திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன்- 11

திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன்- 11
Published on

"இசை என்பது அழகான கவிநயம் மிக்க விஷயங்களை தெய்வீகமான வழியில் இதயத்துக்கு எடுத்துச் சொல்வது." - பாப்லோ காஸல்ஸ்.

"நீலமலைத் திருடன்"  -  சந்திரலேகாவுக்கு பிறகு ரஞ்சனுக்கு ஒரு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த படம்.

தாய்க்குப் பின் தாரம் படத் தயாரிப்பின் போது எம்.ஜி. ஆருடன் தனக்கிருந்த நட்பில் ஏற்பட்ட விரிசலால் அவரைத் தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க தயங்கிய தேவர் ரஞ்சனை வைத்து எம்.ஜி.ஆர். இல்லாமலும் தன்னால் ஹிட் கொடுக்க முடியும் என்று நிரூபித்தார்.

இருப்பவர்களிடம் கொள்ளை அடித்து ஏழைகளுக்கு உதவும் திருடன் வேடம் ரஞ்சனுக்கு.

படத்தின் வெற்றிக்கு மகாதேவனின் இசை சரியான பக்க பலமாக இருந்தது.  காட்சிகளின் விறுவிறுப்புக்கு சரியான ஈடுகொடுத்த பின்னணி இசையாலும், பாடல்களுக்கு அமைத்த இனிமையான மெட்டுக்களாலும் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்தார் கே.வி. மகாதேவன்.

"உள்ளம் கொள்ளை போகுதே"  அஞ்சலிதேவிக்காக ஜிக்கி பாடிய பாடலுக்கு மகாதேவன் அமைத்த மெட்டும், இசையும் கேட்பவர்கள் உள்ளத்தை உண்மையாகவே கொள்ளை கொள்ளத் தவறவில்லை.  

என்றாலும் இன்று வரை "நீலமலைத் திருடன்" என்றதும் சட்டென்று நினைவுக்கு வரும் பாடல் "சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா - தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா." - என்ற மருதகாசியின் பாடல்தான். 

சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் இந்த அற்புதமான காலத்தை வென்று நிற்கும் தத்துவப் பாடலை - வெகு அருமையாக ஜனரஞ்சகமாக அமைத்து டி.எம். சௌந்தரராஜன் அவர்களை அற்புதமாக பாடவைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

குதிரையின் குளம்பொலி இசையுடன் கிட்டாரின் மீட்டலுடன் பாடல் துவங்கும் போதே மனதை பாடலின் பக்கம் திருப்பி விடுகிறது.  

"எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே - உன்னை

இடறவைத்து தள்ளப்பார்க்கும் குழியிலே

அத்தனையும் தாண்டிக் காலை முன்வையடா

நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா."   - மருதகாசியின் மணியான வரிகள் கே.வி. மகாதேவனின் இசையில் கேட்கும்போது தளர்ந்த மனதுக்குள்ளும் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கிறதே. 

"நீலமலைத் திருடன்" - படத்தில் முக்கிய வேடமேற்றவை ஒரு நாயும், குதிரையும் தான். 

வில்லனின் அடியாட்கள் கதாநாயகனை கட்டிலோடு  கட்டிப்போட்டு அடைத்து வைத்திருக்க அவனைக் காப்பாற்ற நாய், குதிரை மீது சவாரி செய்தபடி வரும் காட்சி திரை அரங்குகளில் மிகுந்த வரவேபையும், கைதட்டலையும், விசில் ஒலியையும் கிளப்பி அதிரவைத்தது.  இந்தக் காட்சிக்கு கே.வி. மகாதேவன் அமைத்த பின்னணி இசை மிக முக்கியமான ஒரு காரணமாக அமைந்தது.

"நீலமலைத் திருடன்" வெளிவந்த அதே வருடம் - சொல்லப்போனால் "நீலமலைத் திருடன்" படத்துக்கு முன்னதாக கே.வி. மகாதேவனின் அற்புதமான இசை அமைப்பில் வெளிவந்த படம் தான் "ராஜராஜன்".

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - பத்மினி இணைந்து நடித்த இந்தப் படத்தில் எம்.என்.நம்பியார், பி. எஸ். வீரப்பா, லலிதா, எம்.ஜி. சக்ரபாணி ஆகியோரும் நடித்திருந்தனர்.

இந்தப் படம் கே.வி. மகாதேவனின் சிறந்த இசைக்காவே பேசப்பட்ட படம்.

ஆரம்ப காலப்படங்களில் எம்.எம். மாரியப்பாதான் எம்.ஜி.ஆருக்காக முதலில் பின்னணி பாடியவர்.

அவருக்கு அடுத்து ஐம்பதுகளின் இறுதிவரை அவருக்காக பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்தான்.

அந்த வகையில் இந்தப் படத்தில் கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி எம். ஜி.ஆருக்காக சீர்காழி கோவிந்தராஜனும், பத்மினிக்காக ஏ.பி. கோமளாவும் பாடிய பாடல் ஒன்று இன்றுவரை காலத்தை வென்று நிலைத்து நிற்கிறது.

"நிலவோடு வான் முகில் விளையாடுதே"  என்று துவங்கும் இந்தப் பாடலை வெகு அற்புதமான மிஸ்ர யமன் (யமன்கல்யாணி என்றும் சொல்லலாம்) என்ற ராகத்தில் அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல விரும்புகிறேன்.

பொதுவாக திரைப்படப் பாடல்களில் சுத்தமான கர்நாடக சங்கீதம் என்பது எம்.கே. தியாகராஜ பாகவதர் காலத்தோடு வழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டது.  அதற்குப் பிறகு  ராகங்களின் அடிப்படையில் பாடல்கள் வர ஆரம்பித்தன.   அதாவது குறிப்பிட்ட ராகத்தின் ஸ்வரங்களை எடுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் கிராமிய மெட்டுக்களையோ அல்லது மேற்கத்திய இசையையோ கலந்து கொடுக்க ஆரம்பித்த காலகட்டம் அது.  என்றாலும் கையாள எடுத்துக்கொண்ட ராகத்திலிருந்து மாறாமல் அதை அனுசரித்தே பாடல்கள் அமைந்தன. 

அந்த வகையில் இந்த "நிலவோடு வான் முகில் விளையாடுதே" பாடல் கே.வி. மகாதேவனின் இசை மகுடத்தில் ஒரு வைரக்கல் என்றால் அது மிகை அல்ல. 

கர்நாடக இசை மேதை காலம் சென்ற ஜி.என். பாலசுப்ரமணியம் அவர்களது பிரபலமான பாடலான "ராதா சமேதா கிருஷ்ணா" என்ற பாடல் இதே மிஸ்ர யமன் ராகத்தில் அமைந்த பாடல் தான்.

"நிலவோடு வான் முகில் விளையாடுதே" பாடல் முதல் நாள் மாலையில் ஓலிப்பதிவு ஆரம்பித்து விடிய விடிய அனைவரும் உழைத்து மறுநாள் காலையில் முடிந்த பாடல் - என்று அதனை சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்து பாடிய பாடகி ஏ.பி. கோமளா ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். 

பாடலைக் கேட்கும்போது வான்முகில் நிலவோடு மட்டும் விளையாடவில்லை. நம் மனங்களோடும் விளையாடுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது. நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன்.  

அடுத்து "ஆடும் அழகே அழகு"  லலிதா- பத்மினி இணைந்து ஆடும் நடனத்துக்கான பாடல்.

பி. லீலா - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இருவரும் இணைந்து பாடிய இந்தப் பாடலை இயற்றியவர் யார் தெரியுமா?  கே.வி. மகாதேவனின் உதவியாளராக இருந்த டி.கே. புகழந்தி அவர்கள்தான்.

இந்த நடனப் பாடலை ஒரு ராகமாலிகையாக விஜய நாகரி, நடபைரவி, குந்தலவராளி, சிந்துபைரவி ஆகிய ராகங்களில் அருமையாக அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.  சுத்தமான கர்நாடக சங்கீதத்தில் அமைந்த இந்தப் பாடலின் ஒவ்வொரு சரணங்களுக்கும் இடையில் வரும் இணைப்பிசையும்,  ஒரு ராகத்திலிருந்து இன்னொரு ராகத்துக்கு மாறும் அழகும்..  மகாதேவனின் திறமைக்கு ஒரு அற்புதமான சான்று.  

இதே போல இன்னொரு டூயட் பாடல் "இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே"  -  சீர்காழி கோவிந்தராஜன் - ஏ.பி. கோமளாவின் குரல்களில் ஒரு உற்சாகப் பாடலாக அமைந்திருக்கிறது.  ஆபேரி ராகத்தின் அடிப்படையில் இந்தப் பாடலை கே.வி. மகாதேவன் அமைத்திருக்கிறார்.  பொதுவாக திரை இசையில் அதிகம் பயன்படுத்தப்படும் ராகம் இது.  ஹிந்துஸ்தானியில் பீம்ப்ளாஸ் என்று இதனைச் சொல்வார்கள். 

அடுத்து ஆர். பாலசரஸ்வதியின் தாலாட்டும் குரலில் 'கலையாத ஆசைக் கனவே" என்ற பாடல் - சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் இது.   படத்தில் உற்சாகமாக சூழலிலும், சோகச் சூழலிலும் என்று இரண்டு முறை இந்தப் பாடல்  இடம்பெறும்.  பாலசரஸ்வதியின் மென்மையான குரலில் மயிலறகால் மனதை வருடுவது போல வருடிச் செல்லும் பாடல் இது.  

இப்படிப் பாடல்களுக்கு கர்நாடக இசையின் அடிப்படையில் இசை அமைப்பதை பெரிதும் விரும்பினார் கே.வி. மகாதேவன்.

"எந்தப் பாடலாக இருந்தாலும் அதற்கு கர்நாடக இசையின் 'டச்' இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் தான் இசை அமைக்கவேண்டும் என்று கருதுபவன் நான். அப்படித்தான் என்னால் "டியூன்" போடவே முடியும்." என்று அவரே சொல்லி இருக்கிறார்.

அது மட்டும் அல்ல.  "திரை இசைப் பாடல்களுக்கு நமது கர்நாடக இசை பொருந்துவதைப் போல வேறு எதுவும் பொருந்துவதில்லை" என்று தனது அபிப்பிராயத்தை "பொம்மை" மாத இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றிலும் தெரியப் படுத்தி இருக்கிறார் கே.வி. மகாதேவன்.

"ராஜராஜன்" படத்தின் பாடல்களில் மட்டும் அல்ல பின்னணி இசையிலும் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் கே.வி. மகாதேவன். 

எம்.ஜி.ஆர் - எம்.ஜி.ஆர் - எதிரிகளுடன் மோதும் இந்த  சண்டைக் காட்சிக்கான பின்னணி இசையே அதற்கு சரியான சான்று. 

இப்படிப் படத்துக்குப் படம் தனது இசையால் மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்து முன்னேறிக்கொண்டிருந்தார் கே.வி. மகாதேவன்.

எம்.ஜி.ஆர். - சிவாஜி இருவரும் உச்ச நட்சத்திரங்களாக முன்னேறிக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் படத் தயாரிப்பு என்பது மிகுந்த பொருட்செலவையும், நேரத்தையும் விழுங்கக்கூடியது என்ற நிலைமையே இருந்து வந்தது.. 

குறைந்த பொருட்செலவில் தரமான படங்களை தயாரிப்பது என்பதைக் கற்பனை செய்து பார்க்கவே தயாரிப்பாளர்கள் தயங்கிய நேரம் அது.

அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் அதிபர் சுந்தரம் அவர்களின் உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்த வி. சீனிவாசன் என்ற  இளைஞரை இயக்குனராக வைத்து தயாரிப்பாளர் எம்.ஏ. வேணு அவர்கள் குறுகிய காலத் தயாரிப்பாக ஒரு தமிழ்ப் படத்தை தயாரித்தார்.

பராசக்தியில் சிவாஜி கணேசனுடன் அறிமுகமாகி மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்த எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக முதன்முதலாக அறிமுகமானார் தேவிகா.

இந்தப் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கே.வி. மகாதேவனுக்கு கிடைத்தது.

1957- தீபாவளிக்கு வெளிவந்த குறைந்த பொருட்செலவில் குறுகிய காலத்தயாரிப்பாக வெளிவந்த இந்தப் படம் அதே தீபாவளிக்கு வெளிவந்த உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு ஈடுகொடுத்து பெருவெற்றி பெற்று அனைவரது புருவங்களையும் உயரவைத்தது.

அதோடு நிற்கவில்லை.  அந்த ஆண்டுக்கான சிறந்த பிராந்திய மொழித் திரைப்படமாக ஜனாதிபதி விருதையும் பெற்று அனைவரையும் புருவங்களை உயர்த்த வைத்தது.

படத்திற்கு கே.வி. மகாதேவன் அமைத்த இசை பெரிதும் பேசப்பட்டு பாடல்கள் இன்று வரை நீங்காத இடத்தை பிடித்தன.

அதிலும் எஸ்.எஸ்.ஆர் பாடுவதாக டி.எம்.எஸ். பாடிய பாடல் படம் வெளிவந்த புதிதில் அரங்கை விட்டு வெளியே வந்த அனைவராலும் முணுமுணுக்கப் பட்டது.

அந்தப் படம் தான் "முதலாளி".

பாடல் "ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே."

(இசைப் பயணம் தொடரும்..)

(பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)

ஜுன்   23 , 2014  

logo
Andhimazhai
www.andhimazhai.com