"அன்பின் உணவாக இசை இருக்கும் பட்சத்தில் அதனை நன்றாக உண்டு மகிழுங்கள். மீதம் இருப்பதை எனக்கும் கொடுங்கள் - வில்லியம் ஷேக்ஸ்பியர் (பன்னிரண்டாவது இரவு நாடகத்தில்)
வண்ணக்கிளி - கிராமத்துப் பின்னணியில் அமைந்த ஒரு வெற்றிப்படம். அந்நாளில் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களில் ஒருவரான டி.ஆர். ரகுநாத் அவர்களின் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் அவர்கள் தயாரித்த படம்.
சென்னையைச் சேர்ந்த ராமசாமி சுப்ரமணிய மனோகர் என்ற ஆர்.எஸ். மனோகர் கதாநாயகனாக நடித்த படம். 1950-இல் 'ராஜாம்பாள்" படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் நுழைந்த மனோகர் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அவை எல்லாம் சரியாகப் போகாததால் வில்லன் வேடத்துக்கு மாறினார் அவர். அவரது திறமையை துல்லியமாகக் கணித்த மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் அவர்கள் தொடர்ந்து தனது படங்களில் மாறுபட்ட முக்கிய வேடங்களைக் கொடுத்துவந்தார்.
இப்போது சொல்கிறோமே "நெகட்டிவ்" ரோல் ஹீரோ என்று அந்த வகையான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக படம் முழுவதும் அருமையான நடிப்பைப் படர விட்டிருந்தார் ஆர். எஸ். மனோகர். அவருக்கு ஜோடியாக பி.எஸ். சரோஜா - கதாநாயகி வண்ணக்கிளியாக வாழ்ந்தே காட்டி இருந்தார்.
ஒரு கிராமத்துப் பண்ணையார். அவரிடம் பணியாளாக வேலை பார்க்கும் வாலிபன். அவனது மூத்த சகோதரி வண்ணக்கிளி. அவள் மீது மையல் கொண்ட ஒரு பேட்டை ரவுடி. வாலிபனைக் காதலிக்கும் பண்ணையாரின் மகள் ஆகிய நால்வரைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை.
தான் காதலிக்கும் வண்ணக்கிளியை பலாத்காரமாகக் கவர்ந்து சென்று அவளது விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக தாலிகட்டி விடுகிறான் பேட்டை ரவுடி. (ஏற்கெனவே மனைவியை இழந்த அவனுக்கு ஒரு பெண் குழந்தை வேறு உண்டு.)
அந்தக் கால வழக்கப்படி "கல்லானாலும் கணவன்" பாணியில் ஆணாதிக்க மனப்பான்மை நிறைந்த கணவனை திருத்தி, தன்னை சிற்றன்னையாக ஏற்க மறுக்கும் மூத்த தாரத்து மகள் மீது பாசத்தைப் பொழிந்து அவளது அன்பையும் பெறுகிறாள் வண்ணக்கிளி.
பிறகு திருந்திய கணவனும், மனைவியும் சேர்ந்து அந்தஸ்து வெறி பிடித்த பண்ணையாரின் மகளையும் வண்ணக்கிளியின் சகோதரனையும் ஒன்று சேர்த்து வைப்பதுதான் கதை.
வண்ணக்கிளியின் சகோதரனாக பிரேம் நசீரும் பண்ணையாரின் மகளாக மைனாவதியும் (நடிகை பண்டரிபாயின் தங்கை.) நடித்திருந்தனர்.
தனக்கு முதல் முதலாக வாய்ப்புக் கொடுத்த நிறுவனம் என்பதாலோ என்னவோ அருமையான பாடல்களையும், அற்புதமான பின்னணி இசையையும் கொடுத்து படத்தின் வெற்றிக்கு தானும் ஒரு தூணாகவே தாங்கி நின்றார் கே.வி. மகாதேவன் என்றால் அது மிகை அல்ல.
பாடல்களை கவிஞர் மருதகாசி எழுதி இருந்தார்.
அது என்னவோ - மருதகாசி - மகாதேவன் கூட்டணியில் விளைந்த பாடல்கள் பெரும்பாலும் வெற்றிப்பாடல்களாகவே அமைந்து இன்றளவும் கேட்பவரின் காதுகளையும் மனங்களையும் நிறைத்துக்கொண்டிருக்கின்றன!
எளிமையான வார்த்தைகளில் அருமையான கருத்துக்களை கேட்பவர் நெஞ்சங்களில் பதிய வைப்பது மருதகாசிக்கு கைவந்த கலை என்றால் அந்த வார்த்தைகளைச் சிதைக்காமல் பாடலின் கருத்து கேட்பவர் மனங்களில் பதியும் படி இசை அமைப்பது மகாதேவனுக்கு கைவந்த கலை.
இந்த இருவரின் கூட்டணியில் அமைந்த "வண்ணக்கிளி"யின் பாடல்கள் அனைத்துமே தேனாக இனிக்கத் தவறவில்லை.
"காட்டுமல்லி பூத்திருக்க காவல் காரன் காத்திருக்க - ஆட்டம்
போடும் மயிலைக்காளை தோட்டம் மேயப் பார்க்குதடா.
மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா." - என்ற பாடலை சீர்காழி கோவிந்தராஜன் தனித்துப் பாடி இருந்தார். படத்தில் பிரேம் நசீருக்கு பின்னணி பாடி இருந்தார் இவர்.
"போகாத பாதையிலே போகக்கூடாது - சும்மா
புத்தி கேட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது
மாடாகவே மனுஷன் மாறக்கூடாது - மத்தவங்க
பொருளின் மேல ஆசைவைக்கக் கூடாது.."
- சின்னக்குழந்தைக்குக் கூட தெள்ளத் தெளிவாகப் புரியும் வார்த்தைகள் .
சரணம் முடிந்த பிறகு வரும் "மாட்டுக்கார வேலா" என்று விளிக்கும் போது அந்த "வேலா"வுக்கு சீர்காழி கோவிந்தராஜன் கொடுக்கும் அழுத்தம். அந்த வரிகள் வரும்போது வாத்திய இசைக் கருவிகளே இல்லாமல் மகாதேவன் கொடுக்கும் நிசப்தம். அடுத்த வரியில் தொடரும் தாளக்கட்டு -
கே.வி. மகாதேவனின் தனிப்பாணி இங்குதான் ஆரம்பமானது.
சரணத்தை முடிக்கும் போது கடைசி வரிகளை நிசப்தமாக ஒலிக்கவிட்டு பல்லவிக்கு வரும்போது வாத்தியங்களை ஒரு தாளக்கட்டோடு துவங்கும் பாணி - பாடலைக் கேட்கும்போது நம்மையும் அறியாமல் தலையை அசைத்து ஒரு சபாஷ் போட வைக்கத் தவறாது.
கிராமிய பாணி பாடல்களில் தனக்கு நிகர் தானே என்று மகாதேவன் பறைசாற்றிய படம் வண்ணக்கிளி என்று கூட சொல்லலாம்.
"சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்." - எஸ். சி. கிருஷ்ணன் - பி. சுசீலா இணைந்து பாடிய இந்த உற்சாகப் பாடல் கிராமிய நாட்டுப்புற நடனக் கலைப் பாடல். தெம்மாங்கு பாணியில் அமைந்த இந்தப் பாடலை மகாதேவன் அமைத்திருக்கும் விதம். (கள்ளபார்ட் நடராஜனின் விறுவிறு நடனம் பார்ப்பவரை பிரமிக்க வைக்கத் தவறாது.)
ஏற்கெனவே "மணப்பாறை மாட்டை" சிந்துபைரவி ராகத்தில் கட்டி இழுத்த அவர் - அதே சிந்துபைரவியில் "சித்தாடை கட்டிக்கிட்டு" பாடலை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் நாயனம், தவில் பின்னணியில் அட்டகாசப் படுத்திவிட்டார்.
இன்றைய இளசுகளைக் கூட கவர்ந்து நிற்கும் பாடல் இது. காலங்களைக் கடந்தும் இன்றளவும் பாடல் நிலைத்திருக்கும் தன்மை ஒன்றே போதுமே. பாடலின் தரத்தை தனியாகச் சொல்லவா வேண்டும்?
அடுத்து..
பண்ணையார் மகளை பெண்பார்க்க மாப்பிள்ளை வரப்போகிறான். அவளோ தனது காதலை வண்டிக்காரக் கதாநாயகனிடம் வெளிப்படுத்துகிறாள்.
"வண்டி உருண்டோட அச்சாணி தேவை - என்றும்
அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை" - சீர்காழி கோவிந்தராஜன் - பி. சுசீலா பாடும் அருமையான கருத்துச் செறிவுள்ள ஒரு பாடல்.
அவள் இப்படிச் சொன்னதும் அவன் பாடுகிறான்.
"சொந்தம் கொண்டாடவென்று அன்பு கொண்டு
கோச்சில் மாப்பிள்ளை வருவாரே இன்று.."
இதைக் கேட்டதும் அவள் அலட்சியமாக பதில் சொல்கிறாள். எப்படி? இப்படித்தான்.
"வந்தாலும் பயனில்லையே அன்பைத் தந்தாலும் அதை வாங்க ஆளில்லையே."
எளிமையான பாடல் வரிகளும் - சீர்காழியும், சுசீலாவும் பாடி இருக்கும் விதமும் நம்மையும் அவர்கள் காதலுக்குள் கட்டிப்போட்டு விடுகின்றன.
மதுவின் மயக்கத்தில் ரவுடிக் கணவன் மனைவியைப் பாடச் சொல்ல அவள் பாடினால் எப்படி இருக்கும்?
"அடிக்கிற கைதான் அணைக்கும்." - பாடலைக் கேட்டாலே புரியும்.
இந்தப் பாடலைப் பாடியது எப்படி? திருச்சி லோகநாதன் விவித பாரதியில் சிறப்பு தேன்கிண்ணம்" நிகழ்ச்சியில் அந்த அனுபவத்தை இப்படி பகிர்ந்துகொண்டார்.
மதுவின் வாடையே பிடிக்காத நபர் அவர். அவரிடம் போதையில் நாக்குழறப் பாடவேண்டும் என்றார் கே.வி. மகாதேவன். எப்படிப் பாடுவது என்று யோசித்தவர் புகையிலையை வாயில் அடக்கிக்கொண்டு பாடிமுடித்தாராம். பாடலும் அருமையாக வந்து விட்டது.
பி. சுசீலாவின் இணைக்குரலில் மிளிரும் அமைதியும், தொனிக்கும் பாவமும் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கக் தூண்டும்.
பி. சுசீலா அறுபதுகளில் தனித்த இசை அரசியாக பவனி வர ஏணிப்படிகளாக உதவிய பாடல்கள் என்று கூட "வண்ணக்கிளி" படப் பாடல்களைச் சொல்லலாம்.
"சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா" - அருமையாக காது மடல்களை வருடும் ஒரு மெலடி. கீரவாணி ராகத்தில் மெய்மறக்க வைக்கும் ஒரு அருமையான, நயம் மெல்லடி வைத்தாற்போல அமைந்த பாடல் இது.
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜகத்திலே" - பி. சுசீலாவின் குரலில் இன்னொரு இனிமையான பாடல். பாடல் வரிகள், அமைத்திருக்கும் விதம், குரலின் இனிமை என்று மூன்றுமே ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கும் பாடல்.
இப்படி "வண்ணக்கிளி" பாடல்களிலும் பின்னணி இசையிலும் வர்ண ஜாலம் புரிந்தார் கே.வி. மகாதேவன்.
அதுவரை மகாதேவனின் இசையில் வெளிவந்த படங்களில் அனைத்துப் பாடல்களுமே பெருவெற்றி பெற்ற பாடல்களாக அமைந்தன என்று சொல்ல முடியாது. படத்துக்கு ஒன்றிரண்டு பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல்களாக அமைந்துவிடும்.
ஆனால். வண்ணக்கிளி படத்தைப் பொறுத்த வரையில் கே.வி. மகாதேவனின் இசையில் பாடல்கள் அனைத்துமே மிகப் பெரிய வெற்றியைக் கண்டன.
அன்று மட்டும் என்று அல்ல. இன்றுமே வெளியாகும் பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகள் (C.D.) விற்பனையில் அதிக அளவில் விற்பனையாகி சாதனை படைப்பவை வண்ணக்கிளி படப் பாடல்கள் தான்.
"வண்ணக்கிளி " வெளிவந்த 1959-ஆம் ஆண்டு கே.வி. மகாதேவனைப் பொறுத்த அளவில் மறக்க முடியாத ஒரு பொன்னான ஆண்டு என்று தான் சொல்லவேண்டும்.
இருக்காதா பின்னே?
"இசைச் சக்ரவர்த்தி" ஜி. ராமநாதனை தனது இசையில் படத்தில் பாடவைத்தார் என்றால் அது மறக்க முடியாத ஆண்டுதானே?
அந்த சுவாரசியமான சம்பவத்தை அடுத்த இடுகையில் பார்ப்போமே.
(இசைப் பயணம் தொடரும்..)
(பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)
ஜுலை 21 , 2014