகாதேவன் பாடலை அமைத்திருக்கும் விதம் பாடலுக்கு தனி ஏற்றத்தையே கொடுத்திருக்கிறது.
"ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்" - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, எஸ்.ஜானகி, சரளா ஆகியோர் பாடியிருக்கும் அருமையான பாடல் இது. பஹாடியில் இப்படி ஒரு வித்தியாசமான மென்மையாக மனதை வருடிக்கொடுக்கும் பாடலைக் கேட்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.
தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதனைப் புகழ்ந்து உமையவள் பாடுவதாக காட்சி.
"சொல்லச் சொல்ல இனிக்குதடா" - பி. சுசீலாவின் குரலினிமையில் மகாதேவனின் குந்தலவராளி சொக்க வைக்கிறது.
பொதுவாக கே.வி. மகாதேவனிடம் ஒரு பழக்கம் உண்டு. பாடல் பதிவு முடிந்ததும் சட்டென்று ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து வெளியேறி விடுவதுண்டு. எப்போதும் என்று இல்லை. ஆனால் அடிக்கடி இப்படி அவர் வெளியேறுவது நடக்கும்.
"சொல்லச் சொல்ல" - பாடல் பதிவிலும் பி. சுசீலா பாடி முடித்ததும் "கட்" என்று குரல் கொடுத்தபடியே வெளியேறிவிட்டார் அவர். "எனக்கு பயமா போயிடுச்சு. சரியா பாடவில்லையா. மாமாவுக்கு திருப்தி இல்லையோ என்று நினைச்சுட்டேன். புகழேந்தி கிட்டே கேட்டே விட்டேன். அதுக்கு அவர் "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லே. "டேய். புகழேந்தி. சுசீலா கிட்டே பாடினது ரொம்ப நல்லா இருந்ததுன்னு சொல்லிடுடா" என்று பாராட்டிவிட்டுத்தான் வீட்டுக்கு கிளம்பிப் போனார்." என்று சொன்னதும் தான் எனக்கு உயிரே வந்தது." என்று இந்தப் பாடல் பற்றிய தன் நினைவை பி. சுசீலா பகிர்ந்து கொண்டார்.
"அது மட்டுமில்லே. பாடறவங்களுக்கு எந்த அசௌகரியமும் வந்துடக்கூடாது என்பதிலே ரொம்ப கவனமா அவர் இருப்பார். கொஞ்சம் சிரமப்பட்டா மாதிரி தெரிஞ்சாலும் "அப்படியா. அப்போ ஒரு வாத்தியத்தை குறைச்சுடு. பாடறவங்க குரல் துல்லியமா கேக்கணும்" - என்பார். - என்று சுசீலா அம்மா சொன்னதைக் கேட்டபோது "தப்பித்தவறிக்கூட வார்த்தைகள் கேட்டுவிடக்கூடாது என்று வாத்தியங்களை ஓங்கி ஒலிக்கும் தற்காலத்தைய இசை அமைப்பாளர்கள் மனக்கண் முன் வந்து போனார்கள்.
கே. பி. சுந்தராம்பாள் இல்லாமல் புராணப் படமா? இதிலும் அவரது வெங்கலக் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
"அரியது கேட்கின் தனி நெடுவேலாய்" என்று விருத்தங்களாக விரியும் பாடல் "என்றும் புதியது பாடலென்றும் புதியது பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது" (முன்பு சொன்ன ச்ரோதோவகயதி நினைவுக்கு வருகிறதா?!) என்று ஷண்முகப் பிரியாவில் விரியும் போது பாடலின் எடுப்பும் கம்பீரமும் மனதில் நிலைக்கிறது.
"வெற்றிவேல் வீரவேல்" - டி.எம்.எஸ். குரலில் கம்பீரமான ஒரு பாடல்.
பொதுவாக தந்தி வாத்தியங்களையே இணைப்பிசைக்கு பயன்படுத்தும் மகாதேவன் தாளவாத்தியங்களை மட்டும் பயன்படுத்தி இணைப்பிசையைக் கொடுத்திருக்கும் பாடல் இது.
"மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு" - பீம்ப்ளாசில் பி.சுசீலாவின் தேன்பொழியும் குரலில் ஒரு பாடல்.
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்" - கவிஞர் பூவை செங்குட்டுவனின் பாடலை சூலமங்கலம் ராஜலக்ஷ்மியும், பி. சுசீலாவும் பாடி இருக்கிறார்கள்.
அப்போது வளர்ந்து வந்து கொண்டிருந்த, வாய்ப்புக்காக காத்துக்கிடந்த குன்னக்குடி வைத்தியநாதன் மெட்டமைத்து சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகன் பக்திப் பாடல்கள் அடங்கிய இசைத் தட்டாக வெளியிட்டிருந்தார். அதனை ஏ.பி.நாகராஜன் பயன்படுத்திக்கொள்ள விரும்பியதும் சந்தோஷமாகக் கொடுத்துவிட்டார் குன்னக்குடி வைத்தியநாதன்.
"கே.வி.மகாதேவன் அவர்கள் சங்கீதத்தில் பெரிய மேதை. இசை அமைப்பதில் ஜாம்பவான். சாதாரண - ஆரம்ப நிலையில் இருந்த நான் போட்ட மெட்டை அவர் ஏற்பாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவரோ அந்த மெட்டை அப்படியே ஏற்று இன்னும் அழகுபடுத்தி பிரமாதப் படுத்திவிட்டார். அவருடைய பெருந்தன்மையையும், என் பின்னணி இசையை அவர் மேலும் அழகுபடுத்தி எனக்கு ஒரு தனிப் பெருமையைத் தேடித் தந்ததையும் என்னால் மறக்கவே முடியாது. அதோட நிக்கலே அவர். இசைத்தட்டாக வந்தபோது "இசை அமைப்பு - கே.வி.மகாதேவன் - குன்னக்குடி வைத்தியநாதன்" என்று அவர் பெயருடன் என் பெயரையும் இணைத்து வெளியிட்டார்கள்" -நெகிழ்ச்சியுடன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார் குன்னக்குடி வைத்தியநாதன். (பொம்மை - பிப்ரவரி 1970)
"அறுபடை வீடு கொண்ட திருமுருகா" - பாடல். இன்றளவும் கந்தன் கருணை என்று சொன்னால் உடனே நினைவுக்கு வரும் பாடல்.
"உலகப் பிரசித்தி பெற்ற பாடலாச்சே சார் அது." என்று பெருமிதத்துடன் நடிகர் திரு. சிவகுமார் அவர்கள் குறிப்பிட்டார்.
ஷண்முகப்ரியாவில் தொடங்கும் பாடல் ஒவ்வொரு படை வீட்டின் பெருமையையும் எடுத்துரைக்கும் சரணங்களில் ஹிந்தோளம், சக்ரவாகம், கானடா, ஹம்சானந்தி, நாதநாமக்ரியை, காபி என்று ராகமாலிகையாக விரிகிறது.
இசை மணி சீர்காழி கோவிந்தராஜனின் புகழ் மகுடத்தில் சூட்டப்பட்ட வைரக்கல் இந்தப் பாடல். பாடலுக்கான காட்சியில் சீர்காழி கோவிந்தராஜனே தோன்றி நடித்திருப்பார்.
இப்படி கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாடல்களைக் "கந்தன் கருணை"க்காக அமைத்த போது "இந்த இசையை ரசிகர்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள்" என்று நினைத்தார் கே.வி. மகாதேவன்.
அவரது கணிப்பு பொய்யாகவில்லை.
ஆனால் - அதற்கு ஒரு படி மேலாக அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு மகத்தான கௌரவமும் அங்கீகாரமும் "கந்தன் கருணை" படத்தின் மூலமாக அவருக்கு கிடைத்தது.
இசைப் பயணம் தொடரும்..)
(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)
நவம்பர் 10 , 2014